மாலை நேரம். சினேகிதி வீட்டிலிருந்து கிளம்ப மனமற்று கதிரையோடு உறைந்து போயிருந்தேன். மனம் இலகுவாக இருந்தது. எனது மகனும் அவனுடைய சினேகிதனும் வீடியோ விளையாட்டில் மூழ்கிப்போயிருந்தார்கள். வெளியே வானம் மிருதுவான மழைத்துளிகளை தூவிக்கொண்டிருந்தது. வீட்டிற்குப் போனால் வெளியில் சில பூச்செடிகள் வைக்க வேண்டும் என்பது இன்றைய எனது திட்டமாக இருந்தது. போகும் போதே எந்த நிறத்தில் என்ன செடி வாங்கவேண்டும் என்று தீர்மானித்து விட்டால் போகும் வழியிலுள்ள பூக்கடையில் வாங்கிப் போகலாம். ஆகக் கூடி இங்கு இன்னும் இரண்டு மாதங்கள்தான் இந்தப் பூக்கள் உயிரோடிருக்கப் போகின்றன. இப்பூச்செடிகளின் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலங்கள் அலாதியானவை. பிறரை மகிழ்விக்க மட்டுமே பூக்கள் பிறப்பெடுக்கின்றன.

norway_360செடியின் இலைகளுக்கும் பூக்களுக்கும் வாழ்க்கையுடனான தொடர்பு சில காலம்தான். இருந்தாலும் அவைகளுக்காகவே நாம் செடிகளை வைக்கின்றோம். அவை அதிகூடிய காலம் உயிரோடிருக்க மிக நுணுக்கமாகப் பராமரிக்கின்றோம். போகும் போதும் வரும் போதும் பூக்களை ரசித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனாலும் இந்த பூக்களைத்தரும் வேர்களைப் பற்றி நாம் அதிகம் சிந்திப்பதில்லை. வேருக்கும் செடிக்குமான தொடர்பு நீண்டது. மிக மிக முக்கியமானது. வீரியமான வேர்களே மிகச் செழுமையான பூக்களையும் பசுமையையும் இந்த உலகத்திற்குக் கொடுக்கிறது. போர்க்காலத்தில் பதுங்கிக்கொள்ளும் பங்கர்கள் போல, வேர்கள் தமது உயிரை உறிஞ்சி வேர்களிடையே பாதுகாத்துக்கொண்டு பனிக்காலம் கரைந்ததும் மீண்டும் எத்தனை அழகாகப் பாதுகாப்புடன் பூக்களைப் பிரசவிக்கின்றன.

பூக்களின் பெண்மை என்று இதைச் சொல்லலாமா? பூக்கள் செடியின் குழந்தைகளா? பூக்கள் என்பது என்னை எப்போதும் பிரமிப்பில் ஆழ்த்துபவையாகவே இருக்கின்றன. அதை செடிகளில் இருந்து பிடுங்குவதை பார்க்கும் மனம் ஒரு வலியோடு அவ்விடத்தைக் கடந்து போகிறது. பூக்கள் தாமாகவே உதிர்ந்து விழும்போதும் மனதின் ஓரத்தில் மெலிதான துக்கம் இழையோடுகிறது. இந்தப் பூக்களும் வாழ்வதற்காகப் போராடுகின்றனவா? செடிகளுக்கும் உயிர் இருப்பது உண்மையென்றால் பூக்களும் போராடுகின்றன என்பதும் நிச்சயமே. ஒவ்வொரு உயிருக்கும் பிறப்பில் இருந்து இறப்புவரை போராட்டம் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. ஒரு நாட்டுக்காகப் போராடுவதும்,  உரிமைக்காப் போராடுவதும் மட்டுமா போராட்டம்? இல்லை. லட்சக்கணக்கான உயிரணுக்களோடு போராடி வென்றே தாயின் கருவறையில் எமது வாழ்க்கை தொடங்குகிறது. பூமியில் பிறக்கும் அத்தனை உயிர்களும் லட்சக்கணக்கான விந்தணுக்களோடான ஒரு போராட்டத்தின் வெற்றிதான் என்பதே உண்மை. பூக்களிற்கும் மனிதனுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

பூக்களைப்போல மனித வாழ்க்கை எத்தனை அழகானது. உலகில் உள்ள பூக்களின் நிறங்களா மனிதர்களின் நிறங்களா அதிகமானவை. மனிதனின் நிறங்களா அல்லது பூக்களின் நிறங்களா அதிக அழகு கூடியவை? பூக்களின் வாழ்க்கை காலத்திற்கும் மனிதனின் வாழ்க்கை காலத்திற்கும் உள்ள இடைவெளியில் யார் அதிகம் சாதித்தது? யார் அதிகம் போராடிக்கொண்டிருப்பது. பூக்களைப்போலவே மனித வாழ்க்கையிலும் நேரத்தின் இதழ்கள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன. செடிகளின் வேர்களைப்போல அன்பு என்பதே மனிதனின் வேராக இருக்கக்கூடும். இப்படியெல்லாம் மனதை கேட்டுக்கொண்டிருக்க எனது தோட்டத்தில் உள்ள ஒரு சில பூச்செடிகளே போதுமாயிருக்கின்றன எனக்கு.

மென்சிவப்பு நிறத்திலும், ஊதா நிறத்திலுமான சில பூச்செடிகளைப் புதிய மண் இட்டு எனது தோட்டத்தில் வைத்துக்கொண்டிருந்தேன். மனம் அந்த பூக்களின் மென்மையையொத்து அமைதியாக இருந்தது. எப்போதும் என் தோளோடு ஒட்டிக்கிடக்கும் கைத்தொலைபேசி அழைக்க அதில் கிடைத்த கொடும் குறுச்செஞ்தியொன்று பூக்களிடம் இருந்து பூமிக்கு என்னை தூக்கி விசிறியெறிந்தது. 

ஓஸ்லோ நகரத்தில் குண்டு வெடிப்பு. இந்தப் பக்கம் வந்துவிடவேண்டாம். நான் அப்போது என்ன நினைத்தேன் எனது மனநிலை எப்படி இருந்தது என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. வாழ்க்கையின் போராட்டத்தில் இன்னும் ஒன்று கூடியிருப்பதாகத் தோன்றியது. மனதில் பயம் வரவில்லை, கண்களில் அழுகையும் வரவில்லை, துக்கம் என்பதை விட இதை யார் செய்திருப்பார்கள் ஏன் செய்தார்கள், உயிர்ச் சேதம் எத்தனை என்று பக்கத்தில் நின்றவர்களுடன் தகவல் பரிமாறவும், தொலைகாட்சியில் புதிய தகவலகளைச் சேகரிக்கவும் முடிந்தது எப்படி? துயரச்சம்பவங்களைப் கேட்கும் போது இப்போது ஒரு செய்தியாக கேட்கப்பழகும் அளவு மனநிலை மாற்றப்பட்டுவிட்டதா? எமது தேசப்போராட்டத்தில் நடந்தேறிய படுகொலைகளும், பரிதாபச் சாவுகளும், பெரும் இழப்புகளும் மனிதர்களை அல்லது என்னை இந்த நிலைக்கு மாற்றியிருக்கிறதா?

இந்தச் செய்தி வந்து சில நிமிடங்களுக்குள்ளாக இன்னுமொரு செய்தி என்னை இந்த உலகிலிருந்தே தூக்கிப் போட்டது. யாரோ ஒருவன் தீவொன்றில் கூடியிருந்த பல இளைஞர்களை தனது துப்பாக்கிக்குப் பலியாக்கிக் கொண்டிருக்கிறான். உயிரிழப்புகள் மிக அதிகம் என்பதே அந்தச் செய்தி. இப்போது மனம் மிகுந்த வலிக்குள்ளானது. அங்கே தங்கள் வாழ்க்கையைத் தக்க வைக்கப் போராடும் அத்தனை மனிதக்குழந்தைகளையும், துடித்துக்கொண்டிருக்கும் உயிர்களையும் நினைத்து மனம் நிலைகொள்ள மறுத்தது. வாழ்தலுக்கும் மரணத்திற்குமான கடும் போராட்டம் இந்த குழந்தைகளுக்கு தற்போதே நியமிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தீவிற்க்கு தன் பிள்ளையை அனுப்பி வைத்த ஒவ்வொரு தாயின் கண்களும் என்முன்னே வந்து என்னை பெரும் துயரினால் அறைகின்றன. பூக்களைப்போல ஒவ்வொரு வருடமும் அதே இடத்தில் அதே போன்ற பூக்கள் பூப்பது போல இவர்கள் இனி பூப்பதற்கில்லை. இவர்களின் உயிர் பாதுகாப்பாய் ஒளித்து வைத்துக்கொள்ளும் சக்திவாய்ந்த வேர்கள் மனிதர்களிடமில்லை. பூச்செடிகள் கொடுத்து வைத்தவை. பூக்களுக்கு எதிரிகள் யாருமில்லை. பூக்களைக் கொல்ல‌ யாரும் துப்பாக்கியோடு போவதில்லை. பூக்களிற்குக் கொடுக்கும் பாதுகாப்பு கூட எந்த இடத்திலும் மனிதர்களுக்கு இல்லை என்பதுதான் உண்மை.

norway_600

பூக்களிலும் சில நிறங்களே அதிகம் நேசிக்கப்படுகிறது என்பது நிதர்சனம். பலநிறங்கள் பெரிதளவில் கவனத்தை ஈர்ப்பதில்லை. சில பூக்களின் நறுமணங்களே பலருக்கும் பிடித்துப்போகிறது. அதனால் மட்டுமே அந்த நிறம் சிறந்ததென்றும், இந்த நறுமணமே உயர்ந்ததென்றும் யாரும் மற்றப் பூக்களை அழிக்கப் புறப்படுவதில்லை. பூக்களின் நிறங்களையும் வானவில்லின் வண்ணங்களையும் நேசிக்காத மனிதர்கள் பூமியிலும் இருக்கிறார்கள் என்பது எத்தனை கவலைக்குரிய விடயம். இவர்கள் பூக்களையும் வானவில்லையும் ஏன் தன்னைச்சுற்றியுள்ள அனைத்தையும் கறுப்பு வெள்ளையில் காண ஆசைப்படுகிறார்கள். இந்த நிறங்களே சிறந்தன என்று இவர்களுடைய வாழ்க்கைப் போராட்டம்  இவர்களுக்குப் போதித்திருக்கிறது. இவர்களுடைய வேரில் வீரியக்குறைபாடு நிகழ்ந்திருக்கிறது.

 ஒரு மனிதனை அழிக்கும் இன்னொரு மனிதன் தன்னை நியாயப்படுத்த ஏதோ பல காரணங்கள் வைத்திருப்பான். வைத்திருக்கின்றான். இந்தக் காரணங்கள் எல்லாம் சரியானவை என்று அவனே சொல்லிக் கொள்கிறான் அல்லது நியாயப்படுத்த முற்படுகின்றான். இதனை நாமும் பல நேரங்களில் தேசியப்போராட்டம், புனிதப்போர் என்ற நியாயங்களோடு ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். மனித உயிர்களின் அழிவில் மகிழ்ச்சியும், திருப்தியும் அடைந்திருக்கின்றோம் என்பது எத்தனை வேதனைக்குரியது. மரணத்தின் வலியை தாம் நேருக்கு நேர் சந்திக்குமுன் பலர் உணர்வதில்லை. அழிவை நேருக்கு நேர் சந்திப்பவனுக்கு மட்டுமே வாழ்க்கையின் பெறுமானமும், தத்துவமும் ஆழப்புரிபடுகிறது. தூரத்தில் இருந்து மரணத்தை தூண்டுபவர்ளையும் சரி பிறரின் மரணத்தைக் கையில் எடுப்பவர்களையும் சரி மனிதர்கள் என்று இனியும் எப்படிக் கூறுவது?

இத்தனை குழந்தைகளையும் அவர்கள் வாழ வைத்திருந்த அத்தனை நொடிகளையும் ஒரே மூச்சில் பிடுங்கி எறிந்த மனிதனுக்கும் சில நியாயங்கள் இருக்கின்றனவாம். அதனை பலநூறு பக்கங்களாய்த் தொகுத்து உலகுமுழுதும் விளம்பரப்படுத்துவதே கொலைஞனின் ஒரே கனவு என்பது பெரும் கேலிக்குரியது. கறுப்பு வெள்ளை வானவில்லும் வெள்ளைப் பூக்களும் மட்டும் தான் அவனுடைய கனவாகவும் நினைவாகவும் நிறத்துவேசக் கொடியசர்ப்பம் அவனையும் விழுங்கியிருக்கிறது. இதில் தனது பக்க தர்மத்தை எழுத பல நூறு  பக்கங்களும் அவனுக்குத் தேவைப்பட்டிருக்கிறது.

பக்கத்திலிருக்கும் பட்டணமே பல மைல் தொலைவு போல இருந்த காலம் சுருங்கி உலக‌மே ஒரு பூவைப்போல் கைகளுள் சுருண்டு கிடக்கும் உலகில், சமூக இணைப்பும் பலகலாச்சார‌ சமூகமும் பெரிதும் வரவேற்கப்படும் இன்றைய உலகில் ஓரு தனி நபரோ, ஒரு சமூகமோ அல்லது ஒரு நாடோ சமூகஇணைவைக் கையிலெடுத்துத் தடுத்துவிட முடியாது. சமூக இணைவென்பது ஒரு சமூகம் இன்னொரு சமூகத்துடன் இணைவதென்றே பலரும் கருதிக்கொண்டு நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர். சமூக இணைவு என்பது பல கலாச்சாரங்கள் ஒன்றோடொன்று கலந்து போவதாகும். இருபக்கத்திலிருந்தும் எடுத்துத்தொடுக்கப்பட்ட பூச்சரத்தை ஒத்தது. பலரின் கருத்தில் இருப்பதுபோல ஒன்றோடு இன்னொன்று இணைந்து அனுசரித்துப் போவதல்ல. சரியான புரிதல்கள் இல்லாத இடத்திலிருந்துதான் இப்படியான மனிதர்கள் உருவாக்கப்படுகின்றனர். சமூகமயமாதல் என்பது யார் கைகளிலும் இருக்கப்போவதில்லை. அது இயற்கையானது. மிக அழகானது. மிக மிக முக்கியமானது.

பூக்களை நேசிக்கப் பழகுங்கள். பூக்களை நேசிப்பவன் நிச்சயமாக மனிதர்களையும் நிறங்களையும் நேசிப்பவனாவான். ஊத்தொய்யா தீவில் தமது வாழ்க்கையின் கனவுகளை புதைத்துப்போன குழந்தைகளை நினைத்து மட்டுமல்ல, கொலைஞனுடைய கறுப்பு வெள்ளைக் கனவை கொன்று புதைக்கவும்தான் இத்தனை லட்சம் உயிர்களும் எழுந்து பூக்களைப் பறித்து 25.07.2011 அன்று பூமியை நிறைத்தது. இத்தனை உயிர்கள் பூக்களை நேசிக்கிறார்கள் என்பதே இயற்கையின் அற்புத நிறங்களுக்கும் மனிதர்களுக்குமான மாபெரும் வெற்றி.

- கவிதா (நோர்வே)

Pin It