அநீதிகளோடு வாழ்வதென்பது பழகிவிட்டது நமக்கு.
அநீதிகள் வேஷமிட்டு நம்மைத் தேடி வருகின்றன
இருளிலிருந்து அழைத்துச் செல்வதாக வாக்குறுதிகள் தருகின்றன
வாக்குறுதிகள் புதிதல்ல நமக்கு
எந்த வாக்குறுதியும் பசித்த நிலங்களில் பயிரானதில்லை
அணைந்த அடுப்புகளை பற்றவைக்கவில்லை.
போராட வேண்டியிருக்கிறது வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி
அப்புறப்படுத்த வேண்டியிருக்கிறது அநீதிகளை
மதங்களின் குரல் வழியாக நுழைந்த அநீதிகள்
சட்டங்களின் உடைவழியாக நுழைந்த அநீதிகள்
சாதிகளின் நிறம் வழியாக நுழைந்த அநீதிகள்
தவிர்க்க இயலாதவையாகி விடுகின்றன அநீதிகள்
அநீதிகளால் நாம் நாடற்றவர்களாக்கப்பட்டோம்
அநீதிகளால் நம் கனவுகள் சிதைக்கப்படுகிறது
அநீதிகள் முன்னேறும் நம் கால்களையே பார்த்துக் கொண்டிருக்கிறது
அநீதிகள் அணு உலைகளாக நுழைகிறது
அணு உலைகள் தன் பிரத்யோக அநீதியின் கதவை திறக்கும் போது
துயரக்காடாக மாறிவிடும் நம் வீதிகள் எங்கேயும் ஓடிவிடமுடியாது
அநீதிகள் இரைப்பைக்குள் ஒளிந்து கொள்ளும்.
குடிக்கும் தண்ணீருக்குள் படுத்துக் கொள்ளும்.
அநீதிகள் ஓசை மிகத் துல்லியமாக கேட்கிறது
அதனிடமிருந்து நம் உடலைக் காப்பாற்ற எண்ணுகிறோம்
அணு உலைகள் சின்னதாய் கொட்டாவி விடும்போது
விளை நிலைங்களைத் தூக்க முடியுமா
நதிகளை எங்கே ஒளிக்க முடியும்
வீடுகளை வேரோடு பிடுங்கி வேறோரு இடத்தில் நடமுடியுமா
அநீதிகள் விபத்துகள் போல ஊடுருவலாம்
விபத்துக்களை எல்லாம் வல்ல கடவுளாலும் தடுக்க இயலாது
விபத்துக்கள் கடவுளுக்கு அப்பாற்பட்டவை
ஏனெனில் விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கின்றன
விபத்துக்கள் நடக்கக்கூடாதென்று சட்டம் இயற்ற முடியாது
ஏனெனில் நடந்த விபத்துகள் எந்த சட்டத்தையும் மதித்தில்லை.
விபத்துக்களிடம் கெஞ்சி உயிர்ப்பிச்சை பெறமுடியாது
ஏனெனில் விபத்துக்கள் கருணைமான்களல்ல
அணுத்திமிர் அமெரிக்கா திமிரைவிட அதிகாரமானது
ஏனெனில் அது சொல்லிக் கொண்டிருக்கிறது
எல்லா கடவுளும் என்னுள் அடக்கமென்று
அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள்
சீனாவின் அச்சுறுத்தல்கள்
இங்கிலாந்தின் அச்சுறுத்தல்கள்
எல்லா அச்சுறுத்தல்களும் எனது பினாமிகள் என்கிறது அணு உலை
அணுவுக்கு தேசம் கிடையாது
மொழி கிடையாது கலாச்சாரம் பண்பாடு கிடையாது
ஆனால் எல்லோரையும் கொல்லும் ஆயுதம் வைத்திருக்கிறது
அணு உலையைக் கொல்ல முடியாது
ஏனெனில் அதன் கருவறைச் செலவை விட
கல்லறைச் செலவு அதிகம்
இந்த நூற்றாண்டு பூமியின் உயிர்களுக்கு
கடைசி நூற்றாண்டாக இருக்கலாம்
அது அணு உலைகளின் நூற்றாண்டாக மாறிவிடும் போது.

Comments

1 comment

1
Vee.Na.So.
Shall we be dead while living?-that is the qustion of Kosinraa.Well knited poem. Vaazhththukkal.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.