ஒரே அறைக்குள் வைத்திருந்தேன்
ஒரு ரொட்டியையும் ஒரு கனவையும்
அது நண்பர்களாக இருக்கவில்லை
கனவு ரொட்டியை கேலி செய்து கொண்டிருந்தது
ரொட்டியோ நடக்காத ஒன்றுக்காக ஆசைப்படுவதாக சொல்லியது
ஒரு நாளிலிருந்து இன்னொரு நாளுக்கு கூட்டிச் செல்வது தான் தான் என்றது
ஆனால் உடல் வாழ்வது ரொட்டிக்காக அல்ல என்றது கனவு
ஒரு நாள் ரொட்டியைக் காணவில்லை
தேடத் துவங்கினேன்
அதிக அக்கறை காட்டுவதாக குற்றம் காட்டியது கனவு
ரொட்டியைக் கண்டுபிடிக்கும் போராட்டத்தில்
கை நழுவிப் போயிருந்தது கனவு
இரண்டும் அங்கேதானிருந்தது ஒன்றின் மேல் ஒன்றாக
சிலசமயம் அருகருகே சில சமயம் நீண்ட இடைவெளிவிட்டு
ஒரு நாள் இரண்டையும் காணவில்லை
ரொட்டி கனவாகவும் கனவு ரொட்டியாகவும் காட்சியளிக்கிறது.
தேடினேன் தேடலே வாழ்க்கையாகவுமிருந்தது
ஒரு நாள் வழிப்போக்கன் ஒருவன் சொன்னான்
உன்னுடைய தலை கனவின் வாயிலும்
உன்னுடைய கால்கள் ரொட்டியின் வாயிலும் இருப்பதாக
நான் என்னைத் தேடத் துவங்கினேன்.
ரொட்டிக்கும் கனவுக்குமிடையிலான வாழ்வு
More articles by கோசின்ரா
- உன் கொடூரத்தை எனக்கு மட்டும் பங்கிடு (22 ஆக 2015)
- ஒளிரும் வானம் (14 மே 2015)
- கண்களிலிருந்து விடுதலை செய்! (06 மே 2015)
- என் சாம்பலில் உன்னைத் தேடாதே (30 ஏப் 2015)
- முதல் முத்தம் (22 ஏப் 2015)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.