நிசப்தத்தின் பேரிரைச்சல்கள்
எங்கும் பரவிக்கிடந்த மெளனங்களை
மேய்ந்து கொண்டிருக்கின்றது!
 
ஈர்ப்பு நிலையை உதறி,
பிரபஞ்சத்தின் ஒளியை
விளிம்புகளில் சுமக்கின்ற
நுனிபுற்களின் காலமது!
 
இடுப்பில்  கட்டிய மேகங்கள்
காற்றில் களவாடப்படுவதையும்
அறியாத சிகரமொன்றில் தனித்து நிற்கிறது
ராட்சச மரம்!
அச்சத்தில் வேர்கள் மண்ணை கவ்வியபடி
வானம் நோக்கி தொங்கி கொண்டிருக்கிறது!.

கிளைகளின் பந்தயங்களுக்கிடையில்,
எல்லையை தாண்டி ஆர்ப்பரிக்கும் கூட்டமொன்றில்
திருத்தப்படாத ஒற்றை மயிரென ஆடிய இலையொன்றில்
ஆழமாய் கால் பதித்தும்,
நெஞ்சை வான் நோக்கி நிமிர்த்தியும்,
இடமும்,வலமும் கைகள் அகல விரித்து
காடுகள் அதிர சிரித்தது திமிர் பிடித்த சிற்றெரும்பு ஒன்று!.
 
அதன் கீழ் நோக்கிய பார்வையில்
சப்தங்களை முழுங்கிவிட்டு
வரைபடமாய் கிடந்தது மாநகரம்!

சாக்கடை தொடங்கும் ஒரு முச்சந்தி அருகில்,
அடிபட்ட தெரு நாயென
பரப்பிக் கிடந்தான்
மன்னர்களுக்கெல்லாம் மன்னன் என்றழைக்கப்பட்டவன்.

Pin It