என் மென் பாதங்களை
ஈரக் கரங்கள் தழுவுகையில்
நானதை உணர்ந்தேன்

கடல் ஆண்

தீமூட்டலும் குளுமை மயக்கமும்
திருப்தியாய் நிகழ்ந்ததன்
அடையாள அணுக்களை
மோதிக் கொப்பளிக்கும் அதன்
நுரையில் கண்டேன்

தீராத காதலை குளிர் தென்றலிடம்
எனக்கு தூதனுப்பிற்று
என் காதுமடல்களை இதமாய் தடவி
கிளர்ந்து ஆசை மூட்டியது
கடலின் ஈர விரல்கள்

கரையில் எனைக் கண்டதுமே
வா வந்தென்னை அணை
எனக்கூவிற்று

உலர்வறிய இன்முகத்தோடும்
தாழிடமுடியா காதலோடும்
எனை தழுவி இறைந்து மகிழ்ந்தது
கூவிக் கூவி மீண்டும் மீண்டும்
அணைத்து என்னை ஆறுதலூட்டியது
என் தாகங்களின் சிற்றிடத்தையும்
ஈரத்தால் நிரப்பியது
என் தூய்மையில் அது தன்னை
கழுவி திருப்தி கண்டது

அலைக் கரங்களால் என்னையது
வாரியணைக்கும் ஒவ்வொரு கணமும்
எல்லையற்ற இன்பத்தைக் கொப்பளிக்கிறேன்
தொலைவறியா அண்டமொன்றை
எனக்குள் சுமந்துகொண்டு
பிரசவிக்கவோர் இடம்தேடிக் காத்திருக்கிறேன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.