வரை புரையும் மழகளிற்றின் மிசை,
வான் துடைக்கும் வகைய போல
ஈன்ற பொருளே எட்டா திருக்க
மானிட வாழ்வைத் தொலைத்த தோழா
ஆசான் மார்க்சும் லெனினும் அருளிய
மாசிலா வழியில் போரைத் தொடுப்பின்
உடன்று நோக்கிச் சந்தையை ஒழிக்கலாம்
நயந்து நோக்கி நல்லரசு அமைக்கலாம்
செஞ் ஞாயிற்று  நிலவு வேண்டாது
வெண் திங்களுள் வெயிலும் வேண்டாது
நுண்ணிய அறிவயில் தெள்ளிதின் உணர்ந்து
பண்புடை வாழ்வைப் புவிக்குத் தருவாய்

(குன்றுகளைப் போன்ற இளங்களிறுகளின் மீது (நின்று) வானத்தையே தடவுவன போன்று, (தாம்) உற்பத்தி செய்த பொருட்களே தமக்கு எட்டாது, மானிட வாழ்வை (வாழ முடியாமல்) தொலைத்து விட்ட தோழா! (உழைக்கும் வர்க்கத்தின்) ஆசான்களான கார்ல் மார்க்சும், லெனினும் (நமக்குக்) கொடையாகக் கொடுத்து இருக்கும் மாசில்லாத வழியில் (வர்க்கப்) போரைத் தொடுத்தால், உன் சினம் மிகுந்த பார்வையினால் (மானிட வாழ்வின் அனைத்துக் கேடுகளுக்கும் அடிப்படையான) சந்தைப் பொருளாதார முறையை ஒழித்து விடலாம்; (மேலும்) உன் கனிவு மிக்க பார்வையினால் (உழைக்கும் மக்களுக்கு மட்டும் நன்மை செய்யும்) நல்லரசை அமைக்கலாம். (சுரண்டலாளர்களின் தயவில் வாழும் இலக்கியவாதிகளைப் போல்) சூரியனில் நிலவையும், சந்திரனில் வெயிலையும் தேடி அலையாது, அறிவியலின் நுணுக்கங்களைத் தெளிவாக உணர்ந்து கொண்டு இப்புவியைப் பண்பான வாழ்க்கை வாழ்வதற்கான இடமாக மாற்றுவாய்.)

- இராமியா
Pin It