கால்கள் நிலத்திலும் ஆகாயத்திலும் பரவியிருக்கும்
மனிதர்கள் சுமக்கும் பொதிகளில்
தனித்துவிடப்பட்ட கரப்பான் பூச்சிகளும்
கழற்றியெறியப்பட்ட ஆடைகளின் அவஸ்தைகளுமிருக்கின்றன
வியர்வை கழுவப்படாத இராத்திரிகளும்
வழியில் சந்தித்த மூதாட்டியின் சுருக்கங்களும்
நிராதரவாக விடப்பட்ட ஆட்டுக்கல்லின் அம்மிகளும்
பிரசவ அறையிலிருந்து வெளியேற்றப்பட்ட நெடிகளுமிருக்கின்றன
சிலருடைய பொதிகளில் காலம் கடித்தெறிந்த ஆப்பிள் துண்டுகளும்
உடலுக்குள் உயிர்த்தெழும் தாவரங்களும்
இராத்தியின் அவிழ்த்து விடப்பட்ட கழுதைகளும்
கைவிடப்பட்ட குதிரைகளின் பொழுதுகளுமிருக்கின்றன
பேருந்திற்காக காத்திருந்தவனின் பிம்பமும்
தொலைப்பேசியோடு குடும்பம் நடத்துகிறவர்களின் பிரதிகளும்
உடைந்த நீர்க் குமிழிகளின் படிமங்களும் கிடக்கின்றன
மரத்தை சுமக்க முடியாதவர்கள் நிழல்களையும்
உடலை சுமக்க முடியாதவர்கள் காமத்தையும் சுமந்து செல்கிறார்கள்
எல்லோருடைய மூட்டையிலுமிருக்கிறது
கடல் நதி பூனைகள் கதவு சாத்தப்பட்ட படுக்கையறை
இராத்திரி நிலா தனித்து விடப்பட்ட சாலைகள்
நானும் என் பங்குக்கு சுமந்து செல்கிறேன்
நிராகரிக்கப்பட்டவர்களின் வலிகளோடு சடங்குகளால்
சம்பிரதாயங்களால் வெளியே தூக்கியெறியப்பட்டவர்களின் பிம்பங்களோடு
அதன் நடுவில் கிடக்கின்றன நான் மடித்து வைத்திருந்த காதலும் கவிதையும்.
Pin It