காமம்
உறக்கத்துக்குமுன் நிகழும்
ஒரு சம்பவம் ஆகும்போது
செத்துக் கிடக்கிறது
படுக்கைக்குக் கீழ்
காதல்

*

தலை துளைத்த
ஆத்திர அதிரடிப் புயலின்
அவசரச் சீற்றத்தில்

உயிரின் உட்கருவும்
அணு உலையில் அகப்பட்டு
கொதித்த கணங்களில்
கொட்டிய மலச் சொற்களை

மறதித்
துடைப்பத்தால் பெருக்கி
மன்னிப்புக்
குப்பையில் இட்டுவிட்டு
ஏற்றுவோம்
மீண்டும் வாழ்க்கைத் தீபம்

தீபம் மட்டுமே
ஞாபகத் திரியில் ஏற்றுவதற்கு
என்றென்றும் ஏற்ற ஒன்று

*

உயிருக்குயிராய் நேசிக்கும்
ஜீவனை விழிகள் தேட
வாழ்க்கை கரைந்துவிடுகிறது
சிலருக்கு

உயிரையே வைத்திருக்கிறேனென்று
நிரூபிக்கத் தவிக்கும் தவிப்பில்
வாழ்க்கை தீர்ந்துவிடுகிறது
சிலருக்கு

எப்படியானாலும்
தூக்கிச் சுமக்க
ஓடிவருவது மட்டும்
உன்னை விலக்க முடியாத
இன்னொரு உறவுதான்

*

ஒரு பொட்டு நெருப்பு
உயிருக்குத் தள்ளாடிக்கொண்டு
உள்ளே ஒளிந்திருந்தாலும் போதும்
ஊதி ஊதி நிற்க
குப்பென்று பற்றிக்கொள்ளும்

கொஞ்சம்
ஞாபகச் சருகுகளை
உணவாய்க் கொடுத்தால்
இன்னும் வீறிட்டு எழுந்து
வான்தொட எரியும்

கழிவு நீரில்
ஊறிக்கிடக்கும் கரித்துண்டிடம்
நுரையீரலையே
விற்றுக்கொண்டு நின்றாலும்
உயிர்தான் வீங்கி வெடிக்கும்

*

கண்கள் திறந்துதான் இருக்கின்றன
பார்வை மட்டும் உனக்கு
எப்போதும் ஒரே திசையில்

தனிமை இருட்டில்
உனக்கே உனக்குச் சொந்தமான
மெல்லிதயக் கொடி தவித்துக்கிடக்கிறது

மின்சாரக் கம்பம்
பாம்பின் வால்
புலியின் கால்
என்று எது அகப்பட்டாலும்
அவசரமாய்த் தொற்றித் தப்ப

அப்போதும்
ஒரே திசையில்தான் உன் பார்வை
ஒட்டிக்கிடக்கப் போவதால்
நட்டமென்று ஏதுமில்லைதான்
உனக்கு

*

உன்
தாமரை
இலைகளில்
என்
கண்ணீரும்
ஒட்டுவதே
இல்லை

*

பொருத்திப் பார்க்க
பொருத்திப் பார்க்க
பொறுத்துப் பொறுத்து
பொருத்திப் பார்க்க
பொருந்தாதது
பொருந்தாததாக
மீண்டும்

*

கூண்டுக்குள் அடைத்து
பருக்கைகள் இட்டு
வீட்டு முற்றத்தில்
தொங்கவிட்டு அழகு பார்க்கும்
காதல் சிட்டுகளைக்
காதல் சிட்டுகள் என்று
எப்படிச் சொல்வது
திறந்துவிட்டால்தானே
காதல் தெரியும்

*

பொன் துகள்கள் உதிர்ந்துபோகுமே
என்ற கவலையில்தான்
கழுத்தில் இறுகும் முடிச்சை
அவிழ்க்காமல் இருந்துவிடுகின்றன
இதயங்கள்

தேவைகளோடு பிறந்த உயிர்கள்
நெருப்பிலேயே கிடப்பது நியாயமில்லை
அமைதியின்றி அலைவது பிசாசு வாழ்க்கை
சாந்தமடையும் புள்ளிகளின்றி
இதயக் கோலங்கள் கலைந்துதான் கிடக்கும்

உன்னைக் கண்டதுமே
திறந்துவிடப்பட்ட காவிரியாகின்றன கண்கள்
காற்றில் படபடக்கும் தீபங்களைப் போல்
படபடக்கின்றன உணர்வுகள்

என் கோலத்தை
உன் புள்ளிகளில் கட்டிவைத்துக்கொள்ள
சம்மதமா

*

அஃதொன்றும்
வெகு தூரத்திலுள்ள
பகற் கனவில்லை
பக்கத்திலேயே இருக்கும்
தேதி தெரியாச்
சொற்பப் பொழுதுதான்
ஞாபகமூட்டுவதற்காக
இந்த நொடி விசும்பலை
உன் அழுக்கு முந்தானையில்
முடிந்துவைத்துக்கொள்
அழைத்துவிடாதே
என்னை நீ முந்திக்கொண்டு
தெரியப்படுத்த
நாதியற்றவனிடமிருந்து
வாரா தூரமிருந்துவிடாதே
மூடிய விழிகளாலும்
தேடுவதென்
உறவு

- புகாரி

Pin It