ஓர் இனத்தின் மொழி அழிந்தால் அந்த இனத்தின் பண்பாடு, நாகரிகம் அழியும். தொடர்ந்து அவ்வினத்தின் அடையாளமே முற்றாக அழிந்துவிடும். அப்படி அழிந்த மொழிகளையும் இனங்களையும் வரலாறு நமக்குச் சொல்கிறது.

நம் நாட்டிலும் இப்படிப்பட்ட வரலாறு இல்லாமலில்லை. மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்களின் மொழிகள் இன்று அழிந்தும், சிதைந்தும் வருகின்றன. சில அழிந்து விட்டன. தமிழ்நாட்டில் மலைக்குறவர்களின் மொழி இன்று அழிவின் விளிம்பில் நின்றுகொண்டு இருக்கிறது.

மலைக்குறவர்கள் மலைகளிலும் மலைசார்ந்த குன்றுகளிலும் வாழ்ந்த தொல்பழங்குடியின மக்கள். இவர்கள் பேசிய பேச்சு மொழியை “குர் மொழி” என்றும், “குளுவமொழி” என்றும் கூறுவார்கள். (மலைக்)குறவர் என்ற சொல்லின் குறுக்கமே “குர்” என்று ஆகி குர்மொழி ஆனது. குளுவன் என்றால் மலைப்பகுதிகளில் வாழும் குறவர் என்பதே பொருள். ஆகவே குர்மொழி அல்லது குளுவமொழி மலைக்குறவர்களின் மொழியாகும்.

குர் மொழி தமிழை அடிப்படையாகக் கொண்டதாகும். தமிழில் இருந்து தெலுங்கு, கன்னடம், துளு ஆகிய மொழிகள் பிரிந்தது போல, குர் மொழியும் தமிழை அடிப்படையாகக் கொண்டதுதான்.

எடுத்துக்காட்டாக அம்மாவை, “அம்மா ” என்றும், அப்பாவை “அவ்பா ” என்றும் மகனை “மவுனு ” என்றும், பெரிய அண்ணனை “பெர்ண்ணு ” என்றும், மகளை “மகா ” என்றும், பெரிய அக்காவை “பெரிக்கா ” என்றும், மூத்த மருமகளை “நங்கா ” என்றும், மைத்துனியை “மர்ச்சினிச்சி ” என்றும், அத்தையை “அட்டா ” என்றும், மாமாவை “மாமா ” என்றும், தந்தை வழி பாட்டாவைத் “தாத்தா ” என்றும், தாய்வழிப் பாட்டியை “அம்மம்மா ” என்றும் அழைக்கிறார்கள். இப்பெயர்ச் சொற்கள் முழுமையாகத் தமிழ் மொழியை வேராகக் கொண்டவை. பல சொற்கள் திரிந்தும், மருவியும் இருக்கின்றன ஒலிவடிவத்தில்.

இம்மலைக்குறவர் மக்கள் அடர்த்தியாகவும், குழுவாகவும் வாழ்ந்த மலைப்பகுதியில் இருந்து 1888 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் பிறப்பிக்கப்பட்ட வனச் சட்டத்தால் விரட்டியடிக்கப்பட்டார்கள்.

அப்படிச் சிதறிப்போன மக்கள் நாடோடிகளைப் போல அலைந்து திரிந்தபோது, அவர்களால், அவர்களின் மொழிவழி பேசும் வாய்ப்புகள் குறைந்துபோனது.

அதுமட்டுமல்லாமல் சிதறிப்போன மலைக்குறவர்கள் வீடின்றி மரத்தடிகளிலும், தெருவோரங்களிலும், தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் அந்தப் பகுதிகளில் வேறு யாரேனும் திருட்டுச் செயல்களில் ஈடுபட்டால், அந்தப் பழியை இம்மக்கள் மேல் போட்டு, இம்மக்களைக் குற்றப் பரம்பரையினர் என்று ஆக்கிவிட்டார்கள்.

எனவே இக்குற்றப்பரம்பரை இன மக்கள் பேசும் குர்மொழியும் கூட “குற்ற மொழி” அல்லது “திருட்டுமொழி ” என்று ஆக்கப்பட்டுவிட்டது. அதனால் மலைக்குறவர் மக்கள் தம் மொழியைக்கூடப் பேசப் பயந்துபோய் இருந்தார்கள்.

இதனால் தொல்பழங்குடி இனமான மலைக்குறவர்களின் குர் மொழி அல்லது குளுவ மொழி காலஓட்டத்தில் சிறிது சிறிதாக மங்கி மறைந்து வருகிறது. இது இவ்வினத்தின் அழிவுக்கு வழி கோலுவதாக அமைகிறது. ஆகையால் மலைக்குறவர்களின் பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. மலைக்குறவர் மொழியான குர் மொழியை மீட்டெடுக்க வேண்டியது முதல் கடமையாக இருக்கிறது.

அனைத்திந்திய அளவில் மத்திய அரசு பழங்குடியின மொழி ஆய்வு மையம் ஏற்படுத்தி, பழங்குடி மக்களின் மொழிகளை ஆய்வு செய்துவருகிறது.

இம்மையத்தின் இயக்குநர் தேவிபிரசாத் சாஸ்திரி தலைமையில் பேராசிரியர் நாகராஜன் (புனே), பேராசிரியர் ஆர்.சுபாகிருஷ்ணராஜ்(மைசூர்), தமிழ்நாடு அரசு பழங்குடியினர் ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குநர் ஜக்கா பார்த்தசாரதி ஆகியோர் 07.09.2010 அன்று மைசூரில் பழங்குடியின மொழி ஆய்வுக் கூட்டத் தை நடத்தினார்கள்.

இந்த ஆய்வு எங்கள் மொழியை மீட்டுத் தருமா? அல்லது ஆய்வு ஆய்வாகவே இருந்து விடுமா? எங்கள் அடையாளம் என்ன ஆகும்? இப்படிப்பட்ட வினாக்கள் எங்களுக்குள் இருந் தாலும் எங்கள் உரிமைப் போராட்டம் எங்கள் மொழியைக் கட்டாயம் மீட்டுத் தரும் !

- என்.புரட்சிதாசன், தலைவர், விடுதலை வேங்கைகள்

Pin It