தமிழ்ச் சினிமா பல்வேறு கற்பிதங்களை மக்கள் மனத்தில் தொடர்ந்து ஏற்றி வருகிறது. சினிமாவுக்கு முந்திய பல்வேறு இலக்கிய வடிவங்களான நாடகம், பாட்டு, கூத்து என்பனவும் கூட பல்வேறு விதமான தப்பிதங்களை மக்களிடம் உற்பத்தி செய்தன அல்லது மக்கள் உளவியலை கட்டமைத்தன எனலாம். அவ்வாறான பல்வேறு கற்பிதங்களில் மிகவும் குறிப்பிடத் தக்கவையாக பழங்குடி- மலையின மக்கள் பற்றிய தமிழ்ச் சினிமா பரப்பிய காட்சிகளையும் கருத்துகளையும் கூறலாம். தமிழ்ச் சினிமா மையப்படுத்திய சமவெளி மக்களையே (நகரம் + கிராமம்) பெரும்பாலும் பாத்திரங்களாகவும், பார்வையாளர்களாகவும் கொண்டு 90 சதவீத திரைப்படங்கள் அமைந்தன எனலாம்.

மிகமிகக் குறைவாகவே பழங்குடியினர் வாழ்க்கை தமிழ்ச் சினிமாவில் பேசுபொருளாயின. அவ்வாறு பேசும்போதும் சமவெளியினர் கண்ணோட்டத்தினடியாகவே பேசப்பட்டன என்பதே உண்மை. பழங்குடியின- மலைவாழ் மக்கள் போன்றோரது வாழ்வு, பண்பாடு, பொருளாதார நிலைபற்றிய புரிதல் சிறிதளவும் இன்றி, அவர்கள் மீதான கரிசனம் சிறிதளவும் இன்றி காட்சிப்படுத்தப்பட்டதன் விளைவாகவே தமிழ்ச் சினிமா பழங்குடியினர் பற்றிய பல்வேறு அவதூறுகளை, இழிவுகளை பார்வையாளர்களுக்கு வழங்கின. இவை தமிழ்ச் சினிமாத் துறையினரின் அடிப்படையான கண்ணோட்டத்தை மீறியதில்லை என்பதும் குறிப்பிடத்தகுந்ததாகும். குறிப்பாக தமிழ்ச் சினிமாவின் பழங்குடியினர் பற்றிய கண்ணோட்டம் வெகுகாலமாகத் தொடரக்கூடியதும் அருவருப்பானதுமாகும்.

நரமாமிசம் திண்ணும் பயங்கரமான அரக்கர்கள் என பழங்குடி மக்களைக் காட்டி வந்த துவக்க காலத் தமிழ்ச் சினிமா பின்பு படிப்படியாக நகைச்சுவைக் காட்சி சார்ந்தும் பாலியல் (உணர்வைத் தூண்டும் கவர்ச்சி ஆட்டத்திற்கான களமாகவும் பழங்குடி- மலையின மக்களைக் காட்டினார்கள். இவ்வாறு பாலுறவு சார்ந்த காட்சிக்கு பழங்குடி மக்களது அடையாளத்தை, கதாபாத்திரங்களைக் காட்டும் போக்கு தமிழ்ச் சினிமாவின் முன் மாதிரிகள்/சிறந்த இயக்குநர்கள் என்று போற்றப்படும் பாலுமகேந்திரா, மணிரத்னம், மகேந்திரன் போன்றோரிடமும் இருந்து வந்துள்ளது. இதற்கு அவர்களது திரைப்படங்கள் சாட்சியாக அமைகின்றன (ஜானி, மூன்றாம்பிறை, வண்ணவண்ணப் பூக்கள், மௌன ராகம்).

பழங்குடி- மலையின ஆண்களை நகைச்சுவைப் பாத்திரங் களாகவும், பெண்களைப் பாலுணர்வுப் பாத்திரங்களாகவும் காட்சிப்படுத்திய தமிழ்ச் சினிமா சகமனிதர்களுக்கான இடத்தை மட்டும் வழங்க மறுக்கிறது. மேலை நாட்டினர் பண்டைக்கால இந்தியாவை 'பாம்பாட்டி களின் நாடு” என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நமது நாட்டில் சமவெளி மனிதர்கள் பழங்குடி- மலையின மக்கள்பற்றி கொண்டுள்ள கருத்தும் அப்படி ஒன்றும் உயர்வானதில்லை.

பொதுவாக மனிதர்களது அறிதல் திறன்/நேரடி அனுபவம் மிகக் குறுகியதுதான். இதனை அகண்டதாக்குவது ஊடகங்களே. ஆனால் இவ்வூடகங்களைக் கையாளும் அல்லது கைக் கொண்டுள்ள தனி மனிதர்களது அல்லது சிறு குழுவினது உலகக் கண்ணோட்டம் சார்ந்தே உலக நடப்புகளும், உண்மைகளும் படம் பிடிக்கும் கேமராவின் (லென்ஸ்) ஆடி வழியே வடிகட்டப்பட்டு அல்லது பூதாகரமாக உருப்பெருக்கப் பட்டு அல்லது உருமாற்றப்பட்டு பெரும்பான்மை மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

இவ்வாறு பெற்ற காட்சியும் அது உருவாக்கிய படிமங்களும் மக்களது ஆழ்மனங்களில் பதிந்து அதுவே உலகம் பற்றிய அவர்களது கண்ணோட்டமாக மாறி நிலைபெறவும், பரவவும் செய்கிறது. ஆகவே, காலம், எல்லை ஆகியவற்றைக் கடந்த, தனிமனித ஆற்றலை விரிவாக்குகிற சினிமாவைக் கையாள்பவர்களுக்கு பெரும் பொறுப்பும், சமூக அக்கறையும் தாங்கள் சமூக உளவியலைக் கட்டமைக்கிறோம் என்னும் விழிப்புணர்வும் எச்சரிக்கையும், அறமும் தேவைப்படுகின்றன. ஆனால் தமிழ்ச் சினிமாவில் இன்று அங்கம் வகிப்பவர் களில் பெரும்பாலோர் சராசரி மனித மாண்பு கூட இல்லாத பொறுக்கிகளாகவும், அறிவு நாணயமற்ற கழிசடை வியாபாரிகளாகவும், தமிழ்ச் சமூக வரலாறு குறித்து அறியாத மூடர்களாகவும் இருக்கும்போது இச்சமூகத்தின் விளிம்பில் வாழும் பழங்குடி- மலையின மக்கள் குறித்து என்ன புரிதல் இவர்களுக்கு இருக்க முடியும்?

தனக்கு வெளியே உள்ள ஒரு பொருளைப்பற்றி/ ஓர் உயிரைப் பற்றிக் கருத்துக்கூற விரும்பும் ஒரு கலைஞன் அப்பொருளாகவே/அவ்வுயிராகவே மாறிவிடும்போதே ஓர் உன்னதமான யதார்த்த கலை இலக்கியம் படைக்கப்படும். ஆனால் நமது சினிமாத்துறை இயக்குநர்களில் பெரும்பாலோர் குறைந்த பட்சம் ஓர் ஆய்வாளன் என்ற நிலையில் நின்றுகூட தான் கருத்துக்கூற விரும்பும் பொருள்/உயிர் பற்றித் தனது அறிதல் என்ன என்று சிந்திப்பதில்லை. மாறாக, கடந்த காலத்தின் மரபு வழி கிடைத்த தனது தப்பிதங்களையே காட்சிப் படுத்தி மக்கள்முன் வைக்கும் தைரியசாலிகளாக இருக்கின்றனர். பழங்குடி- மலையின மக்களது வாழ்வியல் கண்ணோட்டம் முற்றிலும் வேறானது. அவர்கள் சமவெளி மக்களைப்போல் சிந்திப்பதில்லை, செயல்படுவதுமில்லை. சமவெளி மக்களது ஏற்றத்தாழ்வு, போட்டி பொறாமை, காதல் மோதல், சூதுவாது, ஊடல் கூடல், சூழ்ச்சி சுரண்டல் போன்ற அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து அவர்களது இயற்கை சார்ந்த நிகழ்வுகள் முற்றிலும் வேறானவை.

அதுபோலவே பாலியல் குறித்து சமவெளி மனிதர்கள் கொண்டுள்ள பல்வேறு கற்பிதங்களிலிருந்தும் அவர்களது கண்ணோட்டம் வேறுபட்டது. அவர்களது ஆடை புனைவு அல்லது ஆடைக்குறைப்பு அல்லது ஆடையின்மை, பாலியல் உணர்வு சார்ந்து குறைத்த அல்லது கைவிடப்பட்டவை அல்ல. அது இயல்பானது. ஆனால் தமிழ்ச்சினிமா, சமகாலப் பார்வையாளனுடைய பெண்ணுடல் பற்றிய ரசனையை மனதில் கொண்டே கேமராவின் கோணங்களை அமைக்கிறது. இக்கோணங்களின் கட்டத்திற்குள் பொருளாக மலையினப் பெண் வைக்கப்படும்போது மலைவாழ் பெண்களின் ஆடை குறித்து சமவெளி மனிதர்களின் மன வெளிகளில் பதிந்துபோயுள்ள பிம்பங்களை நனவாக்கி சமவெளி ஆணாதிக்கக் கோணத்தில் சுட்டு, திரையில் காட்சியாக விரித்து ஆண்களின் காமப் பசிக்கு தீனியாக்குகிறார்கள்.

இவ்வாறான திரைப்படங்களால் தமிழ்த் திரைப் பார்வையாளர்களுக்குப் புற உலகு பற்றிய சரியான அறிதல் எதுவும் கிட்டப்போவதில்லை. 'எங்களுக்கு மக்களது பொழுதபோக்குதான் நோக்கமே தவிர புற உலகு பற்றிய புரிதலை உருவாக்குவதல்ல” என்று சில இயக்குநர்கள் சொல்லலாம். நீங்கள் கற்பனை, பொழுதுபோக்கு என்று சொல்வதும்கூட மக்களிடம் சில பதிவுகளை ஏற்படுத்தத்தான் செய்கின்றன. எனவே இதில் சமூக நலன், அக்கறை என்பது ஒவ்வொரு படத்திற்குமே அவசியமானதாகிறது.

இது ஒரு நுட்பமான விசயமும் கூட. தனக்குப் புறத்தே உள்ள மற்றவைகளின் அகம், உயிர்/உணர்வு குறித்து எவ்வித அக்கறையும் அற்ற, தனது தேவையை மட்டுமே நிஜமானதாகக் கருதி அதற்காகப் புற உலகு அனைத்தையும் தன் ஆற்றலுக்கு ஏற்ற அளவில் சுரண்டும், சூறையாடும், கட்டுப்படுத்தும் அல்லது பயன்படுத்தும் முதலாளிய மனோ பாவம் இங்கு ஒவ்வொரு மனிதருக்குள்ளும்- குளுக்கோஸ் சொட்டு வலியில்லாமல், உணர்வற்று இரத்தத்தில் கலப்பதுபோல ஏற்றப்படுகிறது. நல்ல இலக்கியத்தின் அடிப்படைப் பண்பாகிய (உடல் அளவிலான) மதனிதர்களை (உள்ள அளவிலும்) மனிதர்களாக மாற்றுவது அதாவது மனிதாயப்படுத்துவது என்ற இலக்கணம் தமிழ்ச் சினிமாவிற்கும் பொருத்தப்பட வேண்டும். ஆனால் இதுவரை தமிழ்ச் சினிமா எத்தனை சதவீதம் மக்களை மனிதர்களாக மாற்றியிருக்கிறது?

மனிதகுல விரோத சாதித் தீண்டாமை, வர்க்க ஏற்றத்தாழ்வு, ஆணாதிக்க வன்முறை போன்ற வற்றைத் தனது வாழ்நிலை/மரபு வழியே கடந்த காலத்தில் இருந்து பெற்று ஒழுகி வந்த மனிதர் களை, தனது படச்சுருளில் இருந்து வெண்திரையில் விரித்த காட்சியின் மூலம் அதிரடித்து, தன் தவறுகளுக்காக கதறவைத்து, இனி ஒருபோதும் இதுபோல் மனித விரோதியாக வாழ மாட்டேன் என்று கருதுமாறு எத்தனை லட்சம் மனிதர்களை தமிழ்ச் சினிமா மாண்புறச் செய்திருக்கிறது? தாழ்த்தப்பட்டவர்கள் சாதியாதிக்கவாதிகளின் அடிமைகளாக- விசுவாசிகளாக இருக்க வேண்டும், ஆதிக்கசாதிப் பெரிய மனிதர்களின் கால்களில் விழுந்து வணங்க வேண்டும் என்று போதித்திருக்கிறது. பணக்கார வீட்டுப் பிள்ளைகளின் குடி, கும்மாளம், கூத்து, திமிர், பொறுக்கித்தனத்தை ரசனைக்குரிய ஒன்றாக மாற்றியிருக்கிறது. பெண்களைத் துரத்தித்துரத்தி கேலிசெய்யவும், வக்கிரமாகப் பாட்டுப்பாடி இழிவுபடுத்தவும், குற்றவுணர்வு சிறிதுமின்றி வன்கொடுமையில் ஈடுபடவும் கற்றுத் தருகிறது. பெரிய லட்சியவாதியாகவும் குடி, புகை போன்ற பழக்கங்கள் இல்லாத அறம் காக்கும் ஒழுக்கவாதியாகவும் காட்சிதந்த எம்.ஜி. ராமச்சந்திரன் இவ்விசயத்தில் பெண்களைத் துரத்தித் துரத்திப் பாலியல் தொந்தரவு செய்வதில் கைதேர்ந்த நடிகராக (உரிமைக்குரல், ...) இருந்தார்.

குறிப்பாக, திருநங்கைகள் (அரவாணிகள்) என்றாலே கேலிப் பொருட்கள் என்று பொதுப்புத்தியில் ஆணி அடித்ததே தமிழ்ச் சினிமாதான். சாதிப் பெருமிதம் கொள்ளவும் (பாரதிராஜா படங்கள்) உயர்வர்க்கத்தவருக்குக் கீழ்ப்படிந்து போகவும், கிராமப் பண்பாட்டை உயர்வானதாக நம்பவும், பெண் மறுமணத்தை எதிர்க்கவும் கற்றுக் கொடுத்து வருவதும் தமிழ்ச் சினிமாதான். அதுபோலத்தான் பழங்குடி- மலையின மக்களைத் தமிழ்ச் சினிமா தொடர்ந்து இழிவு படுத்திவருகிறது. மலையின மக்களைத் தொடக்க காலத்தில் அரக்கர்கள், பயங்கரவாதிகள் என்று காட்டிய நிலையிலிருந்து, நகைச்சுவை + பாலுணர்வு காட்சிக்கானவர்களாக மாற்றிய தமிழ்ச்சினிமா, அவர்களை முட்டாள்கள் என்ற நிலையிலிருந்து மூடர்கள்/தாதாக்கள்/ரவுடிகள் என்ற நிலைக்கு மாற்றிக் காட்சிப்படுத்துகிறது. இதன் காரணமாகத்தான் மலையின மக்களை, அதிகார வர்க்கமானது மனிதர்களுக்கும் கீழான மிருகங்கள் எனக் கருதி அடித்துவிரட்டவும், துன்புறுத்தவும், மலையினப் பெண்களை பாலுறவுப் பயன் பொருளாகக் கருதி வன்புணர்ச்சியில் ஈடுபடவும் செய்யும் போது தமிழ்ச் சமூகம் எவ்வித அதிர்ச்சியும் இன்றி மௌனம் காக்கிறது.

இவர்கள் தமிழ்ச் சமூகம் பெற்றெடுத்த பிள்ளைகள் அல்ல. கழிசடைத் தமிழ்ச் சினிமா பெற்றுப்போட்ட சுயமரியாதை அற்ற மூடக் குழந்தைகள். ஒரே நொடியில் இதுபோன்ற குழந்தைகளைத் தமிழ்ச் சினிமாவும், சின்னத்திரையும் உற்பத்தி செய்து கொண்டிருக்கும் போது நாம் திரைக்கு வெளியே நின்று இதைத் தடுப்பது அல்லது மாற்றுவது எப்படியெனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதே சமயம் சமகாலத் தமிழ்த் திரைக்குள் நுழைந்து நல்ல, மாறுபட்ட தமிழ்ச் சினிமாவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களது உழைப்பெல்லாம் கடலில் கரைத்த பெருங்காயமாகிப் போனதையும் பார்த்துவிட்டோம்.
தமிழ்ச் சினிமாவின் நாசகாரச் செயலை அப்படியே பெருகவிட்டு, அது ஏற்படுத்தும் தீமைகளை பிரச்சாரத்தின் மூலம் சரிசெய்துவிடலாம் என்று கருதினால் அது மடத்தனம் என்றே படுகிறது. சினிமாவின் ஆற்றலுக்கு முன் வேறு எந்தப் பிரச்சார வடிவமும் செல்லுபடியாகாது. அவ்வாறா யின் என்னதான் மாற்றுவழி?

ஒன்று தமிழ்த் திரையில் நல்ல, சமூக அக்கறை கொண்ட கலைஞர்களின் எண்ணிக்கை சரிபாதியாளவிலானதாகப் பெருக வேண்டும். அல்லது வெளியே இருந்து தமிழ் சினிமாவின் மீது ஆதிக்கம் செய்து கட்டுப்படுத்தும் அதிகாரம் வேண்டும். இதில் முதல் வழி சாத்தியமற்றது என்பது நிரூபனம். நுழைந்த சிறுபான்மையினரும் சந்தர்ப்பவாதிகளாகவும், பிழைப்பு வாதிகளாகவும், சமரசவாதிகளாகவும் மாறித் தங்களை நிலைநிறத்திக்கொண்டதும், உறுதியானவர்கள் வெளியேற்றப் பட்டதுமே கடந்தகால வரலாறு. இரண்டாவது வழியான சினிமாவின் மீது ஆதிக்கம் செய்வது, கட்டுப்படுத்துவது என்பதை இன்று மேற்கொள்பவர்கள் முற்போக்காளர்கள் அல்ல. மாறாக பிற்போக்கு பாசிஸ்ட்டு கள். அவர்கள் இன்று சமூகத்தில் அதிகாரம் மிக்கவர்களாக இருக்கின்றனர். ஒரு திரைப்படத்தின் பெயரிலிருந்து கருத்துவரை இந்துமத வெறியர்களது விருப்பத்திற்கு மாறாக எதுவும் இன்று இந்தியா முழுதும் இருந்துவிட முடியாது என்பதே யதார்த்தம். அவ்வாறாயின் ஒரு விசயம் தெளிவாகிறது. சமூக அரசியல் அரங்கில் யாருடைய கை ஓங்கி இருக்கிறதோ அவர்களது செல்வாக்கே திரைத்துறையிலும் ஓங்கி நிற்கும் என்பதே அது.

தமிழ்த் திரைத்துறை என்பது சமூகம் என்ன கச்சாப் பொருளை வழங்குகிறதோ அதையே வண்ண வண்ணப் பண்டங்களாக உற்பத்தி செய்து திரும்பவும் சமூகத்திற்கு வழங்கிவிடும் என்பதே உண்மை.

இவ்வாறு தமிழ்த்திரை உற்பத்தி செய்து வழங்கும் பண்டங்கள் சமூகத்தின் மூலப்பொருளை மேலும்மேலும் வலுவாக்கும், விரிவாக்கும். இது ஒரு தொடர்சுழற்சி. ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கவியலாத தொடர் சங்கிலி.

இன்றைக்குத் தமிழ்த்திரை உற்பத்தி செய்துகொண்டிருக்கும் கிராமப்புற மேட்டுக்குடி சாதியாதிக்கப் பெருமிதம், நகர்ப்புற மேட்டுக்குடி கால்செண்டர் கலாச்சாரம், காலனியாதிக்க அந்நிய மோகம், இந்துப்பாசிச வெறி, இசுலாமியச் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு, தீவிரவாதம் குறித்த பிதற்றல் போன்றவையனைத்தும் சமூக அரசியல் அரங்கில் கோலோச்சிக் கொண்டிருக்கும் சமகால நிலவரங்களாகும். இவற்றைத்தான் தமிழ்த்திரை ஊதிப் பெருக்கி, இசை, பாலியல் கவர்ச்சி, நகைச்சுவை, நடனம், வண்ணம் என்னும் போதைகள் கலந்து வண்ணக் கலவையாக்கி மறுசுழற்சியில் சுடச்சுடத் திருப்பித்திருப்பி வழங்கிக்கொண்டிருக்கிறது.

சமூகத்தில் அரசியல் அரங்கில் நிலவுகின்றவற்றை கூர்ந்து கவனிக்கும், அல்லது அச்சு ஊடகத்தில் வாசித்து அறியும் ஆற்றல் அற்ற, நேரமற்ற சாதாரண மக்கள் திரையில் காட்சியாக இவற்றைப் பார்த்து ஆளுவோருக்கான கருத்தை தங்களுக்குள் உருவாக்கிக்கொள்ளும்போது அடிமைத் தன்னிலைகள் பெருகி விடுகின்றன. ஆளும் வர்க்கத்திற்கு எதிரான தன்னிலைகள் இந்த அடிமைத் தன்னிலைகளுக்கும் எதிரானவர்களாக வலம் வரவும் தனிமைப்படவும் வேண்டியுள்ளது. அடிமைத் தன்னிலை களை ஒவ்வொருவராக அணுகி மாற்ற முனைவது காரிய சாத்தியமற்றது. எனவே தமிழ்த்திரை புறக்கணிக்கும், இழிவுபடுத்தும் ஒவ்வொரு சமூகக் குழுவும் தங்களுக்கான பங்கைத் தமிழ்த் திரையில் பெறப் போராட வேண்டும் அல்லது இயக்கம் அமைத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் வெளிவரும் ஒவ்வொரு திரைப் படத்தையும் அல்லது காட்சியையும் எதிர்த்துக் குரல் எழுப்ப வேண்டும்; நீக்க நிர்ப்பந்திக்க வேண்டும். இந்த விழிப்புணர்வும் சுயமரியாதையும் அடித்தட்டு அல்லது ஒடுக்கப்படும் சமூகக் குழுவினரிடத்து போதிய அளவு இன்னும் வளரவில்லை. அதனால் பாசிஸ்டுகள் சமகாலத் தமிழ்த்திரையை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறார்கள்

எடுத்துக்காட்டாக, அம்மா என்ற திரைப்படத்தின் துவக்கவிழா விளம்பரத் தட்டிகள் இந்து முன்னணி ராமகோபாலன் எதிர்ப்பின் காரணமாக அகற்றப்பட்டதுடன் அத்திரைப்படத் துவக்க விழாவும் ஒத்திவைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். மேலும் அவ்விளம்பரத் தட்டியில் ராமன், அனுமன் வேடமிட்டவர்கள் சிறுநீர் கழிப்பது போன்ற புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்ததே இந்து முன்னணியின் எதிர்ப்பிற்கான காரணங்கள் என்பதோடு நிற்காமல், 'அப்படத்துவக்க விழாவில் சுப. வீரபாண்டியன், சீமான், தமிழ்முழக்கம் சாகுல் ஹமீது கலந்து கொள்கிறார்கள் -இசுலாமியர், கிருத்துவர், நாத்திகர் மூவரும் சேர்ந்து இந்துக்கடவுள்களை இழிவுபடுத்தும் திரைப்படத்தைத் துவக்கி வைக்கிறார்கள் - எனவே இப்படப் பிடிப்பை நடத்தவிடமாட்டோம்” என ராமகோபாலன் அறிக்கைவிட்டார். அதேபோல் கமலஹாசனின் தசாவதாரம் சைவ-வைணவ மோதலை படம்பிடித்துக் காட்டியது என்று கூறியும் எதிர்த்தார்கள்.

ஆனால் தங்களைப் பற்றித் தனது படங்களில் தொடர்ந்து நச்சைக் கக்கி வந்துள்ள விஜயகாந்தை அழைத்து ரமலான் விருந்து கொடுத்ததோடு 'விஜய்கான்” என்று பட்டமும் வழங்கும் இசுலாமியர் களையும், கரசேவைக்கு ஆள் அனுப்பிய ஜெயலலி தாவுக்கு இப்தர் விருந்து கொடுக்கும் இசுலாமியர்களையும் நாம் இங்கு பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதேபோல் தாழ்த்தப்பட்டோர், திருநங்கைகள், பழங்குடியினர், மீனவர்கள், நாவிதர், சலவைத் தொழிலாளர் குறித்த தவறான சித்தரிப்புகளையும், இழிவுபடுத்தல்களையும் காட்சிப்படுத்திய தமிழ்த் திரைப்படங்கள் அனேகம். இவையெல்லாம் எவ்வித எதிர்ப்பும் இன்றியே கடந்து போய்விட்டன.

தங்களைப் பற்றிய உயர் மதிப்பீடும், சுயமரியாதை உணர்வும், பிறரது இழிவுபடுத்தும் முயற்சிகளை எதிர்த்த கோபமும், போராட்டமுமே உயர்வையும் சமூக விடுதலையையும் பெற்றுத்தரும். எனவே, இனிவரும் ஒவ்வொரு தமிழ்த் திரைப்படத்தையும் அடித்தட்டு சமூகக் குழுக்கள் 'இது தங்களுக்கு, சமூக நலனுக்கு ஏற்றதா, இல்லை எதிரானதா” என்று பார்த்து அதன் மீது எதிர்வினை செய்யும் நிலை வரவேண்டும். இவ்விடத்தில் கருத்துச் சுதந்திரம் பற்றிச் சிலர் கவலைப் படலாம். தற்போதுள்ள தணிக்கைத்துறை எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய தெளிவும், பாசிச சக்திகளின் கருத்துகளை எதிர்த்து உண்மைகளைப் பேசும் சுதந்திரம் இங்கு மறுக்கப்பட்டுள்ள நிலையையும் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால் அடித்தட்டு மக்கள் நலனுக்கு விரோதமான கருத்துகளைப் பேசும் திரைப்படங்களுக்கு எதிராக வினையாற்றுவது ஒன்றும் தவறானது அல்ல என்பது தெளிவாகும்.

Pin It