கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தீண்டாமையை கடைப்பிடிக்கவும், சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் ஜாதி இந்துக்கள் பல்வேறு இடங்களை, சூழல்களை, காரணங்களை தொடர்ந்து கண்டுபிடித்தே வருகின்றனர். நேரடியாக சேர்ந்திருந்து கலந்து பழகாத நிலையிலும் - தங்கள் ஆதிக்க வட்டத்திற்குள் தப்பித் தவறிகூட யாரையும் அனுமதிக்க அவர்கள் தயாராக இல்லை. அதையும் மீறி நுழைய விரும்புபவர்களுக்கு எதிராக எதையும் செய்ய அவர்கள் துணிந்தே இருக்கின்றனர். தீண்டாமையை தடுக்க உதவாத சட்டமும், காவல் துறையும், அரசு எந்திரங்களும், ஆதிக்க சாதியினரின் "பரிசுத்தத்தை' மட்டும் காக்க ஓடோடி வருகின்றன. வெட்கங்கெட்ட நாட்டின் அன்றாட நிலை இது.

ஈரோடு மாவட்டம், கோபி வட்டத்தில் உள்ள நம்பியூரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் தனது குழந்தையின் காதணி விழாவிற்காக நம்பியூரில் உள்ள ஒரு மண்டபத்தை 7.10.2007 அன்று பதிவு செய்தார். அதற்குரிய பணத்தை வாங்கிக் கொண்டு, பற்றுச் சீட்டையும் அளித்த பிறகு, மாரியப்பனின் சாதியைப் பற்றி தற்செயலாக அறிந்து கொண்ட மண்டபப் பொறுப்பாளர், "தாழ்த்தப்பட்டவர்களுக்கு மண்டபம் கொடுப்பதில்லை'' என்று வெளிப்படையாகவே கூறி, மாரியப்பனின் பணத்தை திருப்பி அளித்து, பற்றுச்சீட்டையும் வலுக்கட்டாயமாக திரும்பப் பெற்றுள்ளார்.

இதற்கு சட்ட நிவாரணம் கோரி, நம்பியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளரை மாரியப்பன் அணுகியுள்ளார். உதவி ஆய்வாளரின் முயற்சியால், வேண்டா வெறுப்பாக பணத்தைப் பெற்றுக் கொண்டு பற்றுச் சீட்டை மாரியப்பனிடம் அளித்துள்ளனர் மண்டபப் பொறுப்பாளர்கள். அதோடு நில்லாமல், மண்டபத்தை "சுத்தமாக' பயன்படுத்த வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளனர்.

இந்நிலையில், உள்ளூரில் சுவரொட்டி ஒட்டுவதில் எழுந்த பிரச்சினையைப் பயன்படுத்திக் கொண்டு, நம்பியூரே பதட்டத்தில் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியதோடு, உதவி ஆய்வாளர் மூலம் மிரட்டியே மண்டபத்தைப் பதிவு செய்ததாக ஒரு புகாரையும் ஆதிக்க சாதியினர் பதிவு செய்துள்ளனர். இதன் விளைவாக, கோபி கோட்டாட்சியர் இரு தரப்பினரையும் அழைத்து அமைதிக் குழு கூட்டம் நடத்தினார்.

ஆனால் கூட்டத்தின் முடிவில், நகரில் பதட்டம் நிலவுவதால் 144 தடை உத்தரவு போடப்பட வேண்டும் என்று பரிந்துரைத்ததோடு, மாரியப்பனுக்கு உதவியாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தன்னை அரசு கடமையை ஆற்ற விடாமல் தடுத்ததாகக் கூறி அவர்கள் மீது புகார் அளித்துள்ளார். அதன்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர் தங்கவேலு, ரங்கசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

வட்டாட்சியரின் பரிந்துரையை ஏற்று, காதணி விழா நடைபெறுவதற்கு முதல் நாள், நம்பியூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மாரியப்பன் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் என 13 பேரும், எதிர் தரப்பைச் சேர்ந்த 14 பேரும் 10 நாட்களுக்கு ஊருக்குள் நுழையக் கூடாது என்ற தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இதனால் காதணி விழாவை நம்பியூரில் நடத்த இயலாத நிலையில், வெளியூரில் தன் குழந்தைக்கு 21.11.2007 அன்று மொட்டை மட்டும் போட்டு விட்டு, நம்பியூரிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிலியம்பாளையத்தில் இருந்த தனது வீட்டில் இருந்த மாரியப்பனை வீட்டிற்குள் புகுந்து, ஏளனமாகப் பேசி, மண்டபத்தைப் பதிவு செய்த போதும் விழா நடத்த முடியாமல் செய்து விட்டோமே என கொக்கரித்துச் சென்றுள்ளனர் ஆதிக்க சாதியினர். இதனால் வெகுண்ட மாரியப்பன் குழந்தையை தூக்கிக் கொண்டு, மண்டபத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் மிஸ்ரா தலைமையில் குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினர், மாரியப்பனை யும் அவருடன் வந்தவர்கள் என 27 பேரையும் கைது செய்துள்ளனர். ஆனால், மாரியப்பனின் வீடு புகுந்து அவரை அவமானப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்த ஆதிக்க சாதியினர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மிக முக்கியமானது.

இவ்வளவையும் செய்த ஆதிக்க சாதியினர், தங்கள் சாதி ஆதிக்கத்தின் பலத்தை நிலைநாட்ட, கோவை மண்டல அய்.ஜி. ராஜேந்திரன் தாழ்த்தப்பட்டவராக இருப்பதால், அவர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார் என குற்றஞ்சாட்டி, அவரை எதிர்த்து 4.12.2007 அன்று நம்பியூரில் கடையடைப்பு நடத்திவிட்டு, மீண்டும் 10.12.2007 அன்று ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலே கட்சிப் பதவிக்கு ஆபத்து என்று எப்போதும் மோதிக் கொண்டிருக்கும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் உட்பட, வேறு பல கட்சிகளின் முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர். இதில் இரு சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு முன்னாள் உறுப்பினர் ஆகியோரும் அடங்குவர்.

ஆதிக்க சாதியினர் மனதில் கட்சிகள் இல்லை; சாதி வெறி மட்டுமே உள்ளது என்ற உண்மையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது அந்த ஆர்ப்பாட்டம். எந்த கட்சிகளுக்காக, தங்களது குறைந்த வருமானத்திலும் தோரணங்கள் கட்டி, ஓடோடி வேலை பார்த்தார்களோ - அந்த கட்சிகள் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க முன் வராததோடு மட்டுமல்ல, நேர் எதிராக சாதி ஆதிக்கத்தை சற்றும் கூச்சமின்றி வெளிப்படுத்தி நிற்பதைக் கண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தெழுந்தனர்.

நம்பியூர் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளிலிருந்தும் ஏராளமாகப் பறந்து வந்த எல்லா கட்சி கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டன. பொது இடங்களில் கூடி, கட்சி உறுப்பினர் அட்டை வைத்திருந்தவர்கள் அவற்றை எரித்தனர். இதுவரை 134 இடங்களில் தன்னெழுச்சியான இந்தப் போராட்டத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்தியிருக்கின்றனர்.

மக்களின் இந்த தன்னெழுச்சிக்கு ஆதரவாக தலித் அமைப்புகளும், சாதி ஒழிப்புக்காகப் போராடும் அமைப்புகளும் ஓரணியில் திரண்டனர். பெரியார் திராவிடர் கழகத்தின் முன் முயற்சியால், சாதி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் ஒருமுகப்படுத்தப்பட்டது.

சாதி ஒழிப்புக் கூட்டியக்கம் என்ற பொதுவான அமைப்பு உருவாக்கப்பட்டது. கடந்த சனவரி 7 ஆம் நாள், இந்த கூட்டியக்கத்தின் சார்பில் கோபியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு தளங்களில் நின்று சாதி ஒழிப்புப் போரில் ஈடுபட்டிருந்த அனைத்து இயக்கங்களும் அன்று ஒரே குரலாய் ஒலித்தன.

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்த இப்போராட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, ஆதித்தமிழர் பேரவையினர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உட்பட பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் பங்கேற்றனர். புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார் : "60 ஆண்டுகால சுதந்திரத்திற்க்குப் பிறகு சாதாரண உரிமைகளுக்குக்கூட, இவ்வளவு பெரிய போராட்டங்களை நடத்த வேண்டிய நிலையிருப்பது வெட்கக்கேடானது. இது சுதந்திர நாடு என்று சொல்லிக் கொள்வதற்கு அவமானப்படுகிறேன்'' என்று குறிப்பிட்டார்
.
ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து உரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், ஆதிக்க சாதியினர் பக்கம் சேர்ந்து கொண்டு - சட்டப்படி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க மறுக்கும் காவல் துறையையும், அதிகாரிகளையும் கடுமையாக சாடினார். நம்பியூரில் நடந்த சம்பவங்களை விரிவாக எடுத்துக் கூறிய தொல் திருமாவளவன், "வழக்கு தொடரப்பட்ட நம்பியூர் சாதி வெறியர்கள் எட்டு பேரையும் உடனே கைது செய்யாவிட்டால், இப்பிரச்சினையை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, சட்டமன்றத்திலும் குரல் எழுப்புவோம்'' என்று எச்சரித்தார்.

இரட்டைக் குவளை ஒழிப்புப் போராட் டத்தை அண்மையில் முன்னெடுத்த பெரியார் திராவிடர் கழகம், பெரியார் கருத்தியலின் ஆணிவேரான சாதி ஒழிப்புப் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருவது மிகுந்த பாராட்டுக்குரியது. அதிலும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த அனைத்து அமைப்புகளையும் ஓர் அணியில் இணைத்து செயல்படுவது குறிப்பிடத்தகுந்தது. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு சாதி ஒழிப்புக்கான போராட்டம் தொடரட்டும்.

-நம் சிறப்புச் செய்தியாளர்