திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் புஇமு நடத்தும் நிகழ்ச்சிகளில் குழந்தைகள், பெண்கள் கலந்து கொள்ளக்கூடாது, அவ்வாறு கலந்து கொண்டால் அந்நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என தொடர்ந்து தடை போட்டு வந்தது காங்கேயம் காவல்துறை. கார்ல் மார்க்ஸின் 200 வது பிறந்தநாள் விழாவிற்கு குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என கட்டாயப்படுத்தி எழுதி வாங்கிய பின்பே நிகழ்ச்சிக்கு அனுமதி தந்தது போலீசு. போலீசின் அதிகார திமிரைக் கண்டித்து புஇமுவை சேர்ந்த பெண்கள் அணிதிரண்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியை அழைத்து பெண் தோழர்கள் முன்பாகவே எச்சரித்துள்ளார் ஆட்சியர்.

இன்றைக்கு தமிழகத்தில் நடைபெறும் உரிமைப் போராட்டங்களில் முன்னணியாக நின்று செயல்படுவது பெண்கள் தான். ஆளும் வர்க்கங்களின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக பெண்கள் தொடுக்கும் கேள்விக் கணைகளை எதிர்கொள்ள முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது அரசு. பெண்கள் பெருமளவில் போராட்டங்களில் பங்கெடுப்பதால் தானும் தன்னுடைய எசமானர்களும் (டெல்லி அரசும், பன்னாட்டு முதலாளிகளும்) அம்பலப்படுவதை தடுக்க காவல்துறையின் மூலம் இத்தகைய கீழ்த்தரமான செயல்களை செய்து வருகிறது எடப்பாடி அரசு.

மேலும், இயல்பாகவே போலீசிடம் பார்ப்பனிய ஆணாதிக்க மனோபாவம் மேலோங்கியுள்ளது. ஆணுக்கு சரிநிகராக பெண்கள் விளங்குவதை மற்ற துறைகள் போல போலீஸ் துறையும் விரும்புவதில்லை. குறிப்பாக பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை மிகத் தீவிரமாக எதிர்க்கிறது. கல்வியறிவிலும், பொருளாதாரத்திலும் பெண்கள் முன்னேறினாலும் அவர்களை ஆணுக்கு சேவை செய்யும் அடிமையாகவே நடத்துகிறது இந்த சமூகம். போலீசோ இந்த சமூக பிற்போக்கு கட்டமைப்புகளை மீறி - அதனை உடைத்தெறிந்து - பொதுவெளிக்கு வருபவர்களை அச்சுறுத்துகிறது.

இறுதி வரை பெண்கள் ஆணுக்கு - திருமணம் வரை தந்தைக்கும், திருமணத்திற்கு பின் கணவனுக்கும் - அடிமையாகவே இருக்க வேண்டும், அதற்காக சாதிய கட்டுமானத்தை அப்படியே பின்பற்ற வேண்டும் என்பது தான் பார்ப்பனிய இந்து மதத்தின் மனுசாஸ்திரம் போதிக்கும் விடயம். அதையேதான் ஹிந்திய அரசியல் அமைப்பு சட்டமும் பின்பற்றுகிறது. பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தும் இவைகளை தான் போலீஸ்துறையும் செயல்படுத்துகிறது.

இவற்றையெல்லாம் எதிர்த்த போராட்டத்தின் மூலமாகதான் முழுமையான பெண் விடுதலையை சாதிக்க முடியும்.

Pin It