பேபி காம்ப்ளே மகாராட்டிர மாநிலம் சட்டாரா மாவட்டத்தில் உள்ள பால்டன் என்ற ஊரில் வசிக்கிறார். இவர், மகாராட்டிர தலித் இயக்க முன்னோடிகளில் ஒருவர். பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரால் உந்தப்பட்டு, தம்முடைய இளமைக் காலம் முதலே போராட்டங்களில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். பால்டன் ஊருக்குப் பக்கத்திலுள்ள ஒரு குக்கிராமமான நிம்புரேவில், சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக விடுதியுடன் கூடிய அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி ஒன்றை நிறுவியிருக்கிறார்.
காம்ப்ளே அவர்களின் சமூக, இயக்கப் பணிகளுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கின்றன. அவருடைய கவிதைத் தொகுப்பு ஒன்றும் வெளிவந்திருக்கிறது. அவர் எழுதியுள்ள "நாங்கள் தகர்த்த சிறைகள்' (The Prision We Broke) சுயசரிதை, பாபாசாகேப் ஏற்படுத்திய தாக்கத்திற்கு முன்பு தலித் சமூகம் இருந்த நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது. ஒடுக்குமுறையான சாதிய - ஆணாதிக்க கோட்பாடுகளைக் கொண்ட இந்திய சமூகத்தை நம் கண்முன் கொணரும் அதே வேளையில், எந்த வகையிலும் அவர் தன்னை கழிவிரக்கத்திற்கு ஆட்படுத்திக் கொள்ளவில்லை.
அவருடைய எழுத்து - தலித் சமூகத்தின் விழாக்கள், சடங்குகள், மூடநம்பிக்கைகள், மூக்கொழுகும் குழந்தைகள், கடினமான வாழ்க்கை முறை, துணிச்சல் மிகுந்த பெண்கள் என அனைத்தையும் உற்சாகத்துடனும் வண்ணமயமாகவும் உள்ளவாறே படம் பிடித்துக் காட்டுகிறது.
மராத்திய நூலான "ஜினா ஆம்சா' 1982 இல் தொடராக வெளிவந்து 1986 இல் பதிப்பிக்கப்பட்டது. வடிவம், விவரணை முறைகள், கதை பாத்திரங்கள், கையாளப்பட்ட செய்திகள், பின்புலம் இவற்றில் மராத்திய சுயசரிதைகளுக்கு ஒரு புது வடிவம் அளித்தது பேபி காம்ப்ளேவின் நூல். மராத்தியில் முதன்முறையாக வெளிவந்துள்ள ஒரு தலித் பெண்ணின் சுயசரிதை இதுவே; இந்த வடிவில் வெளிவந்துள்ள இந்தியாவின் முதல் சுயசரிதையும் இதுவேயாகும்.
இந்நூலின் பின்னிணைப்பில் உள்ள காம்ப்ளேவின் பேட்டியை அதன் முக்கியத்துவம் கருதி, இரு பகுதிகளாக வெளியிடுகிறோம். இந்நூலை பேராசிரியர் மாயா பண்டிட் மராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து, அவரை பேட்டியும் கண்டுள்ளார். உங்களுடைய சுயசரிதையில் உங்களுடைய சொந்த விஷயங்களைப் பற்றி மிகவும் குறைந்தளவு தகவல்களே உள்ளன. தங்களைப் பற்றி சற்று கூடுதலாக சொல்ல முடியுமா?
நான் என்னுடைய சமூகத்தின் அனுபவத்தைதான் எழுதினேன். என்னுடைய மக்கள் படும் வேதனைகளே என்னுடைய சொந்த வேதனைகளாயின. அவர்களுடைய அனுபவங்களே என்னுடையவை. எனவே, உண்மையில் என்னுடைய சமூகத்தைக் கடந்து சிந்திப்பது எனக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. எங்களைச் சுற்றி இருந்த பெண்கள் எல்லாம் தங்கள் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஏனெனில், பாபாசாகேப் பெண்களைப் படிக்கச் சொன்னார்.
எனவே, எங்கள் பெண்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினர். அவர்கள் எல்லாம் சாதாரண விவசாயத் தொழிலாளர்கள்தான். ஆங்கிலப் பள்ளிகளில் கட்டணம் செலுத்த அவர்கள் பணத்திற்கு எங்கே போவார்கள்? அந்தக் காலத்தில், பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு எவ்வித சலுகைகளும் இல்லை; பள்ளிகளும் அரசிடமிருந்து எவ்வித மானியத்தையும் பெற்றிருக்கவில்லை. இருப்பினும், எங்களது பெண்கள் இத்தகைய தடைகளை எல்லாம் கடக்க பல்வேறு வழிகளைக் கண்டறிந்தனர்.
மேல்நிலைப் பள்ளியில் தமது இரு மகன்களை சேர்க்க, ஒரு பெண் 90 ரூபாய் சேர்க்கைக் கட்டணமாக செலுத்த வேண்டியிருந்தது. இந்தப் பணத்திற்கு அவர் என்ன செய்வார்? அது மழைக்காலம். உழவு வேலையும் அப்போது இல்லை. எனவே பணமும் இல்லை. தன்னுடைய கணவரிடம் இதைப்பற்றி அந்தப் பெண்ணால் பேச முடியவில்லை. அவர் ஒரு கட்டடத் தொழிலாளி. அவரிடம் சொல்லியிருந்தால், இரு மகன்களின் படிப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அவர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றியிருப்பார்.
அந்தப் பெண்ணின் உறவினர்களும் ஏழைகள். எனவே, அவர்களிடமிருந்தும் அவரால் கடன் வாங்க முடியாது. பிறகு அவருக்கு திடீரென ஒரு சிந்தனை தோன்றியது. அவர்கள் மழைக் காலத்திற்காகவென கொஞ்சம் சோளத்தை ஒரு பெரிய கேனில் சேர்த்து வைத்திருந்தனர்.
அவருடைய கணவர் வேலைக்குச் சென்றதும், அவர் தனது இரு மகன்களையும் அழைத்து, அவர்களுடைய உதவியுடன் சேமித்து வைத்திருந்த அனைத்து சோளத்தையும் எடுத்து யாருக்கும் தெரியாமல் ஒரு வியாபாரியிடம் விற்று விட்டனர். அந்தப் பணம் பள்ளிக் கட்டணத்திற்குப் போதுமானதாக இருந்தது. இந்த விஷயம் அவருடைய கணவனுக்கு தெரியவந்தபோது, அவன் அவளை அறைந்தே விட்டான்.
அது மட்டுமின்றி மழைக் காலத்தில் அவர்கள் பட்டினி கிடக்க நேர்ந்தது. இருப்பினும், அவள் தமது இரு மகன்களும் படிப்பை கைவிட அனுமதிக்கவில்லை. அவர்கள் மெட்ரிகுலேசனில் தேர்ச்சி பெற்று பிறகு கல்லூரிக்கும் சென்றனர்.
இன்னொரு பெண்ணும் இதே போன்றதொரு பிரச்சினையை சந்தித்தார். தமது மகன்களின் கல்விக் கட்டணத்திற்காக, அவளுக்குப் பணம் தேவைப்பட்டது. ஆனால், அவளுடைய வீட்டில் எதுவுமே இல்லை. அவளுக்கு ஆதிக்க சாதியை சேர்ந்த ஒரு "மராத்தா' பெண்ணைப் பற்றிய நினைவு வந்தது. அந்தப் பெண்ணை அவளுடைய சிறு வயது முதலே தெரியும். இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
அவள் ஒரு திட்டம் போட்டாள். அந்தப் பெண்ணிடம் சென்று, ""எனக்கு ஒரு பிரச்சினை, நீ உதவ முடியுமா? என்னுடைய உறவினர் திருமணத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் என்னிடம் உடைந்துபோன ஒரு தோடுகூட இல்லை. எந்த ஆபரணங்களுமின்றி நான் அந்தத் திருமணத்திற்கு எப்படிப் போக முடியும்?'' அவளுடைய அந்தத் தோழி, ""ஓ! அது ஒரு பிரச்சினையே இல்லை. கவலைப்படாதே! இந்த தங்கச் சங்கிலியை திருமணத்திற்கு எடுத்துச் செல். பிறகு என்னிடம் கொடுத்து விடு'' என்றார்.
ஆதிக்க சாதியைச் சேர்ந்த அந்தப் பெண் தனது கழுத்திலிருந்த சங்கிலியை எடுத்து, அந்தப் பெண்ணின் கைகளில் விழுமாறு மேலிருந்து போட்டாள். ஏனெனில், "மகர்' பெண்ணின் கையைத் தொட்டால் தீட்டுப்பட்டு விடும்! இந்தப் பெண்ணும் சங்கிலியை எடுத்துக் கொண்டு அடகு கடைக்குச் சென்றார். அவருக்கு ஒரு சிறு தொகை கிடைத்தது. அது பள்ளிக் கட்டணத்திற்குப் போதுமானதாக இருந்தது. ஆனால், தங்கச் சங்கிலியை திருப்பித் தரவேண்டுமே! இது குறித்து ஒரு நொடிகூட தூங்காமல் இரவெல்லாம் விழித்திருந்தாள். இறுதியாக, ஒரு வயதான அத்தை பல ஆண்டுகளாக வேலை செய்துவிட்டு மும்பையிலிருந்து வந்திருந்தது நினைவுக்கு வந்தது.
பொதுவாக அத்தகைய பெண்கள் தங்க நகை வாங்குவதற்காக, கூடுதல் பணம் கொடுக்கவும் தயாராக இருப்பார்கள்.
அந்த அத்தையிடம் குறைந்த அளவு நகைகளே இருந்தன. மேலும் அவர் ஒரு விதவை. அவருக்கு குழந்தைகள் இல்லை. ஒரே ஒரு உறவினர் மட்டும் அவருடன் ஒரு சிறு குடிசையில் வாழ்ந்து வந்தார். எனவே அந்த அத்தையிடம் சென்று கொஞ்ச நேரம் பேசிவிட்டு, "அத்தை, நான் உங்கள் மீது மிகவும் கவலை கொண்டதாலேயே உங்களைப் பார்க்க வந்தேன். உங்களுடைய உறவினர் பையன் ஒரு போக்கிரி.
உங்களிடம் கொஞ்சம் பணமும் நகைகளும் இருப்பது அவனுக்குத் தெரியும். நீங்கள் அவனிடம் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறீர்களா? நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? ஒரு வேளை ஒரே இரவில் உங்களுடைய வாழ்க்கையை அவன் முடித்து விட்டால், நீங்கள் யாரிடம் உதவிக்கு செல்வீர்கள்?'' அது ஒரு மாலை. அவர் தங்கியிருந்த வீடும் தெரு மூலையில் இருந்தது. அங்கிருந்து பல மைல் தூரத்திற்கு வேறு வீடுகளும் இல்லை.
அந்த வயதான பெண்மணி தன்னிடம் நகைகள் வைத்திருப்பது முட்டாள்தனமானது என்பதை உணர்ந்தார். இந்தப் பெண் தன் மீது இவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறாளே என்று பூரித்துப் போனார். அந்தப் பெண் மேலும் சொன்னாள் : ""எங்களுக்கு நீங்கள்தான் ஒரே அத்தை. தங்க நகைகளை நீங்கள் ஏன் வைத்திருக்கிறீர்கள்? என்னிடம் கொடுங்கள். நான் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறேன். நகைகளின்றி நீங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.''
அந்த வயதான பெண்மணியும் அனைத்து நகைகளையும் கொடுத்து விட்டார். அடுத்த நாள் காலை இந்தப் பெண் அடகுக் கடைக்குச் சென்று அத்தையின் நகைகளைக் கொடுத்து, தனது தோழியின் சங்கிலியை மீட்டார். பிறகு அவரிடம் சென்று நன்றியுடன் சங்கிலியை திருப்பிக் கொடுத்தார். எங்களுடைய பெண்கள் அத்தகைய பண்புள்ளவர்கள்! அறிவுப்பூர்வமாகவும் உறுதியாகவும் இருப்பார்கள். எங்கள் பெண்கள் பாபாசாகேப் சொல்வதை கவனமாகக் கேட்பார்கள்; அவர் என்ன செய்யச் சொன்னாலும் செய்வார்கள்.
இதில் ஆண்களிடமிருந்து பெண்கள் வேறுபட்டிருந்தார்களா? பாபாசாகேப் மீது பெண்கள் எப்படி இவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள்? பெண்களால்தான் கல்வி என்பது எங்கள் சமூகத்திற்கு சாத்தியமாயிற்று. பொதுவாக ஆண்கள், "பிள்ளைகளை ஏன் படிக்க வைக்க வேண்டும்? அவன் என்னை மாதிரி ஒரு கூலித் தொழிலாளியாக வேலை செய்வதே நல்லது. அதன் மூலம் கொஞ்சம் காசாவது அவன் சம்பாதிக்க முடியும். எனவே, பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதன் மூலம் ஒரு பயனும் இருக்காது'' என்பார்கள். ஆனால், இத்தகைய பேச்சுகளுக்கு பெண்கள் செவிசாய்க்கவில்லை.
டாக்டர் அம்பேத்கர் சொன்னார் : ""நீங்கள் கடவுளை நம்பி பல தலைமுறைகளை தொலைத்தீர்கள். இப்போது எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். இந்தத் தலைமுறையை என்னிடம் கொடுங்கள். இருபது ஆண்டுகளுக்கு தியாகம் செய்யுங்கள். உங்கள் குழந்தைகளைப் பள்ளியில் படிக்க வையுங்கள். நீங்கள் பசியாக இருந்தாக வேண்டுமெனில் இருங்கள். ஆனால், குழந்தைகளைப் படிக்க வையுங்கள். இருபது ஆண்டுகள் கழித்து நீங்களே என்னிடம் வந்து சொல்வீர்கள் எது நல்லது - கடவுளா, கல்வியா?'' பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் இந்த வார்த்தைகள் எங்கள் பெண்களின் நெஞ்சைத் தொட்டது. இன்றைக்கு நீங்கள் பார்க்கக்கூடிய மெத்தப் படித்த ஆண்கள் எல்லாம் அந்தத் தலைமுறையை சேர்ந்தவர்களே. அவர்கள் எல்லாம் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய குழந்தைகள் அவர்கள் அளவுக்கு வெற்றி பெறவில்லை.
அப்போதைய தலித் அரசியல் இயக்கத்தில் பெண்களின் பங்களிப்பு என்னவாக இருந்தது?
இயக்கத்தில் இருந்த சரிபாதியினர் பெண்களே.
இதை ஆண்கள் எப்படிப் பார்த்தார்கள்?
பெரும்பாலான நிகழ்வுகளில், பொதுக்கூட்டத்திற்கு வரும் இயக்கச் செயல்வீரர்கள் மும்பையிலிருந்தே வந்தனர். ஒட்டுமொத்த சமூகமும் அவர்களின் பேச்சைக் கேட்கத் திரளும். இந்த செயல்வீரர்கள் வெளிப்படையாகவே சொல்வார்கள் : "இங்க பாருங்க. பெண்கள்தான் வீட்டுக்கு பொறுப்பானவர்கள். அவர்கள்தான் மூடநம்பிக்கையான கடவுள் சிந்தனைக்கு காரணமானவர்கள். இத்தகைய விஷயங்களில் அவர்கள்தான் எப்போதும் வழிநடத்துகிறார்கள்.
பெண்களுக்குதான் "சாமி' வருகிறது. மூடநம்பிக்கைகளை இந்தளவுக்கு வலிமையாக மக்களின் மனங்களிலே திணித்ததில் பெண்களுக்குப் பெரிய பங்கு இருக்கிறது. பெண்களால் இருட்டை ஏற்படுத்த முடியு மெனில், அவர்களால் வாழ்க்கையில் வெளிச்சத்தையும் கொண்டுவர முடியும்.'' அவர்கள் இதை ஒப்புக் கொண்டார்கள். "இந்த மனிதர் அம்பேத்கர்' அவர்கள் சொன்னார்கள்,
"ஏழு கடல் கடந்து வந்தவர் என்று'. அவர் மெத்தப் படித்தவர். வேறு யாரைக் காட்டிலும் அவர் எல்லாவற்றையும் சரியாகப் புரிந்து கொள்கிறார். அவர் சொல்வதில் முக்கிய கருத்து இருக்கிறது. எனவே அம்பேத்கர் பேசும் கூட்டங்கள் வெகு தொலைவில் நடந்தாலும், பெண்கள் அதில் பங்கேற்றனர். அவர்கள் நான்கைந்து நாட்களுக்கு தங்கும் வகையில் சோள ரொட்டியை சுமந்து செல்வர்.
அப்போது அவர்களின் வீடுகளை யார் பார்த்துக் கொள்வார்கள்?
மூதாட்டிகள்தான் பார்த்துக் கொள்வர். ஒவ்வொரு வீட்டு தாய்மார்களும் கல்விக்கு பெருமளவு முக்கியத்துவம் அளித்தனர். அவர்கள் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்றனர். அவர்கள் தங்களுடைய குழந்தைகளையும் வீட்டையும் விட்டுவிட்டு, பல்வேறு நிகழ்வுகளிலும், பேரணிகளிலும், கோயில் நுழைவுகளிலும் மற்றும் பல நிகழ்வுகளிலும் பங்கேற்பார்கள்.
இதற்காக அவர்கள் ஆண்களிடமிருந்து ஊக்கத்தைப் பெற்றனர். அவர்களுடைய குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் மற்றும் இளைஞர்கள் அவர்களுக்கு ஒத்துழைத்தனர். பாபாசாகேப் தந்தி மூலம் மக்களுக்கு தகவல்களைத் தெரிவிப்பார். தந்தி கிடைத்ததும் தயாரிப்புகள் தொடங்கிவிடும். என்னுடைய அண்ணன் விடுதியில் இருந்தார். அவர் ஒன்பதாவது வகுப்பில் இருந்தபோது, நான் ஆறாவது படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு பதினொன்று அல்லது பன்னிரண்டு வயதிருக்கும். என்னுடைய அண்ணனின் தூண்டுதலால்தான், நான் இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடிந்தது.
அந்த அனுபவங்களைக் கூற முடியுமா?
அது மிகப் பெரிய போராட்டம். ஆதிக்க சாதியினரிடமிருந்து தொடர்ச்சியான எதிர்ப்புகளையும் மோதல்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. அவர்கள் சொல்வார்கள், "மகர்கள் தாங்களாகவே முன்னேறுகிறார்கள். அவர்களை கிராமங்களுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்.'' எதுவுமே எங்களின் எல்லைக்குட்பட்டதாக இல்லை. எங்களால் மாவு மில்லுக்குகூட செல்ல முடியாது. எங்களுக்கு வாழ்வியல் ரீதியாக அவர்கள் பல்வேறு இடையூறுகளை செய்தனர்.
என்னுடைய சொந்த ஊரில் நிலைமை சற்று நன்றாக இருந்தது. என்னுடைய தந்தை நிலைமையை ஒருவாறாக சமாளித்தார். என்னுடைய தாய் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. என்னுடைய தந்தையும், அண்ணனுமே வெளியில் சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவார்கள்.
பள்ளிக்கூடம் பற்றி சொல்லுங்கள்?
எங்களுடைய எல்லா தலைவர்களும் எங்களுடன் பள்ளிக்கு வருவார்கள். பாபாசாகேப்பின் வார்த்தைகள் – கற்பது உங்கள் உரிமை, கண்டிப்பாக பள்ளிக்குச் செல்லுங்கள் - எங்கள் நெஞ்சில் ஆணி அறைந்தார் போல் இருந்தது. எனவே, நாங்கள் பள்ளிக்கு எப்படிப் போவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால், பள்ளிகளில் நாங்கள் வேறுபாட்டுடன்தான் நடத்தப்பட்டோம். பள்ளி அறைகளில் நாங்கள் ஒரு மூலையில் உட்கார வைக்கப்பட்டோம்.3
எங்களுடையது பெண்கள் பள்ளி. அது ஒரு பார்ப்பனப் பள்ளி. இங்கு அனைத்து ஆசிரியர்களும் பெரும்பான்மை மாணவர்களும் பார்ப்பனர்களே. எனவே, நாங்கள் அவர்களை தீட்டுப்படுத்தி விடக் கூடாது என்பதில் எப்பொழுதும் மிகக் கவனமாக இருப்பார்கள். எங்களை எல்லாம் ஏதோ அவர்களின் எதிரிகள் போல கடுமையாக துன்புறுத்தினார்கள். உண்மையில் சொல்லப் போனால், எங்களை தொழுநோயாளிகள் போல நடத்தினார்கள். அவர்கள் எங்களைப் பார்க்கக்கூட மாட்டார்கள்.
எங்களுடைய சக மாணவிகள் எல்லாமே ஆதிக்க சாதிப் பெண்களே. அவர்கள் எந்நேரமும் அவர்களை தொட்டு தீட்டுப்படுத்தி விடுவோமோ என்று அஞ்சி எப்பொழுதும் விழிப்பாகவே இருப்பார்கள். எங்களை ஏதோ புழு பூச்சிபோல நடத்துவார்கள். எங்களுக்கு பார்ப்பனப் பெண் நண்பர்கள் கிடையாது. நாங்கள் பள்ளியில் சுற்றுலா செல்லும்போது அவர்கள் எங்களுக்கு அவர்களின் உணவுகளைத் தருவார்கள். ஆனால், எங்களிடமிருந்து எதையும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். இது, 1945 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருக்கும்.
உங்களுக்கு எப்போது திருமணம் நடந்தது? உங்களுடைய சுயசரிதையில் உங்களுடைய சொந்த வாழ்க்கை பற்றி அரிதான தகவல்களே இருக்கின்றன?
எனக்கு திருமணம் நடைபெற்றபோது வெறும் 13 வயதுதான் நிரம்பியிருந்தது. ஆனால், அதுவே அதிக வயது என்று எண்ணினார்கள். அப்போது நான் நான்காவது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தேன். என்னுடைய கணவர் பெயர் கொண்டிபா காம்ப்ளே. என்னுடைய அண்ணன் படித்த பள்ளியில் அவர் ஒரு மாணவர். அவரும் அதே விடுதியில் தங்கியிருந்தார். அவர்களுடைய குடும்பத்தினர் எங்களுக்கு உறவினர். அவர்கள் நிம்புரே கிராமத்தைச் சார்ந்தவர்கள். மரபு சார்ந்த திருமணங்களிலிருந்து நமது திருமணம் வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்று பாபாசாகேப் சொன்னார். பார்ப்பனப் பூசாரிகளை திருமணத்திற்கு அழைக்கக் கூடாது என்று கூறினார். மணமகனும் மணமகளும் தலையில் கிரீடம் வைத்துக் கொள்வதோ, பூக்களை தொங்கவிட்டுக் கொள்வதோ தேவையில்லை என்றார்.
உண்மையில், பாபாசாகேப் சொன்னார் : "திருமணத்திற்காக 4 நாட்கள் செலவழிக்காதீர்கள். நேரத்தையும் பணத்தையும் சேமித்து வையுங்கள். மணமகளுக்கு ஒரு புடவையும், மணமகனுக்கு ஒரு "செட்' துணியும் போதும்'' என்றார். ""திருமணத்திற்கு பார்ப்பனப் பூசாரிகளை அழைக்காதீர்கள். நம் சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதைச் செய்யட்டும். திருமணம் உங்கள் சாவடிகளிலேயே நடைபெறட்டும்.'' என்னுடைய திருமணம்தான் இத்தகைய புதுமையான முறையில் நடைபெற்ற முதல் திருமணம். பவுத்த மதமாற்றத்திற்குப் பிறகு திருமணங்கள் பவுத்த முறையிலேயே நடத்தப்படுகின்றன. அதுவரை பாபாசாகேப் சொன்ன முறையையே பின்பற்றினோம். என்னுடைய திருமணத்தில், எனது அண்ணன் பாபாசாகேப் அம்பேத்கரைப் புகழ்ந்து பேசினார்.
என்னுடைய திருமணத்திற்குப் பிறகு நான் பால்டன் கிராமத்திலேயே தங்கிவிட்டேன். தற்பொழுது 15 அல்லது 16 பேர் என்னுடைய கணவர் வீட்டில் தங்கியிருக்கின்றனர். அந்த வீட்டில் அந்தளவுக்கு இடம் இல்லை; இருப்பினும் அனைவரும் ஒன்றாகவே வசித்தோம். நாங்கள் அங்கு சில காலம் தங்கினோம். அந்த காலத்தில் எல்லாருடைய வீட்டையும் போலவே என்னுடைய கணவர் வீட்டையும் வறுமை ஆக்கிரமித்திருந்தது. வேலை கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.
நான்கு அல்லது ஏழாவது மட்டுமே படித்திருப்பவர்களுக்கு யார் வேலை தருவார்கள்? காலத்தைத் தள்ளுவது மிகவும் கடினமாக இருந்தது. அப்போது டாக்டர் அம்பேத்கர் சொல்வார் : "வேலைக்கு சேர முயல்வதைவிட உங்களுடைய வாழுமிடங்களிலேயே சிறு வியாபாரம் செய்து வெற்றி பெறுங்கள். பால் வியாபாரத்திலிருந்து தொடங்காதீர்கள். உங்களிடமிருந்து யார் பால் வாங்குவார்கள்?
உங்கள் மக்கள் பால் குடிப்பதில்லை. சாதி இந்துக்கள் உங்களிடமிருந்து பால் வாங்க மாட்டார்கள். உங்களுடைய சமூக மக்களிடையே எது விற்குமோ அதிலிருந்து தொடங்குங்கள்.''அதற்குப் பிறகு எனக்கு ஒரு சிந்தனை தோன்றியது. நானும் எனது கணவரும் வேலையின்றி இருந்தோம். எனவே, நாம் ஏன் திராட்சைப் பழம் விற்கக் கூடாது என்று எனக்கு தோன்றியது. அப்போது எண்ணற்ற தோட்டங்கள் இருந்தன. அப்போது ஒரு கிலோ திராட்சை 5 ரூபாய். ஆனால் எட்டணாவுக்கு ஒரு கிலோ உதிரி திராட்சை கிடைக்கும். கிலோ கணக்கில் திராட்சை வாங்க முடியாத ஏழைகள் உதிரி திராட்சை வாங்குவார்கள். எனவே உதிரி திராட்சை வியாபாரம் செய்ய முடிவு செய்தேன். திராட்சை தோட்டங்களுக்குச் சென்று பக்கெட் நிறைய உதிரி திராட்சை வாங்கி வருவேன்.
என்னுடைய எட்டணா மூலதனம், எனக்கு ஒரே நாளில் ஒரு ரூபாய் லாபத்தைப் பெற்றுத் தரும் அல்லது சற்றுக் கூடுதலாக கிடைக்கும். இதை எல்லாம் சேமித்தேன். படிப்படியாக என்னுடைய சேமிப்பு பெருகி பெருந்தொகையான 48 ரூபாய் கிடைத்தது. இந்த வியாபாரத்துடன் காய்கறிகளையும் சேர்த்துக் கொண்டேன். அதன் பிறகு எண்ணெய், உப்பு மற்றும் இதுபோன்ற சில இன்றியமையாத பொருட்களை சேர்த்துக் கொண்டோம். இது கூடுதல் லாபத்தை பெற்றுத் தந்தது. எனவே, எங்கள் வியாபாரத்தைப் பெருக்க திட்டமிட்டோம்.
என்னுடைய அண்ணனிடமும் கணவரிடமும் வீட்டில் தானியங்களை சேமித்து வைக்கச் சொன்னேன். அந்தக் காலத்தில், நாங்கள் தனியாக வீடு எடுத்தெல்லாம் தங்கவில்லை. எனது கணவருடைய வீட்டிலேயே தங்கினோம். நாங்கள் சம்பாதித்த பணத்தை உணவுக்கோ, வீட்டுச் செலவுகளுக்கோ செலவழிக்கவில்லை. அதற்கடுத்த மூன்று மாதங்களில் 350 ரூபாய் பெருமானமுள்ள மளிகைப் பொருட்களை வாங்கினோம். அது அளவுக்கதிகமாக இருந்ததால், வீட்டில் வைப்பதற்கு இடமில்லாமல் போய்விட்டது. மங்கள்வார் பேட்டையில் உள்ள பெருவாரியான "மகர்'கள் எங்களுடைய வாடிக்கையாளர்களாகிவிட்டனர்.
எங்களுடைய வியாபாரம் நன்றாக ஓடத் தொடங்கியது. எனவே அதே வீட்டில் தனியாக வசிக்கத் தொடங்கினோம். அதனால் சமைத்து, தண்ணீர் எடுத்து என எனக்கு கூடுதல் வேலை பளு ஏற்பட்டது. நான் அதிகாலையில் மூன்று மணிக்கே எழுந்து அங்குள்ள பொதுக்கிணற்றில் தண்ணீர் இறைக்க கிளம்பி விடுவேன். இதற்கிடையில் எனக்கு இரு குழந்தைகள். எங்கள் வீட்டருகே ஒரு கானாறு ஓடியது. அங்குதான் எங்களுடைய துணிகளை எல்லாம் துவைப்பேன். அதற்குப்பிறகு சமைப்பேன். காலை ஒன்பது மணிக்குள் எல்லா வீட்டு வேலைகளையும் முடித்துவிட்டு கடைக்குச் சென்று விடுவேன். அதுவரை என்னுடைய கணவர் கடையைப் பார்த்துக் கொள்வார். நான் கடைக்குச் சென்ற பிறகு அவர் பொருட்கள் வாங்க சந்தைக்கு சென்று விடுவார்
-அடுத்த இதழிலும்