தொடர்புடைய படைப்புகள்

மனித குலத்தின் மனசாட்சியை உலுக்கிய நிகழ்வாக மென்பொறியாளர் கவின் செல்வகுமார் ஆணவக் கொலை திகழ்கிறது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சாதியில் உள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த கவின் செல்வகுமாரும் பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியில் உள்ள மறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்ததற்காக, கவின் படுகொலை செய்யப்பட்டார்.

kavin dalit honor killingசாதி ஆணவத்தின் பெயரால் ஓர் இளம் உயிர் பலவந்தமாகப் பறிக்கப்பட்டது தற்செயலானது அல்ல, திட்டமிட்ட கொலை ஆகும். இன்று இந்த ஆணவக் கொலை வழக்கின் நீதி கேள்விக்குரியதாக மாறியுள்ளது. கொலையுண்ட கவினின் தாயார் தமிழ்ச்செல்வி, இந்த வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு - CBI விசாரிக்க வேண்டும் என்று என்னிடம் பேசியபோது மிகுந்த கவலையுடன் ஒரு கோரிக்கையாகக் கூறினார். இந்தக் கோரிக்கை வெறும் சட்ட நடைமுறை குறித்த புகார் அல்ல; அரசு இயந்திரத்தின் மீதான நம்பிக்கைக் குறைபாட்டின் வெளிப்பாடு ஆகும்.

முதல் கோணல்

இந்த வழக்கில் அரசின் அணுகுமுறை ஆரம்பத்தில் இருந்தே மிகவும் அலட்சியமாக உள்ளது. முதல் தகவல் அறிக்கை பலவீனமாக உள்ளது. ஆய்வாளர் காசிப் பாண்டியன் ஒருதலைப்பட்சமாகச் செயற்படுகிறார் என்று கவின் பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சுமத்தினர். இதனைத் தொடர்ந்து உதவி ஆணையாளர் சுரேஷ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் மிகவும் நேர்மையாக விசாரணையை மேற்கொண்டார். ஆனால் சில நாட்களில் மாற்றப்பட்டார். நீங்கள் ஏன் மாற்றப்பட்டீர்கள் என்று அவரிடம் பத்திரிகையாளர் கேட்டபோது அவரால் ஒரு புன்சிரிப்பை மட்டுமே பதிலாகத் தர முடிந்தது. உண்மையான காரணத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. அவர் நேர்மையாகச் செயற்பட்டதுதான் உண்மை காரணம் என்பது உலகறிந்ததே.

பிறகு இந்த வழக்கு CB-CID விசாரணைக்கு மாற்றப்பட்டது. கவின் தாயார் தமிழ்ச்செல்வி ஆரம்பத்திலேயே CB-CID ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார். இதை உறுதி செய்யும் விதமாக 800 பக்கக் குற்றப்பத்திரிகையில் இருந்து கொலையாளியின் பெற்றோர் சரவணன் - விஜயகுமாரி நீக்கப்பட்டனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரமில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை காரணம் கூறியது. தமிழ்நாடு அரசு இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. CB-CID-யின் குற்றப்பத்திரிகை மிகவும் பலவீனமாக உள்ளது என்று உச்ச நீதிமன்றம் வெளிப்படையாகக் கூறியது.

திருநெல்வேலி நகரில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் பட்டப்பகலில் நடந்த ஆணவக் கொலை ஆரம்ப நிலையில் இருந்தே அலட்சியப் போக்குடன் கையாளப்படுகிறது என்பது இங்கே வெளிப்படை. எந்த அரசாக இருந்தாலும், அது சாதி ஆதிக்கத்தின் காலடியில் மண்டியிடும் என்பது வரலாறு. இதற்கு விஜய் அரசும் விதிவிலக்கல்ல என்பதற்கு அவருடைய அரசின் மெத்தனப் போக்கும் அலட்சிய செயல்பாடுகளும் சான்றுரைக்கின்றன.

சிறப்பு வழக்குரைஞர் நியமனம்

முக்கிய குற்றவாளியின் பெற்றோரைக் குற்றப்பத்திரிகையிலிருந்து நீக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நடவடிக்கையானது, வழக்கின் விசாரணைத் தரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதற்கிடையே, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, சட்ட அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோரைக் கவின் தாயார் தமிழ்ச்செல்வி நேரில் சந்தித்து, மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனை சிறப்பு வழக்கறிஞராக நியமிக்குமாறு மனு அளித்துள்ளார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சட்ட அமைச்சர் நிர்மல் குமார், மற்ற விவகாரங்களில் எடுத்துக்காட்டாக, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் விவகாரத்தில் விரைந்து செயல்பட்டு, குற்றச்சாட்டுகளை மறுத்து, விளக்கம் அளித்துள்ளார். ஆனால், கவின் வழக்கில் அமைச்சரின் அமைதி கவனிக்கத்தக்கது. இந்த முரண்பாடு வெளிப்படையாகத் தெரிகிறது. அரசியல் ரீதியாக பிரச்சனைக்குரிய விவகாரங்களில் விரைந்து செயல்படும் அதே அரசு, சாதி அடிப்படையிலான ஆணவக் கொலை வழக்கில் ஏன் இவ்வளவு மந்தமாக செயல்படுகிறது? இந்தக் கேள்வி அரசதிகாரத்தை நோக்கி விரல் நீட்டுகிறது.

சிறப்பு வழக்குரைஞர் நியமனம் தொடர்பான மனு மீது நடவடிக்கை எடுக்காதது, வழக்கின் விசாரணை, வாதத்தின் தரம் ஆகியவற்றை நேரடியாகப் பாதிக்கிறது. ப.பா.மோகன் ஓர் அனுபவமிக்க வழக்குரைஞர். கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர அவர் ஆற்றிய பங்கு பாராட்டிற்குரியது. அத்தகைய சிறப்புத் திறன் கொண்ட ஒருவரை நியமிப்பது, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகும். அரசு இதைத் தவிர்ப்பது, வழக்கின் மீதான அலட்சியத்தைக் காட்டுகிறது. தமிழ்ச்செல்வியின் கூற்றுப்படி, வழக்கு "பலவீனமாகிக் கொண்டே போகிறது". இந்தப் பலவீனம் தற்செயலானது அல்ல; அரசின் செயலற்றத் தன்மையால் உருவானது.

கண்டும் காணாத வன்னியரசு

சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு இதை கண்டும் காணாமல் செயல்படுவதன் உள்நோக்கம் என்ன? கவின் முதலாம் ஆண்டு நினைவேந்தலுக்கு வந்த அவர், வழக்கு தொடர்பாக அரசின் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் சம்பந்தமே இல்லாமல் அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து குடிப் பெருமை பேசாதீர்கள் என்று கோரியதன் அர்த்தம் என்ன? எங்கு எதைப் பேச வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட அமைச்சர் வன்னியரசுக்கு தெரியவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வன்னியரசு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர். அக்கட்சியின் அரசியல் அடையாளமே சாதி ஆதிக்கத்திற்கு எதிரான நிலைப்பாடும் செயற்பாடும் ஆகும். கவின் ஆணவக் கொலை என்பது சாதி அடிப்படையிலான வன்முறையின் வெளிப்பாடு. அத்தகைய பின்னணியில், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு இந்த வழக்கில் தீவிரமாக தலையிடாதது ஏன்? பாராமுகமாக இருப்பது ஏன்?

தேவை சிபிஐ விசாரணை

இந்த வழக்கின் மற்றொரு முக்கிய அம்சம், காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் ஆகும். குற்றம் சாட்டப்பட்ட கொலையாளியின் தாய், தந்தை இருவரும் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் ஆவர். இந்த நிலை, விசாரணையின் நடுநிலைத்தன்மை குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது. முதல் தகவல் அறிக்கையும் பலவீனமாக உள்ளது. போதிய ஆதாரமில்லாததால் முக்கிய குற்றவாளிகளான சரவணன், விஜயகுமாரி இருவரும் வழக்கின் ஆரம்ப நிலையில் குற்றப்பத்திரிகையில் இருந்து விடுவித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குற்றப்பத்திரிகையும் பலவீனமாக உள்ள இத்தகைய சூழ்நிலையில், CB-CID விசாரணையை நம்பாமல், சிபிஐ விசாரணைக்கான கோரிக்கை இங்கு மிகவும் நியாயமானது. இது வெறும் சட்ட நடைமுறை மாற்றம் அல்ல; விசாரணையின் நம்பகத்தன்மையை மீட்டெடுப்பதற்கான ஒரு வழி.

இந்த வழக்கு, இந்திய நீதி அமைப்பில் உள்ள ஒரு பெரிய பிரச்சினையைப் பிரதிபலிக்கிறது. அதாவது, சாதி அடிப்படையிலான வன்முறைகள் தொடர்பான வழக்குகளில், அரசு அமைப்புகளின் செயல்பாடு பெரும்பாலும் தாமதமாகவும், பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முரணாகவும் உள்ளது. கவினின் தாயார் தமிழ்ச்செல்வி, ஒரு தாயாக தனது மகனை இழந்தவர். அவரது கோரிக்கையால் படுகொலையான கவின் செல்வகுமாரின் உயிர் திரும்பி வரப் போவதில்லை. ஆனால் கோமா நிலையில் இருக்கும் விசாரணை உயிர் பெறும். நீதி உயிர் பெறும். கவினின் தாயார் தமிழ்ச்செல்வி கேட்கும் கோரிக்கை வெறும் சட்ட உதவி அல்ல; நீதிக்கான அடிப்படை உரிமை. அரசு இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால், அது நீதியின் மேலான வெகுமக்களின் நம்பிக்கையை மேலும் குறைக்கும்.

கவின் வழக்கு ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. இது அரசின் சமூக நீதி மீதான உறுதிப்பாட்டின் ஒரு சோதனைக் கல். சிறப்பு வழக்குரைஞர் நியமனம், சிபிஐ விசாரணை ஆகிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இந்த வழக்கு நீதியின் தோல்விக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறும்.

இறுதியாக.....

அண்மையில் முதுமலைக்காட்டில் ட்ரெக்கிங் வண்டியில் இருந்து இறங்கி புலியைப் பார்க்க ஆர்வக்கோளாறில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை மீறிச் சென்ற சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு இந்த வழக்கில் கூடுதல் ஆர்வமும் கவனமும் செலுத்த வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் சட்டமன்ற உறுப்பினருக்கு ஆதரவாக வலிந்து விளக்கம் கூறும் சட்ட அமைச்சர் நிர்மல் குமார் இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். அரசியல் பேச்சுகளுக்கு அப்பால், ஒரு தாயின் கண்ணீருக்கு பதிலளிக்க வேண்டிய கடமை சமூக நீதித்துறை அமைச்சருக்கும் சட்ட அமைச்சருக்கும் உள்ளது. கவின் ஆணவக் கொலை வழக்கில் போட்டி போட்டு விசாரணை மேற்கொண்டு மௌனம் காத்துக் கொண்டிருக்கும் மாநில பட்டியல் சாதி ஆணையமும் தேசிய பட்டியல் சாதி ஆணையமும் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல் தாமாக முன்வந்து காவல்துறையின் அலட்சியப்போக்கையும் அரசின் மெத்தனப் போக்கையும் கேள்விக்குள்ளாக்கி சிறப்பு வழக்குரைஞர் நியமனத்திற்கும் சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரை செய்ய வேண்டும். நீதி நிலைநிறுத்தப்பெற வேண்டும்.

- ச.மோகன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.