என்னாச்சு இந்தக் காலப் பசங்களுக்கு?
ஏன் இத்தனை கோபம்... ஏன் இத்தனை வன்மம்? திரும்பும் பக்கமெல்லாம் கொலை.
அடிதடி என்றொரு காலம் இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் அது மாறிவிட்டது. நடிச்சா ஹீரோதான் போல... நேரா கொலைதான். பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினைக்கெல்லாம் கொலைனு இறங்கிட்டா... விளங்குமா? உப்புசப்பு இல்லாத, ஒன்றுமில்லாத விஷயத்துக்கு எதுக்குடா இத்தனை கோபம்? கோபம் உன் மூக்கோடு இருக்கணும். கொலை வரைக்கும் போவது மானுடத்துக்கு எதிரானது. மரமண்டைக்கு யாரு வைப்பது?
போகிற போக்கில் கொன்றுவிடுவது... பிறகு திக்குத் தெரியாமல் முழிப்பது... என்ன வகை பிரீட் இவர்கள்?
வீட்டில் இவர்களின் பெற்றோர் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள்? எத்தனை சட்டதிட்டங்கள் போட்டாலும், தனிமனித ஒழுக்கம் இருந்தால்தான் இம்மாதிரி கேடுகெட்ட புறம்போக்குச் செயல்களில் இருந்து விடுபட முடியும். வீட்டில் கண்காணிப்பு அவசியம். புள்ளையோ பையனோ தப்பா இருக்கான்னு தெரிஞ்சா தூக்கிப்போட்டு மிதிக்கணும்... அவன் சொல் பேச்சே கேட்க மாட்டேுகிறான் என்பதைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டு திரியக் கூடாது. யாருக்குத்தான் அடங்குவார்கள் இவர்கள்? இந்த வயதில் அப்படி என்ன பெரிய முரண்பாடு? கோபம் கொத்துப்போரோட்டா! உயிர் போனா வருமா? மயிரே போனா வர மாட்டேங்குது... இதுல உயிர் எப்படி வரும்?
யாருக்கும் மரியாதை இல்லை; வீட்டுக்கு, வீதிக்கு, ஊருக்கு, உலகத்துக்கு... எவனுக்கும் ம்ஹும்.
பாவாடை, பேண்ட் போட்டுக்கொண்டு ரோட்டில் பசங்க, புள்ளைங்க வித்தியாசமே தெரிவதில்லை. தோளில் கை போட்டுக்கொண்டு பூங்கா, கல்லூரி சாலை, மரநிழல், சந்துபொந்து, தியேட்டர், மால் எனப் பசங்க, புள்ளைங்க செய்யும் அட்டூழியம் தாங்க முடிவதில்லை. சின்ன சந்து கிடைச்சா போதும்; அங்க நாலு பேர் சேர்ந்து நின்னுகிட்டு அப்படி என்ன ரகசியம் நடக்குது? சாலையில் நடக்க நடக்க வலிப்பு வந்தது மாதிரி கையை, காலை ஆட்டித் திடீரென ஆடுகிறார்கள். மிகைப்படுத்தலில் பாவனைகள் அத்தனை அருவருப்பாக இருக்கின்றன. நாங்களும் இதே டீன் ஏஜ், 20... 25 வயது காலகட்டத்தைத் தாண்டுபவர்தான்; இத்தனை அட்டூழியம் இல்லை. இது கால மாற்றத்தில் அறிவுக்குப் பதிலாகக் கொம்பு முளைக்கும் நிலையோ என்னவோ! தனி உலகத்தில் வாழ்வதாக நம்புகிறார்கள் போல. வாழ்வில் கற்பனை இருக்கலாம்; கற்பனைக்குள்ளேயே வாழ்வு இருக்கக் கூடாது. அவர்களின் செயல்பாடுகள், நடந்துகொள்ளும் முறைகள் எல்லாமே அபத்தமாக இருக்கின்றன. மற்றவர் பற்றிய நினைப்போ, அக்கறையோ, சிந்தனையோ இல்லாத என்ன இனம் இது? மானுடப் பரிணாமம் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.
அப்படி என்ன பெரிய டென்ஷன் மசுருங்களுக்கு? சோத்துக்கு வீட்டுலதான கையேந்தனும்.
ஒழுக்கமாகப் படிச்சு வேலைக்குப் போய் வீட்டுக்கும் நாட்டுக்கும் உதவி செய்ங்கன்னா, ரோடு முழுக்க வண்டில பெரிய புடுங்கிகள் மாதிரிதான் போறது, வார்வது. அவ்வளவு திமிரு இருந்தா போய் போட்டிகளில் கலந்துகிட்டுப் பரிசு வாங்கிட்டு வாங்கடா... அதெல்லாம் முடியாது... போதையைப் போட்டுக்கணும், பொறுக்கித்தனம் பண்ணிக்கணும்... போதாததுக்கு இப்போ கொலை அவ்வளவு சுலபமாப் போச்சு. கோபத்துல அடிச்சேன், செத்துட்டான்ங்கிறதுலாம் என்ன மாதிரி நியாயம்? கோபம் நாய்க்குகூடத்தான் வரும். ஒருத்தனை ஒருத்தன் அடிக்க யாரு உரிமை கொடுத்தா? எதுக்கு இங்க சட்டம்-ஒழுங்கு இருக்கு? எல்லாரும் உட்கார்ந்து பேசிப் பேசி கொஞ்ச கொஞ்சமாக ஃபைன்-டியூன் ஆகிதானே இந்த இடத்துக்கு வந்திருக்கோம்? அதுல பிஞ்சுலேயே ரத்தம் பார்த்தால் விளங்குமா? விலங்கு இனம்கூட இந்த வேலையைச் செய்யாதே. கூடப் படிக்கிறவனை அடிச்சுக் கொல்ற அளவுக்கு அப்படி என்னப்பா நியாயம் வச்சிருக்க? கையை மீறி கோபம் வருதுன்னா, மூளைக்கு வேலை இல்லைனு அர்த்தம். கோபம்கிறது இயலாமை.
குணம்தான் மானுட இருப்பு. யார் சொல்லிப் புரியவைப்பது? சொன்னாலும் புரிய மாட்டேங்குறது. செத்தவனோட அப்பா, அம்மா கதறல் கேட்குதா? எப்படி இனி வாழ்க்கையில் நிம்மதியாக இருப்பீங்க? குற்ற உணர்வு கொல்லாதா?
இவனுங்களையெல்லாம் பாவம் பார்த்துச் சிறுவன், சிறார்னு வெளியில் விடக்கூடாது... வச்சு செஞ்சு விடனும். இன்னொரு உயிருக்குத் தீங்கு விளைவிச்சுவிட்டு எப்படி வீட்டில் போய் குடும்பத்தோடு உட்கார்ந்து தோசை திங்க முடியுது? திரும்பவும் கேட்பது... பசங்க, புள்ளைங்க என்ன பண்றாங்கன்னு பார்ப்பதை விடப் பெற்றோருக்கு என்ன வேலை? அப்படி உலகத்தை தூக்கி நிறுத்தற வேலை இருந்தா பெத்துக்காம இருக்கணும். பெத்துப் பொறுக்கித்தனம் பண்ண விடக் கூடாது.
சின்ன பசங்ககிட்ட வண்டியைக் கொடுத்துட்டு... (அவனே எடுத்துக்கிட்டான், சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறான்னு சொல்ற பெற்றோர் போலீசிடம் புகார் கொடுக்கலாம்.) இவனுங்களுக்கு ஓட்டவும் தெரியறது இல்லை; ரோட்டோட விதிமுறைகளும் தெரியறது இல்லை. சந்துக்குள்ள இருந்து வர்றவன், நின்னு பார்க்காமல் அப்படியே சர்ருன்னு திரும்புகிறான். திரும்பிட்டு நம்மள வேற முறைக்கிறான். லெஃப்ட் ஒட்டித் திரும்ப வேண்டிய இடத்துல ரைட் ஏறி வர்றான். அப்படி வரக்கூடாதுன்னு அவனுக்குத் தெரியறது இல்லை. ஹெல்மெட் இல்லை; உரிமமே இல்லை. இதுல காதுல மட்டும் செல்போன். கழுத்தை ஒரு பக்கம் சாய்ச்சிகிட்டு... பார்க்கவே கோமாளி மாதிரி இருக்கானுங்க. ஹார்ன் அடிச்சா உடனே நாய்க்கு கோபம் வந்து திரும்பி வேற முறைக்குது. உள்ள வந்து விழுந்தறாதீங்கிற எச்சரிக்கைதான் அந்த ஒலிப்பான் என்று அந்தச் சமூக அழிப்பானுக்கு யாரு புரியவைப்பது?
பள்ளி, கல்லூரியில் வாத்தியார்களை எப்போது மதிக்காமல் போனார்களோ, அப்பவே நாசம் ஆரம்பிச்சிருச்சு. அவர்கள் கையிலிருந்து பிடுங்கிய பிரம்பின் வலிமை இப்போது சமூகத்தைப் பார்த்து கேலிச் சிரிப்பு சிரிக்கிறது.
கல்லூரி என்பது வாழ்வின் மிக முக்கியமான காலக்கட்டம். அங்கே நல்ல படிப்பு, நல்ல நண்பர்கள், ஏன் காதல் கூட கிடைக்கலாம். வாழ்வின் மிகப்பெரிய கதவுகள் அங்கிருந்தே திறக்கப்படுகின்றன. அங்க போய் போதையைப் போட்டுக்கிட்டு, அடிதடியில் சிக்கிக்கிட்டு, கொலை வரைக்கும் போய், வாழ்க்கையைத் தொலைச்சு... என்ன கண்றாவி இதெல்லாம்? மனம் பதறுகிறது. மனுஷன், மனுஷங்கிற இந்த இடத்துக்கு வந்து சேர நெடுங்காலம் தேவைப்பட்டிருக்கு. திரும்பவும் காட்டுக்கே சென்றுவிடக் கூடாது. அவன் அடிச்சானு இவனும் அடிச்சா, அவன் கொன்னான்னு இவனும் கொன்னா என்னவாகும் சமூகம்?
எல்லாம் தாண்டி கண்ணும் கருத்துமாகப் படிக்கும் கண்மணிகள் எல்லா காலத்திலும் இருப்பது போல இந்தக் காலத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பொறுக்கிகள் மூலம் எந்த வம்பு தும்பும் வராமல் பார்த்துக்கொள்ளப் பெற்றோரும், ஆசிரியரும், பள்ளி, கல்லூரி நிர்வாகமும் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.
- யுத்தன்