தகவல் தொடர்பு என்ற நிலையைத் தாண்டி, தமிழ் நம் உணர்வுடன் கலந்தது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்கள் மொழி குறித்த பெருமிதத்தோடு வாழ்ந்து வருகிறோம்.

இயல், இசை, நாடகம் எனத் தமிழின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்திலும் தமிழுக்கே உரிய உலகளாவிய தன்மை இதன் தனிச்சிறப்பு. குறுகிய வட்டமும் குறுகிய எண்ணமும் தமிழுக்கு ஒவ்வாத ஒன்று.

vijayendranதமிழின் தனித்தன்மையை, பரந்துபட்ட பண்பாட்டைத் தமிழ்நாட்டில்கூடப் பாதுகாக்க முடியாமல் பெரும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழலில், சில நூறு ஆண்டுகளாகத் தமிழர்கள் போராடி வருகின்றனர்.

தமிழர் பண்பாட்டின் ஒரு பகுதியாக உள்ள தமிழர்களின் கோவில்களுக்குள் தமிழுக்கு எதிரான அல்லது தமிழைப் புறம்தள்ளக்கூடிய பண்பாடு தலைதூக்குவது தமிழர்களுக்கு எதிரானது; தமிழுக்கும் எதிரானது.

தமிழர்களின் ஆகம நெறிகள், வேதக் கருத்திற்குத் தொடர்பில்லாதவை. வேதம், சிலை வணக்க வழிபாட்டிற்கு உரியதன்று.

வேதத்தை ஏற்றுக் கொண்ட ஸ்மார்த்த சமயத்தவர்கள், தமிழர்கள் உருவாக்கிக் கொண்ட குலதெய்வ, தாய் தெய்வ, சைவ, வைணவ ஐதீக வழிபாட்டு முறைகளில் உள்ள சிலை வணக்க வழிபாட்டிற்குள் ஊடுருவி, அங்கும் வேதத்தை ஓதும் பண்பாட்டை உருவாக்கியுள்ளனர்.

கோவிலுக்கு வெளியே யாக குண்டம் அமைத்து வேத மந்திரங்களை ஓதி வருகின்றனர்.

தமிழர்கள் தங்களின் ஐதீக முறையின்படி கோவில்களில் நன்னீராட்டு செய்யும்போதும் வேத மந்திரங்களை ஓதி வருகின்றனர்.

ஐதீக முறைப்படி நன்னீராட்டும் பூசையும் செய்து வரும் சிவ ஆசாரியர்களை வேத மந்திரங்கள் ஓத வைத்துள்ளனர். இவர்களும் சமய நெறியை மறந்து, வேத மந்திரங்களைச் சிலைகளுக்கு முன்பாக ஓதும் நிலையை அடைந்துள்ளனர்.

கோவிலுக்கு வெளியே வேத மந்திரங்களை ஓதி வந்த ஸ்மார்த்தர்கள், இப்பொழுது சிவ ஆசாரியர்களை அப்புறப்படுத்திவிட்டு, கோவிலுக்குள்ளும் சென்று வேத மந்திரங்களை ஓதி வருகிறார்கள்.

கோவிலுக்கு வெளியே குடமுழுக்குக் காலத்தில் மட்டும் செய்து வந்த யாக குண்ட வேள்விகளை 'லட்சார்ச்சனை' என்றும் 'சிறப்பு யாகம்' என்றும் கூறி, ஆகம நெறிகளுக்கு முற்றிலும் எதிராகக் கோவிலுக்குள்ளும் வியாபார வேள்விகளை நடத்தி வருகிறார்கள் இந்த ஸ்மார்த்த சமயத்தினர்.

தற்பொழுது சமயக் குருமார்களாக அறியப்படும் தமிழ் ஆதீனங்களைப் புறந்தள்ளிவிட்டு, ஸ்மார்த்த ஆசாரத்தைப் பின்பற்றும் சங்கராச்சாரியாரை முன்னிறுத்தி, தமிழ் நிலத்தின் பெரும் கோவிலான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நன்னீராட்டு விழா நடைபெற உள்ளது.

இந்த நிலை நமது பண்பாட்டுச் சீரழிவின் உச்சம்.

தமிழர்களின் பண்பாட்டிற்கும் ஐதீகத்திற்கும் அப்பாற்பட்ட வேத வேள்விகள், அந்நிய மொழி மந்திரங்கள் கோவில்களில் நுழைந்தபோது பார்த்துக் கொண்டிருந்தோம்.

இப்பொழுது ஆகமத்திற்கும் கோவில் வழிபாட்டிற்கும் ஒவ்வாத ஸ்மார்த்த நெறியைக் கடைப்பிடிக்கும் அதன் சமயத் தலைவரை, தமிழர்களின் சமய நம்பிக்கை கொண்ட கோவில் விழாவில் முன்னிலைப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இது தமிழர்கள் பண்பாட்டை இன்னும் சீரழிப்பதாகும்.

தமிழர் சமய நெறியைப் பின்பற்றி வாழும் ஒருவர் தமிழ் கோவில்களை நிர்வாகம் செய்ய வேண்டும்.

அறநிலையத்துறையின் அமைச்சராகத் தமிழ் சமயப் பிடிப்பு கொண்ட ஒருவரை நியமனம் செய்ய வேண்டும்.

ஸ்மார்த்த நெறியில் நம்பிக்கை கொண்டவர்களை இத்துறைக்கு அமைச்சராகவோ, அதிகாரிகளாகவோ நியமிப்பதைத் தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஒரு இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ, பௌத்தரோ பணியில் சேர முடியாது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் 1959, பிரிவு 10-ன் படி (Section 10 of HR&CE Act), இத்துறையின் கீழ் வரும் பணியிடங்களுக்கு இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது சட்டப்பூர்வ விதியாகும்.

அதுபோலவே ஆகம சிலை வணக்க முறைமைகளை ஏற்காத ஸ்மார்த்தர்களும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பணியாற்றத் தடை விதிக்க வேண்டும்.

பொதுவாகத் தமிழ்நாட்டில் ஸ்மார்த்தர்கள், சைவர்கள், வைணவர்கள் இந்து சமயத்தின் ஒரு அங்கமாகப் பார்க்கப்பட்டாலும், நிர்வாகப் பணி தாண்டி வழிபாட்டு நிலையில் சைவ ஆலயங்களுக்குள் வைணவ நெறியைப் பின்பற்றுபவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை; வைணவ ஆலயங்களுக்குள் சைவ நெறியைப் பின்பற்றுபவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதுபோலவே ஸ்மார்த்தர்களையும் இந்த இரண்டு சமயக் கோவில்களுக்குள்ளும் வழிபாட்டு நிலையிலாவது அனுமதிக்கக் கூடாது.

- நா.வெங்கடேசன், ஆசிரியர், மெய்ச்சுடர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.