நல்லதுக்கு பொய் சொல்லலாம்னு வள்ளுவர் சொல்லிருக்கார் தான்... ஆனா எல்லாத்துக்கும் பொய்யே சொல்லிட்டிருந்தா நல்லாவா இருக்கும்.
அரை மணி நேரம் ஆகும்னா அரை மணி நேரம் ஆகும்னு சொல்றதுல என்ன வந்துரும். இந்தா இங்க வந்துட்டேன்.. பத்தே நிமிஷம்னு சொல்றது ஏன். அய்யோ நான் ஊர்ல இல்லையேன்னு சொல்றத விட எனக்கு அன்னைக்கு தூங்கணும்... வர இயலாதுனு உண்மைய சொல்றதுதான சரி. அப்புறம் யதேச்சையாக எதிராப்பல பார்த்துட்டா கண்ணைப் பிசைஞ்சுக்கிட்டு நிக்கறது நல்லாவா இருக்கும்.
குறுஞ்செய்தியை பார்த்துட்டு அதுவும் புளூடிக் வராத மாதிரி செட் பண்ணி வெச்சிக்கிட்டு... பிஸியாவே இருக்கற மாதிரி காட்டிக்கறதுல என்ன உண்மை இருக்கு. முன்னமே பார்த்துட்டேன். பதில் போட முடியல. இப்பதான் போடறேனு சொல்ற உண்மைதான் முக்கியம். மற்றவர்களை ஆற்றுப்படுத்துவதற்காகச் சொல்ற பொய்கள் வசீகரிப்பதே இல்லை. மாறாக எரிச்சலை உண்டு பண்ணி விடுகிறது.
வரேன் வரலை... முடியும் முடியாதுனு சொல்றதுல பொய்க்கு வேலை இருக்காது. வரேன்... பாக்கறேன்.. எப்படியும் வந்துருவேன்னு இழுத்து சுத்தி அடிக்கறதுல பொய் தன்னை உருவாக்கிக்கிறதுனு அர்த்தம். பொய்யின் தன்மை மிக மெல்லியது. குழந்தையின் பிஞ்சுப் பாதங்கள் போல தான் முளைக்கும். பிறகு காலக் கொடூரத்தின் சூழல் தாங்காமல் செதில் செதிலாக தன்னைப் பிளந்து கொண்டு நிற்கும்.
சின்னப் பொய், பெரிய பொய்.. சுமாரான பொய்.. வழக்கமான பொய்... வேடிக்கையான பொய்... இயல்பான பொய் என பொய்கள் நிறைய வகைப்படும். நல்லதுக்கு சொல்லும் பொய் தனி. பொய் சொல்வதற்காகவே உருவாக்கப்படும் நல்லது தனி.
பொய் பழுக்காது. வெம்பிப் போகும். நிஜத்தை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து சில அவுன்ஸ்... கொண்ட கற்பனை... கண்ட கற்பனை என்று கலந்து அடுத்தடுத்த செவிகளில் கை கால் முளைத்து சிறகையும் முளைத்து பறக்கும் சம்பவங்கள் கதைக்கானது. நாவலுக்கானது. ஆக... சுவாரசியம் கூட்டும் பொய்யை ஒரு பக்கம் ஆராதிக்கலாம். ஆனால் நிஜ வாழ்வில் ஆதரிக்க முடியாது. முழு பொய் எப்போதும் மாட்டிக்கொள்ளும். கொஞ்சம் நிஜமும் கலந்த பொய்களே காலத்தில் நிற்கும் என்பது அறிவுக்குட்பட்டது. உணர்வு நிஜத்தை மட்டுமே உள்வாங்கும். பொய்யை மறுதலிக்கும் நிஜம் உணர்வுபூர்வமானது.
எதுக்கெடுத்தாலும் பொய் சொல்லும் இயல்பு ஒன்று இருக்கிறது. அது மகா மட்டமான சுயக் கொம்பின் வெளிப்பாடு. அது சாவு வீட்டில் வம்பாக கவலையை மாட்டிக்கொண்டு வரும். கலகல வீட்டில் வீம்பாக சிரிப்பைப் பூசிக்கொண்டு வரும்.
வீட்டுல இருந்துகிட்டே வெளியே போயிட்டேனு சொல்றது.. போன்ல எங்கே இருக்கனு கேட்கிறது நியாயம் இல்ல. ஆனாலும் கொஞ்சம் நெருங்கிய உறவுகள் கேட்குதுனு வெச்சுக்குவோம். நம்ம அவாய்ட் பண்ணுவதற்கு அவர்கள் சொல்லும் பொய் அதிர பழசாக இருக்கும். PhD காரன்கிட்ட எட்டாம் கிளாஸ் பொய்யை சொல்லிக் கொண்டிருப்பார்கள். இவர் போயி தான் ஊரையே தூக்கி தோள்ல வைச்சுக்கிற மாதிரி நம்ம விசேஷத்துல இருந்து கிளம்பும் போது படபடப்பார். அப்புறம் பார்த்தா ஊருக்குள்ள போயி ரெண்டு வீணா போன ஊர்வாரிகளோடு சேர்ந்து ஏதாவது புதர்க்குள்ள உக்காந்து சரக்கடிச்சிட்டு இருப்பார்.
நாம எங்கேயாவது கூப்பிடும் நாளில் அய்யயோ நான் இல்லாட்டி அலுவலகம் செத்து சுண்ணாம்பாகிடும் சொல்லுவார்கள். ஆனால் அடுத்த வாரமே பிள்ளைக்குப் பேர் வச்ச நாளு அதுக்கு லீவு போட்டுட்டேன் என்று கூலாக சொல்வார்கள். புறக்கணித்தலின் முகம் பொய் முகமூடியை மாட்டிக்கொண்டு காண சகியாத வடிவம் அது.
பிறகு... அடிக்கடி பொய்யின் நிழலில் புழக்கத்தில் இருப்பது இந்த நேரமின்மை.
அது வீட்டுல வேலைடா அதான் வர முடியல.. எங்கடா எங்கேயும் போறது இல்ல என்று சொல்லும் ஆள்... ஏண்டா மெசேஜ் இல்லனு கேட்டா கொஞ்சம் வெளிய போய்ட்டேன் என்று சொல்லும். என்ன கண்றாவி குளறுபடி இது. நண்பன் கூட கடைவீதிக்கு வர்ற யோசிக்கற ஆள்.. பிகரோடு டேம் சுத்திப் பார்க்க தயங்கறது இல்லையே.
எதுக்கெடுத்தாலும் நேரமில்லை. எட்டூரும் இவர் தலையில தான் கொட்டடிச்சிட்டு இருக்கற மாதிரி ஒரு பில்டப். நாய் மதியம் மூணாவது ரவுண்ட்ல தயிரோடு தின்னுட்டு தூங்கத்தான போகுது. சும்மா பரபரப்புலயே இருக்கற மாதிரி காட்டிக்கிறது. எனக்கு வெள்ளிக்கிழமை டெல்லியில மீட்டிங்னு போன் பேசும் கவுண்டமணி வசனம் மாதிரி தான். போன் ஒயர் அந்து போயி ஒரு வாரம் ஆகி இருக்கும்.
இதிலிருந்து புரிவது என்ன... நேரமின்மை என்று ஒன்று இல்லை. முக்கியத்துவம் எது என்பதுதான் விஷயம்.
அன்னைக்கு ஒரு முக்கியமான விசேஷத்துக்கு போக வேண்டியதா போச்சு என்று சொல்லும் நண்பனிடம் அப்போ என் வீட்டு விசேஷம் முக்கியம் இல்லையா என்று கேட்ட போது... பொய் முகத்தை மூட முடியாமல் தவித்ததைப் பார்க்க பாவமாக இருந்தது. ஊர்க்கோடியில் இருக்கும் தம்பி வீட்டில் இருந்தபடியே ஊரில் இல்லை என்று சொல்லும் பொய் நண்பனுக்கு அழகல்ல.
அப்புறம் முன்னமே செத்துப் போன பாட்டி தாத்தாவ மறுபடியும் சாகடிப்பானுங்க. ரெடியா இருந்தேன். அதுல பாருங்க... அன்னைக்குனு பாத்து தாத்தா போயிட்டார்... அதும் இன்னும் சில நுட்பவாதிகள்... பெரிய காரியம் ஆகி போச்சுனு சொல்லி மூஞ்சியை கோணிக்குவானுங்க பாருங்க... ஐயோ அதெல்லாம் நம்மளால சகிக்க முடியாது. இதுல உயிரோட இருக்கற சித்தியையே செத்துப் போச்சுன்னு சொல்லி மாட்டிக்கிட்ட ஆளெல்லாம் கூட இருக்கு.
என்னத்த சொல்ல. பொய்க்கு எப்போதுமே பொக்கை வாய் சிரிப்பு தான்.
இப்படி நிறைய இருக்கு..
இந்த சண்டே ஃப்ரீயா என்று கேட்டால்... ஃப்ரீ அல்லது இல்லை என்றுதானே சொல்ல வேண்டும். என்ன விஷயம் என்று கேட்டு விட்டு அது தனக்கு தக்க இல்லை என்றால்... இல்ல.. கொஞ்சம் வேலை என்று சொல்வது கயமைத்தனம். பொய்க்கு மறதி அதிகம். அது மாத்தி மாத்திப் பேசச் செய்து கேரக்டரையே காலி செய்து விடும். ஒரு சின்ன பொய் அது தொட்டு இன்னொரு சைஸ் பொய் அது தொட்டு கொஞ்சம் பெரிய சைஸ் பொய் என்று பொய்யின் ஓட்டை மிக அபாயகரமானது. அது ஆழமாய் இழுத்துச் சென்று உண்மையைக் காட்டிவிடும். மற்றவர்கள் முன் தன்னை டம்பமாக காட்டிக்கொள்ள சிலர் பொய்யை சாணக்கியம் என்று தவறாக புரிந்து கொண்டு தொடர்ந்து சொல்வது அயர்ச்சி. கேட்டுக் கொண்டிருப்பவருக்கு அது பொய்யென்று தெரிந்த பிறகும் அது தெரியாமல் தொடர்ந்து அளந்து கொண்டிருப்பது ஐயோ பாவம் தானே. அட வாரவாரமா ஒரு சபையில ஒருத்தனுக்கு மாலை மரியாதை செலுத்துவாங்க. அப்போ அவன் தலைவனா கடவுளா. கருமம்.
எனக்கு மனசு சரியில்லை வர முடியல என்ற உண்மை போதும். உடம்பு சரியில்லை ஹாஸ்பிடல்ல இருக்கேன் எனும் பொய் போதாமை. நட்பு கிழிந்து விடும்.
கவிதைக்கு தான் பொய் அழகு. காலத்துக்கு மெய்யே அழகு.
- கவிஜி