சொல்லத் துணியும் சொற்களை எழுதத் துணிவது எத்தனை பேருக்குத் துணிவு உள்ளது என்பது கேள்விக்குரியதுதான். அப்படி, தான் வளர்ந்த சூழலில் நடந்த சம்பவங்களை ஆவணப்படுத்தி ஒரு இலக்கியமாகப் படைக்கும் உத்தியைக் கையாளும் நபர்களில் நம் தமிழிலக்கியப் படைப்பாளர்களாக கி.ராஜநாராயணன், இமையம், அ. வெண்ணிலா போன்ற பல எழுத்தாளர்களைச் சொல்லலாம். ஆனால் மேற்கண்டவர்களின் எழுத்துநடைப் பாங்கு சமூக யதார்த்தத்தை விளக்கும் நோக்கிலே பெரும்பாலும் காணப்படும்.
கி.ராவின் எழுத்துகளில் குறிப்பிட்ட ஒரு வட்டார மக்களான கரிசல் நில மக்களின் வாழ்வியலைக் காண முடியும். எழுத்தாளர் இமையத்தின் படைப்புகளில் விளிம்புநிலை மக்களின் சமூக நிலைமையைக் காணலாம். அ. வெண்ணிலாவின் “நீரதிகாரம்” நீரின் முக்கியத்துவத்தையும், ஜோ.டி.குருஸ் அவர்களின் “ஆழி சூழ் உலகு”, “கொற்கை” ஆகிய படைப்புகள் கடற்கரையோர மக்களின் வாழ்வையும் என ஒவ்வொரு எழுத்தாளர்களும் தனக்கென தனி வகைமையான பின்னணியை வைத்து எழுதினாலும் அவை சமூக யதார்த்த நிலைப்பாட்டை முன்வைக்கின்றன. அப்படியிருக்க, மனித மனத்தின் உட்பொருளை, தனிமனித தாத்பரியத்தை விளக்கும் படைப்புகள் இந்திய இலக்கியத்தைக் காட்டிலும் ரஷ்ய இலக்கியத்தில் அதிகம். உடனே மேலைநாட்டு இலக்கியத்துக்குக் கொடி பிடிக்கிறான் என்று முத்திரை குத்த வேண்டாம்.
ரஷ்ய இலக்கியம் தொடக்கம் முதல் இன்று வரையிலும் Human psychology என்று சொல்லும் மனித உளவியலை நேர்த்தியாகக் கையாளுகிற உத்தி நிரம்பக் காணப்படுகிறது. அதனில், தலைசிறந்தவர்களாக விளங்கும் லியோ டால்ஸ்டாய், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, அலெக்சாண்டர் புஷ்கின் போன்றோர் ஆவர். இந்த வரிசையில் நீக்க முடியாத பெயராக விளங்கும் மற்றொருவர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் ஆவார்.
தன் எழுத்துகளில் நிகழ்கால படிமங்களை வாசிப்பாளனுக்குத் தந்து, "நாம் இப்படியான காலத்தில் தான் வாழ்கின்றோமா? நம் தாய் தந்தையரின் காலகட்டத்தில் இவ்வாறான நிகழ்வுகளெல்லாம் நடந்ததா? நம்மைச் சுற்றியுள்ள இத்தனை இயற்கை யதார்த்தத்தை எப்படிக் காண மறந்தோம்?" என்று மறக்கக்கூடாத ஒன்றை நினைத்துப் பார்க்க வைக்கும் வல்லமை பெற்ற எழுத்தாற்றல் கொண்டவர் சிங்கிஸ் ஐத்மாத்தவ்.
ஐத்மாத்தவின் எழுத்துநடையில் அவர் கையாளும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நம்மால் அலசி ஆராய முடியும். அவருடைய “The First Teacher” (முதல் ஆசிரியர்); கல்வியறிவே இல்லாமல் கால ஓட்டத்தில் யாவற்றையும் தெரிந்துகொண்ட ரஷ்யாவின் ஒரு இராணுவ வீரன், தங்களுடைய சோவியத் யூனியன் மீண்டும் இருளில் மூழ்காமல், அடிமைப்பட்டு இருக்கக்கூடாது என்பதற்காக “பள்ளி”, “படிப்பு” என்ற வார்த்தைகள் கூட ஏதும் அறியாத கிராமவாசிகளிடம் சென்று பேசி, அவர்களின் குழந்தைகளுக்குத் தான் கற்ற அனுபவக் கல்வியைப் போதித்தார். “அம்மா”, “அப்பா” என்று எழுதக் கற்றுக்கொள்ளும் முன்னரே “லெனின்” என்ற வார்த்தையை அக்குழந்தைகள் எழுதக் கற்றனர்.
தன் அனுபவக் கல்வியையும், குழந்தைகளுக்கான நிகழ்கால வரலாற்றுக் கல்வியையும் இணைத்துக் கற்பிக்கும் ஆசிரியரான துயேஷன் எவ்வாறான நிலையில் தன்னை வளர்த்துக்கொண்டார், அவருடைய கம்யூனிசப் பார்வை எப்படியானது என்பதெல்லாம் இக்கதையை விவரிக்கும் அல்தினாய் என்ற பெண்ணின் பார்வையிலிருந்து எழுதியிருப்பார் சிங்கிஸ் ஐத்மாத்தவ். இந்தக் கதை “முதல் ஆசிரியர்” என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதனில் வரும் துயேஷன் கதாபாத்திரம் தொட்டு அல்தினாய் வரை ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயத்தை வழங்கியிருப்பார். அதனை நம்மாலும் ஏற்றுக்கொள்ள முடியும். அப்படியான ஒரு சீரிய நடையிலான எழுத்துநடை இவருடையதாகும்.
சோவியத் யூனியன் நாடுகளில் ஒன்றான கிர்கிஸ்தான் நிலப் பகுதியைச் சார்ந்த சிங்கிஸ் ஐத்மாத்தவ், தன் எழுத்தில் தான் வளர்ந்த கிர்கிஸிய மக்களினூடே வாழ்வியல் முறைமையை மையப்படுத்தியே எழுதியிருப்பார். இவரை உலகமெங்கும் அறியச் செய்த படைப்பு “ஜமீலா” ஆகும்.
ஒரு பெண் தன் புகுந்த வீட்டில் வாழ்கின்ற வாழ்க்கை அவளுடையது அல்ல; அவள் தன்னை அறிய முற்படுகிற சமயம் சரியா? தவறா? என்ற கேள்விகள் அடங்கிய மனப்பாங்கை நம்மிடத்தில் விடுவது எந்த ஆசிரியரும் செய்து விடுவார். இதிலென்ன சிங்கிஸ் ஐத்மாத்தவ் புதுமையான எழுத்தாற்றலைப் புகுத்தியுள்ளார் என்று கேள்வி எழும். அப்பெண்ணின் கோணத்தில் இருந்து பார்க்கும் அதே நேரத்தில், அவள் கணவனின் செய்கை நம்மை அவள் பக்கம் உள்ள உள்நோக்கத்தை உணரச்செய்யும். போர்முனையில் இருக்கும் கணவன் எழுதும் கடிதத்தில் குடும்பத்தின் மூதாதையர் தொட்டு பக்கத்து வீட்டு நண்பன் வரை விசாரிப்பவன், தன் மனைவி ஜமீலாவை ஒரு வார்த்தைக்கூட நலம் விசாரிக்காத அவனுடைய நடத்தை அவனுடைய குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது.
கிர்கிஸ்தானில் உள்ள குர்குரேவு மக்களின் வாழ்வியல், அந்த ஊர் மக்களின் தொழில்முறை என ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்தும் விதம் அழகியல் நோக்கம் உடையதாகும். முதல் ஆசிரியர், ஜமீலா மட்டுமல்லாது குல்சாரி, அன்னைவயல் ஆகிய தன் படைப்புகளிலும் கிர்கிசிய மக்களின் வாழ்வியலைச் சொல்லிப் பலதுறைப்பட்ட யதார்த்தவாதங்களை முன்வைக்கிறார் சிங்கிஸ்.
இயற்கையை இவர் மனித மனத்தோடு தொடர்புபடுத்திய விதம் மீண்டும் மீண்டும் தன் படைப்புகளை வாசிக்க வைக்கக்கூடியத் திறன் பெற்றது. ஸ்டெப்பி மலை, பனி படர்ந்த ஆறு, நட்டு வைத்த பாப்ளார் மரங்கள், குதிரைக் கொட்டகை, மாஸ்கோ செல்லும் புகைவண்டிப் பயணம் என 1950, 60-களின் காலகட்டத்தின் ரஷ்ய புரட்சியினூடே வந்த புயலின் மத்தியில் சிறிது தவழ்ந்து வந்த தென்றல் சிங்கிஸ் ஐத்மாத்தவின் படைப்புகள். ஒரு இலக்கியவாதியின் கைபிடித்து இயற்கையின் தாத்பரியம் அறிவதற்கு இசைவு தர மறுக்காதீர்கள்! சிங்கிஸ் ஐத்மாத்தவ் உங்களை நிச்சயம் கைவிட மாட்டார்.
- ஹரிஸ் வெங்கடேஸ்