01. இடைக்காலத் தென்னிந்திய வரலாற்றில் ஊர்ப்புறத்து உள்ளாட்சி பற்றி (local administration) விளக்கும் விஜயாலய சோழன் (கி.பி.849-870) வழிவந்த முதல் பராந்தகனின் (கி.பி.907-949) இரு கல்வெட்டுகள் திருவள்ளூர் மாவட்டத்தின் உத்தரமேரூர் என்ற ஊரிலுள்ள ஒரு கோயிலின் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி வரலாற்று ஆசிரியர்களும் அறிஞர்களும் ஆய்ந்துள்ளனர்.1 இக்கல்வெட்டுகள் பற்றி ஒரு நூலில் அண்மையில் இரா.நாகசாமி இருகட்டுரைகளை வெளியிட்டார். அக்கல்வெட்டுகள் ”ஈடு இணையற்ற குடியாட்சி அரசியல் சட்டம்” என்றும், “இதுவே தேசிய குடியாட்சி முறை” என்றும் பதிவிட்டுள்ளார்.2

இக்கல்வெட்டுகளில் பரிந்துரைக்கப்பட்ட தகுதிகளின்படியே பல்லவர், சோழர் காலங்களில் ஊரார்களும், நாட்டார்களும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்ற கருத்தினையும் முன்மொழிந்துள்ளார். ஆனால், உண்மையில் இக்கல்வெட்டுகளின் பகுப்பாய்வில் பார்ப்பனர்கள் அல்லாத வேளாண்மக்கள் வாழக் கூடிய ஊர்ச்சபைக்கான ஊரார்களும் நாட்டுச்சபைக்கான நாட்டார்களும் தேர்வு செய்யப்படுவதற்கான தகுதிகள் விளக்கப்படவில்லை என்பதனை அறிய முடிகிறது. மாறாக, பார்ப்பனர்கள் மட்டும் வாழும் ஒரு மங்கலத்திற்கான மகாசபை (ஆட்சிக்குழு) உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான அதாவது தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரைகள் மட்டுமே விளக்கப்பட்டுள்ளன.

02.இக்கல்வெட்டுகள் பார்ப்பனர்களின் ஊரான சதுர்வேதிமங்கலத்து சபைக்கு குடவோலை முறையில் தேர்வு செய்வதற்காக போட்டிக்கு நிற்பவர்களின் தேவையான தகுதிகளை மட்டுமே முன்மொழிகின்றன. குடவோலை முறையில் சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் இருந்து வாரியங்களுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். அத்தேர்வில் போட்டியிடுபவர்க்கு வேண்டிய தகுதிகளையும் வேண்டாத தகுதிகளையும் கல்வெட்டுகள் வரையறுக்கின்றன. அத்தகுதிகள் கல்வெட்டுகளில் பரிந்துரைக்கப்பட்ட உத்தரமேரூர் சதுர்வேதிமங்கலத்து சபைக்கு மட்டுமே பொருந்தும். அக்காலத்திய தமிழ்நாட்டில் அனைத்து மங்கலத்திலும் இவை நடைமுறையில் செயற்பட்டதாக கல்வெட்டுகள் பேசவில்லை. அவை தவிர, போட்டிக்கு நிற்பவருக்குத் தேவையான மனத்தின்மையும் ஒழுக்கமும் அவர்களின் பொருளியல்நிலை போன்றவையும் வரையறுக்கப்பட்டுள்ளன. இக்கூறுகளின் அடிப்படையில் அம்மங்கலத்தின் சபைத் தேர்விற்கு ஏற்பாடாகியிருந்த நபர்களின் ஒழுக்க இயல்புகளையும் அறியலாம். மேலும், அவற்றிலிருந்து பார்ப்பன சமூகத்தின் பெண்கள் நிலையினையும் அறியலாம். பெண்கள், சபைத் தேர்விற்கான போட்டியில் இடம்பெற்றதாக கல்வெட்டுகளில் குறிப்புகள் இல்லை. எனவே, அவர்களுக்கு அத்தேர்வில் போட்டியிடும் உரிமை இல்லை என்று அறிய முடிகிறது. முத்தாய்ப்பாக, இத்தேர்வுநிலைகள் மங்கலத்தின் ஆண்மக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெளிவாகிறது. ஆனால், அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட வரையறைகளில் மங்கலத்து சபைக்கு உறுப்பினர்பதவிக்கு போட்டியிடும் நபர்களின் இரத்த உறவினர்களின் பட்டியல் அறியப்பட்டுள்ளது.3

03. தேர்தல் போட்டியில் நிற்பதற்கு ஆண்களுக்கு மட்டும் பரிந்துரைக்கப்பட்ட சில தகுதிகள்

01. தன் மனையில் அகம் எடுத்துக் கொண்டிருப்பான் (possessing own house on own plot)

02. மந்திரப் பிரமாணம் வல்லான் (versatility in Sanskrit scriptures)

03. ஓதிவித்தல் அறிவு (having capacity in teaching)

04. ஆசாரம் (follower of tradition)

05. அர்த்தசௌசமும் ஆன்மசௌசமும் கொண்டிருப்பான் (property acquired honestly; smartness in mentality)4

04. மேற்சுட்டப்பட்ட தகுதி உடையவர்கள் தேர்தலில் போட்டியிடலாம். அதாவது, நிலவுடைமையுள்ளவர், வீடு கட்டிக் கொள்ளும் உரிமையுடையவர், மந்திரத்தில் அதாவது சம்ஸ்கிருத மொழியில் ஆளுமையுள்ளவர், ஆசாரத்தினைப் பின்பற்றுபவர், நேர்மையான முறையில் செல்வம் சேர்த்தவர், நல்ல மனசாட்சியுள்ளவர் போன்றோர் போட்டியிடலாம். இவை உண்மையெனில், எதிர்நிலையில் மேற்சுட்டப்பட்ட வரையறைகளில் தகுதியற்ற நபர்களும் அம்மங்கலத்தில் வசித்தனர் என்று பொருளாகிறது. இக்கல்வெட்டுகளின் மூலம் நிலமற்ற பார்ப்பனர்களும் அச்சதுர்வேதிமங்கலத்தில் வசித்தனர் என்பதையும் அறியலாம். இதன்படி மங்கலங்களில் பார்ப்பனர் சமூகம் ஈரடுக்கு கொண்டது என்பது உறுதியாகிறது (land owing class and landless class).

05.தேர்தலில் போடியிடக் கூடாதவர்களாக சில வரையரைகள் கல்வெட்டில் உள்ளவாறு இரா.நாகசாமி சுட்டியுள்ளார். அவை கீழே தரப்பட்டுள்ளன.

01.எப்பேர்பட்ட வாரியங்களும் செய்து கணக்கு காட்டாது இருந்தவர்.

02.எவ்வித பலாத்காரத்திலும் ஈடுபட்டவர்.

03.எப்பேர்பட்ட கையூட்டும் கொண்டான்.

04.தன் உடன்பிறந்தாளை பலாத்காரம் செய்தவன்.

05.பிற பெண்ணை பலாத்காரம் செய்தவன்.

06.ஊரில் சாகஸம் செய்கிறவன் (புனைசுருட்டு செய்கிறவன்)

07.பிறர்பொருளை அபகரித்தவன்.

08.பஞ்சமாபாதகங்களில் ஏதாகிலும் செய்தவன்.

09.பிராயச்சித்தம் செய்துவிட்டேன் என்று சொல்கிறவன்.

10.இதுபோன்றோருக்கு துணைபோனவன்.

06.மேலே சுட்டப்பட்ட செயல்களில் ஈடுபட்டவர்கள் மாகாசபை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படும் போட்டியில் பங்கு பெற முடியாது. என்றால், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் அம்மங்கலத்தில் வசித்தனர் என்று பொருளாகிறது.

கற்பழிப்பு, கையூட்டு, வருவாய் கணக்கு காட்டாமை, பஞ்சமாபாதகம் செய்வது போன்ற குற்றச் செயல்கள் அங்கு அன்றாட வாழ்வில் நடந்தேறின என்று கருத வேண்டியுள்ளது. மேற்சொல்லப்பட்ட கூறுகளின் அடிப்படையில் அம்மங்கலத்தில் வசித்து வந்த மக்களின் மனத்தியல்புகளையும் சமூகத்தின் நிலையினையும் பொருளியல் நிலையினையும் அறியலாம்.

07. கீழ்தந்துள்ள முடிவுகளைப் பெறலாம்.

01.பெண்கள் சபை உறுப்பினர்களுக்கான தெரிவுசெய்யும் போட்டியில் இடம்பெற முடியாது.

02.பெண்களுக்கு நிலவுடைமையில்லை.

03.நிலமற்றவர் தேர்தலில் போட்டியிட முடியாது.

04.சொந்த நிலத்தில் வீடுகட்டிக் கொள்ளாதவர் தேர்தலில் போட்டியிட முடியாது.

05.சம்ஸ்கிருத அறிவற்றவர் தேர்தலில் பங்கு பெற முடியாது.

06.தமிழ்மொழியறிவின் தேவை பற்றி கல்வெட்டில் குறிப்பில்லை.

08.இதில் நுணுகிப் பார்க்க வேண்டிய கருத்து என்னெவெனில் சம்ஸ்க்கிருத மொழியறிவினை வலியுறுத்தும் இக்கல்வெட்டுகள் தமிழில் அமைந்துள்ளன என்பதாகும்.

இவ்வனைத்து கூறுகளும் இன்றைய குடியரசு முறைக்கு பொருந்தா ஒன்றாக உள்ளன. மங்கலத்தின் ஒட்டுமொத்தப் பெண்களையும் தவிர்த்துவிட்டு ஊரகப் புறத்து உறுப்பினர் பதவிக்கு ஆண்களை மட்டும் தேர்வு செய்யும் முறையினை ”ஈடுஇணையற்ற தேசிய அரசியல் சட்டம்” என்றும், ”நமது தேசிய குடியாட்சி முறை” என்பதும் எங்ஙனம்? இன்றைய ஆட்சி அரசியலில் பெண்களுக்கு அதிகாரத்தில் ஒதுக்கீடு பற்றி வாதங்கள் நிகழும் சூழலில் சபாவிற்கான தேர்வில் பெண்கள் பற்றி பேசாத உத்தரமேரூர் கல்வெட்டுகளை ஒரு Constitution அளவிற்கு மதிப்பிட்டு வரையறுப்பது குடியரசு முறை ஆட்சிக்கு பொருந்துவதெப்படி / பொருத்துவதெப்படி?

 அடிக்குறிப்புகள்

 1.K.V.Subrahmanya Aiyer, Historical Sketches of Ancient Dekhan, Abhinav Publication.1980, (first publication,1917),pp.320-323. பண்டைக் காலத்து இந்தியாவின் ஊர்ப்புறத்து நிர்வாகத்தின் சிறப்பியல்புகளைப் போற்றும் தொனியில் இக்கல்வெட்டுகளை அணுகினார்.

 2.இரா.நாகசாமி,செந்தமிழ்நாடும் பண்பும், (முதல்பதிப்பு,2021) கிழக்கு பதிப்பகம், சென்னை.பக்.108-118.

 3.K.R.Sankaran,Tamil Kinship Terms in Uttaramerur Inscriptions in V.I.Subramaniam Commemoration Vol.II: Studies on Indian Languages and Culture, IJDL, Thiruvanandhapuram, 2015.pp.113-117.

 4.K.A.Nilakanta Sastri, Studies in Chola History and Administration, University of Madras, Madras,1932.p.146.உத்தமேரூர் கல்வெட்டுகளின் மீதான கல்வெட்டறிஞர் வெங்கையாவின் வாசிப்பினை விமர்சனப்பூர்வமாக அணுகும் சாஸ்திரியார், இரு கல்வெட்டுகளையும் ஒப்பாய்வு செய்து அக்கல்வெட்டுகள் பொறிக்கபடுவதற்கான அரசியல் சூழலை விளக்கியுள்ளார். அக்கிராமத்தில் எழுந்த சிக்கலை ஒரு சூத்திர அலுவலர் (இத்தொடரை சாஸ்திரி பயன்படுத்தியுள்ளார்) தீர்க்க முடியாமல் குழப்பினார் என்றும் பார்ப்பன அலுவலர் வெற்றிகரமாக சமாளித்தார் என்றும் பதிவிடுகிறார். அக்கல்வெட்டில் இடம்பெறும் அர்த்தசௌசமும் ஆத்மசௌசமும் உடையராய் என்ற தொடர் அர்த்தசாஸ்திரத்தில் இடம்பெறும் உபதாசவ்ச என்ற தொடரினை நினைவுறுத்தினாலும் அதேபொருளில் கல்வெட்டில் பயன்படுத்தப்படவில்லை என்கிறார். இதற்கு possessing material and spiritual purity என்று எளிமையாகப் பொருள் கொள்ளலாம் என்கிறார். குறள் 501-றினை பரிந்துரைக்கிறார். ARE,1899 paragraph 58-73 & ASI.1904-5 pp.131 ff.

- கி.இரா.சங்கரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.