சாலையை அழகாக்கிக் கொண்டே செல்லும் அற்புதம் எப்போதாவது நிகழும். அப்படி தன்னை மலர்த்திக் கொண்டே சென்ற ஒரு ஸமோட்டாகாரன்... கண்களில் கவிதை எழுதிச் சென்றான்.
வழக்கமாக எச்சில் துப்பும் இடியட்களை பார்க்க நேரிடும். இண்டிகேட்டர் எதுக்கென்றே தெரியாத மண்டுகளை காண நேரிடும். பிரேக்குக்கும் பிளிறலுக்கும் இடையே சாவு பூச்சிகளாய் சுற்றும் சல்லிகளைப் பார்க்க நேரிடும்.
ஆனால் எப்போதாவது இப்படி நந்தவனத்தில் வண்டி ஓட்டுகிறோம் என்று வெகு சிலர் உணர்த்தி விடுகிறார்கள்.
அப்படி இந்த ஸமோட்டாகாரன்... அவன் ஆடையில் அழுக்கே இல்லை. அவன் வண்டி முதுகில் இருக்கும் உணவு கொண்டு போகும் பேக் பளிச்சென இருந்தது. பொதுவாக ஒரு குருட்டு விதி இருக்கிறது. கோழிக்கடையில் கோழி வெட்டுகிறவன் என்றால் சுத்தமான ஆடையை அணியக் கூடாது... எப்படியும் அழுக்காவும் என்று ரத்தக்கறை படிந்த அழுக்கு வாசம் பூத்த நேற்றைய ஆடையையே அணிந்து நிற்பார்கள். இன்னும் நிறைய இந்த மாதிரி சாப்பாடு வாங்கி வந்து தருபவர்களின் சாப்பாட்டு பை அழுக்கேறிக் கிடக்கும். ஆனால் இவன் அத்தனை பளிச்சென வைத்திருந்தான்.
ஓவர் டேக் எடுக்க அழகாய் ஒலி எழுப்பி வழி கேட்டான். வழி கிடைத்ததற்கு நன்றி சொல்லி ஒலிப்பான் அடித்தான். இடது வலது என்று அவன் இண்டிகேட்டர்-ஐ பயன்படுத்தும் லாவகமே... அவ்ளோ கலையாய் இருந்தது. கை காட்டி மற்றவருக்கு வழி விடுவதாகட்டும்.. இருங்க... முன்னால வண்டி வருது.. என்று பொறுமை காட்ட சொல்வதாகட்டும்... கொடுக்கும் சிக்னலில் சில பூக்கள் உதிர்த்தான்.
இன்னொன்று... வாசனைத் திரவியம் அவனிடம் இருந்து அரூப வாக்கியமாய் கிளம்புவதைப் படித்தேன். பரவசம். செய்கின்ற வேலையை எத்தனை விரும்பினால் இப்படி இருக்கும் அவன் தோற்றமும் தோன்றலும். தனியாக வாழ்வதற்கென்று நேரம் காலம் வராது. இப்படி செய்கின்ற செயல்களின் வழியாக வாழ்வதை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்.
உற்சாகம் நிரம்பிய அந்த இளைஞனைப் பார்க்கையில்... சாலையே அழகானது போல தோன்றியது. நீண்ட நாட்களுக்கு பிறகு சாலையில் சமாதானம் பெற்றேன்.
*
மனிதன் ஒரு அனுபவக் கூடம்
*******************************************
அவரவர் அனுபவங்களை அவரவர் தான் கொள்ள வேண்டும். கவனம் கவசம் தான். கவசம் தாண்டினால் தானே நிஜ வலிமை தெரிய வரும். கூட்டுக்குள் இருக்கும் வரை தாய்ப்பறவை பசியாற்றும். பசிக்கு காலம் வேறு வரையறை வைத்திருக்கையில்.. பறந்து தானே பக்குவப்பட வேண்டும். முதலில் திசை தெரியாது. விசை உணர்ந்த பிறகு அதில் இசை என்றும் சொல்லும் காலம். பயிற்சி தான் எல்லாமே. பாட்டுக்காரன் ஆனாலும் சரி. மாட்டுக்காரன் ஆனாலும் சரி. பயிற்சி இன்றி பருவம் கூடாது ப்ரோ.
செய்த தவறுகளின் வழியே செய்ய வேண்டிய சரிகள் புலப்படுவதைப் போல பிலாஸபி வாழ்நாளில் உண்டோ. பட்ட காயங்களின் வழியே பார்த்து நடந்து கொள்ளும் வழிகள் தானே கற்றவை. நம்பி ஏமாறுவதில் பலம் கூடும் இதயம். வெம்பி வீணாவதில்லை வாழ்வில்லை கவனி. சுற்றி இருக்கும் ஒவ்வொரு உயிரும் நமக்கு கற்றுத் தரும் ஆசான்களே. ஆசையோடு அணுகு. அற்புதம் நிகழாவிடினும்.. அனுபவம் நிகழ்ந்தே தீரும். நம்பிக்கை இல்லாத போது மூச்சு விடவும் மறப்பாய். நம்பினோர் கை விட்டாலும்... சேர்த்து வைத்த அனுபவம் தூக்கிக் கொண்டு பறக்கும்.
ஒருவரின் அனுபவம் இன்னொருவருக்கு பாடமாகும். ஆனால் பரீட்சை ஆகாது. அதைத் தான் பட்டு தெரிந்து கொள்ளல் என்கிறார்கள். முட்டாள்தனங்களிடம் முட்டி இடு. முட்டுச்சந்தில் முட்டிக்கொண்டு நில். பிறகு வழி இல்லை என்பது புரியும். மாட்டிக்கொண்டது தெரியும். பிறகு நீயே வழி உண்டாக்குவாய். கதவை சாத்தி விட்டு நான்கு பக்கங்களையும் மறி. பிறகு பூனையில் புலியைப் பார்ப்பாய் என்ற இன்குலாபின் கவிதையின் மகத்துவம் புரியும். விழுந்து எழு. திட்டு வாங்கு. ஒதுக்கப்படு. காயம் படு. உடைந்து நொறுங்கு. எல்லாமே யார் என்றே தெரியாத உன்னை நீ ஆக்க செய்யப்படும் யுக்தி. இன்னொருவர் செதுக்கினால் அது சிற்பம். உன்னை நீயே செதுக்கினால் அது மானுடம்.
இதயத்தை மெச்சும் நமக்கு மூளையை கொஞ்ச தெரிவதில்லை. சிந்தனை ஒரு மகத்தான தத்துவம். அதனூடாக புகுந்து இன்னும் இன்னும் ஆழம் போக நமக்கான அதிசயங்களை நாமே அரங்கேற்றலாம். அதன் வீரிய தெறித்தல்கள் கட்டுக்கடங்காதவை. போதும் என்பது சோம்பேறிகளின் அறிவிலி. அறிவை ஞானமாக்கும் வித்தைக்கு உள் நோக்கிய யுத்தம் தேவை.
கண்டுபிடிப்புகளே கணவான்களாக்கும். காற்றை இழுத்து புல்லாங்குழலில் இசைத்தானே மேதை. செய்யும் வேலையில் எதையாவதைக் கண்டு பிடி. கண் எதிரே கிடக்கும் சிறு கல்லுக்கும் காலம் உண்டு.
*
தனிமையிலே
*********************
தனிமை ஒரு மனிதனை என்ன செய்யும். தன்னோடே பேச செய்யும். தான் மட்டுமே இந்த உலகம் என்று நம்ப செய்யும். தான் ஒன்றுமே இல்லை என்று வெம்ப செய்யும். தனக்குள் தான் தான் என்றே வெகுதூரம் சென்று நிலை குலைய செய்யும். தன்னில் இருந்து தன்னையே காணாமல் போக செய்யும். அதீத நம்பிக்கையாளன் ஆக்கும். ஒன்றுக்கும் உதவாத நம்பிக்கையற்ற வெத்து வேட்டாக மாற செய்யும். தனிமை தற்கொலைக்குத் தூண்டும். கொலைக்கு வழி சொல்லும். பிழை தேடித் திரியும். பிரியத்துக்கு வாடும். பிரிந்து விட்ட பிறிதொரு தானாக தன்னை நொந்து நொந்து கண்ணாடியில் உடையும். தனிமை கவிதைக்குள் குட்டிக்கரணம் போடும். தாவி அணைக்க அலையும். தாக்கம் கொண்ட கிணற்று மேட்டில் ஒற்றையாளாய் அமர்ந்திருக்கும். உள்ளே மூழ்கிக் கொண்டிருக்கும் ஒற்றை நிலவை தனதாக்கும்.
பக்கத்தில் இருக்கும் மளிகை கடை திண்டில் இந்த X- ஐ தினமும் பார்க்கிறேன். ஏழு மணிக்கு வந்து அமர்ந்தால் ஒன்பது ஒன்பதரை வரை அங்கேயே தான் அமர்ந்திருப்பார். தினமும் ஒரே போஸ் தான். தாழ்ந்திருக்கும் திண்டில் அமர்ந்து சுவற்றில் சரிந்து கால் மேல் கால் போட்டு ஒரு நொடிந்த வாகில் அதுவே சுகமென காட்டும் தோரணையில் தான் அமர்ந்திருப்பார். மெலிந்த தேகத்தில் மூப்பு சுற்றிய கருத்த சிலை போல தெரியும். பெரிதாக அசைவிருக்காது. கண்களை சிமிட்டுவது கூட காற்றுக்கு வலிக்க கூடாது என்பதாக இருக்கும். அலைபேசியை பார்த்துக் கொண்டே இருப்பார். சற்று தள்ளி தன் டிவிஎஸ் -ஐ ஹெல்மெட்டோடு நிறுத்தி இருப்பார். பளிச்சென சுத்தமாக இருக்கும் வயதான அந்த வண்டியில் எப்போதும் ஒரு சோர்வு தெரியும்.
கடைக்கு போகையில்... அந்த வழியாக நடைப்பயிற்சி செய்கையில்.. சில நாட்களில் அவரைப் பார்ப்பதற்காகவே அந்த கடைக்கு செல்வேன். முட்டை வாங்கிக்கொண்டே அவரைத்தான் நோட்டமிடுவேன். வீதியில் யார் போனாலும் நொடிக்கும் குறைவாக நிமிர்ந்து அவர்களைப் பார்ப்பார். பிறகு குனிந்து கொள்வார். குடும்பம் இருக்க வாய்ப்பில்லை என்று தான் நம்ப வேண்டி இருக்கிறது. வாரத்தில் ஏழு நாட்களும் ஒரு மனிதன் இப்படி வேலை முடிந்து வந்து அமர்ந்து கொள்தல்... யாரிடமும் பேச ஒன்றுமில்லாமல் வெறித்திருப்பது... பிடிப்பற்ற அவரின் வாழ்வை தான் நமக்கு காட்டுகிறது.
இது பிடித்து கூட இப்படி இருக்கலாம். விஷயம் அதுவல்ல. விஷயம் தனிமை.
தனிமை இளமையில் அழகாய் தெரியும் நீர். அதே தனிமை முதுமைக்குள் நுழைகையில் கானலாய் மாறி விடும். பார்க்க பார்க்க ஒன்றுமில்லாமல் போய்விடும் காட்சி மயக்கமாகி விடும். எதை யாரிடம் பேசுவது என்று புரிபடாது. யாரிடம் என்ன சொல்லலாம் என்ற தெளிவு பறிபோகும். நம்பிக்கைக்கும் அவ நம்பிக்கைக்குமான இடைவெளி குறைந்து விடும். வீடெனும் சூழல் அற்ற ஒற்றை தேகம் எப்போதும் பட படப்புக்குள்ளாகி கொண்டே இருக்கும். அப்படித்தான் அவரை காண்கிறேன். அந்த முகத்தில் நிரந்தரமாக தங்கி விட்ட துயரத்தை உணர முடிகிறது. ஒரு சிலையின் நிழல் போல இருப்பது எத்தனை அழுத்தமானது.
அழ தெரிந்த முகத்துக்கு தான் சிரிக்கவும் தெரியும். சிரிக்க தெரிந்த முகத்துக்கு தான் முகம் என்றே பெயர். வெறுமனே மூச்சு விடும் கட்டைக்குள் உயிர் கதறிக்கொண்டு தானே இருக்கும். சொந்தம் பந்தம் உறவு நட்பு... குறைந்த பட்சம் ஒரு எதிரியாவாது நமக்காக இருக்க வேண்டும் என்பது மானுட விதி. அதற்கு நாமும் மற்றவர்களுக்கு அப்படி இருக்கும்படியான ஒரு கடமைமைப்பை கொண்டிருக்க வேண்டும். இதை ஒட்டி நினைவுக்கு வருவது.. வீடும் அதைச் சுற்றி இருக்கும் உறவுகளும் மனிதன் கிறுக்காகாமல் இருக்க உதவுகிறது. உண்மையில் வெகு விரைவாக கிறுக்காகும் வல்லமை நம் மனதுக்கு உண்டு. மனதையும் உடலையும் பிரித்துப் பார்க்க தெரியாத வள்ளல்களுக்கு சிக்கல் இன்னும் அதிகம். அது அவரவரையே வெறுக்கும். இது இருப்பதிலேயே மிக அபாயகரமான நோய். உலகை நேசிக்க வேண்டுமெனில் முதலில் தன்னை நேசிக்க தெரிய வேண்டும்.
அந்தக் கண்ணி விடுபட்டால்... இப்படித்தான் Mr.x போல அலைபேசியை திறந்து வைத்துக் கொண்டு அதிலும் ஒன்றையும் பார்க்காமல் சூனியம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
அவரவர் துயரத்தை விட்டு அவரவரே தான் வெளியேற முடியும். மற்றபடி தனித்தே இருப்பேன் என்பது பிடிவாதம். பிடிவாதம் முடக்கி போட்ட எத்தனையோ வாதங்களை அறிவேன்.
இங்கே கலைஞனுக்கான தனிமை ஒன்று இருக்கிறது. அது முற்றிலும் வேறு. நான் பேசிக் கொண்டிருப்பது மனிதனுக்கான தனிமை. தனிமை கலைஞனை வார்த்தெடுக்கும். மனிதனை வீழ்த்தி விட முயற்சிக்கும்.
- கவிஜி