கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மக்களின் வாழ்க்கை முறையில் சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் உள்ள இந்தியாவை உருவாக்குவதே அம்பேத்கரின் பெருங்கனவு.

அனைவருக்கும் வாக்குரிமை, அனைவருக்கும் தேர்தலில் பங்கேற்கும் உரிமை என்பது அரசியல் ஜனநாயகத்தை மட்டுமே உறுதி செய்யும். சமூக ஜனநாயகம் இல்லாமல் வெறும் அரசியல் ஜனநாயகத்தைப் பின்பற்றுவதால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமத்துவமும் மனித உரிமைகளும் கிடைத்து விடாது என்ற உண்மையை அம்பேத்கர் உணர்ந்திருந்தார்.

ambedkar 318ஆங்கிலேயர்கள் ஆள்வதற்குப் பதிலாக காங்கிரஸ் கட்சி இந்தியாவை ஆள்வதால் இந்தியாவில் ஜனநாயகம் மலர்ந்து விடும் என அம்பேத்கர் நம்பவில்லை. உயர்சாதி இந்தியர்களின் கட்சியாக காங்கிரஸ் இருந்ததால் அம்பேத்கர் காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை வைக்கவில்லை.

இந்தியாவை இந்தியர்கள் ஆள்வதால் மட்டுமே இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான சாதிய ஒடுக்கு முறைகளும் தீண்டாமை இழிவுகளும் ஒழிந்து விடும் என்பதையும் அம்பேத்கர் நம்பவில்லை.

அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறந்தவராக இருந்ததால் சாதிய ஒடுக்குமுறையை நேரடியாக அனுபவித்தவர். அதனால் தான் சாதிய ஒடுக்குமுறை என்பது ஒழிக்கப்பட வேண்டிய மிகக் கொடிய மனித நாகரிகமற்ற செயல் என்று கருதினார். சாதியக் கொடுமைகளை ஒழிக்கப் பயன்படாத அரசியல் பதவிகளை வகிப்பதில் பயனில்லை என்பதால் சட்ட அமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார்.‌

கல்வி என்பதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. ஆனாலும் அம்பேத்கருக்கு கல்வி பெறும் வாய்ப்புக் கிடைத்தது. கல்வி எனும் அறிவாயுதத்தை அம்பேத்கர் சரியாக பயன்படுத்தவும் செய்தார்.

பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் அம்பேத்கர் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. சட்டப் படிப்பும் அம்பேத்கரை வலிமையான போராளியாகவும் அறிவாளியாகவும் மாற்றியது. தீண்டாத்தகாத அம்பேத்கர் இந்திய நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றும் குழுவின் தலைவராகும் தகுதியைப் பெற்றார். அரசியலமைப்புச் சட்டத்தில் சமத்துவக் கோட்பாட்டை இடம்பெறவும் செய்தார்.

அம்பேத்கர் என்ற ஒரு மனிதரால் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான அரசியல் இன்று வரை வலிமையாகத் தொடர்ந்து கொண்டுள்ளது. அம்பேத்கர் எழுதிவிட்டு சென்ற நூல்கள் இன்றைக்கும் நமக்கான அரசியல் பாடங்களாக உள்ளன. சமூக மாற்றத்திற்கான போர்க் கருவியாக கல்வியே விளங்க முடியும் என்பதற்கு அம்பேத்கர் என்ற ஒரு மனிதரை நாம் உதாரணமாகக் கொள்வோம்.

ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் வழிகாட்டியாகவும் தத்துவ ஆசானாகவும் விளங்கிய அம்பேத்கரருக்கு இணையாக இன்று வரை நமக்கு புதிய தலைவர்கள் கிடைக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான அரசியலில் பின்னடைவுகள் ஏற்பட்டிருப்பதை நாம் உணர்ந்து செயல்படுவோம்.

சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றை மக்களின் வாழ்க்கை முறையாகக் கொண்ட சமூக ஜனநாயகம் வளர்ச்சி பெற்ற இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு தலைமுறைக்கும் ஆயிரம் அம்பேத்கர் உருவாக வேண்டும்.‌ இதற்கான கருப்பொருள் உள்ளதாக நம்முடைய கல்வியை மாற்றியமைப்பதற்கான வழிவகைகளை அனைவரும் சேர்ந்து தேடுவோம்.

- சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு