கேள்வி: பெரியார் வாடகைத் தாய் முறையை ஆதரித்தாரா?
பதில்: இல்லை. ஆண் பெண் சேர்க்கைக்கும் (நேரடி உடற்சேர்க்கை) குழந்தை பெறுவதற்கும் சம்பந்தம் இல்லாமல் போய்விடும் அளவுக்கு மருத்துவ அறிவியல் முன்னேறி, வீரியமான, நோயற்ற, அறிவுத் தெளிவுடைய குழந்தைகள் (கரு) கருப்பைக்கு வெளியே உருவாக்கப்பட்டு, நல்ல வளர்ச்சியடைந்த பின்னர், தாயின் கருப்பைக்குள் செலுத்தப்படும் என்று மருத்துவ அறிவியல் எதிர்காலத்தில் பெறப் போகும் வளர்ச்சியை முன்கணித்தார் பெரியார்.
”இன்செக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைக்குள் நல்ல குழந்தைகள் பிறக்கச் செய்யப்படும்” என்று பெரியார் பேசியதற்கும் வாடகைத்தாய் மூலம் பெறப் படுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
கேள்வி: வாடகைத்தாய் முறை பெரியார் முன்கணித்த “இன்செக்ஷன் மூலம் குழந்தை” என்ற அறிவியல் வளர்ச்சி தானே?
பதில்: இல்லை. ஹிரோஷிமா – நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டு கூட அறிவியல் கண்டுபிடிப்பு தான். அணுகுண்டைப் போல், உடலை ஸ்கேன் செய்து, உள்ளிருக்கும் நோயைக் கண்டறிய உதவும் எக்ஸ்ரேவும் அறிவியல் கண்டுபிடிப்பு தான். இதில் எது பெரியார் விரும்பிய அறிவியல்? மனிதனின் நோயைக் கண்டறிந்து, குணப்படுத்த உதவும் அறிவியல் வளர்ச்சியே பெரியார் விரும்பிய அறிவியல் வளர்ச்சி. மனிதனை மனிதன் கொல்ல உதவும் அணுகுண்டு பெரியார் விரும்பிய அறிவியல் வளர்ச்சி அல்ல.
கேள்வி: வாடகைத் தாய் முறை குறித்த பெரியாரியப் பார்வை எது?
பதில்: ”இன்செக்ஷன் மூலம் நல்ல குழந்தைகள் பிறக்கச் செய்யப்படும்” என்று கூறிய பெரியார் தான் பெண்கள் கருப்பையை அறுத்தெரிய வேண்டும் என்றும் பேசினார். இரண்டும் வேறு வேறு அல்ல. இவை இரண்டும் ஆணைப் போல் பெண்ணை சுதந்திரமானவளாக்க வேண்டும் என்ற நோக்கில் பெரியார் சொன்னவை.
”உணவைத் தின்று உயிர்வாழ்வது, கலவி செய்து இனப்பெருக்கம் செய்வது” என இரு நோக்குகள் மட்டுமே இயற்கை விலங்குகளுக்கு (மனிதரல்லாத பாலூட்டிகள்) உள்ளன. இந்த இரு செயல்களையும் விலங்கினம் தன்னுணர்வோடு செய்வதில்லை. அதில் இழிவும் இல்லை, உயர்வும் இல்லை. கலவிக்கு வாய்ப்பு இருந்தால், பெண் விலங்கு, ஆண் விலங்கோடு இணைந்து கருவுற்று இனப்பெருக்கம் செய்யும். வாய்ப்பு கிட்டவில்லையெனில், இனப்பெருக்கம் செய்யாமல் மடிந்து போகும். இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு தேடி மனிதர்கள் போல் ஏழு மலை, ஏழு கடல் தாண்டுவதில்லை. கடவுளிடம் வேண்டுவதும் இல்லை. அன்றாடம் நடக்கும் மற்ற இயல்பான செயல்களைப் போலவே இனப்பெருக்கமும் விலங்கினங்களில் இயல்பாக நடைபெறுகிறது. அதற்காக பெரிய மெனக்கெடுதல் இல்லை. குழந்தைப் பேறு எப்படி இயல்பானதாக இருக்கிறதோ, அதைப் போலவே, குழந்தை வளர்ப்பும் விலங்கினங்களிடையே இயல்பானதாக இருக்கிறது. குழந்தை பெறுவதற்காக மட்டுமே விலங்குகள் வாழ்வதில்லை. மாறாக விலங்குகள் தங்கள் வாழ்க்கைப் போக்கில் இனப்பெருக்கம் செய்கின்றன.
இனப்பெருக்கம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளிலும் பகுத்தறிவின் காரணமாக விலங்கில் இருந்து மாறுபட்டது மனித இனம். உணவைத் தின்று, உடல் வளர்த்து, கலவி செய்து இனப்பெருக்கம் செய்வதோடு, மனிதர்கள் மடிவதில்லை அல்லது அதற்காக மட்டும் முழு வாழ்க்கையையும் வாழ்வதில்லை. தமக்குள்ள பகுத்தறிவின் காரணமாக, அறிவியலை வளர்த்து, அதன் மூலம் மனித வாழ்வை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது மனித இனம். அவ்வாறு மனித வாழ்வை மேம்படுத்த நடக்கும் பொருள் உற்பத்தி முறையில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் காரணமாக, தனியுடைமை, சாதி, மதம், நாடு, மொழி, பாலினம் உள்ளிட்ட பல பிரிவினைகள் காலப்போக்கில் ஏற்பட்ட பின்னர், அதை ஒட்டி இழிவு தாழ்வும் ஏற்பட்டது. அதாவது விலங்கில் இருந்து மனிதனைப் பிரிக்கும் தன்னுணர்வோடு கூடிய உழைப்பே மறைமுகமாக மனிதர்களுக்கு இடையே வேறுபாடுகளை உருவாக்கி விட்டது. வேறுபாடுகள் உருவாகிவிட்டபடியால், ஏற்றமும் தாழ்வும் உருவாகி விடுகின்றன. அப்படி உருவான இழிவை நீக்கவும் அறிவியலின் துணையை மனிதர்கள் நாடுகிறார்கள். அதற்காக தன்னுணர்வோடு உழைக்கிறது மனித இனம்.
இவ்வாறு தன்னுணர்வோடு உழைக்கிற மனித இனம் அறிவியல் வளர்ச்சியைப் பயன்படுத்தி, வெகு விரைவில் பிறவி இழிவு உட்பட அனைத்து வகை இழிவுகளையும் நீக்கி விடும் எனக் கணித்தார் பெரியார். மனித உழைப்பின் காரணமாக ஏற்படும் அறிவியல் வளர்ச்சியின் விளைவாக, ”இழிவான வேலை என்பது வருங்காலத்தில் இருக்க முடியாது” என்று கணித்தார் பெரியார்.
“சரீரத்தில் செய்யப்பட வேண்டிய எல்லாக் காரியங்களும் இயந்திரங்களாலேயே செய்யும்படியாக ஏற்பட்டு விடும். கக்கூசு எடுக்க வேண்டியதும், துலக்க வேண்டியதும், வீதி கூட்ட வேண்டியதும் கூட இயந்திரத்தினாலேயே செய்து முடிந்து விடும். மனிதன் பாரம் எடுக்க வேண்டியதோ, ஆள் இழுக்க வேண்டியதோ ஆன காரியங்கள் இருக்கவேயிருக்காது” என்று அறிவியல் வளர்ச்சியினால் இழிவு வேலை இருக்காது என்று கணித்த பெரியார், இழிவை நீக்க இயக்கமும் கண்டார். மற்றொரு மனிதனுக்கு ஏற்படும் இழிவைத் தன் மீது சுமத்தப் பட்ட இழிவாக கருதினார். அதுமட்டுமின்றி, உலகில் ஏற்படும் பகுத்தறிவினால் மாற்றங்களால், மனிதர்களுக்கிடையே கூட்டு வாழ்க்கையும், ஒற்றுமை உணர்ச்சியும் ஏற்படும் என்றார் பெரியார்.
பெரியாரின் சொற்களில் அதைப் படியுங்கள்.
“ஒரு மனிதன் தன் காலுக்கோ, காதுக்கோ, நாசிக்கோ, நயனத்துக்கோ, வயிற்றுகோ, எலும்புக்கோ வலி இருந்தாலும், அவன் ‘எனக்கு வலிக்கிறது’ என்று சொல்வதைப் போல, உலகில் வேறு எந்த தனிப்பட்ட மனிதனுக்கும் சங்கடத்தையும், குறைபாடுகளையும், ஒவ்வொருவரும் (சமூகமே) தங்களுக்கு ஏற்பட்டது போல நினைக்கும் படியும், அனுபவிப்பது போல் துடிதுடிக்கும் படியும் அவ்வளவு கூட்டு வாழ்க்கையும், ஒற்றுமை உணர்ச்சியும் ஏற்படும்.“
சுருக்கமாகச் சொன்னால், உலகத்தில் உள்ள அனைத்து தனிமனிதர்களின் இழிவை நீக்கவும், மனிதர்களிடையே கூட்டு உழைப்பையும் ஒற்றுமை உணர்ச்சியையும் வளர்க்கவும் அறிவியலைப் பயன்படுத்த வேண்டும் என பெரியார் விரும்பினார்.
வாடகைத்தாய் முறை அறிவியல் வளர்ச்சியின் விளைவே எனினும், வாடகைத்தாய் முறை எந்த ஒரு தனி மனிதரின் இழிவை நீக்காது. மாறாக, வாடகைத் தாயாக பயன்படுத்தப்படும் பெண்ணின் மீது சுமத்தப்படும் இழிவை அதிகப் படுத்தும்.
மக்களுக்கு பயன் தரும் நவீன அறிவியலுக்கும், பெருமுதலாளித்துவ நிறுவனங்களின் வணிக நலனுக்கு பயன்படுத்தப் படும் அறிவியலுக்கும் தெளிவான வேறுபாடு உண்டு. இரண்டும் ஒன்றல்ல. அதைப் புரிந்து கொள்வதும் கடினமும் அல்ல. ஹிரோஷிமா – நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுக்கும் எக்ஸ்ரேவுக்கும் உள்ள வேறுபாடு தான், ஆதிக்கத்திற்கு பயன்படும் அறிவியலுக்கும் மக்களுக்கு பயன்படும் அறிவியலுக்கும் உள்ள வேறுபாடு.
அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மருத்துவ அறிவியல் வளரும் எனில், அதை பெரியார் உச்சி முகர்ந்து வரவேற்பார். அதே வேளையில் அந்த கண்டுபிடிப்பு ஒருவரைச் சுரண்டி, மற்றொருவரை கொழுக்க வைக்கப் பயன்படுமெனில் அதை எதிர்க்கும் முதல் நபராக பெரியார் இருப்பார். குழந்தை பெறும் அனுபவம் பணக்காரப் பெண்ணுக்கு கொடுங்கனவு எனில், ஏழைப் பெண்ணுக்கு அதை விட கூடுதல் கொடுமையை தரும். வாடகைத் தாய் முறை ஏழைப் பெண்களை பணத்திற்கு பிள்ளை பெற்றுத் தரும் மெசினாக மாற்றுகிறது.
குழந்தை வேண்டும், ஆனால் குழந்தை பெறும் கொடுமையான அனுபவம் வேண்டாம் என விரும்பும் பணக்காரப் பெண்கள், குழந்தை பெறும் கொடுமையான அனுபவத்தை ஏழைப் பெண்களின் மீது சுமத்தும் சுரண்டல் வடிவமே வாடகைத் தாய் முறை.
மாறாக அனைத்து வகைப் பெண்களின் குழந்தை பெறும் அனுபவத்தை எளிமையாக, துன்பம் இல்லாததாக மாற்றும் அறிவியல் வளர்ச்சியே பெரியார் விரும்பிய மாற்றத்திற்கான வளர்ச்சி. பணக்காரப் பெண்ணின் குழந்தையை ஏழைப் பெண்ணின் வயிற்றுக்கு மாற்றும் அறிவியல் வளர்ச்சி பெரியார் விரும்பிய மாற்றத்திற்காக வளர்ச்சி அல்ல.
கணவனும் மனைவியும் இணைந்து உருவாகும் கருவினால், பெண் அடிமையாக்கப்படுவாளெனில், அந்தக் குழந்தையே வேண்டாம். இன்னும் ஒரு படி மேலே போய், அப்படி உன்னை அடிமையாக்கும் கர்ப்ப பையை அறுத்தெறிந்து விடு என பெண்களை நோக்கிப் பேசியவர் பெரியார். குழந்தைப் பிறப்பு, திருமணம் என தனி நபர் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வாக இருந்தாலும், அந்த நிகழ்வில் சம்பந்தப் பட்ட நபர்(கள்) மனம் உவந்து மகிழ்வோடு செய்ய வேண்டும் அன்றி, வேறு எவ்வித (சாதி, மதம், பணம், கவுரவம், குடும்பம்) கட்டாயத்திற்கு உட்பட்டும் இருக்கக் கூடாது. அதே வேளையில், சமூக முன்னேற்றத்தை தடை செய்யும் வகையிலும் இருக்கக் கூடாது. பகுத்தறிவுக்கு முரணாகவும் இருக்க கூடாது. இன்னொருவரை சுரண்டும் தன்மையிலும் இருக்கக் கூடாது. ஆனால் வாடகைத் தாய் முறை மேற்சொன்ன பெரியாரின் பார்வைக்கு உகந்ததாக இல்லை. எனவே நவீன அறிவியலின் கண்டுபிடிப்பாக இருந்தாலும் வாடகைத் தாய் முறையை ஆதரிப்பது பெரியாரியர்களுக்கு அறிவுடைமை ஆகாது.
- சு.விஜயபாஸ்கர்