கார்த்திகேசு சிவத்தம்பி என்றழைக்கப்படும் ஈழத்துத் தமிழறிஞர் கா.சிவத்தம்பி இருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஆளுமைகளில் தனித்த அடையாளத் திற்குரியவர். உலகு தழுவிய கல்விப் புலத்தில் தீர்க்கமான சிந்தனையோடும் ஆழ்ந்த புலமையோடும் தமது வாழ்நாள் முழுவதும் செயலாற்றிக் கொண்டே இருந்த பெருமைக்குரியவர் அவர். தமிழின் தொல் இலக்கியங்கள் தொடங்கி நவீன இலக்கியம் வரையிலான அனைத்தையும் ஆழமாக ஊடுருவிப் பார்க்கும் நுண்ணோக்கை அவர் கொண்டிருந்தார். சமூகம், பண்பாடு, வரலாறு, இலக்கியம், கலைகள், அரசியல் முதலான அனைத்துத் துறைகளிலும் அவர் பணியாற்றினார். இலக்கியத்தையும் பண்பாட்டையும் சமூக வரலாறு மற்றும் சமூக அரசியல் பின்னணியில் இணைத்துப் பார்க்கும் புதிய மரபை அவர் தமிழுக்கு வழங்கினார். கடந்த காலங்களில் தமிழுக்குத் தொண்டாற்றிய அனைத்துத் தமிழறிஞர்களிலும் சிந்தனை, செயல் இரண்டாலும் உயர்ந்துநின்ற பெருமை அவருக்குண்டு.

ka sivathambiகல்விப் புலம் சார்ந்த தமிழியல் ஆய்வின் முன்னோடியாக மட்டுமல்லாது தமிழ், தமிழர், தமிழ்நிலம் சார்ந்த ஆய்வுகளை முற்றிலும் தமிழியல் ஆய்வாக முன்னெடுத்துச் செல்லும் முறையியலுக்கு சிவத்தம்பி அவர்களே வழிகாட்டியாக இருந்தார். அவரது ஆய்வு முறையியலுக்கு அடிப்படையாக அமைந்தது அவரது முற்போக்கு நிலைப்பட்ட சிந்தனைத் தெளிவாகும். மார்க்சியம் என்ற சமூக அறிவியல் தத்துவத்தின் ஒளியில் இலக்கியத்தையும் சமூகத்தையும் இணைத்துப் பார்க்கும் புதிய ஆய்வு அணுகுமுறையை அவர் தமிழ்ச் சூழலில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். தமிழாய்வுலகின் ஒரு புதிய சகாப்தம் அவரிடமிருந்து கிளைத்துப் பல்கிப் பெருகியுள்ளது. தமிழரின் சமூகவியல், பொருளியல், அரசியல், மானுடவியல், கலையியல், மெய்யியல், இலக்கியவியல், வரலாற்றியல் முதலான பல்வேறு ஆய்வறிவுத் துறைகளின் சங்கமமாக சிவத்தம்பி அவர்களின் ஆய்வுச் செயற்பாடுகள் அமைந்து சிறக்கின்றன.

ஒரு கல்வியாளர் என்ற நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்து கலைப்புலத்தில் ஒரு நாடகவியல் வல்லுநராகவும் இலக்கிய ஆய்வுத் தளத்தில் ஒரு கோட்பாட்டாளராகவும் புலமைத் தளத்தில் ஓர் அறிவாசானாகவும் சமூகத் தளத்தில் ஒரு களப்பணி யாளராகவும் விளங்கிய பெருமை சிவத்தம்பி அவர்களுக்கு உண்டு.

வாழ்க்கைக் குறிப்புகள்:

கா.சிவத்தம்பி அவர்கள் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கரவெட்டி என்னும் ஊரில் 1932ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் நாள் பிறந்தார். அவர் தந்தையார் தம்பர் பொன்னுசாமி கார்த்திகேசு ஆவார். தாயார் கரணவாய் என்ற சிற்றுரைச் சேர்ந்த வள்ளியம்மை. உடன் பிறப்புகள் ஒரு தமக்கை, பெயர் பராசக்தி நான்கு தங்கைகள் பரமேசுவரி, யோகேசுவரி, இராஜேசுவரி, புவனேசுவரி, ஒரு தம்பி என எழுவர்.

இவர் துணைவியார் பெயர் விமலா என்ற ரூபவதி. இவர் வல்வெட்டித் துறையைச் சேர்ந்த எஸ்.வி. நடராசா –மகாலட்சுமி இணையர் மகளாவார். கா.சிவத்தம்பி அவர்களின் பணிகள் செப்பமுடன் நடைபெறுவதற்குக் காரணமாய் அமைந்தவர் அவர் துணைவியார் ரூபவதி அம்மையார் அவர்களே. பேராசிரியரின் இடையறாத ஆய்வு மற்றும் எழுத்துப் பணிகளுக்கு ஒல்லும் வகையிலெல்லாம் இவர் உறுதுணையாய் இருந்துள்ளார்.. பேராசிரியரின் நாடக முயற்சிகள், கல்விப் பணி, எழுத்துப் பணி, ஆய்வுப் பணிகள் இவற்றுக்குத் துணைநின்றதோடு குடும்பப் பொறுப்புகளையும் ஏற்று திறம்படச் செயலாற்றிய பெருமை அவருக்குண்டு. சிவத்தம்பி -ரூபவதி இணையருக்குப் பிறந்த குழந்தைகள் மூவர். சி.கிருத்திகா, சி.தாரிணி, சி.வர்த்தினி மூவருமே பெண் பிள்ளைகள். இவர்களில் மூத்த பெண் சி.கிருத்திகா கணினி மென்பொறி யாளராகவும், சி.தாரிணி வழக்கறிஞராகவும், இளையபெண் சி.வர்த்தினி பல்கலைக் கழகப் பட்டதாரியாகவும் பின்னாளில் உயர்ந்தனர்.

சிவத்தம்பி ஐயா தமது நேர்காணல்களில் அவருடைய பெற்றோர் மற்றும் இளம் பருவச்சூழல் குறித்துப் பின்வரும் செய்திகளைப் பதிவு செய்துள்ளார்.

தந்தையார் கார்த்திகேசு ஐயா யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கப் பண்டிதர், சைவ சித்தாந்தக் கழகத்தின் சைவப் புலவர், பயிற்சி பெற்ற ஆசிரியர். அவர் தலைமை ஆசிரியராய்ப் பணியாற்றிய இரண்டு பள்ளிகள் அத்துழுகம முசுலீம் பாடசாலையும் அக்குருணை முசுலீம் பாடசாலையுமாகும். வன்னி ஓதியமலைப் பாடசாலையையும் அவர் வளர்த்தெடுத்துள்ளார். கார்த்திகேசு ஐயா இலக்கணப் புலமை மிக்கவர், யாப்பிலக்கணத்தில் மிகுந்த தேர்ச்சி உடையவர், ஈழகேசரி, தினகரன், இலங்கை வித்யாபோதினி, ஆனந்தபோதினி, சித்தாந்தம் முதலான இதழ்களில் அவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன. முருக பக்தர், வெருகல், செல்வச் சந்நிதி பற்றிப் பாடல்கள் இயற்றியுள்ளார். நிறைந்த அறிவுப் பணிவு உடையவர்.

தாயார் வள்ளியம்மை தந்தைக்கு நேரெதிரானர். படிப்பறிவு இல்லை. நெஞ்சின் ஆழத்திலிருந்து அவர்குரல் வெளிப்படும். மிகுதியாக கௌரவம் பார்க்கக் கூடியவர். எல்லோருக்கும் நிறைய அள்ளிக் கொடுப்பவர். பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் பெருமையில் மகிழ்ச்சி அடைந்தவர். சுருங்கச் சொன்னால் முற்று முழுதான அக்காலத்து கிராமப் பெண். அம்மாவின் குணங்கள் நிறைய என்னிடம் இருக்கிறது. எதற்கும் பதட்டப்படுவது, சத்தம் போடுவது, பிறகு சந்தோஷப்படுவது இவையெல்லாம் அம்மாவிடம் இருந்துதான் எனக்கு வந்ததென்று நினைக்கிறேன். இந்தப் பின்புலம்தான் என்னை நான் பிறந்த மண்ணோடு உணர்வு பூர்வமாக ஐக்கியப்பட வைத்தது. அதேவேளையில் அதைப் புலமைப் பூர்வமாகப் பார்ப்பதற்கு வேண்டிய நோக்கையும் தந்தது. நான் ஒரு பள்ளி ஆசிரியரின் மகனாக இருந்தபடியால் வாசிப்பதற்குப் பல நூல்கள் எனக்கு எளிதில் கிடைத்தன. எந்த நேரமும் என்னைச் சூழ்வர நூல்கள் இருந்தன. திரும்பிப் பார்க்கையில் அதுவே எனக்கு முக்கியமாகப் படுகிறது. 1930களின் பின் பகுதியிலும் 1940களின் முன் பகுதியிலும் இந்தளவு ஒரு சூழல் பெரும்பான்மை யோருக்குக் கிடைக்கவில்லை. பின்னாளில் ஏற்பட்ட என்னுடைய வளர்ச்சிக்கு இவை யெல்லாம் காரணமாயின

தம்முடைய ஆளுமையை வடிவமைப்பதில் தமது பெற்றோர்களின் பங்கு எந்தவகையில் அமைந்திருந்தது என்பதனை அவர் பல நேர்காணல்களில் பதிவு செய்துள்ளார்.

ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமது கல்விப்பணி, ஆய்வுப்பணிகளிலேயே முழுக்கவனம் செலுத்தி இலங்கைப் பல்கலைக் கழகங்கள் பலவற்றிலும் பணியாற்றியதோடு உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்கள் பலவற்றிலும் சிறப்பு நிலை வருகைதரு பேராசிரியராகத் தமது முதுமைக்காலம் வரையிலும் பணியாற்றியவர் சிவத்தம்பி அவர்கள்.

1980க்குப் பிறகு இலங்கையின் சிங்களப் பேரினவாதத்தால் ஈழத்தில் இன ஒடுக்குமுறை தலைவிரித்தாடிய காலகட்டத்தில் தாய்நாட்டை விட்டு விலகிச் செல்லாமலும் பொதுச்சமூகத்திலிருந்து ஒதுங்கித் தானுண்டு தன் வாழ்க்கையுண்டு என்று இருந்துவிடாமலும் தமது குடும்பத்துடன் ஈழத்திலிருந்து இடம்பெயர்ந்து வெளியேறாமலும் மக்கள் நெருக்கடிகளுக்கு உள்ளாகித் துன்பப்படும் வேளையில் துன்பங்களுக்கு மத்தியில் நின்று சமூகப் பொறுப்புள்ள மனிதராகக் கடமையாற்றிய பெருமை சிவத்தம்பி ஐயாவுக்கு உண்டு.

ஈழத்தின் நெருக்கடிக் காலங்களில் அவர் ஆற்றிய அரும்பணிகள்

இலங்கை வடக்கு, கிழக்குப் பிரதேசத்தின் பிரஜைகள் கண்காணிப்புக் குழு ஒன்றியத்தின் தலைவராக 1984-86 காலகட்டத்தில் அவர் பணியாற்றினார். ஈழத்தில் போர் உக்கிரமடைந்திருந்த காலகட்டத்திலும், வட கிழக்குப் பிரதேசம் இந்திய இராணுவத்தின் (இந்திய அமைதிப்படை) ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த சூழ்நிலையிலும் நிர்க்கதியாக இருந்த மக்களின் குறைகளை, கோரிக்கைகளை கேட்டறிந்து இராணுவத் தளபதிகளிடம் எடுத்துக்கூறி அரச நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்து மக்களின் துயர்துடைப்பதில் அவர் பெரும்பங்காற்றினார். 1986 -1998 காலப்பகுதியில் ஈழமக்களின் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவராகவும் அவர் கடமையாற்றினார்.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தமது 79 வது வயதில் 2011 சூலை மாதம் 6ஆம் நாளில் முதுமை காரணமாக தெகிவளையில் உள்ள அவர் மகளின் இல்லத்தில் இயற்கை எய்தினார்.

கல்வி மற்றும் பணிகள்:

சிவத்தம்பி ஐயாவின் ஆரம்பக் கல்வி பாணந்துறையில் தொடங்கிக் கரவெட்டி மாணிக்க வித்யாலயாவில் தொடந்தது. பின்னர் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் அவர் உயர்நிலைக் கல்வியைக் கற்றார். அக்கல்வி ஆங்கிலவழிக் கல்வியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து பல்கலைக் கழகப் புகுமுக வகுப்புக் கல்வியை அவர் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் பயின்றார். கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரி மற்றும் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் தமது பள்ளிக் கல்வியை நிறைவுசெய்த மாணவர் சிவத்தம்பி தமது இளநிலைப் (1956) பட்டப் படிப்பினை இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பயின்றார். சிவத்தம்பி அவர்கள் படித்த இளநிலைப் பட்டப் படிப்பு, தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்கும் பட்டமாக அமையாமல் வரலாறு, பொருளியல், தமிழ் ஆகிய மூன்று பாடங்களைக் கொண்ட ஒரு பொதுப் பட்டமாக இருந்தது. பேராசிரியரின் இந்த அடிப்படைப் பொது இளங்கலைப் பட்டமே பின்னாளில் அவர் ஒரு தமிழியல் ஆய்வாளராக முகிழ்ப்பதற்கு அடித்தளமிட்டது எனலாம்.

தமது இளங்கலைக் கல்விக்குப் பின்னர் சுமார் நான்கு ஆண்டுகள் அவர் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். சாஹிராக் கல்லூரி ஆசிரியப் பணியின் பொழுதே இலங்கைப் பாராளுமன்றத்தில் ஒரு சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பதவி வகித்தார். சாஹிராக் கல்லூரி ஆசிரியப் பணியில் அவர் சிறப்பாகப் பணியாற்றிப் பலரின் நன்மதிப்பைப் பெற்றார். மேலும் ஐந்தாண்டுக் காலப் பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளர் பணி சிவத்தம்பி ஐயாவின் பன்மொழி அறிவின் புலமைத்துவத்துக்கும் கலைச் சொல்லாக்க முயற்சிகளுக்கும் உறுதுணையாக அமைந்தது.

பின்னர் 1961இல் மீண்டும் இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மாணவராகச் சேர்ந்து தமிழில் முதுகலைப் (1963) பட்டத்தைப் பெற்றார். பல்கலைக் கழக ஆசிரியராக அவரது பணி 1965இல் வித்தியோதயப் பல்கலைக் கழகத்தில் (தற்போது சிறீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக் கழகம்) விரிவுரையாளராக இணைந்த பொழுது தொடங்கியது. இங்குப் பதின்மூன்று ஆண்டுகள் அவர் பணிபுரிந்தார். சிவத்தம்பியின் வித்தியோதயப் பல்கலைக் கழகப் பணி சிங்கள மாணவர்களுக்குத் தமிழ் கற்பிப்பது. இங்குப் பணியாற்றிய காலத்தில்தான் அவர் விடுப்பில் இங்கிலாந்து சென்று பர்கிங்காம் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டார். சிவத்தம்பியின் முனைவர்ப் பட்ட ஆய்வின் நெறியாளர் பேராசிரியர் ஜார்ஜ் தாம்சன். தலைப்பு: பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம் என்பதாகும். 1970ஆம் ஆண்டு அவர் முனைவர்ப் பட்டம் பெற்றார். முனைவர்ப் பட்ட ஆய்வுக்குப்பின் மீண்டும் வித்தியோதயப் பல்கலைக் கழகப் பணியினைத் தொடர்ந்த சிவத்தம்பி அவர்கள் 1976இல் இணைப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். தம்முடைய படிப்பு, ஆசிரியப் பணிக் காலங்களில் யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கியிருந்த சிவத்தம்பி 1978இல் வித்யோதயப் பல்கலைக் கழகத்திலிருந்து விலகி, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். 1978 முதல் 1996 வரை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் நுண்கலைத்துறைத் தலைவராகவும் பெரும்பணி யாற்றிய சிவத்தம்பி அவர்கள் 1996இல் சிரேஷ்டப் பேராசிரியராகப் பணி ஓய்வு பெற்றார். அவரது பணி ஓய்வின்போது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் அவரது தகுதியையும் கல்விப்பணியினையும் கௌரவிக்கும் வகையில் தகைசால் ஓய்வுநிலைப் பேராசிரியராக (Professor of Emeritus) அவரை நியமித்தது. பணிஓய்வுக்குப் பின்னரும் மட்டக்களப்பில் உள்ள கிழக்கு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் அவர் இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இலங்கைப் பல்கலைக் கழகங்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம், சுவீடனில் உள்ள உப்சலா மற்றும் பெர்க்லி, விஸ்கான்சியன், ஹார்வார்ட், கலிபோர்னியா ஆகிய பல்கலைக் கழகங்களிலும் சிவத்தம்பி வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார். மேலும் உலகப் புகழ்பெற்ற இங்கிலாந்து கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மையம், புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வரலாற்றுக் கல்வி மையம், சென்னை அனைத்துலகத் தமிழராய்ச்சி நிறுவனம் ஆகிய நிறுவனங்களிலும் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளர்.

பேராசிரியரின் எழுத்துப்பணி:

பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ஆசிரியப் பணியில் கடமையாற்றி வந்த காலங்களிலும் ஓய்வுபெற்ற பின்னரும் தொடர்ந்து கல்விப் புலத்திலேயே செயலாற்றிக் கொண்டிருந்தார். பேராசிரியர் அவர்கள் சமூகவியல், வரலாறு, அரசியல், இலக்கியம் முதலான பல்துறை அறிவினை ஒருங்கிணைத்து தமிழ் ஆய்வினைத் தமிழியல் ஆய்வாகப் புதுப்பித்துக் காட்டினார். அவர் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு தமிழியலாய்வுப் பரப்பினை விரிவு படுத்தியுள்ளார். மேலும் பேராசிரியர் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் நூற்றுக் கணக்கில் உள்ளன.

பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதித் தமிழுலகுக்கு வழங்கியுள்ள நூல்கள்:

தமிழ் நூல்கள்

 1. பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம், இலக்கியமும் கருத்து நிலையும்
 2. பண்டைத் தமிழ்ச் சமூகம் -வரலாற்றுப் புரிதலை நோக்கி
 3. தனித்தமிழ் இயக்கத்தின் அரசியற் பின்னணி
 4. யாழ்ப்பாணம் -சமூகம், பண்பாடு, கருத்துநிலை
 5. தமிழிலக்கியத்தில் மதமும் மானுடமும்
 6. ஈழத்தில் தமிழ் இலக்கியம்
 7. அரங்கு ஓர் அறிமுகம்
 8. தமிழ்ப் பண்பாட்டில் சினிமா, தமிழ்ச் சமூகமும் பண்பாட்டில் மீள் கண்டுபிடிப்பும்
 9. இலக்கியமும் வாழ்க்கையும், இலக்கணமும் சமூக உறவுகளும்
 10. நாவலும் வாழ்க்கையும்
 11. தமிழில் இலக்கிய வரலாறு (1986 – ஆங்கிலம்)
 12. கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள்
 13. இலங்கைத் தமிழர் -யார்? எவர்?
 14. யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு
 15. மதமும் கவிதையும்
 16. தமிழ் கற்பித்தலில் உன்னதம்- ஆசிரியர் பங்கு
 17. யாழ்ப்பாண சமூகத்தை விளங்கிக் கொள்ளல்
 18. சுவாமி விபுலானந்தரின் சிந்தனை நெறிகள்
 19. திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு
 20. தமிழ் கற்பித்தல்
 21. தமிழ் நூற்பதிப்புப் பணியில் உ.வே.சா. (பாட விமர்சனவியல் நோக்கு)
 22. தமிழின் கவிதையியல்
 23. தொல்காப்பியமும் கவிதையும்
 24. உலகத் தமிழிலக்கிய வரலாறு (கி.பி.1815-கி.பி. 2000)
 25. சசியாக் கதை
 26. தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
 27. இலக்கியத்தில் முற்போக்குவாதம்
 28. இலங்கைத் தமிழ் நாட்டார் வழக்கியல்
 29. தற்கால இலக்கியத்தில் வறுமையும் சாதியமும்
 30. பாரதி –மறைவு முதல் மகாகவி வரை (பேராசிரியர் அ. மார்க்சுடன் இணைந்து எழுதியது)
 31. பண்பாட்டு உருவாக்கத்தில் பத்திரிகைகளின் பங்கு
 32. யாழ்ப்பாணத்தில் தொடர்பும் பண்பாடும்
 33. தமிழ்ப் பண்பாட்டில் கிறிஸ்தவம்
 34. கற்கை நெறியாக அரங்கு
 35. விமரிசனச் சிந்தனைகள்
 36. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தடம்
 37. பார்வைகளும் விமரிசனங்களும்
 38. நவீனத்துவம் தமிழ் பின் நவீனத்துவம்
 39. பண்டைத் தமிழ்ச் சமூகம் புரிதலை நோக்கி
 40. ஈழத்தின் தமிழிலக்கியச் சுடர்கள்
 41. ஈழத்துத் தமிழ் நாடக அரங்கப் பாரம்பரியம்

ஆங்கில நூல்கள்

 1. Drama in Ancient Tamil Society -1981
 2. Sri Lankan Tamil Society and Its Politics
 3. Studies in Ancient Tamil Society Literary history of the Tamils
 4. Literary Criticism
 5. Social History of the Tamil
 6. Culture and Communication among Tamils Tamil Drama

பேராசிரியர் கா.சிவத்தம்பியின் ஆய்வுத் தளம் விரிவானது. ஆழமானது. இது பல்துறை ஆராய்ச்சி அணுகு முறைகளைக் கொண்டது. அவர் கைகொண்ட மார்க்சிய அணுகுமுறை இத்தகைய ஆய்வுக்கான களத்தை விரிவாக்கம் செய்தது. தமிழியல் ஆய்வு என்பதற்கான விளக்கத்தை விரிவாக்கி ஆய்வுகள் தமிழ்மொழியின் தமிழ் இனத்தின் தமிழ்ப் பண்பாட்டின் அனைத்துப் படிநிலை களையும் ஊடறுத்துச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் அவர். மரபுவழித் தமிழில் ஆழ்ந்த புலமை, நவீன கல்வி சார் ஆய்வு வழிமுறைகளில் இறுக்கமான பயிற்சி, மார்க்சிய அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டமை என்கிற இம்மூன்று கூறுகளும் ஒரு சேரப் பெற்றவராக பேராசிரியர் கா.சிவத்தம்பி விளங்கினார். மேலும், பழந்தமிழ் இலக்கண, இலக்கியங்கள் என்பவற்றோடு நில்லாமல், அவரது ஆய்வுப் பரப்பு சமூகவியல், கவிதையியல், நாடகம், பண்பாட்டு மானுடவியல், திரைப்படம், நவீன இலக்கியங்கள், சமகால அரசியல் எனப் பரந்து விரிந்திருந்தது.

தமிழக அரசின் உயர்ந்த விருதான திரு.வி.க. விருது 2000 ஆம் ஆண்டு பேராசிரியர் கா.சிவத்தம்பிக்கு வழங்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் 1998 ஆம் ஆண்டு இலக்கிய கலாநிதிப் பட்டத்தைப் பேராசிரியர் சிவத்தம்பிக்கு வழங்கிச் சிறப்பித்தது. அதே ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாண ஆளுனர் விருதான ஆண்டின் மிகச்சிறந்த மாமனிதர் விருதும் அவருக்கு அளிக்கப்பட்டது. கேம்பிரிஜ் பல்கலைக் கழகம் பேராசிரியர் கா.சிவத்தம்பிக்கு 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த புலமையாளர் விருதினை வழங்கிப் பாராட்டியுள்ளது. மேலும் இலங்கை அரசின் சாகித்திய ரத்னா விருதினையும் பேராசிரியர் பெற்று உள்ளார்.

நாடகக்கலையும் சிவத்தம்பியும்:

பேராசிரியர் கா.சிவத்தம்பி தமது ஆய்வுத் துறைகளை நான்காக வகைப்படுத்தி உரைப்பதுண்டு. 1. தமிழரின் சமூக இலக்கிய வரலாறு 2. தமிழரிடையே பண்பாடும் தொடர்பாடலும் 3. தமிழ்நாடகம் 4. இலக்கிய விமர்சனம். என்பன அவை. தமிழ் ஆய்வுப்புலத்தில் பரவலாகச் சிவத்தம்பி ஐயாவின் இலக்கிய விமர்சனங்கள் அறியப்பட்ட அளவிற்கு அவரின் தமிழ்நாடகம் தொடர்பான ஆய்வுகளும் செயற்பாடுகளும் அறியப்படவில்லை. பேராசிரியர் தமது நேர்காணல் ஒன்றில் பதிவுசெய்துள்ள அவரது நாடகத்துறைச் செயற்பாடுகளின் சுருக்கம் பின்வருமாறு,

முதலாவது நடிகனாக நாடகத்துறையில் எனது ஈடுபாடுகள், 1948-49களில் வானொலி நாடக நடிகனாக நடித்தது. பின்னர் இலங்கையர் கோன் எழுதிய விதானையார் வீட்டில் நாடகத்தில் விதானையாராக மேடை நாடகத்தில் நடித்தது. தொடர்ந்து பல மேடைநாடகங்களில் நடித்தது. இரண்டாவது நாடக நெறியாளனாக, நான் நெறிப்படுத்திய நாடகங்கள். குறிப்பாக, அ.ந.கந்தசாமி எழுதிய மதமாற்றம் நாடகத்தை நெறிபடுத்தியமை. தொடர்ந்து கொழும்புப் பல்கலைக் கழகத்தில் பல நாடகங்களை நெறிபடுத்தியமை. மூன்றாவது, பேராசிரியர் வித்தியானந்தன் கலைக்கழகத் தமிழ்நாடகக் குழுவின் செயலராகவும் தலைவராகவும் பணியாற்றியமை. நான்காவது, பேராசிரியர் வித்யானந்தன் கலைக் கழக நடவடிக்கைகளின் ஊடாக நாட்டுக் கூத்தினை செவ்வை நாடக வடிவமாக ஆக்கியளித்த செயற்பாடுகளுக்குத் துணை நின்றமை. ஐந்தாவது, பல்கலைக் கழக அளவில் நாடகத்தை ஒரு கற்கைநெறியாகப் படிப்பித்ததும், பாடத்திட்டங்களை உருவாக்கியதும் மேலும் நாடகத்தை ஓர் அரங்கக் கலையாக வளர்த்தெடுத்து ஆய்வுக்குட் படுத்திய செயற்பாடுகளும் ஆகும்.

கா.சிவத்தம்பி நாடகத்துறையில் நடிகராகவும் நெறியாளராகவும் நாடகத் தயாரிப்பாளராகவும் ஒளியமைப்பாளராகவும் பனுவலாக்கத்திற்கு உறுதுணை புரிந்தவராகவும் செயற்பட்ட அரங்க ஆளுமையாளராவார். சிவத்தம்பியின் நாடக நடிப்பு பெரிதும் நகைச்சுவை கலந்ததாகவே இருக்கும். நகைச்சுவையுடன் குரலையும், உடலையும், முகபாவத்தையும் இணைத்து நடித்து அதனூடாகப் பார்வையாளர்களைக் கவரும் ஆற்றல் அவரின் தனிப்பட்ட சிறப்பாகும்.

ஜார்ஜ் தாம்சனின் நெறியாள்கையின் கீழ் பர்கிங்காம் பல்கலைக் கழகத்தில் இவர் நிகழ்த்திய முனைவர் பட்ட ஆய்வு பண்டையத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம் என்ற தலைப்பிலானது. இவ் ஆய்வேட்டில் பேராசிரியர் தமிழ் நாடகத்தின் செந்நெறி மரபுகளைப் புராதன கிரேக்கச் செந்நெறி நாடக மரபின் அடிப்படைகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார். இந்த ஆய்வில் தமிழ் நாடகம் தமிழ் மக்களின் வரலாற்று இயங்கியல் பின்புலத்தில் வைத்து நிறுவப்படுகிறது. ஆய்வின் தரவுகளாகத் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்களோடு கல்வெட்டுகள், நாணயங்கள் முதலான தொல்லியல் சான்றுகளும் இணைக்கப் பட்டுள்ளன. பேராசிரியரின் தமிழ்நாடகம் தொடர்பான இந்த ஆய்வேடு நூலாக வெளிவந்தபோது 1980ஆம் ஆண்டின் மிகச்சிறந்த நூலுக்கான தமிழக அரசின் பரிசினைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கைலாசபதியும் சிவத்தம்பியும்:

இருபதாம் நூற்றாண்டின் மார்க்சியத் திறனாய்வாளர்களில் இரண்டு ஆய்வாளர்களை இரட்டையர்களாக இணைத்துக் கூறும் பழக்கமுண்டு. அந்த இருவர் பேராசிரியர் கைலாசபதியும் பேராசிரியர் சிவத்தம்பியும் ஆவர். இருவருமே இலங்கையைச் சேர்ந்தவர்கள். சமகாலத்தவர்கள், நெருங்கிய நண்பர்கள். சிவத்தம்பி அவர்கள் தமது நேர்காணல்கள் பலவற்றிலும் பேராசிரியர் கைலாசபதி உடனான தோழமை குறித்து நிறைய பேசியுள்ளார். அவற்றுள் சில பதிவுகள் பின்வருமாறு,

மார்க்சியம் எனக்குப் புதிய பாதைகளைத் திறந்து காட்டிற்று. அந்த நேரத்திலிருந்தே எனக்குத் தமிழில் தெரிந்த, பார்த்த, கேட்ட எந்த விசயத்தையும் மார்க்சியத்தில் படித்த சமூக வரலாற்றுடன், சமூக சக்திகளுடன் தொடர்புபடுத்திப் பார்த்தேன். பல்கலைக் கழகத்தில் எனக்கு ஒரு நண்பர் கிடைத்தார். அவர்தாம் பேராசிரியர் கைலாசபதி. அது முக்கியமானது. அவரும் நானும் பல்கலைக் கழகத்திலும் வேளியிலும் நெருக்கமானவர்களாக இருந்தோம். நன்றாக மனம்விட்டு நெருங்கிப் பழகியவர்கள் நாங்கள். அதனால் எங்கள் இருவரது பார்வைகள் விசாலித்தன. ஆரம்பத்திலிருந்தே நாடகத்தில் எனக்கு ஆர்வம் இருந்தமையாலும் அதில் நான் ஈடுபட்டிருந்ததாலும் தமிழ் நாடக வரலாற்றில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது. அதிஷ்டவசமாக நானும் கைலாசபதியும் இந்தக் காலத்தில் அதிகமாக இணைந்தே இருந்தோம்.

நாங்கள் இருவரும் சந்தித்தது 1952இல் என்று நினைக்கிறேன். அவரும் நானும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமகாலத்தில் கல்வி கற்றோம். தமிழில் வீரயுகக் கவிதைகளைப் பற்றி பேராசிரியர் ஜார்ஜ் தாம்சன் வழிகாட்டுதலில் ஆராய்ச்சி மேற்கொள்ள அவர் பர்கிங்காம் பல்கலைக் கழகத்திற்குச் சென்றார். 1957இல் கைலாசபதி ஆய்வை முடித்துவிட்டு வந்த பின்னர் நான் அதே பல்கலைக் கழகத்தில் அதே பேராசிரியரிடம் ஆய்வு செய்யச் சென்றேன்.

இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருப்பினும் புலமையைப் பொறுத்தவரையில் கைலாசபதி பெருமளவில் இலக்கியம் சார்ந்தவர். நான் சமூகம் சார்ந்தவன். கைலாசபதி ஒப்பியல் இலக்கியப் பகுதியில் தமது ஆர்வத்தை வளர்ப்பதற்கு முயன்றார். கால ஓட்டத்துடன் அவரின் விசேடக் கற்கைநெறி ஒப்பியல் இலக்கியமாயிற்று. ஆனால் இருவருமே இலக்கியத்தின் சமூக விமர்சகர்களாகவே ஆரம்பித்தோம். அது எங்களுக்குப் பெயரைத் தந்தது. நான் முன்பே சொன்னது போல எங்கள் இருவருக்கும் இடையில் பரஸ்பர உறவு இருந்தது. அத்துடன் விட்டுக் கொடுப்புகளும் இருந்தன. நாங்கள் அதிகம் வேறுபடவில்லை காரணம் மார்க்சியப் பார்வை எங்கள் இருவரையும் இணைத்தது.

பேராசிரியர்கள் கைலாசபதியும் சிவத்தம்பியும் இலங்கையின் முற்போக்கு எழுத்தாளர் கழகத்தில் இணைந்து தொடர்ந்து இயக்கப் பணிகளை ஆற்றிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இலக்கிய ஆய்வுப் புலத்தில் இரண்டு பேராசிரியர்களுமே மிகச்சிறந்த பங்களிப்பினை நிகழ்த்தியுள்ளனர். குறிப்பாக மாக்சுமுல்லர் உள்ளிட்ட மேற்கத்திய ஆய்வாளர்கள் பலர் சமற்கிருத மொழி இந்தியா முழுவதும் பரவியிருந்த மொழி எனவும் இலக்கண, இலக்கிய வளங்களைப் பிறமொழிக்கு வழங்கிய மொழி எனவும் கருத்துகளைப் பரப்பி மேற்குலகம் முழுமைக்கும் சமற்கிருத முதன்மையைப் பதிவு செய்திருந்த காலத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் கிரேக்க, ரோமானிய இலக்கியங்களுக்கு நிகரான பழைமையை உடையன, சிறப்பினை உடையன என்பதனைத் தக்க சான்றுகளுடன் தமது முனைவர்ப் பட்ட ஆய்வுகளின் வழி நிறுவிக்காட்டிய பெருமை இந்த இருபெரும் பேராசிரியர்களையே சாரும்.

சிவத்தம்பியின் தமிழியல் ஆய்வுகள்:

பேராசிரியர் சிவத்தம்பி தமிழ்ப் புலமைத்துவப் பரப்பில் தம்மை ஒரு சிந்தனை யாளராகவும், சமூக, இலக்கிய வரலாற்று ஆய்வாளராகவும், விமர்சகராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். பண்பாட்டுச்-சமூகவியல், மார்க்ஸிசம், மற்றும் வரலாறு போன்ற துறைகளில் அவருக்கிருந்த ஆழமான ஈடுபாடும் அது சார்ந்த நுண்ணோக்குமே அவரது இலக்கியம் பற்றிய கோட்பாட்டின் அடித்தளமாக அமைந்தன. சமூகவியல், பண்பாட்டியல், அரசியல், தத்துவம், வரலாறு, இலக்கியம் போன்றன ஒன்றுக்கொன்று தாக்கம் ஏற்படுத்துபவை. இவையனைத்தும் ஒருங்கிணைந்துதான் அவரது இலக்கியம் பற்றிய கண்ணோட்டத்தை உருவாக்கின. அவர் எப்போதும் இலக்கியத்தை மிக அடிப்படையான சமூகப் பண்பாட்டு இயக்கமாகவே கருதி வந்தார்.

தமிழ்ப் பேராசிரியர் என்றால் பொதுவாகத் தமிழ் இலக்கியம், இலக்கணம் மற்றும் பண்பாட்டுக் கூறுகள் தொடர்பான புலமை உடையவர் என்ற கருத்தே பொதுவில் வெளிப்படும். ஆனால் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய புலமை மேற்கூறிய கூறுகளை உள்ளடக்கித் தமிழரின் சமூகவியல், பொருளியல், அரசியல், கலையியல், மெய்யியல், வரலாற்றியல் முதலான பல்வேறு ஆய்வறிவுத் துறைகளையும் தழுவி நிற்பதாகும். இவ்வாறு நோக்கும்போது பேராசிரியர் சிவத்தம்பி அவர்களை ஒரு தமிழ்ப் பேராசிரியர் எனச் சுட்டுவதைவிடத் தமிழியற் பேராசிரியர் எனச் சுட்டுவதே அதிக பொருத்தமுடையதாக இருக்கும்..

சிவத்தம்பியின் இலக்கியவியல் ஆய்வுகள் குறித்து ஈழத்துத் தமிழறிஞர் எம்.ஏ. நுஃமான் மதிப்பிட்டுரைக்கும் எழுத்துரையின் ஒரு பகுதி பின்வருமாறு,

பெரும்பாலான தமிழ் ஆய்வாளர்கள் இலக்கிய இலக்கணங்கள் என்ற வட்டத்துக்குள்ளேயே இயங்குவார்கள். சிலர் அரிதாக சமூகவியல், வரலாறு போன்ற துறைகளோடு இலக்கியத்தைப் பொருத்திப் பார்ப்பார்கள். ஆனால் பேராசிரியர் சிவத்தம்பியின் பார்வை தமிழியலின் முழுமையை உள்ளடக்கியது எனலாம். சங்க இலக்கியத்திலிருந்து தற்கால இலக்கியம் வரை, சைவ சித்தாந்தத்திலிருந்து பின் நவீனத்துவம் வரை, நாடகத்திலிருந்து நாட்டாரியல் வரை, திராவிட இயக்கத்திலிருந்து தமிழ் சினிமா வரை, இனத்துவ அரசியலில் இருந்து இன நல்லுறவு வரை அவரது ஆய்வுப் பரப்பு விரிந்து செல்கிறது

சிவத்தம்பியின் ஆய்வுகள் இலக்கிய ஆய்வுகளாக மட்டுமன்றிச் சமூகவியல் ஆய்வுகளாகவும் அமையக் காணலாம். இலக்கியத்தின் ஊடாகச் சமூகத்தை அல்லது சமூகத்தின் ஊடாக இலக்கியத்தை அவர் பார்க்கிறார். சங்க இலக்கியம் கவிதையும் கருத்தும், சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும், பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி, பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம் முதலான பேராசிரியரின் நூல்கள் இவ்வகையில் மிக முக்கியமானவை. சிவத்தம்பியை ஒரு இலக்கிய விமர்சகர் என்பதற்கு அப்பால் கொண்டு செல்பவை சமூகவியல் வரலாற்றுப் பார்வையில் தமிழ்ப் பண்பாட்டை விளக்க முயன்ற ஒரு பண்பாட்டு ஆய்வாளராக, ஒரு இலக்கியப் புலமையாளராக அவரைக் காட்டுபவை.

பண்டைத் தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியப் படைப்புகளை ஆராயும் பேராசிரியர் அவை 450 ஆண்டுக் கால நீட்சியை உடையதாகக் கணிக்கின்றார். தொல்லியல் சான்றுகள் குவியக் குவிய சங்ககாலப் பரப்புப் பற்றிய அவர் கொள்கையும் விரிகின்றது. சங்க இலக்கியத் தொகுதி தனக்குத் தானே பல வளர்ச்சிப் படிநிலைகளைக் கொண்டது என்ற அவரின் கருத்து சிந்தனைக்கு உரியது. வீரயுகக் கட்டம், நிலப்பிரபுத்துவக் கட்டம், வணிகக் கட்டம் என்ற பாகுபாட்டைச் செய்யும் பேராசிரியர் கி.பி. 250 வரை வீரயுகம் என்றும் கி.பி. 250 முதல் கி.பி. 400 வரை நிலப்பிரபுத்துவக் காலம் என்றும் கி.பி. 400 முதல் கி.பி. 600 வரை வணிக யுகம் என்றும் ஒரு புதிய வரையறையை முன்வைக்கின்றார்.

மார்க்சியச் சிந்தனையாளரான சிவத்தம்பி அதனையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன்தான் அணுகி வந்துள்ளார். மார்க்சியம் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதனைப் பேராசிரியர், “மார்க்சியம் காலத்திற்கு ஏற்றபடி வளர்க்கப்பட வேண்டும். மார்க்சியச் சிந்தனையின் பிரயோகம் இல்லாமல் சமூக ஒடுக்கு முறைகளை, சுரண்டல் முறைகளை ஒழிக்க முடியாது. அதனைப் புதிய சூழலுக்கு ஏற்ப, புதிய முறையில் சிந்திக்க வேண்டும். மார்க்சியம் தொடர்ந்து மனித விமோசனத்திற்கான இலக்குகளைக் காட்டுகிற அளவு தத்துவமாக நீடிக்கும்.” என்று கூறுகிறார். தமிழ்ச் சமூகத்தின் தன்மைக்கேற்ப மார்க்சியத் தத்துவங்கள் உருவாக்கப்பட வேண்டும் என அவர் கருதுகிறார். அதனாலேயே ஆன்மீகம் குறித்தும் பண்பாடு குறித்தும் தமிழ்த் தேசியம் குறித்தும் அவரால் ஆழமாகப் பேச முடிந்துள்ளது. எனினும் சிவத்தம்பியின் இந்த நெகிழ்ச்சிப் போக்கே அவருக்கு எதிரான விமர்சனக் கண்டனங்களையும் பெற்றுத் தந்தது என்பதனையும் மறுக்க முடியாது.

நிறைவாக..

பேராசிரியர் கா.சிவத்தம்பியின் ஆய்வுத் தளம் விரிவானது, ஆழமானது, அது பல்துறை ஆராய்ச்சி அணுகுமுறைகளைக் கொண்டது.

அவரின் ஆய்வு அணுகு முறை விஞ்ஞானப் பூர்வமானது. வரலாற்று, பண்பாட்டு துறை அறிவுப் பின்புலத்தை நிறுவுதல், எடுத்துக் கொண்டுள்ள பிரச்சினையை அல்லது கருதுகோளை இந்தப் பின்புலத்தில் பொருத்துதல், தரவுகளின் அணிவகுப்பு, ஆய்வின் ஊடாக வெளிப்படும் முடிவுகளைத் திறந்த மனதுடன் தர நிர்ணயம் செய்தல், மேலும் மீள் ஆய்வுக்கு இலக்காக்கப் பட வேண்டிய கூறுகளை இனங்காணுதல் முதலான வழிமுறைகளை அவர் தவறாது பின்பற்றி வந்தார்.

மரபுவழித் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் ஆழ்ந்த புலமை, நவீன கல்விசார் ஆய்வு வழிமுறைகளில் முறையான நிறைவான பயிற்சி, மார்க்சிய அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டமை இம்மூன்று கூறுகளும் ஒருசேரப் பெற்றவராக பேராசிரியர் சிவத்தம்பி நம்மிடையே வாழ்ந்திருந்தார்.

தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழ் இலக்கிய விமர்சனம் பற்றி உலகில் எங்கெல்லாம் ஆய்வுகள் நிகழ்கின்றனவோ அங்கெல்லாம் பேசும் பொருளாகப் பேராசிரியரின் எழுத்துப் பணிகள் எக்காலத்தும் உடனிருக்கும்.

சிறந்த பண்புகள் பலவற்றை நடைமுறையில் பின்பற்றி ஒழுகும் பண்புள்ளவராகப் பேராசிரியர் சிவத்தம்பி இருந்தார். பேச்சிலும் எழுத்திலும் ஒன்றைச் சொல்லி நடைமுறை வாழ்க்கையில் வேறு வகையாக வாழும் பொய்ம்மை அவரிடத்தில் எப்பொழுதும் இருந்ததில்லை. அவரது ஒவ்வொரு செயலிலும் சக மனிதனை மதித்து கௌரவித்து நடந்து கொள்ளும் உயர் பண்பினை நாம் காணமுடியும்.

- முனைவர் நா.இளங்கோ, தமிழ்ப் பேராசிரியர்

துணைநின்ற நூல்கள்

கா.சிவத்தம்பி, கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி.)லிட், சென்னை-98, 2011

ப.சிவராஜி (பதி.ஆ.), தடம் பதித்த தமிழறிஞர்கள், பரிதி பதிப்பகம், ஜோலார் பேட்டை, 2017

தி.ஞானசேகரன், கார்த்திகேசு சிவத்தம்பி இலக்கியமும் வாழ்க்கையும், தமிழினி பதிப்பகம், இலண்டன், 2005.

பி.தயாளன், தமிழியலின் தலைமைப் பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி (கட்டுரை), கீற்று இணைய இதழ், 2018

கி.பார்த்திபராஜா, பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி என்னும் தமிழ்ப் பேராறு, பரிதி பதிப்பகம், ஜோலார் பேட்டை, 2022.

ரவிக்குமார் (தொ.ஆ.), நூர்ந்தும் அவியா ஒளி, மணற்கேணி பதிப்பகம், சென்னை-5, 2012.

(17-07-2022 அன்று மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் சான்றோர் நினைவு விழா -2022இல் வாசிக்கப்பட்ட கட்டுரை)

Pin It