ஒருவரை கஷ்டப்படுத்தி அதில் சந்தோசம் காணுதல் சாடிஸ்ட் மனோநிலை. அது வெளியே காமெடியாக தோன்றினாலும்... உள்ளே புற்றாக வளரும். எதற்கெடுத்தாலும்... கலாய்த்தல்... எது செய்தாலும்... அதில் ஒரு குறை காணுதல்... என்ன பேசினாலும்... அதை பார்த்து சிரித்தல்... அப்படி இருந்தால்... இப்படி என்பது.... இப்படி இருந்தால் அப்படி என்பது... இது சமூக ஊடக வளர்ச்சியின்பால் கொண்டிருக்கும் ஒரு வகை மோகம். எந்த ஒரு முன்னெடுப்பிலும் இருக்கும் பை ப்ரொடக்ட். பாசிட்டிவ் விஷயங்களை விட நெகட்டிவ் விஷயங்களுக்கு வீச்சு அதிகம். அதனால் தான் அதன் அழுத்தம் ஆழமாய் எல்லாம் பக்கமும் பரவி என்ன சொன்னாலும்.. என்ன செய்தாலும்... பாருங்க என்னெல்லாம் சொல்றான்னு.. கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றானான்னு சொல்லி தானாகவே சிரித்துக் கொள்வதெல்லாம். இன்றைய சமூகம் தன் சீரியஸ்னஸ்- ஐ இழந்து கொண்டு இருக்கிறதோ என்று கூட தோன்றுகிறது. எதிரே இருப்பவன் முட்டாள்தனமாகவே சொல்லட்டுமே. அது அவன் உரிமை. அதற்கு மரியாதை தர வேண்டும் என்ற பண்பு ஏன் மனிதனிடம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

யூ டியூப் எனும் தனி உலகம் அடைத்துக் கிடந்த திறமைக்கெல்லாம் கேட் திறந்து விட்டிருக்கிறது. ஆனாலும் அதே நேரம் அந்த கேட்டில் நுழைந்து கெட்ட ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் பிசாசுகளின் அட்டூழியமும் அதிகம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அதுவும் பல வீடியோவுக்கு அவர்கள் வைக்கும் தலைப்பு வியாபார நோக்கத்திலும் வக்கிரம் வாய் கோணி இருப்பதை நன்றாகவே உணர முடிகிறது. இன்றைய தேதியில்... எந்த வீட்டிலும் இருக்கும் பதின் பருவத்து பிள்ளைகள் ஏன் குழந்தைகள் கையில் கூட அலைபேசி இருக்கிறது. இருக்கும் படியாக இன்றைய வாழ்வு ஆகி விட்டது. அப்படி ஒரு சூழலில் இந்த மாதிரி வீடியோக்கள்.. மீம்ஸ்கள்... ஐ பார்க்கும் அவர்களின் மனம்... நாமும் கலாய்ப்போம் நாமும் ட்ரெண்டிங் ஆவோம் என்று தானே யோசிக்கும். பண்பட்ட நம் வயதுகாரர்களே தலை சுத்தி போகிறோம் சில நேரங்களில். அனுபவம் அற்ற எது தன் தேவை என்றே உணர இயலாத வயதில் இருக்கும் பிள்ளைகளை நினைத்தால்... பகீர் தான் பதில்.

பிரபலம் ஆகாமல் இருப்பது அத்தனை பெரிய குறை ஒன்றும் இல்லை. கேட்டு பிறக்காத... கேட்ட போது மரிக்காத இவ் வாழ்க்கையில்... புகழும் பெருமையும் சிறு துளிகள் என்று யார் அவர்களுக்கு புரிய வைப்பது. பள்ளியில் ஒரு மாணவன் கையில் கத்தியோடு ஆசிரியர்களிடம் மிக மோசமான உடல்மொழியில் பேசுகிறான். போனா ஜெயிலு.. வந்தா பெயிலு என்று எதுகை மோனை வேறு. ஒரு நாள் ட்ரெண்டிங்க்கு தன்முனைப்பு செய்யும் அக்கிரமங்கள்... ஐயோவென போகும் அத்தியாயங்கள். அதுவும் ஒரு டீச்சரை சுற்றி கும்மி ஆட்டம் போட்டு கலாய்த்து அதை வீடியோ எடுத்து போட்டு அதில் தங்களை ஹீரோவாக ஆக்கி கொள்ள முயற்சிப்பதெலாம் ஆப்பை வைத்து அதில் தானாகவே சென்று அமர்ந்து கொள்வது. சமூக சீரழிவு என்பதன் காட்சி படுத்துதல் தான் இப்போது நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கும் வீணா போன வீடியோ கலாச்சார விதிகள்.

நல்ல மீம்ஸ் க்ரியேட்டர்களை பாராட்டுகிறோம். அதே நேரம்.. வெட்டியாக எப்போதும் எவரையாவது ட்ரோல் பண்ணி அசிங்கம் பூசிக் கொண்டே இருக்கும் வக்கிர மனங்களின் கூட்டு வெளிப்பாடு முகமூடியோடு திரிவது ஆபத்து. யார் யாரை வேண்டுமானாலும் உருட்டலாம்... என்ற நிலையில் பெரியவர்கள்.. வயதானவர்கள் அவர்களின் அனுபவம்... வயது என்று எதற்கும் மரியாதை இல்லை என்றால்.. கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே உருவான தமிழன் என்பதில் என்ன பெருமை இருந்து விட முடியும். ரெண்டு வரியில்... ஒரு பட காட்சியில்.. எத்தனையோ புத்திசாலித்தனம்.. மிக அழகாக மீம்ஸில் வெளிப்படுவதை காண்கிறோம். அதை நல்லதுக்கு செய்யலாம் தானே. மானுடத்தின் மிகப்பெரிய வலிமையே பகுத்தறிவு தானே. அதை இப்படி குப்பையில் போட்டு மீண்டும் பின்னோக்கி பயணிக்கவா இந்த தொழில் நுட்பம்.

சிக் மனோநிலையில் தான் இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் இருக்கிறார்கள். பார்வையே அப்படிதாண்டா என்பது போல இருப்பதெல்லாம் சமூக கேடு. கெத்து என்பதாக அவர்கள் செய்யும் பல காரியங்கள் முகம் சுளிக்க வைப்பவை. போதாதற்கு உச்சத்தில் இருக்கும் ஹீரோக்கள்.. முதல் பாடல்களில் மரமண்டைகளை வெற்று கம்பத்தில் அறிவீலியாக ஏற்றி விட்டு விட்டு படம் ஓடி முடிந்ததும் ஏசி அறையில் தூங்கி விடுகிறார்கள். முட்டாள் மனநிலை ரோட்டில் தொண்டை கிழிய கத்திக் கொண்டிருக்கிறது... கோடி கோடியாய் பணத்தை போட்டு பணம் எடுக்கும் அந்த பிசினெஸ் படம் முடிந்த பிறகும்.

நல்ல விஷயங்களை காது கொடுத்து கேட்பதில்லை. கேட்டாலும்... ஓர் ஏளன பார்வையில் வீழ்த்தி விட்டதாக நம்பி... குனிந்து செல்போனையே பார்த்துக் கொண்டிருப்பது... இதெல்லாம் என்ன மாதிரி முன்னேற்றம். டெக்னாலஜி வளர்ச்சி இதுவரை மானுட சமுகம் காணாத இடத்துக்கு உலகத்தை நகர்த்தி இருக்கிறது. அதைக் கொண்டு... நல்லவைகளை பூமியில் இருத்த... வழிகளை கண்டைய வேண்டுமே தவிர... அகம்பாவத்தாலும்... அட்டிழியங்களாலும்... ஆணவத்தாலும் வீணாக போய் விடக்கூடாது. ஒரு வீட்டில் பையனோ புள்ளையோ சரியாக இல்லை என்றால்... அப்பா அம்மா சரியாக கவனிக்கவில்லை என்று தான் அர்த்தம்.

பொதுவாக உடல் கெட்டு போவதை தான் வீட்டில் உள்ளோர் கவனித்து திருத்த முயற்சிக்கிறார்கள். அதே நேரம் சிந்தை கெட்டு போவது குறித்தான விழிப்புணர்வு பெரியோர்களுக்கே பெரும்பாலும் இல்லை என்பது தான் வருத்தம். பிள்ளைகள் என்ன மாதிரி சிந்திக்கிறார்கள்.... அவர்களின் சிந்தனை போக்கு... எதற்கு எப்படி எதிர் வினை ஆற்றுகிறது... எந்த மாதிரி கருத்தியல்களை கொண்டிருக்கிறார்கள் என்று கவனிப்பதும் பெற்றோர்களின் கடமை தான். சிந்தையில் அழுக்கு சேரும் போது தான்... கமெண்ட்டில் வந்து கொஞ்சம் கூட அருவருப்பு இல்லாமல்... பாலியல் சொல்லாடல்களால் ஆழ்மன வக்கிரங்களை தீர்த்துக் கொண்டு போவதெல்லாம். அதுவும் பேக் ஐடி என்பது இருக்கும் வரை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தனி மனித ஒழுக்க கேடு. நீ தனியாக இருக்கும் போது உன் சிந்தனையில் என்ன ஓடுகிறதோ அது தான் நீ என்று பெரியோர் சொல்லி இருக்க.. அதை இளைய சமூகத்திடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. நமக்குத்தான் அதிகமாக இருக்கிறது.

- கவிஜி

Pin It