இட்லி தோசை ஆப்பம் அடை என்று ஒன்றை பிடித்து ஒன்றை பிடிக்காதவர்கள் கூட இருப்பார்கள். ஆனால் பணியாரம் என்ற நாவூரும் நுட்பத்தை பிடிக்காதோர் இல்லை. பணியாரம் எந்த நேரத்தில் கிடைத்தாலும் சாப்பிடும் மனோநிலை பொதுவாகவே எல்லாருக்கும் இருக்கிறது. சுட சுட தட்டில் உருளும் பணியாரத்தை பதமாய் பிரித்து ஆவி பறக்க வாய்க்குள் போடுவதே ஒரு ப்ராஸஸ். பஞ்சு வெடித்த பரபரப்பு பாதி கையில் இருக்கும் பணியாரத்தில் உண்டு. கார சட்னியோடு சாப்பிட ஆரம்பித்தால்... எத்தனை உருண்டை உள்ளே போகும் என்று தெரியாது.

paniyaramசிறுவயதில் பாட்டி கம்பு பணியாரம் செய்து தரும். பணியார கல்லே ஒரு வித மயக்கத்தை உண்டு பண்ணும். பணியாரம் சுட்டு சுட்டு... எண்ணெய் ஊறி போயிருக்கும் கருங்கல்லில் அதன் வடிவமே பேரழகு தான். சிறு சிறு குழிகளில் அடுத்தடுத்து சதுரம் செய்திருக்கும் கலை நுணுக்கம்.... கண்டு பிடித்தவனுக்கு பணியார மாலை போடலாம். பொது பொதுவென எடை இருந்தும் இல்லாத இலவம் பஞ்சை காற்றில் நிரப்பி உப்பி வைத்தது போல... அது உணவு பதார்த்தங்களில் ஓர் ரகசிய சுவை என்றே தோன்ற வைக்கும்.

பள்ளி காலங்களில் ஒரு பணியாரம் 25 பைசாவுக்கு வாங்கி இருக்கிறேன். 2 ரூபாய் கொண்டு போனால் 8 பணியாரம் தூக்கு போசியில் பாதி நிரம்பி இருக்கும். சனி ஞாயிறுகளில் காலை உணவு.. கலக்கல் சுவை என்று... என் பிடிவாதங்களுக்கு... சமன்பாடு இந்த பணியாரம் என்ற பருப்பொருள் தான். சில நாட்களில் பள்ளிக்கு... மதிய உணவுக்கும் டிபன் பாக்ஸில் நெருங்கி அமுங்கி அடங்கி கிடக்கும் கம்பு பணியாரங்கள் டிபனை திறந்ததும் நண்பர்களின் கையில் ஆளுக்கொன்றாய் பறந்த நினைவுகளும் உண்டு. இப்போதும் கூட பணியாரம் எங்கும் எப்போதும் சிறப்பு வாய்ந்த சிற்றுண்டியாக தான் இருக்கிறது. வெங்காய சட்னிக்கு பணியாரம் சிறப்பு சேர்க்கும் என்பது என் சமீப கால கருத்து.

கார பணியாரம்... இனிப்பு பணியாரம்... தக்காளி பணியாரம்... சோள பணியாரம்... கேரட் பணியாரம்... பீட்ரூட் பணியாரம்...என்று பணியாரங்களில் பல சோதனை முயற்சிகள் இருந்த போதிலும் நமக்கு எப்போதும் கம்பு பணியாரம் தான் இஷ்டம். அதில் ஓர் ஆதி ஸ்நேகம் உணர்கிறேன். ஒவ்வொரு குழியிலும் போகிற போக்கில் விசுக் விசுக்கென எண்ணெய் தடவி... தனியாகவும் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் இடையே ஒரு நிலையில் இருக்கும் மாவை குழிகளில் பொத்தினாற் போல ஊற்றி விட்டு... திறந்த கண்கள் காத்திருக்க..... மிதமான அடுப்பு சூட்டில் வேகும் வினை மெல்ல மணக்க துவங்கும். மை கோதி கொண்டு மெல்ல திருப்பி போடும் லாவகத்தில்... பொன்னிறம் பூக்க பூலோகம் புதிர் போட்டு கல்லில் நகல் எடுத்து கிடக்கும்.

கடைகளில் நினைத்த நேரத்தில் கிடைக்கும் பணியாரங்களை விட என் மட்டும் பாட்டியின் கை தேர்ந்த பொழுதுகளுக்கு தான் கட்டுப்படும் இந்த கனிவான உருண்டை. விளையாடிக் கொண்டே போகும் போது ஒன்று வரும் போது ஒன்று என்று... சில நேரங்களில் இரண்டு பணியாரத்தை ட்ரவுசர் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஓடி விளையாடிபடியே எடுத்து கொய்யாக்காய் கடிப்பது போல கடித்த ஞாபங்கள் எல்லாம் ஆழ்மன குழிகளில் வெந்து இன்றும் கொண்டே தான் இருக்கின்றன. எத்தனை முறை பசி ஆறினும் அடுத்த முறைக்கும் காத்திருக்கும் ருசி அதனுடையது.

ஆக... இன்றிரவு சிற்றுண்டிக்கு பணியாரத்தை வேகவிட்டு கொண்டாடுவோம். கார சட்னியோ கடலை சட்டினியோ... மல்லி சட்டினியோ... வெங்காய சட்னியோ அது அவரவர் நா வூரும் சங்கதி.

- கவிஜி

Pin It