கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

nirmala sitharaman budget2022மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சில தினங்களுக்கு முன்னால் தாக்கல் செய்தார். மேலும் கோவிட் தொற்றால் ஏற்பட்ட சரிவிலிருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வர இந்த பட்ஜெட் வழிவகுக்கும் எனக் நம்பிக்கையோடு முன் அறிவித்தார்.

இது எல்லாம் வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது கூறப்படும் சடங்கு ரீதியான வார்த்தைகள்தான் என்பது நமக்கு தெரியாதது அல்ல. ஆனால் உண்மையில் ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் சாமானிய மக்களின் இருத்தலுக்கு எவ்வளவு நெருக்கடியை ஏற்படுத்த முடியுமோ அதை செய்வதும் பெரு முதலாளிகளின் கல்லா பெட்டிகளை உப்ப வைப்பதும்தான் இவர்களின் வழமையான செயல்பாடுகளாக இருக்கும்.

இந்த ஆண்டு பட்ஜெட் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா? நாட்டை விற்பதும் அப்படி விற்பதை விதந்தோதுவதும் மட்டுமே தேசபக்தியாக கற்பிக்கப்படும் சூழலில் இந்த ஆண்டு தேசபக்தி எவ்வளவுக்கு விற்கப்பட்டது என்று பார்ப்போம்.

2021-22 பட்ஜெட் மதிப்பீட்டில் பங்கு விலக்கல் மூலம் ரூ78,000 கோடி திரட்டிய அரசு 2022-23 ஆம் ஆண்டில் ரூ.65,000 கோடி என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. அதே போல 2020-21 நிதியாண்டில், அரசாங்கம் பங்கு விலக்கல் மூலம் 37,896 கோடி ரூபாய் திரட்டியது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல் ஐ சி –யின் பங்குகள் விற்பனை விரைவில் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனோ காலத்தில் இந்திய பணக்காரர்கனின் சொத்துமதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி இந்தியாவின் முதல் 10 கோடீஸ்வரர்கள், நாட்டின் ஒட்டுமொத்த செல்வத்தில் 57 சதவீதத்தை தங்கள் கைவசம் குவித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் மோடி அரசோ அவர்கள் குவித்துள்ள செல்வம் மற்றும் லாபத்தின் மீது வரி விதிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் சமையல் எரிவாயு மானியம் பெரிய அளவிற்கு வெட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதற்கான மானிய ஒதுக்கீடு 60சதவீதம் அளவிற்கு வெட்டப்பட்டது. இந்நிலையில் 2022-23 பட்ஜெட்டிலும் மற்றுமொரு 60சதவீதம் வெட்டப்பட்டுள்ளது.

மேலும் சச்சாம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 0.7% என்ற மிகக் குறைந்த அளவுக்கே உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கேட்டு வரும் குறைந்தபட்ச நிர்ணய ஊதியம் போன்றவற்றுக்கு எந்த ஒதுக்கீடும் அறிவிக்கப்படவில்லை.

பெண்களின் பாதுகாப்பிற்காக நடைமுறையில் இருக்கும் `பேடி பச்சவோ பேட்டி படாவோ', ஒன் ஸ்டாப் சென்டர்கள், நாரி அதாலத், மகிளா போலீஸ் தன்னார்வலர் மற்றும் மகளிர் ஹெல்ப்லைன் போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு ₹587 கோடியில் இருந்து ₹562 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், தேசிய சமூக உதவித் திட்டம் மற்றும் SC, ST, சிறுபான்மையினர் உள்ளிட்டவர்களின் நலனுக்கான திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 2021-22 பட்ஜெட்டில் 3.2% என்று இருந்ததை, இப்போது 2022-2023 பட்ஜெட்டில் 2.5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

மதிய உணவு திட்டத்திற்கு பிஎம் போஷான் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் நிதி ஒதுக்கீடு ரூ.10,234 கோடியிலிருந்து எந்தவிதத்திலும் அதிகரிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு இந்த திட்டத்தின்கீழ் 35சதவீத குழந்தைகளுக்கு எதுவுமே கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் பெரிய அளவிற்கு வெட்டப்பட்டுள்ளன. மத்திய உணவுக்கிடங்கிற்கான விளை பொருள் கொள்முதலுக்கான நிதி 28 சதவீதம் அளவிற்கு கடுமையாக வெட்டப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை சட்டப்பூர்வமாக உத்தரவாதம் செய்யுங்கள் என்று பெரும் போராட்டங்கள் நடத்தி வரும் வேளையில் இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.

உர மானியம் 25 சதவீதம் வெட்டப்பட்டுள்ளது. பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் 12.5 கோடி விவசாய குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் அளிப்பதாகக் கூறப்பட்ட திட்டத்திற்கு உண்மை மதிப்பீடுகளின் அடிப்படையில் ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் ரூ.68 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் 500 கோடி ரூபாயை வெட்டப்பட்டுள்ளது.

ஏதோ தன்னுடைய ஆட்சியின் மகிமையால் நாட்டின் வருவாய் அதிகரித்துள்ளதாகக் பட்ஜெட்டில் மோடி அரசு கூறியுள்ளது. ஆனால் உண்மை காரணம் ஜிஎஸ்டி மூலமாகவும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான கடுமையான மறைமுக வரிகளை மக்கள் தலையில் சுமத்தியதன் மூலமாக மட்டுமே அரசின் வருவாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அப்படி இருந்தும் அரசின் செலவினங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி என்பது வெகு குறைவாகவே உள்ளது. பட்ஜெட்டில் காட்டப்பட்டுள்ள செலவினம் என்பது ஒன்றிய அரசின் செலவினம் மட்டுமல்ல, மாறாக மாநிலங்களின் வளங்களையெல்லாம் மடைமாற்றம் செய்து, அதனிடம் இருந்து பறித்து, உறிஞ்சி எடுக்கப்பட்ட பணத்தின் மூலம் செய்யப்பட்ட செலவுகளே ஆகும். 2021-22 ஜிடிபி-யில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட தொகை 6.91 சதவீதமாக இருந்தது 2022-23ல் இது 6.25 சதவீதமாக வீழ்ந்துள்ளதே இதை தெளிவுபடுத்தும்.

மோடி அரசு ஏன் இவ்வளவு கார்ப்ரேட் அடிமையாக நடந்துகொள்கின்றது என்பதும் சாமானிய மக்களை சாகடிக்கப்பார்க்கின்றது என்பதும் உங்களுக்கு புரியாத புதிராக இருக்கலாம்.

ஆனால் உண்மை அவ்வளவு புதிரானது கிடையாது!

ஏ.டி.ஆர். (ADR)எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஆண்டுதோறும் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பெற்ற நன்கொடை, அவற்றின் சொத்து உள்ளிட்ட தகவல்களை வெளியிடும்.

அப்படி இந்தாண்டு அவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தேசிய கட்சிகளைப் பொறுத்தவரை பா.ஜ.க. ரூ. 4847.78 கோடியுடன் முதல் இடத்தில் உள்ளது. இது அனைத்து தேசிய கட்சிகளின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 69.37 சதவீதம் ஆகும்.

கார்ப்ரேட்கள் ஏன் பாஜகவுக்கு அள்ளி அள்ளி கொடுக்கின்றார்கள் என்பதற்கான விளக்கம் அவர்களின் பட்ஜெட்டுலேயே உள்ளது.

விசுவாசமாக வாலை ஆட்டாத நாய்க்கு எப்படி அதன் எஜமானர்களின் சரியான கவனிப்பு கிடைக்காதோ அதே போல நாட்டை கூறு போட்டு விற்க திராணியில்லாத அரசியல் கட்சிகளுக்கு பெருமுதலாளிகள் வீசி எறியும் எலும்புத்துண்டுகளும் கிடைக்காது.

அந்த வகையில் இந்தியாவில் மிகச்சிறந்த கார்ப்ரேட் அடிமை நாயாக பிஜேபி இருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

எல்லாவற்றையும் விற்று முடித்துவிட்ட பிறகு அவர்கள் உங்களிடம்தான் நேரடியாக வருவார்கள். தேசபக்தியை நிரூபித்துக்கொள்ள சொல்லி உங்களை கட்டாயப்படுத்துவார்கள். அப்போது எதை விற்பது என்பதை நீங்கள் முடிவு செய்துகொள்ளும் அதிகாரம் கூட உங்களிடம் இருக்காது.

- செ.கார்கி