தமிழர்களின் வரலாற்றில் அகம், புறம் என்பது நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்று உள்ளது. அதாவது வீரம், போர்த்திறம், கொடை போன்றவை புறம் என்றும் காதல், அன்பு, இல்லற வாழ்வு உள்ளிட்டவை அகம் என்றும் பகுக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியமான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் உள்ள கருத்துகள் அக்காலத் தமிழ் மக்களின் பண்பாட்டை எடுத்தியம்புகின்ற காலக் கண்ணாடியாக அமைந்துள்ளது.

பத்துப்பாட்டு வரிசையில் முல்லைப்பாட்டு என்னும் நூல் முதன்மையானது. இயற்கையோடு இணைந்து வாழ்ந்த தொல்தமிழர்களின் அகப்புற வாழ்க்கை முறைகளையும் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளையும் வெளிப்படுத்துகிறது. முல்லைப்பாட்டில் அமைந்துள்ள உவமை நலன்களை எடுத்துரைப்பதே இவ்வாய்வுக் கட்டுரையின் முதன்மை நோக்கமாகும்.

முல்லைப்பாட்டு

பத்துப்பாட்டு வரிசையில், பாட்டு என்ற பெயரில் காணப்படும் முதலாவது நூல் – முல்லைப்பாட்டு. அடுத்து அமைவது குறிஞ்சிப்பாட்டு. பத்துப்பாட்டில் அளவால் மிகச் சிறிய நூல். 103 அடிகளைக் கொண்டது. ஆசிரியப்பா என்ற பாவகையால் அமைந்தது. முல்லைப்பாட்டு - கி.பி. 3ஆம் நூற்றாண்டு என்பர். உ.வே.சா. 1889ஆம் ஆண்டு, “பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கியருரையும்” என்ற தலைப்பில் முதன்முதலாக பதிப்பித்தார். ‘தனித்தமிழ் இயக்கத் தந்தை’ மறைமலையடிகள் - 1903ஆம் ஆண்டு தனித்த நிலையில், தன்னிடம் இருந்த சுவடிகளை ஒப்புநோக்கி, “முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை” என்னும் நூலினை மாணவர்களுக்கான எளிய முறையில் உரையெழுதி, பதிப்பித்தார்.

நிலம் – காடும் காடு சார்ந்த நிலமும், பெரும்பொழுது – கார்காலம் (காலம்: ஆவணி, புரட்டாசி), சிறும்பொழுது – மாலை (நேரம்: 6 - 10), தெய்வம் – திருமால் உணவு, விலங்கு, பூ, பறவை உள்ளிட்ட பதினான்கு வகையான கருப்பொருள்களைச் சுட்டுகின்றனர். உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (எதிர்பார்த்துக் காத்திருத்தல்) ஆகும்.

பாண்டிய அரசனான நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டதாக அறிஞர்களாலும் ஆய்வாளர்களாலும் கருதப்படினும், தலைவனுடைய பெயர்ப் பாட்டில் குறிப்பிடப்படவில்லை. இதனாலே இது முழுமையான அகநூலாக அமைகிறது.

“மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்” (தொல். நூ. 57)

 

முல்லைத்திணை – பேயனார். (பனிமுல்லை பேயனே… என்னும் ஐங்குறுநூறு நினைவு வெண்பாப் பாடல் சான்று பகர்கிறது.) குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும், 99 வகையான பூக்களில், 46 ஆவதாக இடம்பெற்றிருப்பது. முல்லைப் பூ. ‘முல்லை சான்ற கற்பு’ என்று கற்புநெறியுடன் இணைத்துப் பேசப்படும் திணைமரபினைக் கொண்டது. ‘நெஞ்சாற்றுப்படை’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து. (தனிப்பாடல்)

“மாயோன் மேய காடுறை உலகமும்…” (தொல். நூ. 951)

“வஞ்சி தானே முல்லையது புறனே” (தொல். நூ. 61)

முல்லை – காடு - காத்திருத்தல் (அகம் சார்ந்து) வஞ்சி – காடு - போர் தொடுத்துச் செல்லுதல். (புறம் சார்ந்து) என்பதாகப் பகுக்கப்பட்டுள்ளது.

நூலின் கரு

அரண்மனையில் இருக்கும் அரசி போருக்குச் சென்ற தன் விரைவில் வர வேண்டி, காத்துக் கிடக்கும் நேரத்தில், அரசன் மீளப்போகும் அறிகுறிகள் தென்படுவதாக உடனிருப்போர் கூறுகின்றனர். என்றாலும் அவளுக்கு உறக்கம் கொள்ளவில்லை. இதுதான் பாடலின் முதற்பகுதியாக அமைந்துள்ளது.

பாசறையில் அரசனுக்கும் உறக்கம் கொள்ளவில்லை. அவன் போர்க்களத்தில் காயம்பட்ட தன் படைகளைப் பார்வையிட்டு, ஆறுதல் கூறிக்கொண்டிருக்கிறான். ஆனாலும் அரசியின் நினைவு அவனை வந்து தீண்டிக்கொண்டே இருக்கிறது. இச்செய்தியினை எடுத்துரைப்பது இரண்டாம் பகுதியாகும்.

கார்காலத்தில் மழை பொழிந்து, முல்லை நிலமானது பூத்துக் குலுங்குகிறது. அந்த நேரத்தில், வெற்றிக்கொடியை உயர்த்திக்கொண்டு அரசனது படையானது, முல்லை (காடு) நிலத்தில் திரும்பிக் கொண்டிருக்கிறது. - இது மூன்றாவது பகுதியாகி முழுமைப் பெற்று நூல் நிறைவுறுகிறது.

முல்லைப்பாட்டில் உவமைகள்:

ஒரு செய்யுளில் உவமை, உருவகம் போன்றவை அதன் உள்ளடக்கத்தின் அடர்த்தியைக் கூட்டுகின்றன. அவ்வகையில், முல்லைப்பாட்டில் உவமைகள் என்னும் நலனானது வெகு சிறப்பாகக் கையாளப் பெற்றுள்ளன. அவை, கதைப்போக்கிற்கு ஏற்ப எவ்வித இடைசெருகலும் முகச்சுளிப்பு, இன்றியும் அதீத கற்பனையும் இன்றி இயல்பாக வாழ்வியலோடு இணைந்த உவமைகளை இப்பனுவலில் காண முடிகிறது.

முல்லைப்பாட்டின் தொடக்கப் பாடலடியானது கீழ்க்காணுமாறு தொடங்குகிறது. அதாவது இயற்கையோடு இணைந்த, அறிவியல் முறைப்படி நீர் எப்படி ஆவியாகி, மலைகளில் தங்கி / தடுக்கப்பெற்று மேகங்களில் சேர்கிறது என்பதனை அறிவிக்கிறது. எனினும் உரையாசிரியர்கள் தத்தம் போக்கிற்கேற்ப, உரை வரைந்துள்ளனர். அவை, வைதீகச் சூழலுக்கு ஏற்றார் போல் அமைந்துள்ளது. அதாவது, மாவலி அரசனிடம் திருமால் சிறிய உருவம் கொண்டு மூன்றடி நிலம் கேட்க, அதற்கு அரசன் தருகிறேன் என்று ஒப்பளிக்க, அதன் நீட்சியாக பூமிக்கும் வானுக்குமாக நெடிது உயர்ந்த திருமால் முதல் அடியை நிலவுலகிலும் இரண்டாவது அடியை வானுலகினையும் மூன்றாவது அடியை மாவலி அரசனின் தலை மீதும் வைத்து அவ்வரசனின் ஆணவப் போக்கிற்குப் பாடம் புகட்டினார் என்ற புராண தொன்மச் செய்தி கூறப்படுகிறது. இதனைப் பின்வரும் அடிகளில் காணலாம்.

“நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன்ஏர்பு,
கோடுகொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி…” (1 - 5)

இதில், ‘நீர்செல, நிமிர்ந்த மாஅல் போல’ என்னும் அடியினை உரையாசிரியர்கள் திருமால் வானுயர்ந்து நின்ற செய்தியினைக் கூறுகின்றது. இப்பொருள்கோடல் முறை உரையாசிரியர்களின் பாற்பட்டதே. மேற்கண்ட ஐந்து அடிகளும் இடைசெருகலாக இருக்கலாம். எனினும் இவ்விரு காரணங்களில் அறிவியல் அடிப்படையான காரணம் பொருத்தமாக அமைகிறது.

“யாழிசை இனவண்டு ஆர்ப்ப…” (8)

முல்லைப் பூக்கள் பூத்துக் குலுங்குகையில் அதனின்று தேனெடுக்க முயலும் வண்டுகளின் ரீங்கார ஒலியானது யாழிசை போல இருப்பதாக நப்பூதனார் ஒப்புமைப்படுத்துகிறார். இது தலைவிக்குப் பெரும் இன்னலை மிகுவிக்கும் செயற்பாடாக உள்ளது. தலைவி பூவின் தேனாகவும் தலைவன் வண்டாகவும் உவமிக்கப்பட்டுள்ளதை உள்ளீடாக உணர்ந்து கொள்ளலாம்.

“பூப்போல் உண்கண் புலம்புமுத்து உறைப்ப...” (23)

என்று தலைவியின் அழுகையின் வெளிப்பாடாக வரும் கண்ணீர்த் துளியினை முத்துக்கு உவமையாகக் காட்டப்பட்டுள்ளது. தலைவியின் உள்ளார்ந்த அழுத்தத்தை அவற்றின் வெளியீடாக இவை அமைகின்றன. இன்றும் பலரும் தலைவியின் (காதலியின்) கண்ணீர்த் துளியினை வருணிக்கையில் முத்திற்கு ஒப்புமையாக கூறுகின்றனர்.

“கல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோல் அசைநிலை கடுப்ப…” (37, 38)

இவ்வுவமையானது அக்காலத் துறவிகளின் ஆடைகளைக் குறித்தும் போரில் வீரர்கள் தங்கும் படைவீடுகளின் அமைப்பு நிலை குறித்தும் ஒப்பிடப்பட்டுள்ளது. அதாவது, படைவீடுகள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்றால் துறவியர்கள் தங்கள் கைகளில் வைத்துள்ள முக்கோலில் தங்களது காவி ஆடையினைத் துவைத்து காய வைத்துள்ளது போன்ற அமைப்பில் நடுவில் மரக்கொம்புகளைக் கொண்டு தங்குவதற்காக ‘கூடாரங்கள்’ அமைக்கப்பட்டுள்ளதை இவ்வாறான, வாழ்வியலோடு இணைந்த உவமை கொண்டு வெளிப்படுத்தியுள்ளார். இங்கு ‘பார்ப்பான்’ என்பது துறவிகளைக் குறித்து நிற்கிறது. இது அக்கால வழக்காகும். இன்று பொருள் மாறுபட்டுள்ளதை அனைவரும் அறிவர்.

“அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்
சிதர்வரல் அசைவளிக்கு அசைவந் தாங்கு,
துகில்முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்குநடைப்
பெருமூதாளர் ஏமம் சூழ...” (51 - 54)

மேற்காணும் அடிகளில் ஓர் உவமை உள்ளீடாக அமைந்துள்ளது. அதாவது, மண்ணிற்குக் காவல் புரியும் வயது முதிர்ந்த, நம்பிக்கைக்குரிய ஆண்கள் தங்களின் தலையில் வெள்ளாடையினால் தலைப்பாகை அணிந்துகொண்டு இரவில் காவல் புரிகின்றனர். அவர்களின் அரைத்தூக்கக் கலக்கத்தில் கால்நடை தளர்ந்தும் தலை தன் வசமின்றி, அசைந்து ஆடியும் நிற்கிறது. இதனைக் கற்பனை வட்டத்திற்குள் செலுத்தும் புலவர் இயற்கையோடும் முல்லைத்திணையின் இயல்போடும் இணைத்துக் கூறுகிறார். அது, காட்டில் பூத்திருக்கும் முல்லைக் கொடியின் மலர்கள் இரவில் அங்குமிங்கும் அசைந்தாடுவதைப் போன்று உள்ளது என்று உவமிக்கிறார். இது மிகவும் இயல்பான உவமையாக அமைந்துள்ளதைக் காணலாம்.

“எடுத்துஎறி எஃகம் பாய்தலின், புண்கூர்ந்து,
பிடிக்கணம் மறந்த வேழம்; வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய…” (68 - 70)

இது ஒரு புற உவமையாகும். அதாவது, போரில் யானையின் தும்பிக்கை வெட்டப்பட்டு கிடப்பதை எடுத்துக்காட்டும் புலவர். அது அடிபட்ட பாம்பு எப்படி ‘குத்துயிரும் குலையுயிருமாக’ துடிக்குமோ அதுபோல, வெட்டப்பட்ட தும்பிக்கையானது துடித்துக்கொண்டிருக்கிறது என்பதனைக் கண்முன் காட்சிப்படுத்துகிறார். இங்கு அஃறினைக்கு அஃறினை உயிரினத்தினை ஒப்புமைப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. புலவர் தம் வாழ்நாளில் கண்ட, செய்திகளையே உவமையாகக் காட்டுகிறார். ஆக, பாம்பும் ஏதோவெரு சூழலில் காயம்பட்டிருக்கும் என்பதனையும் உய்த்துணரலாம்.

“நீடுநினைந்து, தேற்றியும், ஓடுவளை திருத்தியும்,
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,
ஏஉறு மஞ்ஞையின் நடுங்கி, இழைநெகிழ்ந்து…” (82 - 84)

மேற்கண்ட செய்தியோ ஒரு புறச்செய்தி. இது அகம் சார்ந்த செய்தியாகும். அதாவது, தலைவியின் பிரிவு நிலையினை எடுத்துரைக்கும் புலவர் அம்புபட்ட மயில் எவ்வாறு துடிதுடிக்கின்றதோ அதுபோன்று தலைவியானவள், தலைவனின் பிரிவுத் துயரால் வாடி வதைபடுகிறாள் என்பதனைக் குறிக்கிறது.

“செறியிலைக் காயா அஞ்சனம் மலர,
முறியிணர்க் கொன்றை நன்பொன் கால,
கோடல் குவிமுகை அங்கை அவிழ,
தோடுஆர் தோன்றி குருதி பூப்ப…” (93 - 96)

மேற்காணும் நான்கு அடிகளும் நான்கு வகையான உவமைகளைக் கொண்டுள்ளது. அதாவது, கார்காலத்தினை உணர்த்திடும் முல்லை நிலத்தின் இயற்கை அமைப்பினைக் குறிப்பிடுகையில், பூவும் அதன் மலர்ச்சியும் குறிக்கப்படுகிறது. அதாவது, பூக்கள் எவ்வாறு உள்ளது என்பதையும் அதன் அமைப்பு, தன்மை போன்றவற்றையும் உவமைகள் கொண்டு விளக்குகிறார் புலவர். அவை பின்வருமாறு;

  1. நெருங்கிய இலைகளைக் கொண்டமைந்த, காயாம் பூக்களுக்கு உவமையாக அப்பூவானது மை (நீல நிறம்) நிறத்தில் பூத்திருக்கிறது என்று உவமிக்கின்றார்.
  2. கொத்து கொத்தாக இருக்கும் கொன்றைப் பூக்களுக்கு உவமையாக, பொன்னைப் (பொன் நிறம்) போன்று காட்சியளிக்கிறது என்றும்
  3. (கோடல்) வெண்காந்தள் - வெள்ளை நிறப் பூக்களுக்கும் உவமையாக, அழகான உள்ளங்கையை விரிந்தது போன்றிருக்கும் என்றும்
  4. இரத்தம் (செந்நிறம்) நிறத்துடன் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும் (தோன்றி) செங்காந்தள் பூக்களுக்கு உவமையாகவும் குறிப்பிட்டுள்ளார் முல்லைப்பாட்டின் ஆசிரியர் நப்பூதனார்.

அதாவது நீல நிறம், பொன்நிறம், வெண்மை நிறம், செந்நிறம் என வெவ்வேறு நிறப் பூக்களையும் அவை பூத்திருக்கும் பாங்கினையும் கண்ட புலவர் தன் கற்பனைத் திறத்துடன் இணைத்து மேற்கண்டவாறு ஒப்புமைப்படுத்தி சுட்டுகிறார். இப்பூக்கள் இன்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. எனினும் முல்லைப்பாட்டாசிரியர் காலத்து ஒப்புமை இன்றும் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளிலும் மிளிர்கின்றன்.

தொகுப்புரை

முல்லைப்பாட்டில் காணலாகும் உவமைகள் அகம், புறம் சார்ந்தவையாக காணப்படுகிறது. அதோடு, முல்லைத்திணை சார்ந்த கருப்பொருள்களுள் ஒன்றனோடு இணைந்த தன்மையில் உள்ளன. அவை, பூக்கள், விலங்குகள் (பாம்பு, யானை) சார்ந்ததாக இருக்கின்றன. இவ்வாறு உவமிக்கப்படும் பொருட்கள் முல்லைத் திணை அரசனின் (தலைவனின்) குறியீடுகளாக / காட்சிப்படுத்துதல்களாக அமைந்துள்ளன. நப்பூதனார் தம் காலத்தில் பார்த்த செய்திகளைக் கொண்டே உவமைகளை மிக இயல்பாக அமைத்துள்ளார். இவ்வாறு, முல்லைப்பாட்டில் அமைந்துள்ள உவமை நலன்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

துணைநூற் பட்டியல்

1. தொல்காப்பியர், தொல்காப்பியம், (இளம்பூரணர் உரை), சாரதா பதிப்பகம், சென்னை, 2011.
2. நாகராஜன் வி., பத்துப்பாட்டு - 2, (மூலமும் உரையும்) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2014.
3. மறைமலை அடிகள், முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2007.
4. முனைவர் ஜெ. மதிவேந்தன், முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை: நோக்கும் போக்கும், ஆய்வுக் கட்டுரை, (தும்பை – தொகுப்பு நூல்) தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

- முனைவர் ஜெ. மதிவேந்தன், கெளரவ விரிவுரையாளர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, செய்யாறு – 604 407. திருவண்ணாமலை மாவட்டம்.

Pin It