சீமான் ஒரு சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்பது உலகம் அறிந்த ஒன்று. யோசிக்காமல் அவர் வாயில் இருந்து வந்துவிழும் நகைச்சுவைத் துணுக்குகள் கேட்பவர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துவிடும். அவருடைய ஆமைக்கறி, அரிசிக் கப்பல், கறி இட்லி போன்ற நகைச்சுவை துணுக்குகள் உலகப் புகழ் பெற்றவை.

சீமானிடம் இருந்து தமிழக மக்கள் இது போன்ற நகைச்சுவைகளையே பெரிதும் எதிர்பார்க்கின்றார்கள். அதனால்தான் அவரின் யூடியூப் காணொளிகளின் பார்வைகள் பல ஆயிரங்களை எளிதாகக் கடக்கின்றன.

seeman 700ஆனாலும் சீமான் அவர்கள் எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என அவ்வப்போது சோதனை ரீதியாக முயற்சித்துக் கொண்டே இருப்பார். ஆனால் பெரும்பாலும் அது வெற்றி பெற்றதே கிடையாது. அரசியல்வாதி, தத்துவவாதி, ஆன்மீகவாதி என பல அவதாரங்களை அவர் இதற்கு முன்பு எடுத்திருக்கின்றார். ஆனால் அவை எல்லாம் துவைத்து தோரணம் தொங்க விடப்பட்டிருக்கின்றது.

அப்படி இருந்தும் தோல்விகளைக் கண்டு துவளாத சீமான் அவர்கள் தற்போது பொருளாதார அறிஞர் என்ற அவதாரத்தை எடுத்து இருக்கின்றார்.

ஆனால் இந்த முறையும் அவருக்கு படுதோல்வியே ஏற்பட்டிருக்கின்றது. எதையாவது புதிதாக சொல்லி கருத்தைக் கவர்வார் என்று பார்த்தால் ஏற்கெனவே உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவை தொடர்ந்து சொல்லி வரும் “அரசு சமூக நலத்திட்டங்களுக்கு செலவளிப்பதை நிறுத்த வேண்டும். மக்கள் சந்தையில் தனக்கு தேவையானதை பணம் கொடுத்து சந்தை விலைக்கே வாங்கிக் கொள்ள வேண்டும்” என்பதையே அண்ணன் தனக்கு ஏற்றபடி கொஞ்சம் மொருவல் தோசையாக சுட்டிருக்கின்றார்.

சில நாட்களுக்கு முன்னால் அண்ணன் இப்படி உருட்டி இருக்கின்றார்.

“இங்கே பேருந்து கட்டணமில்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கிறீர்கள். அதற்கு என்ன காரணம்? அவர்கள் வறுமையில் இருக்கிறார்கள் என அர்த்தம். குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக அறிவிக்கிறீர்கள். காரணம் என்ன? அவர்களுக்கு கைச்செலவுக்கு காசில்லை. அங்கும் வறுமை. அரிசி இலவசம் என்கிறீர்கள். காரணம், அதை விலை கொடுத்து வாங்கவும் வசதியில்லை.” என்கின்றார்.

அதே போல நூறுநாள் வேலை திட்டத்தை பற்றிய அவரது கருத்தும், நூறுநாள் வேலை திட்டம் வந்த பின்னால் கிராமங்களில் ஆதிக்க சாதிகளை அண்டிப் பிழைத்த தலித்துகள் உள்ளிட்ட பலர் விடுதலை அடைந்ததை சகிக்க முடியாமல் எடுத்த வாந்தியாகவே இருக்கின்றது.

நகரப் பேருந்துகளில் பெண்கள் பேருந்து கட்டணமில்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதோ, குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தருவதோ, அரிசி இலவசமாகத் தருவதோ, நூறுநாள் வேலைத் திட்டமோ நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றிய எந்தவித சமூக பொருளாதார கண்ணோட்டமும் அவரிடம் இல்லை.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சியை மட்டும் வைத்து மதிப்பிடப்படுவது கிடையாது. அந்த நாட்டின் மனித வளர்ச்சிக் குறியீடுகளான கல்வி, சுகாதாரம் போன்றவற்றை வைத்தே மதிப்பிடப்படுகின்றது.

சமூக நலத் திட்டங்களுக்கு எங்கு அதிகம் செலவிடப்படுகின்றதோ அங்குதான் அதிக அளவிலான பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது.

இன்று தமிழகம் இந்தியாவில் மனித வளர்ச்சி குறியீட்டு எண்ணில் முதன்மை வகிப்பதற்கு அதுதான் காரணம்.

சர்வதேச தொழில் ஆலோசனை நிறுவனமான டெலாய்ட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, கடந்த 2005-ம் ஆண்டில் வேலைக்குச் செல்லும் பெண்களின் சதவிகிதம் 36.7 சதவிகிதத்திலிருந்து 2018-ல் 26 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. வேலைக்குச் செல்கிற பெண்களில் 95% பேர் அதாவது, 1.95 கோடி பேர் முறைப்படுத்தப்படாத அல்லது மிகக் குறைவான சம்பளம் கிடைக்கிற வேலைகளைச் செய்கின்றனர் என்கின்றது.

உலக ஜி.டி.பி-யில் பெண்களின் பங்கானது 37 சதவிகிதமாக இருக்கையில், இந்தியாவில் இது 18 சதவிகிதமாக மட்டுமே இருப்பதாக மெக்கன்ஸி நிறுவனத்தின் ஆய்வு சொல்கிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை சுயதொழில் செய்யும் பெண்கள் கிராமப்புறங்களில் 27.8 சதவீதமாகவும் நகர்ப்புறங்களில் 39.8 சதவீதமாகவும் உள்ளது. அதே போல தினக்கூலி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறையே 62.7 மற்றும் 18.4 சதவீதமாகவும், மாதச் சம்பளம் பெறுபவர்கள் முறையே 9.5 மற்றும் 41.8 சதவீதமாகவும் உள்ளனர். எனவே பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் பயணம் செய்ய இலவசம் என்ற திட்டம் நிச்சயம் பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை கணிசமாக உயர்த்துவதோடு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் அவர்களின் பங்களிப்பையும் அதிகப்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

கிராமப் புறங்களில் இருந்து நகர்புறங்களுக்கு பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை இதனால் அதிகமாகும். மாதம் ஆயிரம் ரூபாய் மீதமானால் கூட மீதமான பணம் வாழ்க்கைத் தேவைக்கான செலவுகளில் இடம் பெற வாய்ப்பு ஏற்படும். அதே போல குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தருவது நிச்சயம் பெண்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை மட்டுமில்லாமல் அந்தப் பணத்தை அவர்கள் தங்களின் குழந்தைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்க செலவிடும் போது குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவையும் தடுக்கப்பட்டு ஆரோக்கியமான சமூகம் ஏற்பட வழி உண்டாகும்.

இன்று தமிழகம் பட்டினிச் சாவுகள் இல்லாத மாநிலமாக மாறியதற்கு பின்னால் அரசால் வழங்கப்படும் இலவச அரிசித் திட்டமும் ஒரு காரணமாக உள்ளது. இலவச அரிசி, அம்மா உணவகம் போன்றவை 108 கிடா வெட்டி சோறு போடும் அளவுக்கு வசதியாக உள்ள சீமான் அவர்களுக்கு வேண்டுமானால் தேவையில்லாத திட்டங்களாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் சுமார் 40 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல் நடுத்தர நிலையில் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கும் அது நிச்சயம் பயனுள்ளதாகும்.

அரசாங்கம் எதையும் இலவசமாகக் கொடுக்கவில்லை என்பது குறைந்தபட்ச பொருளாதார அறிவு உள்ள அனைவருக்குமே தெரியும். ஆனால் இளங்கலை பொருளாதாரம் படித்த சீமான் அவர்களுக்கு அது தெரியவில்லை.

உலகில் மிகப்பெரிய வல்லரசுகள்கூட சமூக நலத்திட்டங்களுக்காக செலவளிக்கின்றன. மக்களின் வரிப்பணத்தில் இருந்து அந்த மக்களுக்காக செலவிடப்படும் எதுவுமே இலவசங்கள் கிடையாது. அவை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த செய்யப்படும் முதலீடுகளே ஆகும்.

பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமாக உள்ள மூவலூர் ராமாமிர்த அம்மையார் திருமண நிதி உதவி, ஈ.வே.ரா. மணியம்மை விதவை மகளிர் நிதி உதவி, டாக்டர் தர்மாம்பாள் விதவை மறுமண ஊக்குவிப்பு, அன்னை தெரசா ஆதரவற்ற பெண் திருமண உதவி, முத்துலட்சுமி அம்மையார் கலப்பு திருமண நிதி உதவி, சிவகாமி அம்மையார் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், சத்தியவாணிமுத்து நலத் திட்டம் போன்றவை சமூக புறக்கணிப்புக்கு உள்ளான பெண்களை குறைந்த பட்சமாகவாவது தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் வாழ உதவி செய்கின்றது.

அதே போல மாணவர்களுக்குத் தரப்படும் இலவச மடிக்கணினி, சைக்கிள், பாடப் புத்தகங்கள், நோட்டுகள் என அனைத்துமே இன்று தமிழகத்தை கல்வியில் முன்னோடி மாநிலமாக மாற்றி இருக்கின்றது. கிராமப்புற பெண்களின் கல்வி பெரும் விழுக்காட்டை உயர்த்தி இருக்கின்றது.

நிச்சயம் இவை எல்லாம் சமூக சமத்துவத்தை கொண்டு வருவதற்கான திட்டங்கள் அல்ல என்பது உண்மைதான். ஆனால் சமூக சமத்துவமற்ற ஒரு நாட்டில் வளங்களின் பங்கீட்டில் ஒரு சிறு பகுதியாவது அதில் பங்குகொள்ள வழியற்ற மக்களுக்குச் செய்வது குறைந்தபட்ச ஜனநாயகமாகும்.

திமுக அதிமுக போன்ற கார்ப்ரேட் கட்சிகள் இன்று மிக வலுவாக காலூன்றி நிற்பதற்குப் பின்னால் அவர்கள் செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள் உள்ளன.

மக்கள் ஒன்றியக் கட்சிகளான காங்கிரஸ், பிஜேபி போன்றவற்றை நம்பாத காரணமே அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அவர்கள் சாமானிய மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்பதை தெரிந்து கொண்டதால்தான். தற்போது சீமானையும் மக்கள் அப்படித்தான் பார்க்கப் போகின்றார்கள்.

நாளை சீமான் தப்பித் தவறி ஆட்சிக்கு வந்தால் இதுவரை தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும் நிறுத்தப்பட்டு உலக வங்கியின் ஆணைக்கு இணங்க மக்கள் அனைத்தையும் சந்தை விலைக்கே வாங்கிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

சீமான் சொன்னது போல இலவசக் கல்வியை தருவார் ஆனால் சத்துணவும், சைக்கிளும், இலவச பேருந்துப் பயணமும் இல்லாத மாணவர்கள் எப்படி படிக்க வருவார்கள்? அது போன்றவர்களுக்கெனவே அண்ணன் உருவாக்கிய திட்டம்தான் ஆடு மாடு மேய்ப்பதை அரசு வேலையாக அறிவிக்கும் திட்டம்.

சீமான் அவர்களின் பொருளாதாரத் திட்டத்திற்கும் மனுதர்மத்தின் திட்டத்திற்கும் பெரிய வேறுபாடெல்லாம் கிடையாது. அந்தந்த சாதிக்காரன் அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட வேலையை செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலமே அவன் சனாதன தர்மத்தைக் காத்து கடவுளை அடைய முடியும்.

அதே போல தமிழ்த்தேசியத்திலும் குயவன் மண் பானை செய்வான். நாவிதர்கள் முடி திருத்துவார்கள். வண்ணார்கள் சலவை செய்வார்கள். பறையர்கள் பறை அடிப்பார்கள். சக்கிலியர்கள் மலம் அள்ளுவார்கள்.

இப்படி ஒரு காலத்திற்கு தமிழகத்தைத் திருப்ப வேண்டும் என்பதுதான் சீமான் அவர்களின் திட்டம். பார்ப்பனியத்திற்கு தமிழ்த்தேசியம் என்று பெயரிட்டு அதை இந்திய தேசியத்தின் மீது ஏறி நின்று கொண்டு கூச்சமே இல்லாமல் கூவிக்கொண்டு இருக்கின்றார்.

- செ.கார்கி

Pin It