old bicycle INDIAஉடலை இளைக்க... ஒரு வகை உடற்பயிற்சியாகத்தான் சைக்கிள் ஓட்டுவது நம்மிடையே பரவலாக இப்போது இருக்கிறது. இவ்வாழ்வின் ஓட்டத்தில் நிகழும் வெற்றுப் பெடலிங் சத்தமாகத்தான் அவைகளை நான் காண்கிறேன். பூ மலரும் பெடலின் சத்தம் ஒன்று உண்டு. அது பற்றி தான்... இந்த அசை போடல்.

சைக்கிள் சார்ந்த பயணம் தன்னையே நகர்த்தி நகர்த்தி நிகழ்த்தும் தூரங்களின் தொடர்பு என்பதை சைக்கிள் ஓட்டுவோர் உணர்வர். உடல் இளைக்க ஓட்டுவோர் பற்றி இல்லை.. இந்த சப்தம். சைக்கிள் தான் பயணக் குருவி என்போருக்கான சப்தம் இது. பிடித்த வளைவுக்கு தானாக அடிக்கும் பெல்லில் மணிச்சத்தம் பிறகு தான்.

இதய சப்தம் தான் முதலில். பச்சை நிற சைக்கிளில் பழுப்பு நிற காட்டுக்குள் பின்னோக்கி செல்லும் பயணத்தில்... சேருமிடம் பால்யமென்றால்... வாடகை சைக்கிள் என்றொரு கான்செப்ட் இருந்ததை கிராமத்து கால்கள் அறிந்திருக்கும்.

சைக்கிள் என்றொரு வட்ட நிலா வஸ்து ஆட்டி படைத்த கால கட்டம் ஆறாவது ஏழாவது படிக்கையில்... இருந்தது.

சொந்தமாக சைக்கிள் வீதியில் யாரோ ஓரிருவரிடம் மட்டுமே இருக்கும். மற்றபடி எங்களை போன்றோர்களுக்கு ஓட்டமும் நடையும் தான்.. பயண சிறகுகள். 

அந்த வாரம் முழுக்க காசு சேர்த்து வைத்து... சனி ஞாயிறுகளில்... 'சிவப்பன்' சைக்கிள் கடைக்குச் சென்றால், அங்கு பெரியவங்களுக்கு சின்னவங்களுக்கு.... இன்னும் சின்னவங்களுக்கு என்று உயரம் ரீதியில் சைக்கிள் இருக்கும். ஆனால் ஒன்று கூட காத்திருக்காது.

காலையில் சைக்கிள் கடை திறப்பதற்கு முன்பே ஒரு கூட்டம் அடித்து பிடித்து 50 பைசா சேர்த்து கொடுத்து நான் நீ என முந்திக் கொண்டு... சைக்கிளை எடுத்து பறந்திருக்கும்.

சினிமாவுக்குச் செல்ல... காதலிகளை காட்டு மறைவாக கூட்டி செல்ல... நண்பனைப் பார்க்க... கள்ளு குடிக்க... கோயிலுக்கு செல்ல... சர்ச்சுக்குச் செல்ல அவசர காசு தேவை உள்ளோர் விடுமுறை நாளிலும் பக்கத்தூருக்கு வேலைக்கு செல்ல.... என்று ஆளாளுக்கு அவரவர் வேலை... சைக்கிள் கட்டி பறக்கும்.

சிறுவர் சைக்கிளும் கிட்டத்தட்ட அதே மாதிரி தான்.

ஓட்டி பழக... ஓட்டி பழக்கி விட... ஓட்டி பழகியவன் வீதியில் ஸீன் போட... வாரம் முழுக்க படித்தக் களைப்பு போக்க சைக்கிள் ஓட்டி என்ஜாய் பண்ண... ஓட்டத் தெரியும் என்பதற்காகவே சைக்கிள் ஓட்ட... 9த் 10த் காரனெல்லாம்... ஏதாவது புள்ளைக்கு ரூட் விட... என்று அவனவன் தேவை... அவனவன் பெடல் சத்தம்.

கொஞ்சம் பெரிய பையன்கள் சிறுவர்களை அதட்டி..." அடுத்த ரவுண்ட் எடுங்கடா..!" என்று சொல்லி முதல் ரவுண்டை லாவகமாக வாங்கிக் கொண்டு சிட்டாக பறப்பார்கள். சில விவரமான பையன்கள் முந்தின நாள் இரவே காசு கொடுத்து டோக்கன் எடுத்து வைத்து விடுவார்கள். விடிந்ததும் சைக்கிள் அவர்கள் காலில்... பூ போல மிதி படும்.

காத்திரு காத்திரு காத்திரு...

நானும் லக்கியும் பாலத்தில் அமர்ந்து பார்த்த விழி பூத்துக் கிடக்க... சைக்கிள் வந்து போகும் வழியில் வேர்த்துக் கிடப்போம். சைக்கிள் எடுத்தவன் நேரத்தை மறக்கலாம். சைக்கிள் வாடைக்குக் கொடுத்த "சிவப்பன்" கூட நேரத்தை மறக்கலாம். ஆனால் நாங்கள் மறக்க மாட்டோம்.

சரியாக ஒரு மணி நேரம் முடியும் நேரத்தில்... "சேப்ப்பண்ணா... டைம் ஆச்சு.. இன்னும் 'கொய்யாங்குடி' வரல என்று போட்டுக் கொடுப்போம். கொய்யாங்குடி வந்ததும் வராததுமாக 'சிவப்பன்' "ஒரு மணி நேரம் மூணு நிமிஷம் ஆச்சு. மூணு நிமிசத்துக்கு உங்கப்பனா காசு குடுப்பான்..?" என்று கத்தி சைக்கிளை வாங்கி அடுத்து கொக்கு போல காத்திருக்கும் எங்களுக்கு கொடுப்பார்.

'அண்ணா கம்பி வளைஞ்சிருக்கு.. பார்த்துக்கங்க..' என்று பட்டும் படாமல் போட்டு விட்டு அடுத்த நொடி ஒரு கால் பெடலில் இருக்க மறுகால் காற்றில் மல்லாக்க மாலையிடும். பின்னாலயே ஓடி வந்து போகிற போக்கில் ஆடாமல் அசையாமல் பின் சீட்டில் ஏறி அமர்வான் லக்கி. பஞ்சுமிட்டாய் கரைவது போல. அத்தனை இலகுவானது அந்த காட்சி.

நானும் லக்கியும் மாறி மாறி யார் முதலில் ஓட்டுவது என்று சைக்கிள் காலுக்கு கிடைப்பதற்கு முன்பே பேசி ஒரு ஒப்புதலுக்கு வந்திருப்போம். யார் ஓட்டினாலும் பின்னால் அமர்பவன் கூட சேர்ந்து பெடல் போட வேண்டும் என்பது கூடுதல் ஒப்பந்தம். ஆளுக்கு 50 பைசா சேர்த்து தான் ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய் கொடுத்து எடுத்திருக்கிறோம்.

காற்றில் இலையாவோம். கற்பனையில் இறகாவோம். இந்த சைக்கிள் பார்ட்னெர்ஷிப் நேரங்காலத்தைப் பொறுத்து மாறும்.

சில நாட்களில் பிரம்மதேசம். சில நாட்களில் மலை கருப்பசாமி கோயில். சில நாட்களில் ஊருக்குள் மட்டுமே.  பிரம்ம தேசம்... மலை கருப்பசாமி கோயில் போன்ற இடங்களுக்கு செல்கையில்... போகும் போது நான் ஓட்டுவேன். வரும் போது அவன் ஓட்டுவான்.

ஊருக்குள் ஓட்டுகையில் மாலினியிடம்... அமுதாவிடம்... சசியிடம்... ஸீன் போட்டு... சும்மா காரணமே இல்லாமல் கூட பெல் அடித்துக் கொண்டே போன காட்சியெல்லாம் வண்ணத்தில் கருப்பு வெள்ளை கிழித்து இன்றும் காண்கிறேன்.

சில நாள்களில் டயர் பஞ்சர் ஆகி விடும். அதற்கும் நாம் தாம் பொறுப்பு.  ஒரு நாள் டியூபே வெடித்து விட்டது.  அழுது கொண்டே வந்து... 'நாங்க ஒண்ணுமே பண்ணலனா... அதுவா வெச்சிடுச்சு' என்று சொல்லி கெஞ்சியதெல்லாம்.... சைக்கிள் தரையிறங்கிய சனி பிடித்த விடுமுறையின் கால பின்னோக்கி.

ஒரு நாள் சுடுகாட்டுக்கு செல்லும் முக்கில் சைக்கிளை கீழே போட்டு விழுந்து விட்டேன்.

"போச்சு இங்க விளுந்திட்டியா.. அவ்ளோதான்.." என்று அங்கிருந்த பெரியவங்க போட்டுத் தள்ள, ஒரு வாரம் காய்ச்சலில்... கனவில் கூட சைக்கிளைத் தொடாமல் கிடந்தது... பெல் சத்தமும் கேட்க வேண்டாத அமானுஷ்ய காலம்.

சிவப்பன் கடை சில நாட்களில் மதியம் வரைக்கும் புல் ஆகி இருக்கும். அந்த மாதிரி நாட்களில்.. 'ஷானவாஸ்' கடைக்கு சென்றால்... அவன் மதிக்கவே மாட்டான். சிவப்பனாவது 'அங்க உக்காரு' என்பான். இவனெல்லாம்... 'எந்திரிச்சு ஓடுங்கடா' என்கிற மாதிரியே தான் பார்ப்பான். நாங்கள் ஓரமாய் நின்று பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

மதியத்துக்கு மேல் போனா போகிறது என்று ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு..." இப்போ மணி 2. சரியா 2.55க்கு இங்க இருக்கனும். வண்டிக்கு ஏதாவது ஆச்சுன்னா அவளோ தான். ரெண்டு பேர் தான் உக்காரனும்... மூணு பேர் நாலு பேர் ஏற கூடாது..." பயங்கரமான கட்டளைக்கிடையே கிடைத்த சைக்கிளிலும் எங்களுக்கான சிறகு முளைத்து தான் இருக்கும்.

எவ்ளோ நேரம் காத்துக் கிடந்தாலும்.. சைக்கிள் கிடைத்த அடுத்த நொடியிலிருந்து அந்த பூமிக்கும் அந்த வானத்துக்கும் நாங்கள் தான் ராஜா. அதற்கு முதல் நொடி வரை கூட கேவலமாக கடைக்காரன் திட்டி இருப்பான். ஆனால் சைக்கிள் கிடைத்த மறுகணம் உலகத்தையே மன்னிக்கும் பெல் முளைத்த கடவுளாகி விடுவோம். கடவுளுக்கு லிப்ட் கொடுத்த நினைவும் கூட மங்கலாக இருக்கிறது.

சைக்கிள் ஓட்டி பழகிய புதிதில் முழு நாளும் பத்து ரூபாய்க்கு வாடைக்கு எடுத்து ஓட்டி ஓட்டி… டிக்கியில் கொப்புளம் வந்து பாட்டி மருந்து போட்டு விட்டதெல்லாம் சைக்கிளின் தீரா பயண குறிப்புகள்.

வாடகை சைக்கிள் தாண்டிச் சொந்த சைக்கிள், பைக், கார் என்று பயணங்கள் வெகு தூரம் வந்து விட்டன. ஆனாலும் அந்த வாடகை சைக்கிளுக்குக் காத்திருந்த நிமிடங்களில் உள் ஓடி அங்கும் இங்கும் பறந்த காலமறியா பறவை... இன்னும் காத்து தான் இருக்கிறது.

இதோ இப்போது கிடைத்து விடும் என்று ஆச்சரிய கண்கள் சிமிட்டவும் மறந்து அந்த கடையையே பார்த்தபடி அமர்ந்திருக்கும் பழுப்பு வெளியில்... குட்டி சைக்கிளில் ஒரு குட்டி பையன் சிறகு முளைக்க காற்றினில் பெடல் போட்டுக் கொண்டே இருக்கிறான்.

தூரங்கள் தான் தீர்வேனா என்கிறது....!

- கவிஜி

Pin It