nakulan writerகும்பகோணத்தில் பிறப்பு; டி.கே.துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன் இறுதிவரை வாழ்ந்தது திருவனந்தபுரத்தில். நீல. பத்மநாபன், ஆ. மாதவன், ஷண்முகசுப்பையா, க.நா.சு போன்றோர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இவர் "சி.சு. செல்லப்பா"வின் "எழுத்து" இதழில் தனது எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர்.

'சாந்தோம் கம்யூனிகேஷன் செண்டர் விருதும்', 'குமாரன் ஆசான்' விருதும், அமெரிக்க வாழ் தமிழர்களின் 'விளக்கு விருதும்' பெற்றிருக்கிறார் நகுலன்.

70-90 சிற்றிழக்கிய இதழ்கள் தம் முழு வீச்சை செலுத்தி இயங்கிய காலம். எழுத்து, ழ, கல்குதிரை, பயணம், மீட்சி, பாலம், மீள் சிறகு, காலச்சுவடு, முன்றில், பவளக்கொடி என பல சிற்றிதழ்கள் தங்கள் சிறு பத்திரிக்கை லட்சணங்களோடு இயங்கின. நனவோடை உத்தி, நான்-லீனியர், கட்டுடைத்தல், அமைப்பியல், மார்க்ஸிய அழகியல் என விரிவான தளத்தில் எழுத்து சோதனை நடைபெற்ற காலம் அது. அகவயம், புறவயம் என இரு துருவங்களாக இருந்த பார்வை 90களில் கவிதைத் துறையில் ஒன்றிணைந்தது.

இக்காலகட்டத்தில் மிகப்பெரிய சக்தியாக அலை வீசியவர் நகுலன். இவரிடம் மரபு சார்ந்த விழுமியங்கள் உள்ளார்ந்து எழுச்சி பெறுகிறது. இவ்வகையில் இவரை பிரமிளின் நீட்சியாகப் பார்க்கலாம். தனது 'மூன்று ஐந்து' கவிதைப் பரப்பில் புராண மாந்தர்களை புனைவாக்கிப் பார்த்தவர் நகுலன்.

மனதை குழந்தைமையின் மடமையுடன் வைத்திருப்பதென்பது அவ்வளவு எளிதல்ல; ஆனால் நகுலனிடம் அது சாத்தியப் பற்றிருந்தது. அத்தகைய உன்மத்த மேதாவிலாசத்தோடுதான் எழுத்துலகில் இயங்கினார் நகுலன். தன்னை அவர் எப்போதுமே ஒரு அறிவார்ந்த ஜீவியாக அவர் முன்னிறுத்திறுத்தியதே இல்லை. அவரிடம் காணக் கூடியது ஒரு குழந்தைத்தனமான மடமை; எழுத்துக்கான உயிர்த் தன்மை இந்த வேர்களில் தான் கூடு கட்டி வாழ்கிறது.

நவீன படைப்புலகில் எந்தக் கண்ணியின் தொடர்ச்சியும் இல்லாமல் தன் எழுத்து பயணத்தை நிகழ்த்தியவர் நகுலன்; தன்னைத் தேடி அலைவுறுற்ற மனதின் தேடலாகத்தான் இவர் எழுத்தோடு இழையோடினார். அபூர்வமான புனைவுப் பாதையின் வழியாக தனக்கான தனிப்பாதையை உருவாக்கிக் கொண்டார். மகோனதமான இவரின் தரிசனப் பதிவுகள்: ‘1965 - நிழல்கள்’; ‘1972- நினைவுப் பாதை'; ‘1974 – நாய்கள்’; ‘1978 - நவீனன் டைரி' ; ‘1983 - இவர்கள்'; ‘1992 - வாக்குமூலம்'; ‘2002 - அந்தமஞ்சள் நிறப் பூனைக்குட்டி'. ‘1981 - கோட் ஸ்டாண்ட் கவிதைகள்': ‘1987 - மூன்று ஐந்து': ‘1981 - இரு நீண்ட கவிதைகள்'; ‘2001 - நகுலன் கவிதைகள்.

இவரது சிறுகதைகள்: 'ஒரு ராத்தல் இறைச்சி', 'ஹிப்பீஸ்', 'ஒரு நாள்'. முக்கியத் தொகுப்பான 'குருஷேத்ரம்' 1968ல் வெளிவந்தது. 'ஜேம்ஸ் ஜாய்ஸ்;, டி,எஸ். எலியட், மற்றும் கே. அய்யப்ப பணிக்கர்' நூல்களை மொழிப் பெயர்த்துள்ளார். எஸ்.நாயர் எனும் புனைப் பெயரிலும் எழுதியுள்ளார். சுப்பிரமணிய பாரதி குறித்த "The little Sparrow" புத்தகம் தான் இவர் மொழி பெயர்த்த நூல்களில் முக்கியமானது.

ஆங்கிலத்தில் இவரது குறிப்பிடத்தக்க எழுத்துக்கள்: 'Words to the Wind', 'Non-Being' 'A Tamil Writers Journal I, II and III', 'Words to the Listenng Air'.

நகுலனின் உன்மத்த உலகத்தின் உச்ச சாதனயாகக் கருதப்படுவது அவரது "நினைவுப் பாதை". மிகப்பெரிய பிரமிப்பையும், தாக்கத்தையும் தமிழ் சூழலில் ஏற்படுத்திய ஒரு எழுத்தாளன் குறித்த நாவல் இது. நகுலனை நோக்கிய டி.கே. துரைஸ்வாமியின் பயணம் இந்நாவல்; தமிழிலக்கிய சூழலில் ஒரு மைல் கல்லாக கருதப்படுவது "நினைவுப் பாதை". 'ஜேம்ஸ் ஜாய்ஸும்'. டி,எஸ். எலியட்டும் இவருக்குள் சலனத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இவரது எழுத்தை வேறு ஒரு அழகியல் வடிவுக்கு, தனிப் பெரும் திசைக்கு நகர்த்திய ஆளுமை 'சாமுவெல் பெக்கட்'. கலை வாழ்வில் சின்ன சம்ரசமும் செய்து கொள்ளாத எழுத்தாளர் இவர்.

நகுலனின் 'நினைவுப் பாதை' நவீனன் என்ற படைப்பாளிக்கும் நகுலன் என்ற புனைப்பெயரில் உள்ள ஒரு மனிதனுக்கும் இடையில் நடைபெறும் உரையாடல்தான். இந்த அனாந்தரவாசியின் காதல் வேட்கையின் உருவகமாக நினைவுப் பாதையில் ஒளிரும் மாய ரூபமாக 'சுசீலா' தொடர்கிறாள். சுசீலா குறித்து சொல்லும் போது: "அவள் ஒரு ஒளிச்சுடர்; நான் உருட்டும் ஜபமாலை; நான் கண்ட தெய்வம்" என்கிறார் நகுலன். நகுலன் இந்நாவல் வழி உருவாக்கிய மொழி மற்றும் வடிவ புது மரபின் நீட்சிதான் அவரது பிற நாவல்கள் 'நாய்கள்' மற்றும் 'நவீனன் டைரி'.

இருபதாம் நூற்றாண்டில் 'சிமோன் வில்' அனேஸ்' இருவரும் எழுதிய ஆன்மீகம், இறையியல் மற்றும் தத்துவ கருத்தாக்க ரேகைகள் ஓடிய நாவல்களை இவர் படைத்தார்.

 "அதிர்கிற தந்தியில் தூசி குந்தாது" என்ற 'பிரமிளின்" கவிதை வரி போல மரணிக்கும் வரை இலக்கிய அதிர்வோடு வாழ்ந்தவர் நகுலன்.

தொன்ம நாழி ஓடுகளின் அடுக்காக நனவு மனமும், நனவிலி மனமும் சதா நிழலுரு எண்ண ஓட்டங்களாக நகுலனுக்குள் சலனித்துக் கொண்டே இருந்தது. இந்தச் சலனங்களுக்குள் தோய்ந்து வெளிப்படுபவைகள் தான் இவரது எழுத்துக்கள் என கருதலாம். திருமூலரின் திருமந்திர சாரமும், நவீன நனவோடை உத்தியும் முயங்கி பிரவாகமெடுக்கும் கலை ஓட்டம் தான் இவரது எழுத்துக்கள்.

இவர் தொகுத்து வெளியிட்ட "குருஷேத்ரம்" இன்றளவும் முக்கியத்துவம் வாய்ந்த நூலாக இருக்கிறது. திரை உலக மேதை 'இங்க்மெர் பெர்க்மென், ‘தார்க்கோஸ்கி’ குறித்து தனது சலனத்தை அடிக்கடி வெளிப்படுத்தி வந்தார் இவர். தார்க்கோவ்ஸிக்கு எளிதில் திறக்கும் மனக் கதவு தனக்கு அமையாதது குறித்த ஆதங்கம் இவருக்கு உண்டு. தன் மனக் கதவை சதா கொத்தி, திறந்துகொண்டு உள்புகுந்து சஞ்சரிக்க முயன்ற ஒரு மரங்கொத்தியாகத் தான் வாழ்ந்தார் நகுலன்.

திருவனந்தபுரத்தில் கௌடியார் பகுதியில் கோல்ஃப் லிங்க்ஸ் சாலையின் மரங்களடர்ந்த பசுமையான வெளியில் நகுலனின் அனாந்தர உலகம். அனாந்தரத்தின் உன்மத்த விழிப்பின் வழி தன் எழுத்துக்களைப் படைத்தவர் டி.கே.துரைஸ்வாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன். 1921 ஆகஸ்ட் 21ல் தாய்வழி ஊரான கும்பகோணத்தில் பிறந்தவர். தனது 14வது வயதில் திருவனந்தபுரத்துக்கு குடி பெயர்ந்த இவர் பின் தனது வாழ்நாள் முழுமையையும் திருவனந்தபுரத்திலேயே கழித்தார். கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனது அனாந்தர உலகிலேயே சஞ்சரித்தவர்.

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். தமிழ் முதுகலை படிப்பை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், ஆங்கில முதுகலைப் படிப்பை நாக்பூர் பல்கலைக்கழக்த்திலும் முடித்தவர். திருவனந்தபுரம் 'இவானியா கல்லூரி' ஆங்கிலத் துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தபடி நனவோடை உத்தியில் 'வெர்ஜீனியா வுல்ஃப்' எழுதிய நாவல்கள் குறித்த ஆய்வினைச் செய்தார்.

தி.ஜா. பாண்டியராஜூ என்பவர் ஒரு நகுலன் குறித்த ஆவணப் படத்தை நகுலனின் 82வது வயதில் இயக்கி இருக்கிறார். இந்த ஆவணப்பட்த்தின் முக்கிய அம்சம் நகுலன் வீட்டில் பணியாளராக இருந்து 'கோமதி' அம்மாளின் பதிவு. நகுலன் மீதான இவருடைய கரிசனத்தைக் காட்டும் இப்பதிவு நெகிழ்ச்சியளிப்பதாக அமைந்திருக்கும்.

தனது 38வயதில் எழுத்து இதழில் தனது கலைப் பயணத்தை தொடங்கிய நகுலன் அப்பொழுதே புராண கதை மாந்தர்களை தனது புனைவு எழுத்தில் நிழல் உயிர்களாக உலாவ விட்டவர். க.நா.சு மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். க.நா.சு. உரையாட மிகவும் பிரியப்பட்ட இருவர்கள் மௌனியும், நகுலனும்.

பாரதியாருக்கு 'கண்ணம்மா' போல் நகுலனுக்கு சுசீலா. அவரது அனாந்தர உலகின் உன்மத்த நிலையில் உலாவிய சுசீலாவின் பிரவாகமெடுத்த எழுத்து செயல்பாட்டோடு தான் வாழ்ந்தார் நகுலன்.

"பெண்ணின் ரூப சௌந்தர்யம் கலை எழுப்பும் ஏகாந்த நிலை சுவரில் ஒரு சில ந்தி". வேத, உபநிஷதங்களின் சாயல் படர்ந்த தரிசனங்களை நகுலனின் கவிதைகளில் காணலாம். நகுலனின் உலகில் சுசீலா ஒரு பிரபஞ்ச உருக் கொண்டு அலைவதை அவரது கவிதை வழி காணலாம்.

நகுலனின் 'நாய்கள்' நாவலின் முன்னுரையில் 'சுந்தரராமசாமி' இவ்வாறு எழுதியிருப்பார்: "தமிழ் நாவல் வடிவங்களின் எந்த வகைமைக்குள்ளும் அடங்க மறுக்கும் புதுக்குரல்கள் நகுலனின் நாவல்கள். மரபும் நவீனமும் இழையோடும் மொழி நடையில் வெளிப்படுகிறது 'நினைவுப் பாதை'. கதை கூறும் முறையிலும் பேசுவது போல் அனாயசமாய் எழுதிக் கொண்டு செல்வதிலும் வெளியாகும் நகுலனின் ஒரு அபோதமான கட்டற்ற தன்மை மிகுந்த" அழகாகப் படுகிறது".

கலை மேதமையின் வசீகர தனித்துவ அனாந்தர உலகின் உன்மத்தவாசி நகுலன்.

1994ல் கோணங்கி கொண்டு வந்த "கல்குதிரை" நகுலன் சிறப்பிதழ் "நகுலன்” குறித்த மிகப்பெரிய வசீகர அலையை நவீன எழுத்துலகில் உருவாக்கியது. "கல்குதிரையின்" நகுலன் சிறப்பிதழில் இடம் பெற்ற நேர்காணலும், "நகுலன் இறந்த பின்னும் ஒலிநாடா ஓடிக்கொண்டிருக்கிறது" என்ற கோணங்கியின் சிறுகதையும் அழுத்தமான பதிவுகளாக அமைந்தன.

அக்காலத்திய இளம் தலைமுறை விட்டில்களை ஈர்த்த விளக்காக ஒளி வீசி அவர்களுக்கு ஆதர்சன தர்னமாக விளங்கியவர் நகுலன். கோணங்கிக்கு நகுலன் மீது ஒரு அபரீதமான ஈடுபாடு ஏற்படக் காரணமாக இருந்தது நகுலனின் தனிமை தரிசனம், தனித்தன்மையான வாழ்வியல் பார்வை.

இவற்றையெல்லாம் விட கலை மீதான நம்பிக்கையும், கரைவுமே இருவருக்குள்ளும் நெருக்கத்தை உருவாக்கியது. நகுலனுக்கு ஒரு மாய வசீகர உலகம் உருவானது. நகுலனின் 'நாய்கள்', 'நவீனன் டைரி' ஆகிய நாவல்களின் கூட்டிலிருந்து தப்பித்த எழுத்தின் நீட்சியாக கோணங்கியின் கதைப் பரப்பைப் பார்க்கலாம்.

 “இப்பொழுதும்
அங்குதான்
இருக்கிறீர்களா?”
என்று
கேட்டார்
“எப்பொழுதும்
அங்குதான் இருப்பேன்”
என்றேன்.

 

இக்கவிதை காட்டும் உலகில்தான் நகுலன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாம்தான் "அங்கு" போக வேண்டும்.

"அம்பாளின் பல நாமங்களில் அபிதகுசலாம்பாளுக்கு நேர்த்தமிழ் 'உண்ணாமுலையம்மன். இட்டு அழைக்கும் வழக்கில் பெயர் 'அபிதா'வாய்க் குறுகியது. அபிதா = உண்ணா, இந்தப் பதம் தரும் பொருளின் விஸ்தரிப்பில், கற்பனையின் உரிமையில், அபிதா = 'ஸ்பரிசிக்காத, 'ஸ்பரிஸிக்க இயலாத' என்கிற அர்த்தத்தை நானே வரவழைத்துக் கொண்டேன்", என்று தனது அபிதா குறித்து லா.ச.ராமாமிர்தம் கூறுவது நகுலன் தனக்குள் ஏற்படுத்திக் கொண்ட 'சுசிலா' பிம்பத்துக்கும் பொருந்தும்.

ஏதோ வாழ்வின் ஒரு கணத்தில் நகுலன் சந்தித்து மையல் கொண்ட பெண்ணாகவும் சுசீலா இருக்கலாம்; அல்லது அவர் மனம் ஏற்படுத்திக் கொண்ட கற்பனையாகவும் இருக்கலாம்.

நேர் சந்திப்பில் கண்கள் சொருக லயிப்பின் உச்சத்தில் ல.சா.ரா. சொல்வார் : 'அ'வில் விலகி 'பி' யில் ஒட்டி மீண்டும் 'தா' வில் உதடுகள் விரியும் பதம் "அபிதா". அதே விதமான ஒரு உன்மத்த உலகத்தை நகுலனுக்குக் கொடுத்த பிம்பம் தான் 'சுசீலா'. எண்பத்தி ஆறு வயது வரையிலும் அவருக்குள் தனது மாயக்கரத்தால் தீண்டி எழுத்துலகில் இயங்க வைத்துக் கொண்டிருந்தது அந்தப் பிம்பம். படைப்பாளி தான் இறக்கும் வரை இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்ததைப் போல தன் வாழ்க்கையின் கடைசி நாள் வரை அதிர்கிற தந்தியாக இயங்கிக் கொண்டிருந்தவர் நகுலன்.

திருவனந்தபுரத்தில் அவரை நேரில் சந்தித்தவர்களுக்குத் தெரியும் அவர் படுத்திருக்கும் கட்டிலுக்குக் கீழ் எப்போதும் புத்தகங்கள் குவிந்து கிடக்கும். அந்தப் புத்தகக் குவியலுக்குள் கோணங்கி கொடுத்து விட்டுப் போன 'பாழி' நாவலும் இருந்தது.

வாசிப்பையும், தேடலையும் எண்பது வயதிலும் அவர் நிறுத்தவில்லை. அந்த வயதிலும் 'சுசிலா' ஒரு பிரகாச மந்திரமாக அவருக்குள் வாழ்ந்து கொண்டிருந்தாள். அந்த ஒளிச் சுடர் தான் அவரின் தனித்த உலகை இயக்கிக் கொண்டிருந்திருக்க வேண்டும். தன்னைச் சந்திப்பவர்களுடன் தனது எழுத்தைப் போன்ற நனவோடைத் தன்மையுடன் தான் பேசுவார்.

"எனக்கு யாருமில்லை
நான் கூட"
"வந்தவன் கேட்டான்
"என்னைத் தெரியுமா ?"
"தெரியவில்லையே" என்றேன்.
"உன்னைத் தெரியுமா? என்று கேட்டான்.
"தெரியவில்லையே" என்றேன்.
"பின் என்னதான் தெரியும்" என்றான்.
"உன்னையும் என்னையும் தவிர வேறு எல்லாம் தெரியும்" என்றேன்! "

 

நகுலனின் இக்கவிதைகளில் அத்வைத தத்துவம் இழையோடி நிற்கிறது. ஜீவாத்மாவை விலக்கி ஸ்தூலமற்ற உலகின் தரிசன உலகுக்குள் இவர் லயித்துப் போயிருப்பதை இக்கவிதையிலும் இன்னும் பிற கவிதைகளிலும் பார்க்க முடியும்.

"தனியாக இருக்கத்
தெரியாத, இயலாத
ஒருவனும்
ஒரு எழுத்தாளனாக
இருக்க முடியாது"

 

தனது தனித்திருத்தல் வாழ்வின் உணர்வு நிலை வெளிப்பாடாகத் தான் நகுலன் இக்கவிதையை எழுதியிருக்க வேண்டும்.

 "யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
எல்லாமும்"

 

நகுலனின் தனிமை வெளியில் எல்லாமும் உள்ளது. 'சுசீலா'வும் இருக்கிறாள். நகுலனும் இருக்கிறார். நாமும் போய் வந்து கொண்டிருக்கிறோம். அது ஒரு மர்மமமான அர்த்தப் பொதிவுள்ள தனிமை. இத்தனிமையின் புரிவு தான் நம்மை அவர் கவிதை நோக்கி நகர்த்தும்.

"கற்பனையின் எல்லைக் கோட்டில் நின்று கொண்டு வார்த்தைகளில் அடைபட மறுக்கும் கருத்துக்களையும் மடக்கிக் கொண்டு வரக்கூடியவர்" என்று மௌனி குறித்து புதுமைப்பித்தன் கூறும் வார்த்தைகள் நகுலனுக்கும் பொருந்தும். எழுத்து என்பது இவருக்கு பயணம் போல. வாழ்வின் சாராம்சத்தை தனக்குள் கிரகித்துக் கொண்டு தனக்கு உள்ளேயும், தனக்கு வெளியேயும் சதா பயணித்த கலைஞன் நகுலன்; ஆர்ப்பரித்து இரைச்சலிடும் கரையைக் கொண்ட கடலின் நடுப்பகுதியின் ஆழ்நிலை அமைதியை உள்வாங்கியவர் இவர்.

சங்க காலத்து மக்கள் காட்டு மரங்களில் உறைந்திருந்த அணங்கை உணர்ந்து வழிபட்ட உச்ச நிலை உணர்வைப் போன்றதுதான் நகுலன் ஏற்படுத்திக் கொண்ட 'சுசீலா' பிம்பமும். நகுலனின் தனித்த உலகின் இருண்மைக்குள் ஒரு ஒளிக் கீற்று சுசீலாவின் பிம்பம். கற்பனையாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு பிம்பமாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அவருக்கு அந்த பிம்பம் தேவைப்பட்டது; அவர் வாழ்வை அர்த்தப்படுத்தியது; உயிர் நிழலாகத் தொடர்ந்தது. அந்த நிழல் அப்படியே வாழட்டும்.

சுசீலா என்பது நகுலனின் மானசீக அக உணர்வின் தரிசனம்; உடல் இல்லாத ஒரு ஆத்மாவுடன் நகுலன் நடத்திய வாழ்நாள் பயணத்தின் சாட்சிக் குறியீடே சுசீலா.

அந்த அறையில் அவன் இல்லை
கோட்-ஸ்டான்ட் இருந்தது
அங்கு நால்வர் இருந்தனர்
அவர்கள்
புது-க்-கவிதையைப் பற்றி
அ-நாவலைப் பற்றி
அதைப் பற்றி
இதைப் பற்றி
புதிய முயற்சிகள் பற்றி
இப்படியாக இப்படியாக
என்னவெல்லாமோ
எதைப் பற்றியெல்லாமோ
எப்படியெல்லாமோ
பேசிக் கொண்டிருந்தார்கள்
கோட்-ஸ்டான்ட்
அவர்களைப் பார்த்துக்
கொண்டிருந்தது

 

"கோட் ஸ்டாண்ட்" கவிதைகளில் வரும் இவ்வரிகள் ஒரு அரூப உண்மையை வெளிப்படுத்துகிறது. கோட் ஸ்டாண்ட் நிழல் நிலையிலிருந்து நிஜ உயிராக மாறுகிறது. இவ்வாறு தான் நகுலனின் உலகில் ஒவ்வொரு பொருளும் ஒரு படிம நிலை பெற்று நம்மைக் கண்காணிக்கிறது.

நம்மோடு பேசுகிறது. நாம் என்னவென்றாலும், எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்; எழுதலாம். ஏன் நகுலனைப் பற்றிய விமர்சனம் கூட செய்யலாம். சுவாதீனமற்ற ஜடம் போல கோட் ஸ்டாண்ட் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

நகுலனின் தனிமைக்குள் இலக்கியம், வெற்றிலைச் சீவல், சூரல் நாற்காலி, பூனை, ஒரு குப்பி பிராந்தி, சுசீலா என ஒரு உலகம் இயங்கிக் கொண்டிருந்தது.

"பூனை இல்லாத போதும் அதன் சிரிப்பை கேட்க முடிந்தது; சுசீலா இல்லாத போதும் அவளோடு பேசிக்கொண்டிருக்க முடிந்தது அவரால். இது வேறு ஒரு நிலை. நோய்வாய்ப்பட்ட மூளை என்று தட்டையாக புறந்தள்ளிவிட முடியாத நிலை.

கோட் ஸ்டாண்ட்" கவிதைகள் போல நகுலனின் "மழை, மரம், காற்று" நெடுங்கவிதையும் வசீகரப் பரப்பைக் கொண்டதுதான். இக்கவிதை வரிசை 70களின் நடுப்பகுதியில் ஒரு மாத காலத்தில் எழுதப்பட்டவைகள். "மழை, மரம், காற்று" இப்படி ஆரம்பிக்கிறது:

"இப்பொழுது பிற்பகல் சரியாக மணி 4.30
நான் வெளித்திண்ணையில்
சற்றே சாய்வான நாற்காலியில்
என் முன்
I
கால்ஃப் மைதானம்
அதைச் சுற்றிச் செல்லும்
மதில்;

......

.......

என பின் விரியும் சூக்கும உலகில் மரம், செடி, காற்று, குழந்தைகள், தந்திக் கம்பம் எல்லாமும் காட்சிப்படிகிறது. கவிதை வரிசையில் முதல் கவிதை இப்படி முடிகிறது:

"நான் இன்னும்
என் நாற்காலியிலிருந்து
நகராமல் இருக்கிறேன்
ப்ரஷ்டே சொல்லட்டுமே
மழை இல்லாத
மரம் இல்லாத
இந்த நாயும் இந்தப் பேயும்
இல்லாத
ஒரு ஊரில்
நான் வாழவிரும்பவில்லை!"

"பிரக்ஞை"யில் நகுலன் படித்த பிரஷ்ட் எழுதிய ஒரு வரியின் நினைவு தான் அவரை முதல் கவிதையை இவ்வாறு எழுத வைத்திருக்க வேண்டும். "....மரங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது கொடுஞ்செயல்" என்பதே பிரஷ்ட்டின் கவிதை வரி.

இந்த நெடுங்கவிதை இப்படி முடிகிறது: 

"மணி 2 இந்தச் சுபதினத்தில் இந்தக் கவிதை
முற்றுப் பெற்றதைக் குறித்து நான் மகிழ்ச்சியுறுகிறேன்.
என் எதிரே திறந்த வெளி; சாந்தமான வெயில் ஒளி."

கவிதையோடு ஒரு குழந்தையின் விரல் பிடித்து நடப்பது போல நம்மை நடத்தி இவர் காட்சிப்படுத்தும் உலகின் மென் அதிவுக்குள் நாமும் மூழ்கி எழுவது உறுதி.

தூக்கம் வராத இரவுகளில் தான் 'Valium' மாத்திரை உபயோகிப்பது குறித்து அவரே வாய் மொழியாகக் கூறியுள்ளார். அப்பொழுது தோன்றும் விசித்திர உணர்வு நிலையிலிருந்து அறிவை உணரக்கூடிய உணர்வுகளை மட்டிமே தான் எடுத்துக் கொள்வதாக அவரே குறிப்பிட்டுள்ளார். எக்காலத்திலும் பிரக்ஞை தவறிய நிலையிலிருந்து அவர் செயலாற்றியது இல்லை.

"அகவெளிக் கலைஞர்" என 'லா.ச.ரா'வை அழைப்பதைப் போல நகுலனையும் அந்தப் பதத்தின் அதே அர்த்தப் பொதிவில் அழைக்கலாம். நனவோடை உத்தி மட்டுமல்லாது அகவிலகல் தன்மையும் கொண்ட எழுத்து முறை நகுலனுடையது என்று சொல்லலாம். சித்தாந்த மற்றும் உப நிடதங்களின் தொன்ம நிழல் படிந்த பார்வையின் செறிவை உள்ளடக்கியது நகுலனின் எழுத்துக்கள்.

இவரது சூக்கும உலகில் உலவும் மனிதர்கள் தூல தேகத்திலிருந்து சூக்கும தேகத்திற்கு பிரிந்து மீண்டும் தூல தேகத்துடன் தங்களை இணைத்துக் கொள்பவர்கள். குழந்தைமையும், மேதைமையும் கலந்த நகுலன் என்ற தொன்மக் கிழவன் பல புனைப் பெயர்களில் இயங்கியவர். கனவும், புனைவும் கொண்ட மொழிக்காக 80களின் சிற்றிழக்கிய எழுத்தாளர்கள், வாசகர்களால் கொண்டாடப்பட்டவர். இவரது "கோட் ஸ்டாண்ட்" கவிதைகள் மிகப் பெரிய கலை சலனத்தை ஏற்படுத்திய கவிதைகள்.

தான் செயல்பட்ட அனைத்து இலக்கிய வடிவங்களிலும் தன் சாயலைப்படர விட்டவர் நகுலன். அவரது புனைவுகளில் தொடர்ச்சியாக வரும் மிருக மற்றும் சொற்றொடர்களில் இவரது சாயைகள் பச்சை பனை ஓலை நரம்புகளில் சாமைகள் போல் ஒட்டிக் கொண்டு அசைவு காட்டும். நகுலனின் ஒட்டு மொத்த புனைவிலும் தோல்விதான் முக்கிய நிகழ்வு.

இது சுய வாழ்வின் தோல்வியல்ல; கலை மனதின் விழிப்பு நிலையில் பௌதீக உடலின் செயலற்ற தோல்வி. ஒருகணத்தில் பச்சைப் புழுவாகவும், மறுகணத்தில் சிறகடிக்கிற பட்டாம்பூச்சியாகவும் பார்க்கலாம் நகுலனை. இவரது புனைவுகளின் தீய சகுனங்கள் கவித்துவமாய் சொல்லப்படுவதைப் பார்க்கலாம்.

திருச்சூர் மிருகக் காட்சி சாலையில் உள்ள பாம்பு இவரது புத்தகங்களுக்குள் உலவுவதைப் பார்க்கலாம். நகுலனின் புனைவில் திருமந்திரம், திருக்குறள், பாதலேர், பத்திரகிரியார் ஆகியோர் நிழல் ரூபங்கொண்டு சாரைப்பாம்பு, மஞ்சள் நிறப்பூனை, மரங்கொத்தி, பச்சைக்கிளி, கருங்குருவி என உலாவுகிறார்கள்.

சிறுகதை, கவிதை, நாவல் என்று பல பரிமாண தளங்களில் தனது தனித்துவ பாணியில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக பயணம் செய்தவர் நகுலன். தன்னை தன்னிலிருந்து விலக்கிப் பார்த்தவர் நகுலன். ஆங்கிலத்திலும் தனது நவீனம் கலந்த தரிசன உணர்வை பதிவு செய்துள்ளார் நகுலன்.

80களில் மதுரை வடக்கு மாசி வீதியில், மணியம்மை பள்ளியில் இலக்கிய கூட்டங்கள் நடைபெறும். ஒரு முறை இந்நிகழ்வில் நகுலன் குறித்து சிறப்பான ஒரு உரை நிகழ்த்தினார் கோணங்கி. "காவ்யா" சண்முகசுந்தரம் தொகுத்த "இலக்கியத் தடம்" நூலில் க.நா.சு. முதற்கொண்டு பல இலக்கிய ஆளுமைகள் நகுலன் எழுத்துக்கள் குறித்து சிறப்பான பதிவுகளைச் செய்துள்ளனர்.

இளம் தலைமுறை படைப்பாளிகள் நகுலன் எழுத்துக்களின் வாசிப்பு வழி அவர் காட்டும் அக தரிசன உலகை புரிந்து கொள்ளும் பயணத்தின் மூலம் தங்கள் அகச்சித்திரத்தை புத்துயிர் அடையச் செய்யலாம்.

"தாகூரின் கவிதையில் உலகை எங்கெல்லாமோ தேடி அலையும் ஒருவன் இறுதியில் தன் குடிசை முன்னுள்ள புல்லின் நுனியில் படிந்துள்ள பனித்துளியில் காண்பதைப் போன்ற கலை தரிசனத்தை இவரது எழுத்துக்களில் காண முடியும் என்பது திண்ணம்.

- துரை. அறிவழகன்

Pin It