அன்பார்ந்த தோழர்களே!

இந்திய கிரிக்கெட் அணியின் பல வீரர்கள், கிரிக்கெட் வாரியத்தின் தொடர்ச்சியான புறக்கணிப்பின் காரணமாக, வேறு வழியேதும் இல்லாத நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து கனத்த இதயத்துடன் தாங்கள் ஓய்வு பெறுவதாக அறிவிப்பதை அவ்வப்போது நாம் பார்த்து வருகிறோம்.

maruthaiyan 220அதே போன்று கடந்த 40 ஆண்டுகளாக மகஇக என்ற அமைப்பின் பொதுச் செயலாராகவும், புதிய கலாச்சாரம் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றிய திரு.மருதையன் அவர்கள், தமது அரசியல் தலைமை கடந்த 4 மாதங்களாக தனது கடிதங்களுக்கு பதில் தராததுடன், கடந்த பிப்ரவரி-23ம் தேதி திருச்சியில் நடைபெற்ற ’அஞ்சாதே போராடு’ என்ற கார்ப்பரேட் காவிப் பாசிசத்திற்கு எதிரான மாநாட்டில் தன்னை பங்கேற்க விடாமல் புறக்கணித்த காரணத்தால் தான் மகஇக தலைமைப் பொறுப்பிலிருந்தும், அதிலும் குறிப்பாக அதன் அரசியல் தலைமையளிக்கின்ற அமைப்பின் தொடர்பிலிருந்து விலகிக் கொள்வதான அறிவிப்பை, அந்த அமைப்பின் அதிகாரப் பூர்வ வினவு இணையதளத்திலேயே வெளியிட்டு, தனது நேர்மையை நிரூபித்துள்ளார்! இவரோடு இவரின் சீடரான திருவாளர் நாதன் அவர்களும் தனது குருநாதரின் வழியையே பின்பற்றியுள்ளார்.

என்னதான் திரு.மருதையன் அவர்கள் விருப்ப ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தாலும் - தலைமையின் நெருக்கடியினால் என்றாலும் கூட - எப்படியும் சமூகம், அரசியல், சித்தாந்தம், கோட்பாடு, போர்த் தந்திரம், செயல்தந்திரம் ஆகிய பிரச்சனைகளில்தான் அவருக்கும், அரசியல் தலைமைக்கும் முரண்பாடுகளும், போராட்டங்களும் நடந்திருக்கும், அதைத்தான் அரசியல் தலைமை வெளிடாமல் மறைத்திருப்பார்கள். அதனால்தான் அவர் தலைமையின் அதிகாரத்துவப் போக்குக்கு எதிராக தனது பதவியை தூக்கி எறிந்திருந்தாலும், அந்த அறுசுவை - சமூகம், அரசியல், சித்தாந்தம், கோட்பாடு, போர்த் தந்திரம், செயல் தந்திரம் - விருந்தை நமக்கு நிச்சயம் தந்திருப்பார் என்ற அடக்க முடியாத ஆவலுடன் அவரின் அரசியல் ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருப்பார்கள்!

நாமும் அப்படி விருந்துக்கு சென்றவர்களின் முகங்களையே உற்று, உற்றுப் பார்த்தோம். நமது சிற்றறிவிற்கு எட்டாத செயல் அது என்பதால் கடைசி வரை எமக்கு புலப்படவே இல்லை! அவர்களில் யாரிடமாவது நேரில் கேட்கலாம் என்றாலும், பல ஆண்டுகளுக்கு முன்பே, இவர் உள்ளிட்ட தலைமையால், நாங்கள் ’பேசக்கூடாத தீண்டாமை’ தடை விதிக்கப்பட்டவர்கள் என்பதால், படி தாண்டா பத்தினிகள் அந்த அமைப்பினர் என்பதாலும், அவர்களின் புனிதத்தை கேள்விக்குள்ளாக்கும் தைரியம் எமக்கும் வரவில்லை.

எப்படியோ வினவு இணைய தளத்தையே பார்த்து விடுவது என்று ஒரு வழியாக முடிவுக்கு வந்தோம். ஆனால் அவரோ தனது 40 ஆண்டுகால அரசியல் போதை என்பதற்கு மாறாக, காலத்திற்கு ஏற்ற உணர்ச்சி என்ற புதிய வகையான போதையையும், தனி நபர்களுக்கிடையிலான முரண்பாடு என்ற அப்பளத்தை கொதிக்கும் எண்ணெயில் போட்டு சூடு குறையாமல் மொறுமொறுப்பான நொறுக்குத் தீனியாகவும் தந்திருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டோம்.

உணர்ச்சி என்ற போதையாலும், தனி நபர்களுக்கு இடையிலான விரோதம் என்ற சுவையாலும் தலைக்கேறிய போதையினால் நிலை தடுமாறிய போதும், அவரின் ரசிகர் பட்டாளம் சிந்தும் துயரக் கண்ணீரின் ஒவ்வொரு துளியோடும் ஒப்பிடும் போது, இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களின் பிப்.23 மாநாட்டின் உணர்ச்சி என்பது கடலில் கரைத்த பெருங்காயமாகி விட்டது.

சபாஷ் ச..ரியான போட்டி!

ஆனால், அவரிடம் அருசுவை விருந்தை எதிர்பார்த்த அவரின் அரசியல் ஆதரவாளர்கள்தான், பாவம் மிகுந்த ஏமாற்றத்திற்கும், குழப்பத்திற்கும் ஆளாகி விக்கித்து நிற்கிறார்கள்.

'இந்தா பாருங்கானும் ஓய், மத்தவா கருத்தப் பத்தி நீர் சொல்றது இருக்கட்டும், அந்தக் கட்டுரைய பத்தி ஒம்ம கருத்த நீர் ஒழுங்கா சொல்லுங்கானும்' என்று நீங்கள் சொல்வது எங்களுக்கும் புரிகிறது.

அமைப்பிற்கு உள்ளேயே, அதன் தலைமைக் குழுவிற்குள்ளேயே பல ஆண்டுகளாக நடந்து வந்துள்ள குடுமிப்பிடி சண்டையை திருவாளர் மருதையன் அவர்கள் நடுத்தெருவிற்கு கொண்டு வந்து விட்டார் என்பதைத் தான் அந்த அறிக்கை காட்டுகிறது. தண்ணிக்குள்ள போயி அத வுட்டாலும் வெளியே வந்துதானே ஆகனும். பெரியவா வுட்டா மட்டும் வெளியே வராம போயிருமா என்ன!

எந்த ஒரு பாட்டாளி வர்க்க அமைப்பின் தலைமையும் கூட்டுத்துவ தலைமையாகத்தான் இருக்கும், இருக்க முடியும். ஆனால் இந்த அமைப்பின் தலைமை அப்படிப்பட்டது இல்லை என்பதால்தான், ஜனநாயகமே இல்லாத மத்தியத்துவம் மட்டுமே கோலோச்சும் அமைப்பு என்பதினால்தான், எந்த ஒரு செயலின் வெற்றி, தோல்வி, சரி, தவறு ஆகிய அனைத்திற்கும் கூட்டுப் பொறுப்பேற்காமல், தனி நபர்களின் சிந்தனா முறை, செயல்பாடுகளின் விளைவுகளாகவே பார்க்க இவர்களைத் தூண்டுகிறது. இக்கேடுகெட்ட பார்வையின் வெளிப்பாடுதான் இவ்வறிக்கையில் அடி முதல் நுனி வரை நீக்கமற நிறைந்துள்ளது.

1980களின் மத்தியில் இந்த அமைப்பின் அரசியல், அமைப்பு, கோட்பாட்டு ஆவணங்கள் உருவாக்கப்பட்டு, அதனடிப்படையில் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தப் போவதாக கூறிக் கொண்டார்கள்.

ஆனால் இந்த நிலைப்பாட்டை எந்த ஒரு நிலையிலும், தமது அன்றாட செயல்பாடுகளோடு இணைத்ததே இல்லை. ஆண்டு இலக்கு, மாதாந்திர வேலைத் திட்டம் ஆகிய எதுவுமே மேற்கண்ட இலக்கை கொண்டதாக இருந்ததில்லை. இதன் காரணமாக கடந்த 40 ஆண்டு காலத்தில் ஒரே ஓர் ஆண்டில் கூட தமது வேலைத் திட்டத்தில் தோல்வியைத் தவிர, வெற்றி என்ற சுவையை இவர்கள் சுவைத்ததே கிடையாது. இதைப் பற்றி அவர்கள் பரிசீலனை செய்ததும் கிடையாது. வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு வேலைத் திட்டத்தை போட்டிருந்திருந்தால் தானே, ஏன் தோல்வி அடைகிறோம் என்பதைப் பற்றி பரிசீலிக்க வேண்டிய தேவை எழுந்திருக்கும்? தோல்வி அடைவதற்காகவே போடப்பட்ட திட்டம் தோல்வியையே தழுவியதில் அவ்வமைப்பின் தலைமை வெற்றி பெற்றுள்ளது என்பதை நாம் நேர்மையாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்!

இத்தோல்விகளைப் பற்றி கேள்வி எழுப்பியவர்களையும், எழுப்புகிறவர்களையும் சீர்குலைவுவாதிகள், கலைப்புவாதிகள் என்ற பட்டங்களை எப்போதுமே தயார் நிலையில் வைத்திருந்து, அவர்களுக்குப் பரிசாக அளிப்பார்கள். கேள்வி எழுப்பாத அணிகளை தோல்விக்கான குற்றவாளிகளாக ஆக்குவார்கள். அணிகளை குற்ற உணர்ச்சி என்ற புதைகுழிக்குள் தள்ளிவிட்டு, அவர்களை தமது கொத்தடிமைகள் ஆக்குவார்கள். இந்தப் பண்பையே பாட்டாளி வர்க்கப் பண்பு என்று புகழாரம் சூட்டுவார்கள்.

அவ்வமைப்பின் அரசியல், சித்தாந்த ஆவணங்கள் இந்தியாவின் சமூக, பொருளாதார அடிப்படைகளை பருண்மையாக ஆய்வு செய்து உருவாக்கப்பட்டவைகள் அல்ல. அப்படியொரு ஆய்வு என்பதையே தமது மவுனம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளின் மூலம் நிராகரித்தே வருபவர்கள்.

தமிழகத்திலுள்ள மா-லெ குழுக்களிலேயே தாங்களே அதிக ஆட்களைக் கொண்ட பலமான அமைப்பு என்பதை வெளிப்படுத்திக் கொள்ளும் வகையிலான போராட்ட வடிவங்களையே கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமது நடைமுறையாகக் கொண்டிருப்பவர்கள்.

ஆட்களின் எண்ணிக்கையை அடிப்படை இலக்காக கொண்ட பிறகு அரசியல் சித்தாந்தத்திற்கான தேவை எதுவும் எழப் போவதில்லை. மாறாக புரட்சிகர வாய்ச் சவடால்கள், எழுத்துக்கள், இவைகளை பரவலாகக் கொண்டு செல்லத் தேவையான பொருளாதார பலம் ஆகியவையே போதுமானவைகளாக, தவிர்க்கவியலாத தேவையாகிப் போனதில் அதிசயிக்க ஏதுமில்லை!

மொத்தத்தில் கார்ப்பரேட் நிறுவனக் கட்டமைப்பு முறையை நிலை நாட்டுவதற்கான அனைத்து வகையான இழிவான வழிமுறைகளையும் கையாளத் துவங்கி விட்டனர். குறிப்பாக சொல்வதென்றால் சொத்துடைமை வர்க்கங்களின் கூலிப்படையாகவே மாறி விட்டுள்ளனர். அதாவது லாப நோக்கும், மேலாதிக்கம் செலுத்துவதுமே அமைப்பின் அடிப்படை பண்பானது. இது தவிர்க்கவியலாமல் தலைமையின் மும்மூர்த்திகளிடையே பகை முரண்பாட்டையும், அணிசார்ந்த பூசலையும் தவிர்க்க இயலாததாக்கியது.

சொத்து சேர்ப்பது, சுகபோக வாழ்வு, நுகர்வுப் பண்பாடு உள்ளிட்ட சொத்துடைமை வர்க்கப் பண்புகளும் இயல்பானவைகளாக உள்வாங்கிக் கொள்ளப்பட்டன. இப்பண்புகளின் பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடுதான் திருவாளர் மருதையனின் அறிக்கையாகும்.

"ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்து கொண்டிருக்கிறது" என்ற ஆசான் மாவோவின் சித்தாந்த வரையறுப்பின் படி, இந்த அறிக்கையின் பின்னால் மட்டுமல்ல... முன்னாலேயே, வெளிப்படையாகவே தெரிவதை சித்தாந்தக் குருடர்களால் மட்டுமே அடையாளம் காண முடியாமல் இருக்க முடியும். இவரின் சித்தாந்தத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட அவரின் சீடர்களுக்கு இதுவே மிகச் சரியான செயல்பாடாகும்.

இந்திய சொத்துடைமை வர்க்கங்களின் பண்பாடாகிய பார்ப்பனியப் பண்பாடே அவ்வமைப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கான ஆதாரமாகவும், படிநிலை வரிசையிலான ஏற்றத்தாழ்வான, ஆளுக்கொரு நீதி என்பதே தலைமையின் பண்பாகவும் இருந்து வருவதற்கான ஒப்புதல் வாக்குமூலமாகவும் அவ்வறிக்கை திகழ்கிறது. இவ்வளவு எளிமையாக, நம்மைப் போன்ற பாமரர்களும் புரிந்து கொள்ளும் மொழியில் வழங்கிய திருவாளர் மருதையன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த 40 ஆண்டுகளாக தலைமையின் அதிகாரத்துவத்திற்கும், தவறுகளுக்கும் எதிராகப் போராடியவர்களையும், குரல் கொடுத்தவர்களையும், கொடுப்பவர்களையும் சீர்குலைவுவாதிகள், கலைப்புவாதிகள் என்று சாடிய, சாடும் திருவாளர் மருதையன் அவர்கள், அப்படிப்பட்டவர்களை ஒதுக்குவது, ஓரம் கட்டுவது, அவதூறு பரப்புவது, நெருக்கடிகளில் சிக்க வைப்பது, காட்டிக் கொடுப்பது - இவைகளை ரசித்து, ரசித்து செய்து, அதன் மூலம் பல நூற்றுக்கணக்கான தோழர்களை மன நோயாளிகளாக்கி குதூகலித்த தலைமையின் ஓர் அங்கமாக இருந்து விட்டு - அவரின் மொழியிலேயே கூறுவதென்றால் அதன் முகமாகவே இருந்து விட்டு - இப்போது, தான் அப்படி ஆக்கப்பட்டு விட்டதாக ஒப்பாரி வைக்கிறார். மற்றவர்களை அப்படி ஆக்குவதற்காகவே மட்டுமே நான் உருவாக்கப்பட்டவன், உள்ளாக்கப்படுவதற்கு படைக்கப்பட்டவன் இல்லை என்று தனது அவதாரத்தின் சிறப்பை விளக்கியுள்ளார்.

இதையும் மீறி அப்படி என்னை உள்ளாக்க எவராவது முயற்சித்தால், மும்மூர்த்திகளில் நானே முதன்மையானவன் என்பதை நிரூபிக்க மற்றொரு அவதாரத்தையும் எடுத்து, எஞ்சிய தலைமையை என் காலில் விழ வைப்பேன் என்றும் கொக்கரித்திருக்கிறார்.

கடந்த 40 ஆண்டுகளாக அணிகளை சிந்தனை ரீதியாக காயடிக்கும் கலையைப் பற்றியே சிந்தித்து, சிந்தித்து நிபுணர்களாகத் திகழ்ந்தவர்கள், தம்மையே அறியாமல் அரசியல் சித்தாந்த ரீதியாக தம்மையே காயடித்துக் கொண்டு விட்டார்கள் என்பதால்தான், அது பற்றி தலைமைக்குள் முரண்பாடு எதுவும் எழவில்லை. அப்படி எதுவும் நடந்ததாக அவரும் வெளிப்படுத்தவில்லை.

திருவாளர் மருதையனின் அறிக்கை அவ்வமைப்புத் தலைமையின் அரசியல் ஓட்டாண்டித்தனத்தின் நகலுமாகும்.

அவ்வமைப்பின் தலைமை பாட்டாளி வர்க்க நலனையோ, சமூக மாற்றத்தையோ, புரட்சிகர இலக்கையோ கொண்டதல்ல. மாறாக ஆளும் வர்க்கங்களின் கூலிப்படை என்பதை இனியாவது அவ்வமைப்பிலுள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். எனவே சமூக மாற்றத்தையும், புரட்சியையும் நேசிக்கும் அனைவரும் கரம் கோர்ப்போம் வாரீர்!

- சூறாவளி

தொடர்பு எண்: 9842529188

Pin It