மனித சமுதாய வரலாற்றில், சமயம், பண்பாடு, அரசியல் முதலிய காரணங்களால் செயல்படுத்தப்பட்டு வந்துள்ள பல கருத்தாக்கங்களை இன்றைய சமூகச் சிந்தனைகள் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன. மனித இனத்தில் சாதியின் அடிப்படையிலும், இனத்தின் அடிப்படையிலும் ஆதிக்கச் சமூகத்தினரால் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகளையும், புனையப்பட்ட கருத்தமைவுகளையும் புரிந்து கொள்வதற்கு இன்றைய புதிய சிந்தனைகள் அடித்தளமாய் அமைந்துள்ளன. இப்புதிய சிந்தனைகள் வழிப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றே பெண்ணியமாகும். பெண்களுக்குச் சமூகத்தில் உரிய இடம் மறுக்கப்பட்டதை வெளிப்படுத்தி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. ஆண்- பெண் இருப்பு சமூகத்தில் எப்படி கட்டமைக்கப்படுகிறது? என்பதே பெண்ணியத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது.

Lady cookingஇந்தச் சமுதாயம் ஆணை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறது? பெண் எங்கு தடை செய்யப்படுகின்றாள்? எங்கு அவள் உரிமை மறுக்கப்படுகிறது? எங்கு அவளுடைய சுதந்திரம் பறி போகிறது? என்ற கேள்விகளுக்குப் பதில் ஒரு ஆணை மையமாகக் கொண்டே கூற முடிகின்றது. ஏனென்றால் பெண் என்பவள் பல நூற்றாண்டுகளாக ஆணின் பார்வையிலேயே சித்தரிக்கப்பட்டவள்.

இன்றைய சமூக அமைப்பில் பெண்களை அடிமைப்படுத்துவதற்கு முதன்மையாகப் பயன்படுவது குடும்பம் என்ற அமைப்பு எனப் பெண்ணியவாதிகள் நம்புகின்றனர். குடும்பம் என்பது ஒரு அதிகார உறவுகளின் படிநிலை கொண்ட (தலைவன், தலைவி, குழந்தைகள்) ஆணாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு அமைப்பு முறையாகும். காலம் காலமாகக் குடும்பச் சூழலில் சிக்கி வீட்டு வேலைகளில் உழன்று கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணும், அதிலிருந்து விடுபட முடியாதபடி பொருளாதார உரிமையின்மை, பெற்றோரைச் சார்ந்து வாழும்படி கட்டமைக்கப்படும் சமூக ஒழுக்கம், பெண்கள் தன்னெழுச்சி பெறுவதை அனுமதிக்காத சாதிய குடும்ப அமைப்பு முதலியவற்றின் காரணமாக பெண்ணின் சுய அறிவும், இயல்பும் சுதந்திரமானதோர் ஆளுமை பெற்று விடாதவண்ணம் கணவனும், புகுந்த இடமும் அடக்குகின்றன.

‘குடும்பம் என்பது விலங்கு. அடிமை நிலையை மட்டுமன்று நிலவுடைமையின் அடிமைத்தளத்தையும், உள்ளடக்கியது. அத்தோடு சமூகத்திலும், அரசியலிலும் பின்னர் ஏற்படப்போகும் பகைமை அனைத்தையும் உள்ளடக்கிய சிறுவடிவம் குடும்பமே’ என்று காரல் மார்க்ஸின் மேற்கோளைக் சுட்டிக்காட்டி பெண் விடுதலைக்கு குடும்பம் என்ற நிறுவனமே தடையாக இருப்பதாக வாதிடுகின்றார் செ. கணேசலிங்கன்.

இன்றைய சமூக அமைப்பின் அடிப்படை அலகாகக் குடும்பம் என்ற நிறுவனம் செயல்படுகின்றது. இச்சமூகம் தொடர்ந்து தன்னை மறு உற்பத்தி செய்து கொண்டு நிலை பெறுவதற்குக் குடும்பம் என்ற நிறுவனம் அவசியமாகின்றது. தந்தை வழிச்சமூகத்தின் அதிகார அமைப்புக்குள் அடங்கிய புனிதத்தன்மை வாய்ந்த நிறுவனம் குடும்பமாகும். மரபு ரீதியான கருத்தாக்கங்கள் ஆணாதிக்கச் சமூக அமைப்பில் பெண்கள் தான் ஓர் ஒடுக்கப்படுகின்ற ஜீவியாக இருப்பதை உணராமல் தடுக்கின்ற திரைகளாக அமைகின்றன.

‘பிள்ளை பெறுதல், ஆக்கிப் போடுதல்’ என்பதே பெண்களின் வாழ்வியல் கடமை என்று சமூகத்தால் விதிக்கப்பட்டு விட்டது. இதில் ஆக்கிப் போடுதல் என்னும் கடமையே பெண்களின் இருப்பிடத்தைத் தீர்மானிக்கின்றன. இதனால் ஆக்கிப் போடுதலோடு தொடர்புடைய ‘சமையலறை’ பெண்களின் இருப்பிடமாகக் கருதப்பட்டன. சமையலறை பெண்களுக்கு உரித்தாகியும் ஆண்கள் நுழையக் கூடாத இடமாகவும் தீர்மானிக்கப்பட்டன. இன்றைய நிலையில் பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரச் சுதந்திரம் பெற்ற நிலையிலும் சமையலறைப் பெண்களுக்குரிய இடமாகவே கருதப்படுகின்றன என்பதே யதார்த்தம் ஆகும்.

பெண்கள் வாழ்வில் சமையலறை பெரும் இடம் - ஆர்.சூடாமணி, அம்பை, திலகவதி, வாஸந்தி, தமயந்தி ஆகிய பெண் எழுத்தாளர்களால் சிறுகதைகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இதில் அம்பையின் ‘வெளிப்பாடு’, ‘ஒரு வீட்டின் மூலையில் சமையலறை’ ஆகிய சிறுகதைகள் ‘சமையலறை’ என்னும் தளத்தையே அடிப்படையாகக் கொண்டு கதைகள் அமைந்துள்ளது. ‘வெளிப்பாடு’ - சிறுகதைகளில் பெண்கள் பற்றிய ஆராய்ச்சிக்காகச் செய்திகள் சேகரிக்கும் அறிவு ஜீவிப்பெண், தாமிரபரணிக் கரையிலுள்ள சிற்றூரில் வசிக்கும் ஐம்பது வயதுப் பெண் - இருபது வயதுப் பெண் (திருமணத்திற்கு முன், பின்) ஆகிய இருநிலைகளிலும் உள்ள பெண்களை சந்திக்கும்போது கிடைக்கும் அனுபவமே பதிவு செய்யப்பட்டுள்ளது. புள்ளை பெறுதல், ஆக்கிப் போடுதல் என்பதையே கடமையாகக் கொண்டு செயல்படும் பெண்களையே இக்கதை படம் பிடித்துக்காட்டியுள்ளது.

‘பத்து வயசு தொடங்கி சுடறேன். நாப்பது வருஷத்துல ஒரு நாளைக்கு இருபது மேனிக்கு எவ்வளவு தோசை... அம்மம்மா... என்கிறாள். ஒரு வருடத்துக்கு ஏழாயிரத்து முந்நூறு தோசைகள். நாற்பது வருடங்களில் இரண்டு லட்சத்துத் தொண்ணூற்றிரண்டாயிரம் தோசைகள். இது தவிர இட்லிகள், வடைகள், அப்பங்கள், பொரியல்கள், குழம்புகள். இரவில் அவளுடைய கையை எடுத்து முகத்தில் வைத்துக் கொண்டாள். சோற்றுமணம் அடித்தது. புல யுகங்களின் சோற்று மணம்’ என்று குறிப்பிடுகின்றார் அம்பை.

இக்கதைக் கருவினையே மற்றொரு பார்வையில், ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ கதையில் கூட்டுக்குடும்ப வாழ்வில் பெண்கள் சமையலறையில் முடங்கிக் கிடக்கும் நிலையை இக்கதை விளக்குகின்றது. பெண்கள் சமையலறையில் ஆதிக்கம் செலுத்துவதையே பெருமையாகக் கருதுகின்றனர். கூட்டுக்குடும்ப வாழ்வில் பெண்களின் அதிகாரம் சமையலறையில் நிலவுவதாகக் கருதும் பெண்களின் அறியாமை நிலை, தலைமுறை தலைமுறையாக அடிமைப்படுத்தப்படும் பெண்கள் நிலை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘சமையலறை என்ற பௌதிக விவரம் அவர்களைப் பாதிக்கவில்லை. அப்படிப்பட்ட ஒன்று இல்லாதது போல் இருந்தார்கள், அவர்கள் கூட்டுக் குடும்ப வீடுகளில் பரந்த கல்தரை முற்றம், கூடம் இவற்றைத் தாண்டிய இருள் மூலை சமையலறை. பூஜ்யமாய் விளக்கு எரியும் அங்கு. முக்காடு அணிந்து, அழுத்தமான வண்ணப் பாவாடைகள் இருளை ஒட்டியே இருக்க, பெண்கள் நிழல்களாய்த் தெரிவார்கள் அந்த அறையில். அறைந்து சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டோ. அடுப்படியில் கும்மென்று மணக்கும் மஸாலா பருப்பைக் கிளறியவாறே.’ ஏன்று பெண்கள் வாழ்வு சமையலறையைச் சார்ந்து அமைவதாக விளக்கப்பட்டுள்ளது.

மேலும்,“சமையலறையை ஆக்கிரமித்துக் கொள், அலங்காரம் செய்து கொள்ள மறக்காதே, இரண்டும் தான் உன் பலம். அதிலிருந்து தான் அதிகாரம’; என்று அடுத்த தலைமுறையினருக்கு வலியுறுத்துகின்றனர். இதில் பெண்களின் சமையலறை வாழ்வையும், சமையலறையையே தன் அதிகாரமாக கருதும் பெண்களின் அறியாமையையும் அம்பை படம் பிடித்துக்காட்டியுள்ளார். மேலும் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையையும், சமையலறையையே உலகமாகக் கருதியதால் சாதிக்க முடியாமல் போய் விட்ட நிலையையும் சுட்டிக்காட்டியுள்ளார் அம்பை.

மட்டன், புலவு, மஸாலா, பூரி, ஆலு, தனியாப்பொடி, உப்பு, சர்க்கரை, பால், எண்ணெய், நெய் என்று யோசித்திருக்காவிட்டால், “ஒரு வேளை நீங்கள் ஆப்பிள் விழுவதைப் பார்த்திருக்கலாம். தண்ணீர் கெட்டிலின் மூக்கு நுனி ஆவியைப் பார்த்திருக்கலாம். கைலாச பர்வத்தில் அமர்ந்து காவியம் எழுதியிருக்கலாம் குகைகளுக்குள் ஓவியம் தீட்டியிருக்கலாம. போர்கள் ,சிறைகள், தூக்கு மரங்கள், ரஸாயன யுத்தங்கள் இல்லாத உலகத்தை உண்டாகியிருக்கலாம்.” என்று அம்பை பெண்கள் சமையலறையிலிருந்து விடுபட வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். வெளிப்பாடு கதையில் பெண்களின் சமையலறையோடு ஒட்டிய வாழ்வினைச் சமூக யதார்த்தத்தோடு விளக்கினாலும் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை கதையில் சமையலறை வாழ்வோடு பெண்களுக்கு மனித வாழ்வின் அவசியத்தையும், பெண்களின் அறியாமை உணர்வினையும் அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதையும் அம்பை விளக்கியுள்ளார்


- மீ. அஸ்வினி கிருத்திகா

Pin It