தமிழ் மிகவும் தொன்மை வாய்ந்த மொழி. நவீன இந்திய மொழிகளின் இலக்கியங்களை விடத் தமிழ் இலக்கியம் ஆயிரம் ஆண்டுகட்கு மேலாக முந்தியது. மிகவும் முந்திய தமிழ்க் கல்வெட்டுகளில் இருந்து பார்க்கும் பொழுது, மிகப் பழைய இலக்கணமான தொல்காப்பியத்தின் சில பகுதிகள் ஏறத்தாழ கி.மு. 200 ஆண்டு முந்தியது என்பதை அறிய முடிகின்றது. தமிழின் மாபெரும் இலக்கியப் படைப்பானப் பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் இந்த யுகத்தின் முதல் இரண்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையாகும். இத்தகைய சிறப்புப் பெற்ற தமிழ் மொழியின் செவ்வியல் தன்மையைப் பற்றியும், ‘முத்தொள்ளாயிரம்’ என்னும் இலக்கிய வடிவத்தின் செவ்வியல் கூறுகளையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

செம்மொழி - விளக்கம்:

இன்று ‘செம்மொழி’ என்ற சொல்லைச் சிலரும், ‘செவ்வியல் மொழி’என்ற சொல்லைச் சிலரும் பயன்படுத்துகிறார்கள். பொதுவாகத் தமிழ் மொழியை அதன் தரத்தின் அடிப்படையில் குறிப்பிடும் பொழுது முக்கியமாக மூன்று சொற்கள் இன்று வழக்கில் உள்ளன. அவை பின் வருமாறு:

1) செந்தமிழ்
2) செம்மொழி
3) செவ்வியல் மொழி.

இவற்றுள் முதல் இரண்டும் பழமை சார்ந்த வழக்குச் சொற்களாகும். செவ்வியல் மொழி என்பது அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டு வழக்கில் உள்ள சொல் ஆகும்.

கிளாசிக்கல்’ எனும் ஆங்கிலச் சொல்லின் தமிழ் மொழிப் பெயர்ப்பே ‘செவ்வியல்’ என்பதாகும். இதைப் போல ‘கிளாசிக்கல் லிட்ரேச்சர்’ என்பதைத் தமிழில்‘செவ்விலக்கியம்’ எனப் பெயர்த்தலே பொருத்தமாகவும் பொருள் பொதிந்ததாகவும் அமையும் என்கின்றார் மணவை முஸ்தபா. (செம்மொழி உள்ளும் புறமும், 2004, ப.6)

‘செம்’என்பது ‘செம்மை’ என்பதன் குறுக்கமாகும். ‘செம்மொழி’ எனில் ‘செம்மையாய் அமைந்த மொழி’ என்பது அதன் பொருளாகும். இதே கருத்தை, உணர்வை வெளிப்படுத்தும் வகையில் ‘செம்மொழி மாதவர்’ (சிலம்பதிகாரம். 30-32), ‘செம்மொழி’ (அகநானூறு. 349), ‘செந்தமிழ் நிலத்து வழக்காடு’ (தொல். எச்சவியல். 2) எனப் பாடல்களில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம். ‘செந்தமிழ் என்பதற்குத் தமிழ்ப் பேரகராதி ‘கலப்பற்ற தூய தமிழ்’ எனப் பொருள் விளக்கம் தந்து தெளிவுப்படுத்துகிறது. இதே பொருளிலும், உணர்விலும் தான் பரிதிமாற் கலைஞரும், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரும், தமிழை ‘கிளாசிக்கல் லாங்குவேஜ்’ எனும் பொருளில் குறிக்க ‘செம்மொழி’ (செம்மையாய் அமைந்த மொழி) எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். இன்னும் அதனுடைய தனித்தன்மைகளை முழுமையாய் வெளிப்படுத்தும் வகையில் தமிழ் ‘உயர்ந்த மொழி’, ‘தனித்தன்மையுடைய மொழி’, ‘செம்மையாய் அமைந்த மொழி’ என குறிக்கும் வகையில், ‘உயர் தனிச் செம்மொழி’ எனக் குறிப்பிடலாயினர் என்று மணவை முஸ்தபா சுட்டிக் காட்டியுள்ளார்.( செம்மொழி உள்ளும் புறமும், 2004, ப.8)

‘செவ்வி’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு ‘இடஞ்சுட்டல்’, ‘காலம்’, ‘சமயம்’, ‘தருணம்’ என ‘தமிழ் லெக்சிகன்’ பொருள் கூறுகிறது. இதே பொருளில் தமிழ் இலக்கியங்கள் பலவும் ‘செவ்வி’ என்ற சொல்லைக் கையாண்டுள்ளன. ‘கதங் காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி’ (குறள். 130) எனத் திருக்குறளும், ‘வண்டுறைக் கமலச் செவ்வி வான்முகம்’ (கம்பராமாய..சூர்ப். 2) எனக் கம்பராமாயணமும் குறிப்பிடுகின்றன. இவற்றிலெல்லாம் ‘செவ்வி’ எனும் சொல் சந்தர்ப்பம், தருணம், சமயம் எனும் பொருளிலேயே கையாளப் பட்டுள்ளதைக் காணலாம்;.

செம்மை: சிவப்பு,செவ்வை,நேர்மை,மனக்கோட்டமின்மை,பெருமை,ஒற்றுமை,சுத்தம்,அழகு.
செவ்வை: நேர்மை,மிகுதி, வழி முதலியவற்றின் செப்பம், சரியான நிலை
செவ்விய: செம்மை,நேர்மையான ( செவ்வியல் மொழி என்ற சொல் இல்லை). என்றும்,
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி:
செம்மொழி: செம்மொழி என்ற சொல் இந்த அகராதியில் இல்லை.
செம்மை : பண்பட்ட நிலை, சிறப்பு,உயர்வு, நேர்மை.
செவ்வை: சீர்மை, சிறப்பு.
செவ்வியல் : மரபு வழிப்பட்ட கலை, இலக்கியம் (ஊடயளளiஉயடளைஅ) என்றும் பொருள் தருகின்றன.

‘செவ்வியல் மொழி’ என்ற சொற்றொடரை, தமிழின் தகுதி பற்றிப் பயன்படுத்தி, முதலில் குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர் எனத் தன்னை அழைத்துக் கொண்ட வி.கோ.சூரிய நாராயண சாஸ்தியார் ஆவார். ‘தமிழ் மொழியின் வரலாறு’ என்ற தமது நூலில் 1887 - இல் ‘வடமொழி, இலத்தீன்,கிரீக்கு முதலியன போலத் தமிழ் மொழியையும் உயர்தனிச் செம்மொழியாகுமாறு சிறிது காட்டுவோம்;’ (ப.71) என்று கூறி அதற்கான காரணங்களை எடுத்துச் சொல்லித் தன் கூற்றை மெய்ப்பிக்கின்றார்.

செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகள்:

இந்திய மொழிகளிலேயே ‘பன்னாட்டு மொழி;’ என்ற தகுதிப்பாடு தமிழுக்கு மட்டுமே கிடைத்துள்ள மிகப்பெரும் பெருமையாகும். இந்தி உட்பட மற்றைய மொழிகளெல்லாம் இந்திய மொழிகள் எனும் மகுடத்தைத் தாங்கும் அதே வேளையில், தமிழ் மொழி மட்டுமே இந்தியப் பன்னாட்டு மொழி எனும் சிறப்புத் தகுதிப் பாட்டினைப் பெற்றுள்ளதென்பது இங்கு கவனத்திற்குரிய ஒன்றாகும். ஒரு மொழி சிறந்த மொழியாகவும் உயர்ந்த மொழியாகவும் இருக்கலாம். அதிகமான எண்ணிக்கையினரால் பேசவும் எழுதவும் பயன் படுத்தப்பட்டு வரலாம். அது ஒரு சிறப்புமிகு மொழியாகக் கருதப்படுமேயன்றி ‘செம்மொழி’ யாகக் கருதப்படாது.

செம்மொழியாக உலகினரால் அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில் அதற்கு மொழியியல் அடிப்படையில் பதினொரு (11) தகுதிப்பாடுகள் இருக்க வேண்டுமென மொழியியலாளர்கள் வரையறை செய்துள்ளனர். இத்தகைய பதினொரு தகுதிப்பாடுகளும் உள்ள மொழிகள் மட்டுமே செம்மொழிகளாக அங்கீகரிக்கத்தக்க தகுதிப்பாடுடைய மொழிகளாகும். உலகிலுள்ள செம்மொழிகளில் தமிழ் ஒன்று மட்டுமே இத்தகுதிப்பாடுகள் அனைத்தும் கொண்ட ஒரே மொழி என்பது நமக்கே தெரியாத மாபெரும் மொழியியல் உண்மையாகும்

செம்மொழித் தகுதிக்கு மொழியியலார்கள் வகுத்துத் தந்துள்ள பதினொரு தகுதிப்பாடுகளாவன,

1) தொன்மை
2) தனித்தன்மை
3) பொதுமைப்பண்பு
4) நடுவு நிலைமை
5) தாய்மைத் தன்மை
6) பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு
7) பிற மொழித் தாக்கமிலா தனித்தன்மை
8) இலக்கிய வளம்
9) உயர் சிந்தனை
10) கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு பங்களிப்பு
11) மொழிக் கோட்பாடு

மேற்கண்ட பதினொரு தகுதிப்பாடுகளையுடைய மொழியே செம்மொழியாக ஏற்கப்படும் என்பது மொழியியலார் வகுத்தமைத்துள்ள அளவு கோள்களாகும் என்று மொழியியல் அறிஞர்களின் கருத்தை மணவை முஸ்தபா சுட்டிக் காட்டியுள்ளார். (செம்மொழி உள்ளும் புறமும், 2004, ப.8)

சங்க இலக்கியங்களில் தொடங்கி, சங்கம் மருவிய கால இலக்கியங்களிலிருந்து ஏறத்தாழ பத்தாவது நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கியங்களை வகைப்படுத்தி ‘செவ்வியல் தமிழ் இலக்கிய வரிசை’ என்ற தலைப்பிலும், ‘தமிழ் இலக்கிய வரிசை’ என்ற தலைப்பிலும் வகைப்படுத்தியுள்ளனர். இதில் தொல்காப்பியம் முதல் முத்தொள்ளாயிரம் வரையிலான, நாற்பத்து ஒன்று இலக்கியங்கள் செம்மொழி தகுதியைப் பெற்றுள்ளன. இக்கட்டுரையில் செம்மொழி இலக்கிய தகுதிப் பெற்ற நாற்பத்து ஒன்றாவது இலக்கியமான முத்தொள்ளாயிரத்தில்; செம்மொழித் தகுதிக்குரிய நிலைப்பாடுகள் பொருந்தி வரும் தன்மையினையே இக்கட்டுரை ஆய்வுக்குட்படுத்தியுள்ளது.

முத்தொள்ளாயிரம்:

மூவேந்தரையும் பற்றித் தனித்தனி தொள்ளாயிரமாக முத்தொள்ளாயிரம் (2700) வெண்பாவாற் பாடிய புகழ்ப் பெற்ற பனுவலில் இன்று கிடைப்பன 130 பாக்களே. ஏனைய இறந்துபட்டன. முத்தொள்ளாயிர ஆசிரியரைப் பற்றிய காலம், பெயர் முதலிய விவரங்கள் இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை. முத்தொள்ளாயிரம் பெயர் வரக் காரணம், மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் - அதாவது 2700 பாடல்கள் பாடப்பெற்ற காரணத்தால் முத்தொள்ளாயிரம் என்று பெயர் வந்திருக்கலாம் என்று கருத முடிகிறது. சேரர், சோழர்,பாண்டியர்களைப் பற்றி பாடப் பெற்ற பாடல்கள் தான் இவையனைத்தும். அத்தனையும் முடியுடைய மூவேந்தரின் சிறப்பினைப் பற்றிப் பாடப் பெற்ற பாக்களேயாகும். இப்பாடல்களில் மூவேந்தர் புகழும் வீரமும், மகளிர் காதலும் நயம்பட எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. மன்னனைக் கடவுளின் மறு அவதாரமாக எண்ணி மதித்த விழுமியங்களே இப்பாடல்கள்.

வைத்தியநாத தேசிகர் தம் இலக்கண விளக்கப் பொருளதிகாரத்தில்,
‘ஊரையும் பெயரையும் உவந்தெண்ணாலே
சீரிதயிற் பாடலெண் செய்யுளாகும்’

என்ற நூற்பா நுவன்று, ‘பாட்டுடைத் தலைவன் ஊரினையும் பெயரினையும் உவந்து, எண்ணாலே பத்து முதல் ஆயிரமளவும் பொருட் சிறப்பினாலே பாடுதல் அவ் வெண்ணாற் பெயர் பெற்று நடக்கும் எண் செய்யுளாம்: அவை முத்தொள்ளாயிரம் அரும்பைத்தொள்ளாயிரம் முதலியன என்று உரையும் வரைந்துள்ளனராதால் அதனைப் பின்பற்றித் தொள்ளாயிரம் பாடல்களே இந்நூலில் அமைந்திருக்கக் கூடும் என்று புலவர் சேது ரகுநாதன் முத்தொள்ளாயிர முன்னுரையில் குறிப்பிட்டு இருக்கும் கருத்து தவறாகும் என்று பின் வந்த திறனாய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இலக்கண விளக்க நூல் ‘பத்து முதல் ஆயிரமளவும்’ என்றது பாட்டுடைத் தலைவன் ஒருவனை நோக்கியே என்று குறிப்பிட்டள்ளது. ஆதலால் முத்தொள்ளாயிரப் பாட்டுடைத் தலைவர் மூவராதலால், மூன்று தொள்ளாயிரம் ஈராயிரத்தெழு நூறாகும் என்னும் கருத்தின் உண்மையை இதன் மூலம் உணரலாம். ‘முத்தொள்ளாயிரம்’ என்னும் நூல் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது. பல ஆண்டுகட்கு முன்னர் புறத்திரட்டு தொகுக்கப் பெற்றது. புறத்திரட்டு ஆசிரியர்களுக்கு முத்தொள்ளாயிரப் பாடல்களுள் 130 பாடல்கள் மட்டுமே கிடைக்கப் பெற அவற்றைத் தொகுத்துள்ளனர்.

இந்நூலில் 1) கடவுள் வாழ்த்து -1
2) பாண்டியன் - 60
3) சோழன் - 46
4) சேரன் - 23

என்ற எண்ணிக்கையில் பாடல்கள் இடம் பெற்றுள்ளதை சேது ரகுநாதன் தன் உரைகளில் சுட்டிக் காட்டியுள்ளார். பிற உரையாசிரியர்களின் உரைகளில் பாடல்களின் எண்ணிக்கையில் 109,110 என்று குறிப்பிடப்பட்டுள்ளன. செவ்வியல் இலக்கியமானது அதற்குரிய இலக்கிய உலகி;ல் தலைமையுடையதாகவும், மேன்மையுடையதாகவும் திகழ வேண்டும் என்னும் கருத்திற்கேற்ப முத்தொள்ளாயிரம் என்னும் இலக்கிய வடிவம் தொடக்க நிலையில் மூவேந்தர்களை அகம்,புறம் என்ற நிலையில் அமைத்த வடிவமாகவும்,பின்வந்த இலக்கிய வடிவங்களுக்கு தலைமையாகவும் திகழ்ந்துள்ளன.

செவ்வியல் பண்புக் கூறுகள்:

‘கிரேக்க, உரோமஇலக்கியத் தொடர்புடைமை,தலைமையுடைமை, மரபுடைமை,தொன்மையுடைமை, பலகூறுகளின்இணைவுடைமை, தற்சார்பின்றி இருத்தல், உலகப் பொதுமை உடைமை, காலப்பகுப்பும் கட்டுப்பாடும், காரண காரியத்தொடர்பு உடைமை, உருவமும் உள்ளடக்கமும், பொருந்தியமைதல், உத்திகள், கற்பனைகள், போலச் செய்தல், பாத்திர அமைப்பு முன்னோடியாக இருத்தல் செவ்வியல் இலக்கியத்திற்குரிய பண்புகள் என்று சாரதாம்பாள் (சங்கச் செவ்வியல்,1993); குறிப்பிட்டுள்ளார்.

மேற்கூறிய செவ்வியல் பண்புக்கூறுகளும், செம்மொழித் தகுதிப் பாடுகளும் ‘முத்தொள்ளாயிரம்’ என்னும் இலக்கிய வடித்திற்கு பொருந்தி வந்துள்ளன.. அதிலும் குறிப்பாக, தொன்மையுடைமை மற்றும் கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு ஆகிய இரு கூறுகளும் ‘முத்தொள்ளாயிரத்தில் அடிப்படைக் கூறாக இடம் பெற்றுள்ளதை இனி வரும் பகுதியில் ஆராயலாம்..

தொன்மையுடைமை:

காலத்தால் மிகவும் பழமையான இலக்கியம் தொன்மையுடைய இலக்கியம் ஆகும். இவ்விலக்கியங்களில் பழமையான இலக்கியக் கூறுகள் அமைந்திருக்கும். ஒவ்வொரு இலக்கியமும், இலக்கியக் காலப்பகுதி எனப்படுகிற தனக்குரியகால எல்லைக்குட்பட்டிலங்குவது கால வரையறையுடைமையாகும். இலக்கிய வரலாற்றில் செவ்வியல் இலக்கியத்தின் காலம் குறிப்பிட்ட நூற்றாண்டுகளுக்கு உட்பட்டதாகவும், தொன்மைக்காலமாகவும் அதுவே பலராலும் ஒப்புக் கொள்ளப் பட்டதால் நிலை நிறுத்தப்பட்டதாகவும் இருக்கும்.

யாப்பமைதி:

பாட்டில் உணர்த்தப்படும் பொருளும்,வடிவமும் பிரிக்க முடியாதனவாய் இயைந்து நிற்கும். பாடுபொருளுக்கு ஏற்ப வடிவத்தைக் கையாள்வதும் செவ்வியல் இலக்கியத்தின் முக்கிய பண்பாகும். எந்த ஓர் இலக்கியத்திலும் வடிவமும் பொருளும் பொருத்தமுற அமையும் பண்பு இயல்பானதாகும். புதுவதாகப் புனைந்து செய்யும் நூலினை, ‘ விருந்து’ என்று வழங்குவது தொல்காப்பியர் மரபு என்பதனை, ‘விருந்தேதானும்புதுவதுகிளந்த யாப்பின் மேற்றே’(தொல்:செய்: 540) என்னும் நூற்பாவி;ன் மூலம் உணரலாம். முத்தொள்ளாயிரம் தமிழினது சுவையினையும், தமிழ் மக்களின் சிறந்த நல்லொழுக்கத்தினையும், தமிழ் மன்னரது பெருந்தகையினையும், உள்ளடக்கி மூவேந்தரையும் பற்றி விருந்து என்னும் யாப்பு வகையில் விளக்கப்பட்டுள்ளது. ‘நெடுவெண் பாட்டே முந்நாலடித்தே,குறுவெண் பாட்டினளவெழு சீரே’என்றும், ‘பதினெண் கீழ்க்கணக்கினுள்ளும்,முத்தொள்ளாயிரத்தும் ஆறடியினேறாமற் செய்யுள் செய்தார் பிற சான்றோருமெனக் கொள்க’ என்று தொல்காப்பிய உரையாசிரியர்கள் கூறிய முறையின்படி, இந்நூல் வெண்பாக்கள் பெரும்பான்மை நான்கடியாகவும் சிறுபான்மை ஐந்து ஆறு அடிகளாலும் இடம் பெற்றுள்ளன. கைக்கிளைச் செய்யுள் முத்தொள்ளாயிரத்துட் பலவாயினும்’ என்ற கருத்திற்கேற்ப இந்நூலின்கட் சுட்டியொருவர் பெயர் கொண்ட பாடாண்திணைப் புறப்புறக் கைக்கிளைச் செய்யுள் இடம் பெற்றுள்ளது. மேலும் கைக்கிளைப் பாடல் வெண்பாவினால் முழுவதும் வராமல் முதலிரண்டடியும் வெண்பாவாகிக் கடையிரண்டடியும் ஆசிரியமாகி, இருபாக்களினாலும் முடிவு பெறும் என்னும் தொல்காப்பியரின் கூற்றிற்கு ஏற்ப,

‘கைக்கிளை தானே வெண்பா வாகி
ஆசிரிய இயலான் முடியும் என்ப’ (தொல்: செய்யுளியல்: 424)

என்ற அடிப்படையில் முத்தொள்ளாயிரத்தில் யாப்பு அமைந்துள்ளது.

முத்தொள்ளாயிரமும் பாடுபொருளும்:

தொல்காப்பியக் கொள்கையின்படி எடுத்தியம்பும் பொருள் முழுவதும் அகம்,புறம் என்ற இரண்டே பாகுபாடுகளுக்குள் அடங்குகின்றது. இவற்றுள் காதல் தொடர்பானவை அகம் எனப்படும். காதல் அல்லாத போர், வீரம், நீதி, கொடை முதலியன புறம் எனப் படும். இவ்வாறு அகம்,புறம் என்ற இவ்விரண்டு பொருள்களின் வரையறைகளுக்குள்ளடக்கியே பாடல்களைப்; பாடும் மரபு தொல்காப்பிய மரபு. இத் தொன்மையான மரபு முத்தொள்ளாயிரத்திலும் காணப்படுகிறது. முத்தொள்ளாயிரம் ‘அகமும் புறமும்’ பற்றிய பாடல்களைக் கொண்டது. இதில் புகழ், நாடு, நகர், திறை, எயில் கோடல்,குதிரை மறம், யானை மறம், களம், பகைப் புலம் பழித்தல், வெற்றி என்ற பகுதியில் அமையும் பாடல்கள் அனைத்தும் புறம் சார்ந்த நிலையிலும், கைக்கிளை சார்ந்த பாடல்கள் அனைத்தும் அகம் சார்ந்த நிலையிலும் அமைந்துள்ளன. மேலும் பாடாண் திணை, கைக்கிளை என்னும் திணை வகைகளைக் கொண்டு அமைந்துள்ளன. இவை பண்டைத் தமிழ் நாட்டு மூவேந்தர்களின் ஆண்மை, வன்மை, நாட்டு வளம், இயற்கை எழில், செங்கோன்மை நெறி, அகப்புற வாழ்க்கை முறைகள், மன்னர்கள் தம் பிறந்த நாட்களைக் கொண்டாடும் மரபு, இரவலர்களையும், புலவர்களையும் போற்றிப் பாதுகாத்த பாங்கு முதலிய பண்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றை அறியப் பெரிதும் பயன்படுகிறது.

மூவேந்தர்களின் சிறப்புப் பெயர்கள்:

தமிழ்நாட்டு மூன்று அரசர்களும் இன்னார் இன்னார் என்று அறியக் கூடியவாறு அவர்களின் இயற்பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.மூவேந்தர்கள் தொன்மை மரபிற்கேற்பவும், சிறப்பிற்கேற்பவும் சிறப்புப் பெயர் கொண்டு சிறப்பிக்கப்பட்டள்ளனர். சேரர்கள் ‘கோதை’, ‘மாந்தைக் கோ’ ‘குடநாடன்’; ‘வஞ்சிக் கோ’, ‘பூமியர் கோ’, ‘கொல்லியர் கோ’, ‘வானவன்’, ‘முசிறியார் கோமான்’ என அவர்களுடைய குடிக்குரிய பெயர்களால் பாடல்களுள் குறிக்கப் பெற்றுள்ளனர். சோழ மன்னர்கள், ‘உறந்தையர் கோன்’, ‘கோழிக் கோமான்’, ‘வளவன்’, ‘செம்பியன’;, ‘கிள்ளி’ ‘நீர்நாடன், ‘புகாஅர்ப் பெருமான், ‘சென்னி’, ‘காவிரி நீர் நாடன்’ என்றும் தம் குடிப்பெயர்களால் குறிப்படப்படுகின்றனர்.

பாண்டியர்கள், ‘மாக்கடுங்கோன்’, ‘மாறன்’, ‘கூடற்கோமான்’, ‘தென்னன’, ‘செழியன்’ ‘வழுதி’, ‘தமிழ்நர் பெருமான்’, ‘பொதியிற் கோன’, ‘செலேக வண்ணன்’, ‘வையையார் கோமான்’, ‘கொற்கைக் கோமான்”, ‘பஞ்சவர்’ என்றும் தம் குடிப்பெயர்களால் குறிப்படப்படுகின்றனர்.

மன்னனை இறைவனாகக் காணும் மரபு:

மாநிலம் காக்கும் மன்னனை காத்தற் கடவுளாகிய திருமாலாகக் கொள்ளும் மரபு நிலையை ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார்.

‘கூந்தன்மா கொன்று குடமாடிக் கோவலனாய்ப்
பந்நொடியைப்புல்லிய ஞான்றுண்டால’; ---- (முத்தொள்ளாயிரம்.4)

என்னும் வரிகளில் பாண்டிய மன்னனை திருமாலோடு ஒப்பிட்டு குறிப்பிட்டுள்ளார். இதைப் போலவே முத்தொள்ளாயிரம் - 62, 63 பாடல்களிலும் ஒப்பிட்டுக் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைவி தோழியினிடம், நம் இளவரசனை மலர் வேள்(திருமால்) போன்ற அழகன் என்கின்றாள். ஆனால், மலர் வேள் கரியன், நம் மன்னன் மகன் செய்யன் காண் என்கின்றாள். (முத்தொள்ளாயிரம் - 106)

‘ஏற்றூர்தியானும் இகல்வெம்போர் வானவனும்
ஆற்றலும் ஆள்வினையும் ஒத்தொன்றின் ஒவ்வார்’(முத்தொள் -129)

என்னும் வரிகளில் சேரன் ஆற்றலிலும் ஆள்வினையிலும் சிவபெருமானை ஒத்திருப்பினும், கூற்றுவனைப் போல மாற்றார் உயிரைத் தொலைக்கும் மழுப்படையுடைய சிவபெருமானுக்கு கண்கள் மூன்று என்றும், ஆற்றலுடைய சேர மன்னனுக்குக் கண்கள் இரண்டேயாகும் என்கின்றாள்.

நிலப்பாகுபாடும், நாட்டு வளமும்:

உலகை ஐந்து வகைப்பட்டனவாகப் பகுத்து இலக்கியம் படைத்த பெருமை தமிழ்ப் புலவர்கட்கு உண்டு. உலகை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகையாகப் பகுத்து, அவற்றின் தன்மைகளை வாழ்வியலோடு இணைத்து இலக்கியம் படைத்த பெருமை தமிழுக்குண்டு. இப்பகுப்பு முறை வேறு எந்த மொழியிலும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் பாலை வனம் ஏதும் இல்லையென்றாலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலப்பகுதிகள் தன்னிலை திரிந்து பாழடைந்து போனால், அப் பகுதியை பாலையாகக் கருதி இலக்கியம் படைக்கும் போக்கு தமிழுக்கேயுரிய தனித்தன்மையாகும். முத்தொள்ளயிரம் பகுதியில் மூன்று வேந்தர்களின் சேர, சோழ, பாண்டிய நாட்டு வளத்தையும், தலைநகரங்களின் சிறப்பினையும், விளக்குவதன் மூலம் ஐவகை நிலப் பாகுபாட்டையும், இயற்கை வளத்தினையும் உணரலாம்.

சேர நாட்டின் வளத்தினை,

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாய் அவிழ
வெள்ளம் தீப் பட்ட(து) எனவெரீஇப்--- (முத்தொள்: 110)
புள்ளினம் ஆரவரிக்கும் ஆரவாரமின்றி வேறு ஆரவாரமற்ற சேர நாட்டு வளத்தையும்,வேலின் கொற்றத்தையும் புகழ்கின்றார்.
துளி கலந்த ஓங்கொழில் யானை மதிப்பச்சேறாயிற்றே
பூம்புனல் வஞ்சி அகம். (முத்தொள்: 111)

என்னும் பாடலின் மூலம் சேர நாட்டின் வளத்தினை விளக்கியுள்ளார்.

சோழ நாட்டின் வளத்தினை,

காவல் உழவர் களத்தகத்துப் போரேறி
நாவலோஒ என்றழைக்கும் நாளோதை’(முத்தொள்: 65) என்றும்,

பாண்டிய நாட்டின் வளத்தினை,
‘நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
பந்தர் இளங்கமுகின் பாளையும் - சிந்தித்
திகழ் முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன்
நகை முத்த வெண்குடையான் நாடு. (முத்தொள்ளாயிரம் -8)

என்னும் பாடலில் வெண்கொற்றக் குடையையுடைய தென்னவனாகிய பாண்டியனுடைய ஒளி பொருந்திய முத்துடைய நாட்டின் கண் சங்கின் முதிராத முட்டைகளும் குவிந்த புன்னை அரும்புகளும், பந்தலைப் போன்று பரவியுள்ள இளம்பாக்கு மரங்களின் பாளைகளும் சிந்தி விளங்கும் முத்துக்களைப் போன்று தோன்றும் அழகான தன்மையுடையது என்றும் குறிப்பிட்டுள்ளார். இயற்கை வர்ணனைகள் மற்றும் உயிரினங்கள் மூலம் நாட்டின் வளத்தினை விளக்கியுள்ளார்.

போர் வீரர்கள்:

பண்டைய கால மக்கள் காதலையும், வீரத்தையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தனர். மன்னர்களின் வெற்றி சிறப்பு போர் வீரர்களின் வீரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தன. போருக்குச் செல்லும் வீரர்கள் சில மரபுகளைப் பின்பற்றி செயல்பட்டதை, முத்தொள்ளாயிரமும் விளக்கியுள்ளன. போர்வீரர்கள், நறுமணமுள்ள அரும்பு, நெல், தென்னை, பனை, ஈந்து முதலியவற்றிலிருந்து வடிக்கப்பட்ட கள்ளைப் பருகுதல் மரபு. இதனை,

‘களிகள் களிகட்கு நீட்டத்தங் கையாற்
களிகள் விதிர்த்திட்ட வெங்கள்:’(முத்தொள்ளாயிரம் - 111)

என்று சுட்டிக் காட்டியுள்ளார். மாற்றரசனோடு போர் செய்து வெல்வதற்குக் குறித்த நன்னாளில் அரசன் புறப்படுதல் இயலாத தொன்றாதலால், குறித்த நல்ல நேரத்தில் அவன் குடையைப் பட்டத்து யானை மேல் வைத்து வேறு இடத்திற்கு கொண்டு வைப்பது வழக்கம். இந்நிலையையே குடைநாட் கோள் என்பர். போர் தொடங்கினால் தும்பை மாலை சூடுதலும், போர் வென்று வாகை மாலை சூடுதலும் அரசர்க்கு இயல்பு. இவை போருக்குச் செல்லும் வீரர்கள் மரபாகப் பின்பற்றும் வழக்கமாகும். மேலும், அரசர்கள் உலா வரும் போது பெண் யானையின் மீது மேல் ஏறி வருவது மரபாகும் என்பதை,

‘எலாஅ மடப்பிடியே யெங்கூடற் கோமான்
புலாஅல் நெடுநல்வேல் மாறன்.’ (முத்தொள்ளாயிரம் - 51)
என்னும் பாடல் வழி உணரலாம்.

புராணக் கதை:

கடவுளரின் செயல்களுடன், மன்னர்களின் செயல்களைத் தொடர்புப் படுத்திக் கூறும் தன்மையைப் புராண மரபியல் எனலாம். முன்னர்களின் செயல்களைப் புகழ்வதற்காகப் புராணக் கதைகளுடன் தொடர்பு படுத்தி கூறும் மரபு தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றது. இதற்கு மன்னனை இறைவனோடு தொடர்புப் படுத்திக் கூறும் தமிழ் மரபையும் (மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப் புகழ்ப் பவைநிலை – தொல்.)காரணமாகக் கூறலாம்.

கூந்தன் மா கொன்ற வரலாறு கஞ்சனால் ஏவப்பட்ட அரக்கருள் ஒருவன் குதிரை வடிவு கொண்டு கண்ணனைக் கொல்ல வந்தான். உடனே கண்ணக் அதன் வாயைப் பிடித்து இரண்டாகக் கிழித்து வீசி விட்டான். குடக் கூத்து ஆடிய வரலாறு -- வாணன் தன் மகள் உழையின் பொருட்டாகக் காமன் மகன் அநிருத்தனைச் சிறை வைத்து விட்டான். அவனை மீட்கச் சென்ற கண்ணன் மண்ணாலும், உலோகத்தாலும் இயற்றிய குடங்களைக் கொண்டு கூத்தாடினான்.

பூந்தொடியைப் புல்லிய வரலாறு --- இது நப்பின்னையைக் குறித்தது. ஏழு கொல்லேற்றினைத் தழுவிய அடக்கினவனன்றி நப்பின்னையை வேறு எவனும் மணக்க முடியாது என்னும் கட்டுப்பாடு இருந்தது. அவ்வாறு கண்ணனே கொல்லேறு ஏழினையும் தழுவி அவளை மணந்தான் என்ற புராணக்கதையை

‘கூந்தன்மா கொன்று குடமாடிக் கோவலனாய்ப்
பந்நொடியைப் புல்லிய ஞான்றுண்டால்’(முத்தொள்ளாயிர - 4)

என்றும், விசயன் கண்ணன் திருவடிகளில் அhச்சி;;த்த மலர்கள் சிவபெருமானின் திருவடிகளை அடைந்தன என்பது பாரதக் கதையை,

‘செங்கண் நெடியான்மேல் தேர் விசையன் ஏற்றியப+ப்
பைங்கண் வெள் ஏற்றான் பால் கண்டற்றால்’(முத்தொள்.;2)
என்னும் பாடலும் விளக்குகின்றன.

உடன் கட்டை ஏறும் மரபு:

பண்டைய வழக்கமான உடன் கட்டை ஏறும்மரபு காணப்பட்டதை, வெற்றி மாலையணிந்த பாண்டிய மன்னன், பலவற்றை அழித்த போர் களத்தின் கண், இறந்த பகைவர்களின் மனைவியாகிய பெண்டிர் தீயில் மூழ்கி எரியக் கண்டு தன் ஆடையால் தன் கண்களை மூடிக் கொண்டான் என்பதை,

ஏனைய பெண்டீர் எரிமூழ்கக் கண்டு தன்
தானையாற் கண் புதைத்தான். (முத்தொள்ளாயிரம் - 19)

என்னும் பாடல் விளக்கியுள்ளது.

திருவிழா:

பண்டைய மக்களின் திருவிழாக்கள் மன்னனைச் சார்ந்து அமைவது வழக்கம். இங்கு மூவேந்தர்களின் பிறந்த நாட்கள் மக்களால் விழாவாகக் கொண்டாடப் பட்ட நிலையைக் காணலாம். கிள்ளி வளவனின் பிறந்த விழாவாகிய இரேவதித் திருநாளில் எல்லோரும் பரிசில் பெற்ற நிலையை (முத்தொள்ளாயிரம் - 82) பாடலும்,;; தென்னன் பிறந்த திரு உத்திராடத் திருநாள் (முத்தொள்ளாயிரம் - 7), திருவிழாக்களாகக் கொண்டாடப்பட்ட நிலையினை இப்பாடல்களின் வழி அறியலாம். இவை தவிர சேரனின் வேல் விழா திருவிழாவாகக் கொண்டாடப் பட்ட நிலையை,

‘அரும்பவிழ்தார்க் கோதை அரசெறிந்த ஒள் வேல்
பெரும்புலவும் செஞ்சாந்தும் நாறிச் - சுரும்பொடு
வண்டாடும் பக்கமும் உண்டு குறுநரி
கொண்டாடும் பக்கமும் உண்டு’.(முத்தொள்ளாயிரம் - 109)

போரில் மாற்றாரை வேலால் வீசி அழித்த சேரன், பின்பு, அந்த வேலுக்குப் பாராட்டும் விழா நடத்துகின்ற நிலையையே இப்பாடல் விளக்கியுள்ளது. அரும்பகள் மலர்ந்துள்ள மாலையணிந்த சேர மன்னர்கள் அரசர்களைத் துணித்த ஒளி பொருந்திய வேல், பெரும்புலாலின் மணமும் செந்நிறச் சாந்தின் மணமும் கொண்டு மணம் வீசிச் சுரும்புகளோடு வண்டுகள் ஆடி மகிழும் ஒரு பகுதியும் குள்ள நரிகள் கொண்டாடி மகிழ்கின்ற மறுபக்கமும் கொண்டு விளங்குகிறது.

வாணிபம்:

முசிறி என்பது சேரனுடைய துறைமுகப்பட்டினம். முசிறி என்னும் துறைமுகத்தின் கண்தான் வெளிநாட்டோர் வந்து வாணிபம் நடாத்தி மிளகையும், மயில் இறகையும் பெற்றுச் சென்றனர். அதற்குப் பதிலாகப் பொன்னையும், மணியையும் தந்து சென்றனர். இதனை,

‘வேரறுகை பம்பிச் சுரைபடர்ந்து வேளைபத்து
ஊரறிய லாகா கிடந்தனவே பேரின்
முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமான்
நுகையிலை வேல் காயத்தனார் நாடு. (முத்தொள்ளாயிர- 116)

என்னும் பாடல் வழி அறியலாம்.

கைக்கிளை:

கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம். கை- சிறுமை, கிளை- உறவு. அதாவது இருபாலருள் ஒருவரிடத்தே மட்டும் தோன்றிய மனத்தின் அன்பு நெகிழ்ச்சி. இயற்பெயர் சார்த்திக் கூறப்படும் புறத்திணைக் கைக்கிளை. இது ஆண் பாற் கைக்கிளை, பெண்பாற் கைக்கிளை என இருவகைப்படும். இவற்றில் இங்கு இடம் பெறுவன எல்லாம், புறத்திணைச் சார்பான பெண்பாற் கைக்கிளை ஆகும். பாண்டியன் (24-61) சோழன் (75-107), சேரன் (117-130), என்ற பாடல்களின் எண்ணிக்கையில் அதிக அளவு கைக்கிளை பற்றிய பாடல்கள் இடம் பெறுவதை காணலாம்.

தலைவி உலா வரும் மன்னனைக் கண்டு காதல் கொள்கின்றாள். இதனால் தலைவியின் மனத்தில் ஏற்படும் காதல் உணர்வையும், வருந்தும் நிலையையும் அதன் மூலம் மூவேந்தர்களின் சிறப்பினையும் ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளனர். மன்னனின் மீது காதல் கொள்ளும் பெண்கள் பலறாகச் சுட்டப்பட்டுள்ளன. காட்சி, வேட்கை, மெலிதல், ஒரு தலையுள்ளல், ஆக்கஞ் செப்பல், நாணுவரை இறத்தல், நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு என்ற இப்பத்து நிலையையும் ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார். எங்கும் நிறைந்த தோன்றாத் துணைவனாகிய இறைவனிடத்துத் தாங்கொள்ளும் அன்பினை வளர்த்தற் பொருட்டு அவனைத் தலைவனாகவும், தம்மைத் தலைவியாகவும் கொண்டு பாடுவது மரபு. இங்கு தோன்றாத்துணையாக கருதப்படும் இறைவனை, தோன்றுந் துணைவனான மன்னனோடு ஒப்புமையாகக் கருதிக் கொண்டு,

‘தளைய விழும் பங்கோதைத் தாயரே ஆவி
களையினும் என் கைதிறந்து காட்டேன் - வளை கொடுப்போம்
வன் கண்ணன் வாண்மாறன் மால்யானை தன்னுடன் வந்து
என் கண் புகுந்தான் இரா’. (முத்தொள்ளாயிரம் - 38)

என்பதன் மூலம் அறியலாம். வெறியாட்டு (முத்தொள்ளாயிரம்- 220), இற்செறிப்பு (முத்தொள்ளாயிரம் - 61, 208) என்ற நிலையில் தலைவியின் உள்ளப் பாங்கினை வெளிப்படுத்தும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

‘செங்கால் மடநாராய்! தென்னுறந்தை சேறியேல்
நின் கால் மேல் வைப்பன் என் கையிரண்டும் - நன்பால்
கரை உறிஞ்சி மீன் பிறழும் காவிரி; நீர் நாடற்கு
உரையாயோ யான்உற்ற நோய்’ (முத்தொள்ளாயிரம் - 95)

தலைவி காமமிக்க கழிபடர் கிளவியால் கேளா புள்ளினத்தைக் கேட்பனவாகக் கருதி, சிவந்த கால்களும் இளமையும் பொருந்திய நாரையே! தேற்கில் உள்ள உறையூரை அடைவாயேயானால், என் இரு கைகளையும் நின் கால்களின் மேல் வைத்து வணங்குவேன். நுல்லிடமாகிய கரையில் மீன்கள் கரை மோதி பிறழ்ந்து செல்லும் காவிரி நீர் வளம் பொருந்திய சோழ நாடானாகிய சோழ வேந்தனுக்கு யான் அடைந்த காதல் நோயைப் பற்றிச் சொல்ல மாட்டாயோ? என்று தலைவி கூறுகின்றாள். இவ்வாறாக தலைவியின் ஒரு தலைவிக் காதல் உணர்வினை ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இவ்வாறாக, மூவேந்தர்களின் ஆட்சியில் காணப்பட்ட தொன்மைக் கூறுகளையும்,பண்டைய மக்களின் வாழ்வியலையும் விளக்கியுள்ளன. முத்தொள்ளாயிரம் மூவேந்தர்களின் சிறப்பினையும், வீரத்தையும், தமிழ் நாட்டின் வளத்தையும் விளக்கியுள்ளது.

கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு:

ஒரு கவிஞனுடைய தனித்தன்மை, சொந்த விருப்பு வெறுப்புக்கள், தன் அனுபவங்கள் முதலியன அவனுடைய கவிதையில் வெளிப்படாதிருத்தலையே தற்சார்பின்றியிருத்தல் என்று குறிப்பிடுகின்றனர். கவிஞன் தான் சொல்ல வரும் கருத்துக்களைக் கற்பவர் மனத்தில் எளிதில் பதியச் செய்யவும் தெளிவாக விளங்க வைப்பதற்கும் கையாளும் முறைகளே உத்திகளாகும். மேலும் இலக்கிய வகை, தான் கூற வந்த பொருளை வெளிப்படுத்தும் பொழுது காரண-காரிய இயைபுடன் அமைத்தல்; இன்றியமையாததாகும். தற்சார்பின்றியிருத்தல், உத்திகள்,காரண-காரிய இயைபுடன் அமைத்தல்,கால நிலை முதலிய கூறுகள் இயல்புடன் அமைதல் கலை இலக்கியத் தன்மையை வெளிப்படுத்தும் கூறாகும். முத்தொள்ளாயிரத்தில் மூவேந்தர்களின் சிறப்பை விளக்கும் பொருட்டு அவர்களது வீரத்தினையும்,நாட்டையும்,விளக்க கதைப்பாடப்பொருள், தலைப்பு,கற்பனை,உவமை, தலைமைச்செயல் முதலிய கலை இலக்கியத் தனித்தன்மையை இயைபுடன் விளங்கியுள்ளார்.

கற்பனை

மன்னனுடைய வீரம், ஆண்மை, புகழ், கொடை, பகைப்புலம் அழித்தல், முதலிய நிலைகள் ஆசிரியரின் கற்பனைக்கு ஏற்ப இயற்கையுடன் இணைத்து முத்தொள்ளாயிரம் முழுவதும் விளக்கப்பட்டுள்ளன. இந்த இயற்கைப் புனைவு இயற்கையானது, வாழ்க்கையின் பின்னணிப் பொருளாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது. நகர், நாடு வர்ணனைகள் இயற்கை அமைப்பினை விளக்கும் தன்மையுடையனவாக அமைந்துள்ளன. இந்த இயற்கைப்பொருள், குறிப்புப்பொருள், உவமை, வர்ணனை, கற்பனையாக அமைந்துள்ளன.

நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன்
காமர் நெடுங்குடைக் காவலன் ஆணையால்
ஏம மணிப்பண் இமையார் திருந்தடி
பூமி மிதியாப் பொருள். (முத்தொள்ளாயிரம்-10)

தேர்ச் சக்கரத்தை நிமிர்த்தவல்ல தோள்களில் ஒளி செய்யும் மாலையணிந்தவன் பாண்டியன். ஆழகிய வெண் கொற்றக் குடையினை உடைய அம் மன்னனது ஆணையினால், பொன்னால் ஆகிய அழகிய அணிகலன்களை அணிந்த கண்ணிமைக்காத தேவர்களின் திருந்திய அடிகள் இம் மண்ணுலகை மிதிக்க மாட்டா பாண்டியனது உடைமை எனக் கருதி என்று தேவர்கள் பமியை மிதிக்க மாட்டாத செய்திக்கு பாண்டியனின் திறத்தினை கற்பனையாக ஆசிரியர் படைத்துக் காட்டியுள்ளார். இதே நிலையில் மன்னனது வீரத்தை,

அடிமதில் பாய அழிந்தன கோட்டைப்
பிடி முன்பு அழகழிதல் நாணி முடியுடைய
மன்னர் குடரால் மறைக்குமே’ (முத்தொள்ளாயிரம் - 17)

என்று பாண்டியனது யானை போரினால் தன் கொம்புகள் முறிய, பெண் யானை முன் நிற்க வெட்கப்பட்டு, பகை மன்னரது குடல்களைக் கொண்டு முறிந்த தந்தங்களை மறைக்கும்.

உவமை:

மன்னனின் மீது காதல் கொள்ளும் பெண்களின் காதல் உணர்வும், மன்னனின் படைத்திறமும்,மன்னனை இறைவனாகக் காணும் நிலையிலும், உள்ள பாடல்களில் உவமைகள் கையாளப்பட்டுள்ளன.

‘இகு கரையின் ஏமான் பிணை போல் நன்றதே கூடலார்
கோமான் பின் சென்றஎன் நெஞ்சு.( முத்தொள்ளாயிரம் -67)
‘பிணி கிடந் தார்க்குப் பிறந்த நாள் போல
அணியிழை அஞ்ச வருமால்’(முத்தொள்ளாயிரம் - 63)
‘குடத்து விளக்கே போல் கொம்பன்னார் காமம்
புறப்படா பந்தார் வழுதி’ (முத்தொள்ளாயிரம் - 54) என்ற உவமைகளின் வழியாக மன்னனின் மீது காதல் கொள்ளும் பெண்களின் கைக்கிளைக் காதலுணர்வு மேற்குறிப்பிட்ட உவமைகளில் வெளிப்படுவதை அறியலாம்.

கால நிலை:

இலக்கிய வெளிப்பாட்டுக் கூறுகளுள் முக்கியமானது காலநிலை என்பதாகும். இலக்கியம் தான் எழுதப்பட்ட காலத்தை, அக்காலத்தின் போக்கை முழுமையாக உணர்த்த வேண்டும். முத்தொள்ளாயிரம் மூவேந்தர்களின் கால நிலையையும், மக்களின் வாழ்வியல் நெறிகளையும் சுட்டிக் காட்டியுள்ளது.
மாலை விலை பகர்வார் கிள்ளிக் களைந்த பச்
சால மருவியதோர் தன்மைத்தால் - காலையே
விற்பயில் வானகம் போலுமே வெல் வளவன்
பொற்பார் உறந்தை அகம். (முத்தொள்ளாயிரம் - 66)
இது உறந்தையின் சிறப்பும், மக்களின் கூட்டமும், செல்வ வளனும், பம் பொழிலின் மிகுதியும்,இன்பப் பெருக்கத்தையும் விளக்கியுள்ளது. இப்பாடலின் மூலம் சோழ நாட்டின் வளத்தையும்,சோழ மன்னனின் ஆட்சிக் கால நிலையையும் உணரலாம்.

முடிவுரையாக:

தமிழ் இலக்கியத்தின் செவ்வியல் தன்மையையும், எட்டாம் நூற்றாண்டு இலக்கிய வடிவமான முத்தொள்ளாயிரத்தில் செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகளில் அடிப்படைக் கூறான தொன்மையுடைமை மற்றும் கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு ஆகிய இரண்டும் சிறப்புறப் பொருந்தி வந்துள்ளதை அறிய முடிகின்றது. தமிழர்கள் அகவாழ்க்கையில் சிறந்து புறவாழ்க்கையிலும் புகழுடன் திகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நூலான முத்தொள்ளாயிரம் செவ்வியல் தன்மையுடைய இலக்கிய வடிவமாகும் என்பதில் எந்த விதமான ஐயத்திற்கும் இடமில்லை என்பதை இக் கட்டுரை மூலம் அறியலாம்.

மீ.அஸ்வினி கிருத்திகா
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழியல் துறை
மனோன்மணியம்சுந்தரனார்
பல்கலைக்கழகம்
திருநெல்வேலி.


துணை நின்ற நூல்கள்:

 குழந்தைசாமி,வா.செ., உலகச் செவ்வியல் மொழிகளின்வரிசையில் தமிழ்,
பாரதி பதிப்பகம், சென்னை. 2005

 சாரதாம்பாள், சங்கச் செவ்வியல், 39 மீனாட்சி புத்தக நிலையம்,
60,மேலக்கோபுரத் தெரு, மதுரை – 625001 முதற் பதிப்பு – 1993.

 மணவை முஸ்தபா, செம்மொழி உள்ளும் புறமும், அறிவியல் தமிழ்
அறக்கட்டளை, அண்ணா நகர்,சென்னை. 2004

 சேது ரகுநாதன். ந., முத்தொள்ளாயிரம், திருநெல்வேலி,தென்னிந்திய சைவ
சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1-140,பிரகாசம் சாலை,சென்னை. 1975.

- மீ. அஸ்வினி கிருத்திகா(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It