சமத்துவம் என்பது தொடக்கக் காலத்திலிருந்தே இல்லை. ஆணுக்குப் பெண் அடிமையாகவும் ஆதிக்க சாதியினருக்கு அடுத்த சாதியினர் கட்டுப்பட்டும் இருந்து வந்துள்ளனர். வருகின்றனர். பெண்களுக்கு ஆதரவான குரல் சங்கக் காலத்திலிருந்தே ஒலித்து வருகிறது. பெண்களும் பேசியுள்ளனர். ஆண்களும் குரல் கொடுத்துள்ளனர். இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் பெண்ணியம் பேசப்படுவது தொடர்கிறது. இருபதாம் நூற்றண்டில் மொத்த தலித் சமூகமும் முன்னேற வேண்டும் என்னும் நிலைப்பாட்டுடன் தீவிரமாக போராடிய அம்பேத்கர் பெண் சமூகம் மேன்மையுற வேண்டும் என தனிக் கவனம் செலுத்தி பெண் விடுதலைக்கு பங்காற்றியுள்ளார். அம்பேத்கரை ஓரு சட்ட மேதையாகவும் ஒரு தலித் தலைவராகவும் போற்றப்பட்டதால், பேசப்பட்டதால் அவர் ஒரு பெண்ணியவாதி என்பது வெளிச்சப்படுத்தப்படவில்லை. பா.பிரபாகரன் அக்குறையைப் போக்கும் வண்ணம் ‘அம்பேத்க்கரின் பெண்ணியம்’ தொடர்பான சிந்தனைகளை, செயல்களை தொகுப்பாக அளித்துள்ளார். ‘பெண்களுடைய முன்னேற்றத்தை அளவிடும் அம்பேத்க்கரின் மறைக்கப்பட்ட ‘பெண்ணியபிம்பம்’ இந்நூல் மூலம் நமக்கு அநிமுகமாகிறது் என ‘யாதுமாகி’ லெனாகுமார் குறிப்பிட்டுள்ளது தொகுப்பின் நோக்கை அறியச் செய்கிறது.
்இந்தியாவிலுள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட இனங்களின் விடுதலைக் குறியீடு டாக்டர் அம்பேத்கர்் என தொகுப்பைத் தொடங்கி முதலில் ‘தலித் பெண்ணியம்’ குறித்து விளக்கியுள்ளார். தலித் என்பதாலும் பெண் என்பதாலும் இரண்டு நிலைகளிலும் பாதிக்கப்படுகிறாள் தலித் பெண். இவைகளில் இருந்து ஒரு சேர விடுபட வேண்டிய நிலையே ‘தலித் பெண்ணியம்’ என்கிறார். பார்ப்பனியத்துக்கும் முதலாளியத்துக்கும் எதிராக தலித் பெண் போராட்டம் நடந்த வேண்டும் என்று எடுத்துக் காட்டியுள்ளார்.
‘அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைக்கான பின்னணி’யினை அறிந்து பகுதி மூன்றில் கூறியுள்ளார். ஆங்கில அரசின் சட்டப்படி அம்பேத்கரின் குடும்பப் பெண்கள் கல்வி கற்க முடிந்தது. இதுவும் ஒரு காரணமாயிற்று என்கிறார். மகாத்மா பூலே அம்பேத்கரின் ஆசான். இவர் பெண்ணிய விடுதலைக்கு வித்திட்டவர். இதுவும் அம்பேத்கரைத் தூண்டியது என்கிறார். புத்தர், அவர் கற்ற கல்வி,அரசியல் பின்புலமும் ஆகியனவும் அம்பேத்கரின் பெண்ணியவாதியாக மாற்றியது என்றும் குறிப்பிடுகிறார்.
சமூகத்தில் சாதியம் ஒரு தொடர் பிரச்சனை. காலங்காலமாகவே இருந்து வருகிறது. சாதியம் நீடிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ‘அகமணம்’ ஒரு முக்கிய அடிப்படை என்று அம்பேதகர் ஆய்ந்தளித்துள்ளார் என்கிறார். இதில் ஆணாதிக்கமும் உள்ளது என்றும் உணர்த்தியுள்ளார். அகமணம் என்பது தன் உறவுக்குள்ளேயே, சொந்தத்துள்ளேயே திருமணம் செய்து கொள்வதாகும். இதனால் சாதி வளர்ந்து கொண்டேயுள்ளது என்கிறார். கலப்பு மணம் செய்தால் சாதியம் ஒழிந்து விடும் என்று தெரிந்தே அகமணத்தைக் கட்டாயப்படுத்தி வந்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டடியதையும் குறிப்பிட்டுள்ளார். அகமணம் செய்யப் படுவதால் பெண்கள் சாதியத்திலிருந்தும் தப்பிக்க முடியாமல் அடிமையாகவே இருக்க வேண்டியதைக் கண்டு அகமணத்தை அம்பேத்கர் எதிர்த்துள்ளார் என்கிறார். அகமண முறையாலே விதவை என்னும் கொடிய நிலையும் உடன்கட்டை ஏறுதலும் தொடர்கிறது என்று கண்ட அம்பேத்கர் கலப்பு மணத்ததை ஆதரித்துள்ளார். அம்பேத்கரின் ஆய்வை ஏற்றுக் கொண்டாலும் வரவேற்றாலும் சமூகம் அகமண முறையிலிருந்தும் சாதிய பிடியிலிருந்தும் மீளாமல் உள்ளதற்காக கட்டுரையாளர் வருந்தியுள்ளது அவரின் சார்புக்குச் சான்று.
‘அம்பேத்கரின் பெண்ணிய விடுதலைக் கருத்துக்களும் – செயல்பாடுகளும்’ எவ்வாறு இருந்தன, இருக்கின்றன என ஒரு பகுதியில் விவரித்துள்ளார். சுதந்திரமான சமத்துவ, சகோதரத்துவ சமூகத்தையே அம்பேத்கர் விரும்புகிறார் என்பதன் மூலம் ஆணும் பெண்ணும் சமம் என்பதையே வலியுறுத்தியுள்ளார் என்று தன் கருத்தை முன்வைத்துள்ளார்.
மேலும் பெண்களுக்குக் கல்வி அளிக்கப்பட்டாலே முன்னேற்றம் காண முடியும் என்னும் கருத்தையும் காட்டியுள்ளார். சாதிய உணர்வைக் களைந்தெறிய பெண்கள் பொதுத் தளத்திற்கு வரவேண்டும் என்று அம்பேத்கர் வேண்டியிருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். பெண்களை இழிவுபடுத்தும், அடிமைப்படுத்தும் மனுஸ்மிருதியை எரித்தது அவரின் செயல்பாடுகளில் ஒன்று என்கிறார். பொதுகூட்டத்திற்கு பெண்களைக் கூட்டி வர வேண்டும் என்று ஆண்களுக்குக் கட்டளையிட்டுள்ளதையும் அறியச் செய்துள்ளார். அம்பேத்கர் உரையினைக் கேட்ட பெண்கள் மாற்றம் அடைந்ததைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டு அவரே அழுதார் என்னும் தகவல் நெகிழ்ச்்சியடையச் செய்கிறது. அமைச்சர் பதவியை விட்டு அம்பேத்கர் விலகியதற்குக் காரணங்கள் பல இருந்தாலும் பெண்களுக்கு சமத்துவம் சட்டத்தில் இல்லாததும் ஒரு காரணம் என்று குறிப்பிடுகிறார். பெண்களின் பேறு கால விடுப்புக்கும் போராடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் முன்னேற்றத்துக்காக அமபேத்கரின் முயற்சி அவர் காலத்திலேயே ஓரளவிற்கு வெற்றிப் பெற்றுள்ளது என்பதை ‘பெண்களின் எழுச்சியும் அம்பேத்கரின் போராட்ட வடிவங்களும்’ கட்டுரையில் வாசிக்கத் தந்துள்ளார். வீட்டுக்குள்ளேயே இருந்த பெண்களை வெளியில் கொண்டு வந்து போராட்டத்திலும் பங்கு பெறச் செய்ததோடு இயக்கத்திலும் இணைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அம்பா தேவி, கலா ராம் ஆகிய ஆலய நுழைவு போராட்டங்களிலும் அகில இந்திய தாழ்த்தப்பட்டோர், தீண்டப்படாத வகுப்பு பெண்கள், நாக்பூர் மாவட்டம், தலித் பெண்கள் போன்ற மாநாடுகளிலும் பெண்கள் பங்கேற்றதற்கு காரணம் அம்பேத்கரே என்று வலியுறுத்தியுள்ளார்.
நிறைவாக அம்பேத்கர் ஒரு தனி மனிதர் அல்ல என்றும் தலித் உள்பட பெண்கள் உள்பட அனைத்து ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் பாடுபட்டவர் என்றும் பெருமைப்படுத்தி அவரின் பெண்ணியக் கருத்துக்கள், சிந்தனைகள் இன்று தொடரப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார். தொடரப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
‘அம்பேத்கரின் பெண்ணியம்’ என்னும் இத் தொகுப்பை ஓர் ஆய்வேடாக தந்துள்ளார் பா. பிரபாகரன். அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகளும் கருத்துக்களும் செயல்களும் எங்கெல்லாம் உள்ளன என்று ஒரு தேடலுடன் திரட்டித் தந்துள்ளார். மேற்கோள் பலவற்றையும் எடுத்துக் காட்டியுள்ளார். அறிஞர்கள் பலரின் கூற்றுக்களையும் ஒப்பிட்டுள்ளார். இத்தொகுப்பு மூலம் இரண்டு கருத்துக்களை முன்வைக்கிறார். ஒன்று அம்பேத்கர் பெண்ணியம் குறித்து பேசவில்லை என்பதை மறுத்து அம்பேத்கர் ஒரு பெண்ணியவாதியே என்று உறுதிப் படுத்தியுள்ளார். இரண்டாவது அம்பேத்கரின் பெண்ணியம் தொடர்பான முயற்சி, எண்ணம், இலக்கு எல்லாம் இன்று நடைமுறைப்படுத்தப்படாமல் பயனற்று உள்ளது என்று வருந்தியுள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்டதுடன் அவர் கருத்துக்களுக்கு செயல் வடிவம் தரவேண்டும் என்று கோரியுள்ளார். அம்பேத்கரின் வழியில் நின்று அவரின் பெண்ணியச் சிந்தனைகளை வழிமொழிந்துள்ளார் என்றே கூற வேண்டும். இன்று பெண்ணியம் பேசுபவர்களும் அம்பேத்கரைப் பின்பற்ற வேண்டும் என்கிறார். பெண்ணயம் பேசிய அம்பேத்கரைப் போற்றியுள்ளார், பெருமைப்படுத்தியுள்ளார் பா. பிரபாகரன். இத்தொகுப்பு மூலம் பா. பிரபாகரன் பேசப்படுவார் என்னும் நம்பிக்கை ஏற்படுகிறது.
வெளியீடு
யாதுமாகிப் பதிப்பகம் 9 காமராசர் சாலை என. எச. காலனி பெருமாள்புரம்
திருநெல்வேலி 627007
விலை ரூ.60.00