வெகு சுலபமாக தீர்க்கப்பட வேண்டிய விஷயத்தினை தன்னுடைய வகுப்புவாத சிந்தனையினால் மத்திய அரசு கடினமாக ஆக்கியிருக்கின்றது. கஷ்மீருக்கான சிறப்புச் சட்டத்தினை மத்திய அரசு எப்பொழுது நீக்கியதோ, அதிலிருந்து இதுவரையில்லாத அளவிற்கு மக்களின் வீரியமான போராட்டங்கள் கடந்த ஆகஸ்டு மாதம் முதற்கொண்டு நடந்தேறிய வண்ணம் இருக்கின்றது.

பாரூக் அப்துல்லா முதல் அனைத்து கஷ்மீரத்துத் தலைவர்களும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு, சாமானிய குடிமக்களின் அடிப்படை வசதிகளைப் பறிக்கின்ற வகையில் 144 தடைச் சட்டம், தகவல் தொடர்புகளைத் தடுப்பது என அனைத்து அடக்குமுறைகளையும் ஒன்றுவிடாமல் இந்திய அரசு செய்து வருகிறது. இதை அப்போதிருந்தே ராகுல் காந்தி முதற்கொண்டு அனைத்து எதிர்க் கட்சிகளின் தலைவர்களும் 'இது ஒரு ஜனநாயக விரோத செயல்' என்றே குரலெழுப்பி வருகின்றனர். ஜனநாயக அமைப்புகளும் போராட்டங்கள், கருத்தரங்கங்கள் வாயிலாக தங்களின் தார்மீகக் கடமையினை ஆற்றி வருகின்றன.

modi with EU delegatesகுறைந்தபட்சம் கஷ்மீரத்து மக்களின் கஷ்டங்களையாவது தெரிந்து கொள்ளவும், அவர்களுக்கு ஆதரவளித்திடவாவது எம்பிக்களின் குழுவினை அனுமதியளியுங்கள் என கோரிக்கைகளை விடுத்தால், செவிடன் காதில் சங்கூதுவது போல நடந்து கொள்கின்றது மத்திய அரசு.

பாகிஸ்தான் இந்த விஷயத்தினை உலகரங்கில் கொண்டு போயும் கூட ரஷியா, சீனா, அமெரிக்கா, சவூதி போன்ற நாடுகள் 'கஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விஷயம், இதில் நாங்கள் தலையிட முடியாது' என பின்வாங்கிக் கொண்டன. வழமையாக ஆப்பிள் சீசனான இந்நேரம் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்பிள் விவசாயிகள் ஆனந்த்நாக் மாவட்ட சந்தையில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் வெறும் 500 நபர்களே பதிவு செய்திருக்கின்றனர். யாரும் இக்கட்டான இந்நேரத்தில் வியாபாரம் செய்திட முன்வரவில்லை. இதனால் ஆப்பிள்களைப் பறிக்க மனமில்லாமல் கருகிட வைத்திருக்கின்றார்கள் விவசாயிகள்.

சீசன் காலகட்டமான தற்போது புகழ்பெற்ற தால் ஏரி வெறிச்சோடி இருக்கின்றது. சுற்றுலாவை நம்பி தங்கள் பிழைப்பினை நகர்த்தும் எண்ணற்றோரின் வாழ்விலும் மண் விழுந்திருக்கின்றது.

கஷ்மீரிகளின் அவலங்கள் ஊடகங்களின் மறைப்பின் காரணமாக வெளியுலகத்தின் பார்வைக்குத் தெரியாமல் போனாலும், ஒரு சில செய்திகள் வெளியே (பானைக்கு ஒரு சோறு என்பது போல) கசியத்தான் செய்கின்றது. கஷ்மீர் விஷயத்தில் ஐநா சபையின் கண்டிப்பிற்கு இந்தியா ஆட்படாவிட்டாலும், மலேசியா, துருக்கி போன்ற ஒரு சில நாடுகள் தங்களால் இயன்ற அழுத்தங்களைக் கொடுக்கின்ற காரணத்தினால், தற்போது ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஷ்மீரின் நிலையினை அறிய வந்திருக்கின்றனர். நித்தம் நித்தம் ராணுவத்தின் அடக்குமுறை மோதல்களினால் சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கையே சிதைந்து போயிருக்கும்போது யாரிடம் விசாரிக்கப் போகின்றார்கள்? யாரிடம் அறிக்கையினை சமர்பிக்கப் போகின்றார்கள்? ஒருவருக்கு நால்வர் என்ற அடிப்படையில் ராணுவ வீரர்களினால் சூழப்பட்ட ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் எப்படி உண்மையை விசாரித்து அறிய இயலும்?

வலதுசாரிக் கொள்கையுடையவர்களாக இருக்கும் இக்குழு உறுப்பினர்களில் 27ல் 22 உறுப்பினர்களின் மீது ஊழல் வழக்கு இருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் போலந்து நாட்டைச் சார்ந்த எம்பி, நாஜிக்களுக்கு ஆதரவான கருத்தினை உமிழ்ந்த காரணத்திற்காக தன் நாடாளுமன்ற குழு துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கபட்டவர். பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த எம்பி, ரஷ்யாவின் கிரிமியா நாட்டின் ஆக்கிரமிப்பினை வெளிப்படையாக ஆதரித்து, சொந்த கட்சிக்குள்ளே எதிர்ப்பிற்குள்ளானவர். இப்படியாக எம்பிக்கள் வலதுசாரிக் கொள்கையின் அடிப்படையில் கஷ்மீருக்காகத் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். சிலர் திட்டமிட்டு புறக்கணிப்பும் செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து லிபரல் கட்சியின் பிரமுகரான கிரிஸ்டேவிஸ் போலிஸ் துணையின்றி மக்களுடன் உரையாட வாய்ப்பளிக்க முடியுமா என மத்திய அரசிடம் கேட்டதற்காகவே எம்பிக்களின் குழுவில் அழைக்கப்பட்டு, பின்பு அழைப்பு மறுக்கப்பட்டிருக்கின்றார்.

இத்தனை விமர்சனங்களுக்கு மத்தியில் தான் ஐரோப்பிய எம்பிக்களின் குழு கஷ்மீரைச் சென்றடைந்திருக்கின்றது. தங்கள் மீதுள்ள கறையினை எம்பிக்கள் தால் ஏரியில் கழுவிக் கொள்வார்களா? அல்லது தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையினை அச்சு பிசகாமல் செய்வார்களா என இன்னும் சில நாட்களில் பார்த்திடலாம்.

- நவாஸ்

Pin It