சமீபத்தில் பிங்க் என்ற இந்தி திரைப்படத்தைத் தழுவி தமிழில் 'நேர் கொண்ட பர்வை' என்ற திரைப்படம் வெளியானது. இதில் தமிழின் முன்னணி நடிகரான திரு.அஜீத்குமார் நடித்திருந்தார். படத்தின் ஒரு காட்சியில் அஜீத்குமார் தன்னை கொல்ல வில்லன் அனுப்பிய அடியாள் ஒருவரைத் தனது வாகனத்தின் முன்னால் கட்டி வைத்துக் கொண்டு வில்லனைச் சந்திக்க வருவார். இணையத்தில் திரை விமர்சனம் எழுதக்கூடிய விமர்சகர் ஒருவர் இந்த காட்சி குறித்து கடுமையாகச் சாடியிருந்தார். அதில், "அஜீத்குமார் போன்ற சட்டத்தை மதிக்கக்கூடிய முன்னணி நடிகர்கள், இது போன்ற காட்சிகளில் நடிப்பது வன்முறையை விதைப்பதாகவும், சட்ட ஒழுங்கை சிதைப்பதாகவும் இருக்கிறது" என்று எழுதியிருந்தார்.

kashmiri man tied in army jeepஉண்மை தான், ஒரு முன்னணி நடிகர் இதுபோன்ற காட்சிகளில் நடிப்பது வன்முறையைப் பொதுமக்களின் மனதில் தூண்டவும், சட்ட ஒழுங்கை சிதைக்கவும் செய்யும். ஆனால் இதையே சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய அரசும் அதன் கருவியான காவல் துறையும் செய்யும்போது..?

9 ஏப்ரல் 2017 - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் அன்று மக்களவை இடைத்தேர்தல். புர்காம் மாவட்டத்தில் தனது ஜனநாயகக் கடமையான வாக்கைச் செலுத்திவிட்டு தனது சகோதரியின் இரங்கல் சந்திப்பு கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தான் காஷ்மீர் இளைஞன் ஃபரூக் அஹமத் டார். அங்குத் தேர்தல் புறக்கணிப்பைக் கோரி சில இளைஞர்கள் கல் எரி வேலைகளில் ஈடுபட்டனர். உடனே வாக்குப்பதிவு மையங்களைப் பாதுகாக்க இருந்த ராணுவ படையினர் மேஜர் லீதுல் கோகி'யின் கட்டளையின் பேரில் அப்பாவியான ஃபரூக் அஹமத் டாரை கடுமையாகத் தாக்கி, தங்களது சவான் வாகனத்தின் முன் பகுதியில் கட்டினர். ஃபரூக்கை 'மனித கேடயமாக' பயன்படுத்தி 28 கிராமங்களைச் சுற்றி வந்தனர். கட்டை விரல் பூமியில் தேய, கைகள் கட்டப்பட்ட நிலையில் பல மணிநேரம் இருந்ததில் அவனது உடல்நிலை கடுமையாகப் பதிக்கப்பட்டது.

தினக்கூலியான ஃபரூக் போன்ற காஷ்மீர் இளைஞனின் வாழ்வை முடமாக்கிவிட்டுத் தான் இன்று இந்திய அரசு காஷ்மீரிகளின் வளர்ச்சி பற்றிப் பேசுகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் திட்டமிட்டு பயங்கரவாதத்தைத் தூண்டிவிட்டு இப்போது அமைதிக்காகப் போராடுகிறோம் என்கிறது. பற்றி எரியும் காஷ்மீர் பிரச்சனையை ஊதிவிட்டு அந்த புகைகளுக்கு உள்ளே அரசின் இயலாமையையும், பொருளாதார தோல்விகளையும் மறைத்துக் கொள்ளப் பார்க்கிறது.

இந்திய அரசு நேர் எதிரான முகங்களை எப்போது தன்னகத்தே கொண்டிருக்கிறது. விண்வெளி ஆய்வு, முற்போக்கு என அறிவியல் முகம் ஒரு புறம், ஆடையில்லாத அம்மண சாமியார்கள் மறுபுறம். வேற்றுமையில் ஒற்றுமை, கூட்டாட்சி என்பதெல்லாம் ஒரு புறம், வீதிகள் கூட சாதிகளாகப் பிரிந்து நிற்பது மறுபுறம். காந்தியின் வழி அமைதி தேசம் ஒருபுறம், அடக்குமுறை சட்டங்களால் மக்களை ஒடுக்கும் முகம் மறுபுறம். இந்த இரட்டை முகம் பற்றி நீங்கள் கேள்வி எழுப்பும் போதெல்லாம் உங்களின் தேசப்பற்று கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

தேசம் என்பது இங்குத் தேவையற்ற புனிதப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கேள்விக்கு அப்பாற்பட்டதாக வைக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட 'புனித தேசப்பற்று' கருத்தியல் தான் துப்பாக்கி முனையில் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் காஷ்மீரிகளின் உரிமை குறித்துப் பேச விடாமல் இந்தியர்களை வாய்மூட வைக்கிறது. தேசம் என்பது மக்கள் நலம் என்ற நேர் கொண்ட பார்வை மக்களுக்கு ஏற்படாதவரை இங்கு மாற்றம் என்பது நிகழப்போவது இல்லை.

- சே.ச.அனீஃப் முஸ்லிமின்

Pin It