யுகங்களை கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என நான்கு வகையாகப் பகுப்பர். கிருத யுகத்தில் நல்லோர் அதிகம் இருந்ததாகவும், தீயோர் இல்லை என்றும், திரேதா யுகத்தில் நல்லோர் அதிகமாகவும் தீயோர் சற்று குறைவாகவும் இருந்ததாகவும், துவாபர யுகத்தில் நல்லோரும் தீயோரும் சரிக்குச் சரி இருந்ததாகவும், கலியுகத்தில் தீயோர் அதிகமாகவும் நல்லோர் குறைவாகவும் இருப்பர் என்றும் பெரியோர் கூறுவர். முன்பெல்லாம் நல்லோர் யார்? தீயோர் யார்? என்று ஓரளவு நம்மால் அடையாளங் காண முடிந்தது.
நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என்று இன்றைய சூழலில் நம்மால் மனிதர்களை அடையாளங் காண முடிவதில்லை. இத்தகைய நிலை தொன்றுதொட்டு நம் முன்னோர்கள் காலத்திலும் இருந்து வந்துள்ளது. கிராமங்களில் ஒருசிலரைப் பார்த்தால், "இவனைப் பார்த்தால் நல்லவன் மாதிரி தெரியவில்லையே? கோளாறானவன் மாதிரி தெரியுது. கொஞ்சம் கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள்" என்று பெரியவர்கள் கூறுவர்.
ஆனால் இன்று யாராலும் நல்லவர், தீயவர் யார் என்பதைச் சரியாகக் கணிக்க முடியாத சூழல் உள்ளது. தண்ணீருடன் பால் கலந்தாற் போன்று நல்லோருடன் தீயோரும் அடையாளங் காண முடியாதவாறு கலந்துள்ளனர். ஒரு பேருந்து நிறுத்தத்தில் அழகிய ஆடை அணிந்தவன் ஒருவனும், அழுக்கான தலைவாராத பார்ப்பதற்கு விகாரமான தோற்றம் கொண்டவன் ஒருவனும் வருகின்றனர். இருவரையும் நாம் பார்க்கின்றபோது நாகரிகமாக ஆடை அணிந்தவனைப் பார்த்து அவனை நல்லவன் படித்தவன் என்று நம்புகின்றோம். மற்றவனைக் கண்டு அருவருப்புடன் அவனிடமிருந்து விலகி நிற்கிறோம்.
அவனைப் பார்த்தால் அவன் ஒரு குற்றவாளியாக இருப்பானோ என்று கருதுகின்றோம். மற்றவர்களைக் கவரும் வகையில் ஆடைஅணிந்த இளைஞன் யாருமில்லாத நிலையில் அருகிலே நின்ற பெண்ணின் கழுத்தையே பார்த்துக் கொண்டு நிற்கின்றான். பிறகு கைப்பேசியை எடுத்து யாருடமோ பேசுகின்றான்.
சிறிது நேரத்தில் யாரும் எதிர்பாராத சூழலில் அவன் அந்தப் பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு அருகில் வேகமாக வந்த பைக்கில் ஏறிப் பறந்து விடுகின்றான். அப்போது அங்கே நின்ற அழுக்கான ஆடையணிந்த விகாரமான தோற்றங் கொண்டவன் வேகமாக வண்டியில் சென்றவனை மற்றவர்களின் துணையுடன் விரட்டிச் சென்று அவனை அவனது நண்பனுடன் பிடித்து வருகின்றார்.
வந்தது மட்டுமல்லாமல் அவன் பறித்த தங்கச் சங்கிலியைப் பறித்து அந்தப் பெண்ணிடம் கொடுக்கின்றான். ஒரு மனிதனின் தோற்றத்தைக் கண்டு நாம் எந்த வகையிலும் அவனை நல்லவன் என்றோ? கெட்டவன் என்றோ முடிவு செய்தல் கூடாது.
அவனது செயல்களை வைத்தே நாம் எந்த முடிவானாலும் வரவேண்டும். ஏனெனில் நல்லவர்களைப் போன்று கெட்டவர்களும் கெட்டவர்களைப் போன்று நல்லவர்களும் தோற்றம் அளிக்கின்றனர். இதனை,
"யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே
அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும்
பேதம் தெரியலே.. பேதம் தெரியலே"
என்று கண்ணதாசன் குறிப்பிடுகின்றார். இத்தகைய நிலை வள்ளுவர் காலத்திலும் நிலவியது. அதனால்தான் வள்ளுவப் பெருந்தகை கயமை என்ற அதிகாரத்தைப் படைத்து கயமை நிறைந்த மனிதர்கள் எவ்வாறு இருப்பர் என்று அடையாளங் காட்டுகின்றார்.
காந்தியடிகள் எப்போதும் பிரார்த்தனை செய்வார். மாலையில் பிரார்த்தனைக்கு அவர் தனது தொண்டர்களுடன் வந்தபோதுதான் அவரை வணங்குவதைப் போன்று நாதுராம் கோட்சே வணங்கி கைத்துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றான். அவன் வணங்க வருகின்றான் என்றே பலரும் கருதி அமைதியாக இருந்தார்கள். ஆனால் அவன் மகாத்மாவை கொன்ற பிறகே எப்படிப்பட்ட கொடியவன் என்பதை உலகம் அறிந்து கொண்டது. நல்லவர்கள் போன்று நடிக்கின்ற கொடியவர்களை கயவர்கள் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.
கயவர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்களின் தோற்றம் எவ்வாறு இருக்கும்? என்பதற்கு,
"மக்களைப் போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல்"(1071)
"தேவர் அனையர் கயவர் திருவுடையர்
மேவன செய்தொழுக லான்"(1073)
என்று வள்ளுவர் விளக்கம் கூறுகின்றார்.
இதற்கு,"வடிவால் முழுதும் மக்களை ஒப்பர் கயவர். அவர் மக்களை ஒத்தாற் போன்ற ஒப்பு வேறு இரண்டு சாதிக்கண் யாம் கண்டதில்லை. மக்கட் சாதிக்கும் கயச்சாதிக்கும் வடிவு வேற்றுமை அறியப்படாது என்பதாம். இதனான் கயவரது குற்றம் மிகுதி கூறப்பட்டது" (திருக்குறள் பரிமேலழகர் உரை, ப., 423) என்று பரிமேலழகர் உரை வகுக்கின்றார்.
தீயவருக்கும் நல்லவருக்கும் உருவத்தில் எந்த வித்தியாசமும் கிடையாது. எல்லாருக்கும் நன்மை செய்பவன் உண்மையில் மனிதனாவான். அதாவது மனிதப் பண்புடையவன் மனித சாதியாவான். மனிதப் பண்பிலிருந்து மாறுபட்ட தீய நடத்தை உடையவன் கயமை சாதியாவான். அவன் மக்களைப் போன்றே ஒத்து இருப்பான். அவனை நாம் பிரித்தறிய முடியாது என்று கயமை உடைய மனிதர்களைப் பற்றி பரிமேலழகர் எடுத்துரைக்கின்றார்.
வள்ளுவர் வெளித்தோற்றத்தைக் கண்டு ஒருவனை நல்லவன் என்று நம்பிவிடுதல் கூடாது என்று தெளிவுறுத்தி கயமை நிறைந்த மனிதர்களை அடையாளங் காட்டுகின்றார்.
தேவரும் கயவரும் ஒரு தன்மையர். அஃது யாதலால் எனின் தேவரைப் போன்று தம்மை நியமிப்பாரின்றிக் கயவரும் தாம் விரும்புவனவற்றைச் செய்தொழுகலான்" என்று அடுத்த குறட்பாவிற்கு பரிமேலழகர் உரை(ப., 423) உரை வரைகின்றார். தேவர்களாகிய கடவுளர்களை ஏன் வள்ளுவர் உவமையாகக் கூற வேண்டும்? புராணங்களில் வரும் கடவுளர்கள் தங்களின் மனம் விரும்பியதை எல்லாம் செய்யக் கூடியவர்கள். அதனைப் போன்று கயவர்களும் தாங்கள் விரும்பியதை எல்லாம் செய்வார்கள் என்பதால் அவர்கள் தேவர்களைப் போன்றவர்களாவர். இக்குறளில் வள்ளுவர் கயமைத் தன்மை வாய்ந்த மனிதர்களைப் புகழ்வது போன்று பழித்து அவர்களை அறிந்து கொண்டு வாழுங்கள் என்று நமக்கு அறிவுறுத்துகின்றார்.
மெய்ப்பொருள் நாயனாரை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட முத்தநாதன் சிவனடியார் போன்று வேடமணிந்து கொண்டு வந்து அரண்மனையில் புகுந்து மெய்ப்பொருள் நாயனாருக்கு சிவ ஆகாமத்தைப் போதிப்பதைப் போன்று நடித்து அவர் வணங்குகின்றபோது அவரை தான் மறைத்து எடுத்து வந்த கத்தியால் குத்தி கொலை செய்கின்றான். நம்ப வைத்துக் கழுத்தறுத்த மாபாதகனான முத்தநாதன் அரண்மனைக்குள் வருவதைப் பற்றி,
"மைபொதி விளக்கே யன்ன"
என்ற உவமையால் சேக்கிழார் குறிப்பிடுவார். வெளிச்சம் தரும் விளக்கானது தன்னடியில் இருளை வைத்திருக்கின்றது. அதைப் போன்று இன்று பலர் நல்லவர் என்று கூறிக் கொண்டே பலதீமைகளையும் செய்துகொண்டு நல்லவர் என்ற பெயரில் வலம் வருகின்றார்கள். அத்தகையவர்களை மக்களும் அடையாளம் காணமுடியாமல் தவிக்கின்றனர்.
அவர் நமக்கு நன்மை செய்வாரா? இவர் நமக்கு நன்மை செய்வாரா? என்று ஒவ்வொருவராக நம்பி இறுதியில் எவர் நமக்கு நன்மை செய்வார் என்று அறியாது மக்கள் மாள்கின்றனர். மக்கள் நம்மை ஈடேற்றுவதற்கு நல்லார் வருவாரா என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமே அடைகின்றனர்.
நல்லோர்களை எதிர்பார்க்கின்ற மக்களைப் பார்த்தே வள்ளுவர், "கயவர்கள் நல்லவர்களைப் போன்று நடித்து வருவார்கள் அதை உண்மையென்று கருதாமல் அது போலியானது என்று கருதி கயமைத் தன்மை மிகுந்த மனிதர்களை அடையாளங் கண்டு வளமான வாழ்வு வாழுங்கள் என்று கூறுகின்றார். வள்ளுவர் கூறும் வழியில் நாமும் சென்று கயமை மனிதர்களை விலக்கி நன்மை செய்யும் நல்லோர்களுடன் சேர்ந்து வளமான வாழ்க்கையை வாழ்வோம்.
(தொடரும்)
- முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி,(தன்.), புதுக்கோட்டை