கலைஞர் இருக்கும்போதும் இறந்த பின்னும் செய்தது அந்தப் போராட்டம்தான்...

நேரிடையாக மோடியை சந்தித்து அவருக்கான இடத்தை மெரீனாவில் எளிதாக வாங்கியிருக்க முடியும் ஸ்டாலினால் ...

ஆனால் சில சமாளிப்புகளை செய்திருக்க வேண்டும்...

thirumavalavan and ravikumarஅதையெல்லாம் விடுத்து இங்கே உள்ள எடப்பாடியை சந்தித்து அதை அவர் மறுத்து அதன்பின் நீதிமன்றம் சென்று வாங்கியதே இப்போது கொண்டாடப்படும் விஷயமாகியிருக்கிறது...

அதேபோன்றுதான் திருமாவளவன் விஷயத்திலும் நடந்திருக்கிறது...

உதயசூரியன் சின்னத்தில் அவர் போட்டியிட்டு எளிதாக இந்த வெற்றியை ருசித்திருக்க முடியும். ஆனாலும் திருமாவளவன் என்பவர் இத்தனை நாட்களாக நடத்திய சமூகநீதி, சனாதன எதிர்ப்புப் பிரச்சாரம், சாதிய ஒற்றுமை, சாதி ஒழிப்பு போன்ற பிரச்சார முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மக்களை எந்த அளவுக்கு சென்றடைந்திருக்கிறது என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள மேற்கொண்ட அபாயகரமான முயற்சியே பானைச் சின்னத்தில் அவர் போட்டியிட்டது...

அந்த முயற்சியில் கடைசி நிமிடம் வரை சோதனை நிறைந்ததாக இருந்தாலும் போராடி அவர் பெற்ற வெற்றிதான் இப்போது கொண்டாடப்படும் விஷயமாகி விட்டது.... அதனால்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் "சிதம்பரம் தொகுதியில் கலைஞர் நிற்கிறார்" என்று அறிவித்தாரோ என்னவோ...

திருமாவளவனுக்கு வாழ்த்துக்கள் சொல்லும் அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் இங்கே பார்க்க வேண்டியிருக்கிறது... "ஆம்... எல்லோரையும்போல் வெற்றி தலித்களுக்கு அவ்வளவு சுலபம் இல்லை! அது தனித்தொகுதியாக இருந்தாலும்" - இவ்விதம் திரைப்பட இயக்குநர் ரஞ்சித் டிவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இயக்குநர் ரஞ்சித்தின் ஆதங்கம் ஒருவகையில் சரியே என்றாலும் அவருக்கு சில கேள்விகள்..

தலித் வெற்றிபெற போராட வேண்டுமெனில் எதிர்த்து நின்றவரெல்லாம் தலித் அல்லாதவர்களா? தனித்தொகுதி என்றால் அப்படித்தானே போட்டியிட முடியும்?

ஒரு தலித்தை எதிர்த்து இன்னொரு தலித் வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமானதல்ல என்று சொல்ல வருகிறீர்களா?

இவ்விதம் ரஞ்சித் ஆதங்கப்பட்டு பேசுகிற தலித் அரசியல்தான், திருமாவளவன் வெகுஜன அரசியலுக்கு வந்தாலும் அவரை தங்கள் எதிரியாக கருத வைக்கிறது... அல்லது கருத வைக்கப்படுகிறது சில ஆதிக்கவெறிக் கூட்டங்களால்...

சிதம்பரம் தொகுதியில் திருமாவுக்கு தலித்துகள் மட்டும் வாக்களிக்கவில்லை. அனைத்து சமூகத்தினரும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தால்தான் தங்கள் தொகுதிக்கான தேவைகளை நிறைவேற்றுவார் என்று நம்பியதால் தங்கள் வாக்கை அவருக்கு செலுத்தியிருக்கிறார்கள்.

திருமாவின் வெற்றி சிரமமாக இருந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, திருமாவளவனின் வெற்றிக்காக தன் சொந்த வன்னிய சாதி மக்களை திருமாவை நோக்கி திரும்பியதால் திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கருக்கு இருக்கும் பெரும் பங்கையும் மறந்துவிடக்கூடாது ரஞ்சித் சார். இதுவும் ஒருவகை சாதிய இணைப்பும் நல்லிணக்கமும் நிறைந்த நடவடிக்கைதான்...

திருமாவைக் கற்றறிந்தோர்... அவர் எழுதியதைப் படித்தோர்... பேசும் அற்புதக் கருத்துக்களைக் கேட்டோர் அனைவரும் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு அவரைப் பார்க்க விரும்புகிறார்கள்.

மக்களவையில் அவரது அறிவார்ந்த குரல் ஒலிக்க வேண்டும் என்று கட்சிகளுக்கும் சாதிகளுக்கும் அப்பாற்பட்டு விரும்பியவர்களை ரஞ்சித்துகள் சாதி அரசியலுக்குள் இழுக்கப் பார்ப்பது தவறான பார்வை.

முனைவர் திருமாவளவன் அனைவருக்கும் பொதுவானவர்... அதை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

- எஸ்.சஞ்சய் சங்கையா

Pin It