ஏக்கம் என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல.

நினைவுகளோடு கிடந்து அல்லாடுவது மனிதர்களுக்கு மட்டுமான உணர்வு அல்ல; அது இடம் பொருள் காலத்துக்கும் உண்டு.

wellஸ்விட்சைப் போட்டால் தண்ணீர் டேங்கில் இருந்து சின்டெக்ஸ்க்கு சென்று அங்கிருந்து எப்போது வேண்டுமானாலும் பைப்பை திருகினால் வந்து கொட்டும் நீரைத்தான் இன்றைய நகரத் தலைமுறைக்கு (சில கிராமத்துத் தலைமுறைக்கும்) தெரியும். ஆனால் அதை எல்லாம் தாண்டி ஆற்றில் நீரெடுத்த, குளத்தில் நீரெடுத்த, குட்டையில் நீரெடுத்த, கிணற்றில் நீரெடுத்த காலம் எத்தனை அலாதியானது என்று நான் அறிந்தவன்.

பாதிக் கிணறு வரை நீர் ததும்பி இருக்க, உருளையில் உருளும் கயிறு கொண்டு வாளி கட்டி, கிணற்றுக்குள் விட, நீர் முட்டிய வாளி தன் கழுத்தை சாய்த்து வாயை குபுக் குபுக்கென்று திறந்து நீர் குடிக்கும் அழகில் எட்டிப் பார்க்கும் நமக்கு அது தான் சாதனை என்று தோன்றும்.

புகழோடு தோன்றியது நீர்.

நீர் குடித்து விட்டு மலைப்பாம்பைப் போல வாளிக்குள் கனமற்று இருக்கும் நீர், நீருக்குள் மேலெழும் போது நீருக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல இருந்து விட்டு, நீரைத்தாண்டி மேலே எழும் வாளி படக்கென்று காற்றை உள் வாங்கி கனமாகும். காற்றுக்கு நீர் முளைப்பதைக் காண கண்களில் பளீரிடும் கிணற்று சூட்சுமம்.

ஒரு கையில் இழுத்து அடிநெஞ்சு வரை கொண்டு வந்து இன்னொரு கையை கயிற்றின் நேர்க்கோட்டில் மேலே தூக்கி உருளைப் பக்கம் இருக்கும் கயிற்றின் வளைவுக்கு முந்திய நீட்சியை சரேலென இழுத்து, அதை இடது நெஞ்சு வரை இழுக்க, இப்படி மாறி மாறி இழுத்து விட்டு, இழுத்து விட்டு ஒரு கட்டத்தில் வாளி உருளையைத் தொடும் போது லாவகமாக வாளியின் காது பிடித்து, அலாக்காக தூக்கி கிணற்று திண்டில் வைத்து, பிறகு குடத்தில் ஊற்றும் அழகில் நீர் இன்றி அமையாது ஊர் என்று சலசலக்கும் மூச்சு.

நான் முதல் முறை கிணற்றில் நீரெடுத்த நாள் இன்றும் நினைவில் இருக்கிறது.

"உன் சோட்டு பசங்கெல்லாம் எடுக்கறாங்கல்ல... நீயும் போய் கிணத்துல தண்ணி எடுத்துட்டு வா சாமி" என்று என் பாட்டி சொல்ல, நான் பாட்டி சொல்லைத் தட்டாதவன். நானும் குடத்தைத் தூக்கிக் கொண்டு கிணற்றுக்கு சென்று விட்டேன். எனக்கு முன்னால் நீர் சேந்திய 'சரசக்கா' என்னை பார்த்து, ' விஜி சேந்த தெரியுமா...?' என்று கேட்டது. நீருள் சுருளும் மீனின் கண்களில் சிரித்து விட்டு,' ம்ஹும்... சும்மா ட்ரை' என்றேன்.

சரசக்காவின் பயிற்சியின்படி நான் வாளியை உள்ளே விடும் வரை சுலபமாகவே உணர்ந்தேன். நீர் நுழைந்த வாளியை நீரை விட்டு தூக்குகையில் படக்கென்று என் கை பாரம் தாங்காமல் உருளை வரை வேகமாய் ஈர்ப்பு சக்தி இழுத்த நொடியில் முகம் சிவந்து போனேன். மூளைக்குள் நீச்சல் அடித்தது சூடு. கயிற்றின் உராய்வில் உள்ளங்கை சிவந்து ஸ்ஸ்ஸ்ஸ் ஆஹ் என்று கயிற்றை விட்டு விட "இணைந்த கைகள்" அருண்பாண்டியன் மாதிரி எட்டிப் பிடித்து உருளையில் முனைக்கு போன கயிற்றைப் பற்றி மேல் நோக்கி இழுத்தது சரசக்கா.

பிறகு ஒரு கையை இப்படி இழுத்து இப்படி விட வேண்டும் என்று இழுத்துக் காட்டி, விட்டுக் காட்டி கற்றுக் கொடுத்தது. அதன் பிறகு கயிற்றை இழுத்துக் கொண்டு கொஞ்ச தூரம் கிணற்று சட்டத்தை விட்டு வெளியே வந்து, பிறகு இன்னொரு கையை ஒரே தம்மில் வேகமாய் முன்னோக்கி வந்து பிடித்து இழுத்து... பிறகு ஒரு வழியாக பழகி விட்டேன். சில குடங்களில் என்னை தேர்ந்த நீர் சேந்தியாக மாற்றியது என் தொடர் பயிற்சி. பிறகு எத்தனையோ குடங்களுக்கு நான் நீர் அள்ளி குவித்திருக்கிறேன். நீரும் என்னை துளி துளியாய் சேர்த்திருக்கிறது. அந்த சமயங்களில் கிணறும் ஒரு பொருளாகவே நம்மோடு வட்டமிடும்.

நீரள்ளி சேந்துவது தான் கிணற்றுக்கு செய்யும் சேவை. சேந்த சேந்த தான் நீரூரும். நீரூர நீரூர தான் ஊர் ஊரும். இன்று அதே கிணற்று நீரை பம்பு செட் மோட்டர் போட்டு, மேலே எடுத்து குழாயோடு இணைத்து விட்டார்கள். நீர் சேந்துவது பற்றிய எந்தக் குறிப்பும் இன்றைய தலைமுறைக்கு இல்லை. கிணற்று மேடு என்ற சொல் பதமே யாருக்கும் தெரியாமல் இருக்கிறது. ஆள் அரவமற்ற கிணற்று மேட்டில் எப்போதாவது என்னைப் போன்றோர் உட்கார்ந்து இப்போதெல்லாம் புகைப்படம் மட்டுமே எடுக்க முடிகிறது.

பம்பு செட்டில் செயற்கை முறையில் உரிந்து உரிந்து நீர் வெகு ஆழத்துக்கு சென்று விட்டதை எட்டிப் பார்க்க கூடாதென்று மூடி போட்டு கிணற்றை மூடி விட்டார்கள். ஊருக்கொரு கிணறு ஊர் நடுவில் இருந்தது வட்ட வட்ட நினைவுகளை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. சலசலக்கும் பொருள்படும் முந்தைய தலைமுறையின் தவிப்பில் யாரோ கல் எடுத்துப் போடுகிறார்கள். கல் விழும் சப்தம் இன்னும் கேட்கவில்லை. அதன் வட்டம் சுற்றிக் கொண்டேயிருக்கிறது.

தொடரும்...

- கவிஜி

Pin It