2002 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்யக் காரணமாக இருந்த மோடியை இந்திய மக்கள் 2014 ஆம் ஆண்டு பெரும்பான்மையாக வெற்றிபெற வைத்து இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையை ஏற்படுத்தினார்கள். தன்னுடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் மோடியிடம் தீர்வு உள்ளதாக இந்திய மக்கள் மனதார நம்பினார்கள். ஆனால் தனக்குக் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய மக்களின் வாழ்க்கையை மோசத்தில் இருந்து படுமோசத்திற்கு கொண்டு போய் நிறுத்தினார் மோடி. வறுமையிலும், பட்டினியிலும் தவித்துக் கொண்டிருந்த லட்சக்கணக்கான மக்களுக்கு பரலோக‌த்திலும், தனது எசமான முதலாளிகளுக்கு இந்த மண்ணிலேயும் சொர்க்கத்தைக் காட்டினார். சாமானிய மக்கள் எந்தளவிற்கு மோடியால் சுடுகாட்டிற்குப் போனார்களோ அந்தளவிற்கு அவரது எசமானர்கள், உலகப் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து இடம் பிடித்தார்கள். அவர்களின் சொத்துமதிப்புகள் பெட்ரோல், டீசல் விலையைவிட வேகமாக அதிகரித்தன. சாமானிய மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்தார்கள், அவர்களின் வேலைகள் பறிக்கப்பட்டன, அவர்களின் சேமிப்புகள் அழிக்கப்பட்டன, பல பத்தாண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட்டார்கள்.

sanjiv bhattஆனால் மோடி மிக மகிழ்ச்சியாக இருந்தார். அவர் எதை முன்னிட்டு பிரதமராக விரும்பினாரே அதை ஏறக்குறைய செய்துவிட்டார். குஜராத் இரத்தக்கறைகளை நீதிபதிகளின் துணையுடன் சுத்தம் செய்துகொண்டார். தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்பவன் ஒரு நல்ல தலைவனாக இருக்க முடியாது. எனவே தன்னைப் போலவே கொலைவெறி தலைக்கேறி இஸ்லாமியர்களை குண்டு வைத்துக் கொன்ற தன்னுடைய சகாக்கள் அனைவரையும் அந்தப் பாவத்தில் இருந்து விடுவித்தார். அதற்குத் தடையாக இருந்த அனைவருக்கும் இறுதித் தீர்ப்பு வாசித்தார். மோடி ஆட்சிக்கு வந்ததும் நீதி தேவதைகள் காவி வேட்டி கட்டிய கிரிமினல் கும்பலால் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டார்கள். உயிருக்குப் பயந்த பல நீதிதேவதைகள் தாங்களாகவே ஆடைகள் களைந்து அவர்களை வரவேற்றார்கள்.

என்னதான் மோடி நீதியை வல்றுறவு செய்தாலும், கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதிரிகளே இல்லை என்று இறுமாப்போடு இருந்தாலும் நேர்மையை மட்டுமே தங்களின் வாழ்க்கையின் கொள்கையாக ஏற்றுக்கொண்டவர்கள் ஒரு சிலராவது தப்பித் தவறி இருந்து விடுகின்றார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் சஞ்சீவ் பட். ஒட்டுமொத்தமாக இனப்படுகொலை குற்றத்தில் இருந்து தன்னை தப்புவித்துக் கொள்ள மோடி முயன்றபோது, அந்த எண்ணத்தில் நெருப்பை வைத்தவர் அவர். 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் கோத்ராவில் சபர்மதி ரயில் மர்மமாக எரிக்கப்பட்ட போது அதில் வந்த கரசேவர்கள் பலர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சம்மந்தமான ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். அதில் “முஸ்லிம்களுக்கு எதிரான தங்களின் கோபத்தை இந்துக்கள் தீர்த்துக் கொள்ளட்டும். அவர்களுக்குப் பாடத்தைக் கற்பிக்கட்டும்” என்று சொன்ன மோடி போலிஸாரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நடக்கப் போகும் இனப்படுகொலையை அமைதியாக வேடிக்கை பார்க்க உத்திரவிட்டார். "மோடி நிச்சயமாக அப்படி சொல்லியிருக்க வாய்ப்பில்லை. காரணம் அவர் ஒரு உலக மகா உத்தமர்" என்று சான்றிதழ் கொடுக்க அவரது அடிப்பொடிகள் தயாராக இருந்தபோது அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட உளவுத்துறை துணை ஆணையர் சஞ்சீவ்பட் இந்த உண்மையை வெளி உலகிற்கு போட்டுடைத்தார். இனப்படுகொலையின் ஆணிவேரை இந்திய சமூகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

இதுதான் சஞ்சீவ்பட் செய்த தேசத் துரோகக் குற்றம். மோடிக்கு எதிராக சிந்திப்பவர்களையே இந்த உலகில் இருந்து காணாமல் போகச் செய்யும் காவிக் கும்பல், மோடிக்கு எதிராக அதுவும் மோடியின் ரத்தக்கறை படிந்த கரங்களை பொதுச்சமூகத்தின் முன் அம்பலப்படுத்திய சஞ்சீவ்பட்டை சும்மா விடுவார்களா?. நரேந்திர மோடியின் ‘கெளரவ் யாத்ரா’ தொடர்பாக சில ரகசியங்களைக் கசியவிட்டார் என்ற குற்றம் சாட்டப்பட்டு விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்தி அவரை சபர்மதி சிறையில் இரண்டு மாதங்கள் அடைத்தார்கள். மேலும் மோடி வீட்டில் நடந்த அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவே இல்லை என்று தனது எடுபிடி ஏவல் நாய்களின் மூலம் சொல்ல வைத்தார்கள். இதன் பின் அவர்மீது 2 வழக்குகளை குஜராத் அரசு பதிவு செய்தது. குஜராத் கலவரத்தில் அரசுக்கு எதிராக குற்றம் சுமத்தும்படியும், கூடுதல் அட்வகேட் ஜெனரலின் இ-மெயிலில் ஊடுருவிப் பார்க்க தனக்கு கீழ் உள்ள உளவுத்துறை அதிகாரிகளை வற்புறுத்தியதாகவும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் சஸ்பென்ட் செய்யப்பட்ட அவர் 2015 ஆகஸ்ட் 18 ஆம் தேதி பணிநீக்கமும் செய்யப்பட்டார்.

தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் மீது உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில் “நான் குற்றம் சாட்டியுள்ள அப்போதைய முதல்வர் மோடி தற்போது பிரதமராக உள்ளார். அதே போல அப்போது அட்வகேட் ஜெனரலாக இருந்தவர் தற்போது சொலிசிடர் ஜெனரலாக உள்ளார். இவர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டுச்சதி செய்து தன்மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். எனவே எனக்கு எதிரான புகாரை நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்" என்றார். மேலும் அப்போது குஜராத் உள்துறை இணை அமைச்சராக இருந்த அமித்ஷா மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்களையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜெயலலிதாவின் ஜாமீன் புகழ் எச்.எல்.தத்து மற்றும் அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்சு அதை மறுத்துவிட்டது. மோடியே முடிவெடுத்த பின்னால் தாங்கள் தலையிடுவது தங்களது உயிருக்கும், உடமைக்கும் பெரிய சேதத்தை விளைவிக்கும் என நீதிபதிகள் நினைத்தார்களோ என்னவோ.

இவ்வளவு செய்தும் சஞ்சீவ்பட் ஓய்ந்துவிடவில்லை, பயந்துவிடவில்லை. தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மோடியின் வண்டவாளங்களை அம்பலப்படுத்திக் கொண்டே இருந்தார். மோடி தனது வேலையைக் காட்டத் தொடங்கியுள்ளார். 1996ஆம் ஆண்டு பனஸ்கந்தா மாவட்ட போலீஸ் எஸ்.பியாக சஞ்சீவ்பட் பணியாற்றிய போது சுமர்சிங் ராஜ்புரோஹித் என்ற வழக்கறிஞரை கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்தார். தற்போது அந்த வழக்கில் பனஸ்கந்தா பகுதியில் உள்ள சுமர்சிங் ராஜ்புரோஹித்தின் சொத்துக்களை கைப்பற்றவே சஞ்சீவ்பட் அவர்மீது பொய்வழக்கு போட்டதாக சொல்லி அவரைக் கைது செய்ய வைத்துள்ளார். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த வழக்கையும், காவி பயங்கரவாதிகள் நிகழ்த்திய பல்வேறு குண்டுவெடிப்பு வழக்கையும் ஒன்றும் இல்லாமல் செய்ய முடிந்த மோடியால் தனக்கு எதிரானவர்களை முடித்துக் கட்ட எந்த எல்லைக்கும் செல்ல முடியும்.

ஏற்கெனவே வரவர ராவ், சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சால்வாஸ், அருண் பெரைரா, கவுதம் நவலகா போன்றோரை தன்னைக் கொல்ல வந்ததாக கைது செய்ய வைத்த மோடிக்கு ஆனந்த் தெல்தும்டே, கேவி குர்மானத், கிரந்தி தெகுலா, கே.சத்யநாராயணா, ஸ்டான் சாமி போன்றவர்களை மிரட்டிய மோடிக்கு சஞ்சீவ்பட்டை காலி செய்வது ஒன்றும் பெரிய விடயமில்லை. ஆனால் மோடி அனைவரையும் மிரட்டிப் பணிய வைக்க முடியும் என்று தப்புக்கணக்கு போடுகின்றார். அதிகாரத்தின் முன் மண்டியிடும் கோழைகளை, கைக்கூலிகளை எச்சில் பொறுக்கிகளை வேண்டுமானால் அவரால் பயமுறுத்தவும், அச்சுறுத்தவும், அடிபணிய வைக்கவும் முடியும். சஞ்சீவ்பட் போன்றவர்கள் அந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது. மோடி தான் செய்த இனப்படுகொலை குற்றத்திற்கு நிச்சயம் ஒரு நாள் குற்றவாளிக் கூண்டில் ஏறியே ஆக வேண்டும். அப்படி அவரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டிக்கும் வரை இந்த மண்ணில் நீதிக்காகவும், நேர்மைக்காகவும், உண்மையான ஜனநாயகத்திற்காகவும் போராடும் சஞ்சீவ்பட் போன்றவர்கள் ஓய மாட்டார்கள். அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து சஞ்சீவ்பட் விடுதலைக்கு குரல் கொடுப்போம்.

- செ.கார்கி

Pin It