இனக் கொள்கையின் தன்மை

ஒரே மூலத்தில் தோன்றி, ஆதி மனித குலத்தின் கருவில் உதித்த இனங்கள் கண்டிப்பான விஞ்ஞான நோக்கில் பார்க்கும் போது உயிரியல் சமத்துவம் உள்ள இனவகைக் கிளை வகைப் பிரிவுகளாக விளங்குகின்றன. எந்த ஓர் இனமும், அதன் பிரதிநிதிகளின் பரிணாம வளர்ச்சியில் மற்ற இனங்களைவிட உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல. உடல் கட்டமைப்பின் சிறப்பான மனித இயல்புகளில் மட்டும் இன்றி, நுட்பமான பெரும்பான்மை அம்சங்களிலும் எல்லா இனத்தினரும் அடிப்படை ஒற்றுமை கொண்டிருப்பதற்குக் காரணம் அவர்கள் ஒரே மூலத்திலிருந்து தோன்றியதே ஆகும்.

இந்த அடிப்படை ஒற்றுமையுடன் ஒப்பிடும் போது ஒரு சில இன வேற்றுமைகள் மிகவும் முக்கியம் அற்றவையாகவே இருக்கின்றன. ஆயினும், இன அடையாளங்கள் தனி இனவகையையும் தனிச் சாதியையும் கூடக் காட்டுபவை என்று சில விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இவ்வாறு, இந்த அடையாளங்களின் வகுப்பு தொகுப்பு முறைப்பாட்டு முக்கியத்துவத்தை அவர்கள் செயற்கையாக மிகைப் படுத்தி, மனித இனங்களின் இடையே உள்ள வேற்றுமைகளை மேலும் ஆழ்ந்தவையாகக் காட்டுகிறார்கள். இந்த விஞ்ஞானிகளின் கருத்துப்படி மனித இனங்கள் முற்றிலும் வெவ்வேறு மூதாதைகளிலிருந்து, பல் வழித் தோற்ற முறையில் உதித்தன. உரு அமைப்பு இயல், உடலியல், உள இயல் சிறப்புத் தன்மைகளில் முற்றிலும் ஒற்றுமை இல்லாத, ஒருவருக்கு ஒருவர் உறவுப் பிணைப்பு அற்ற, பரஸ்பரப் பகைமை கொண்ட மனிதர்களின் குழுக்களே இனங்கள் என்று மெய் விவரங்களைப் புறக்கணித்து விட்டு நிரூபிக்க இந்த விஞ்ஞானிகள் முயல்கிறார்கள். இந்தக் கருத்தின் ஆதரவாளர்கள் இனங்கள் பொது மூதாதையிலிருந்து தோன்றியவை என்று ஒப்புக் கொண்டாலும் கூட, ``விரைவாக வளர்ச்சி அடைந்த’’, ``உயர்ந்த’’ இனங்களும் ``பின்தங்கி விட்ட’’, ``தாழ்ந்த’’ இனங்களும் இருப்பதாகவும், முதல்வகை இனங்கள் தடையின்றி முன்னேறுகின்றன. இரண்டாவது வகை இனங்கள் மீது ஆதிக்கம் செலுத்தத் தகுதி பெற்றி ருக்கின்றன என்றும், கீழ்ப்பட்டு, அடிமைகளாகி இழிநிலை அடை வதுதான் பிந்திய இனங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றது என்றும் வலிந்து உரைக்கிறார்கள். மனித இனங்கள் உயிரியல் சமத்துவம் அற்றவை என்ற போலிக்கருத்துக்கு ஆதாரம் காட்ட முயல்வதும் அதை ஆதரிப்பதுமே இனக் கொள்கையின் சாராம்சமான தன்மை.

``வெள்ளை’’ இனம் ``உயர்ந்தது’’ என்றும் ``நிறமுள்ள’’ (``கறுப்பு’’, ``மஞ்சள்’’) இனங்கள் ``தாழ்ந்தவை’’ என்றும் இனக் கொள்கையினர் வழக்கமாகக் கருதுகிறார்கள். சில விஞ்ஞானிகள், சிறப்பாக மேற்கு ஜெர்மானிய, ஆங்கில, அமெரிக்க விஞ்ஞானிகள், ``ஆரிய’’ சித்தாந்தத்தைப் பரப்புகிறார்கள். வடக்கு, மத்திய ஐரோப்பாவைச் சேர்ந்த மானிட இயல் மாதிரிகளின் ஏதேனும் ஒரு குழுவோ அல்லது அதன் சந்ததிகளோதாம் ``உயர்ந்த’’ இனம் என்று கூறுகிறது இந்தச் சித்தாந்தம். ஆனால், மங்கோலிய அல்லது நீக்ரோ இனமே உயர்வானது என்ற கருத்துக்களும் மீண்டும் மீண்டும் தலை தூக்குகின்றன. உதாரணமாக, ஜப்பானிய இராணுவக் குழுவின் ஆட்சிப்பரப்பு விஸ்தரிப்புக் காலத்தில் ``ஜப்பானிய மஞ்சள் இனம்’’ உயர்வானது என்ற கருத்தை அக்குழுவின் கொள்கைவாதிகள் பரப்பி வந்தார்கள். சீனர்கள் மற்ற மக்கள் இனங்களைவிட உயர்ந்தவர்கள் என்ற பெரு வல்லரசுக்குரிய கருத்தோட்டங்கள் முற்றிலும் விஞ்ஞானத்துக்கு ஒவ்வாதவை, தீங்கானவை.

Pin It