ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகரில் உள்ள கானா பல்கலைக்கழகத்தில் இருந்து காந்தியின் சிலையை அப்பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து அகற்றி இருக்கின்றார்கள். அந்தச் சிலை 2016 இல் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சிலை திறக்கப்பட்டபோதே கானா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், காந்தி சிலையை தங்கள் வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டுமென்று போராட்டம் நடத்தினர். இதற்கு அவர்கள் சொன்ன காரணம், காந்தி மேற்கொண்ட அகிம்சைப் போராட்டத்தில் 'இன அடையாளம்` இருந்ததாகக் கூறினர். தென்னாப்பிரிக்க கறுப்பின மக்களை காந்தி மிக இழிவாக காஃபிர்கள் என்று அழைத்ததாகவும், இந்தியர்களைவிட கறுப்பினத்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்று பொருள்படும்படி காந்தி எழுதி இருப்பதாகவும் கூறி, காந்தி சிலை தங்கள் மண்ணில் நிறுவப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

gandhi statue at ghana

(அகற்றப்படும் காந்தி சிலை)

ஆனால் இன்று வரையிலும் இந்தியாவில் உள்ள காந்தி பக்தர்கள், காந்தி தென் ஆப்பிரிக்காவில் கறுப்பின நிறவெறிக்கு எதிராகப் போராடியதாகத் தொடர்ந்து புளுகி வருகின்றார்கள். ஆனால் அவர்கள் என்னதான் மூடி மறைத்தாலும், காந்திக்கு கறுப்பின மக்கள் மேல் இருந்த தீராத இனவெறிக்கு அவரது எழுத்துக்களே இன்றும் சாட்சியாக இருக்கின்றது. காந்தி ஒருபோதும் தென்னாப்பிரிக்காவில் இருந்த கறுப்பின மக்களை சக மனிதர்களாகப் பார்க்கவில்லை என்பதையும் தாண்டி, அவர்களைப் பற்றி மிகக் கீழ்த்தரமான கருத்தையே வைத்திருந்தார். அதை தெரிந்து கொள்ளும்போதுதான், ஏன் கானா மாணவர்களும் ஆசிரியர்களும் காந்தியின் சிலையை அப்புறப்படுத்தினார்கள் என்பதை நம்மால் உணர முடியும்.

காந்தி தனது இருபது வருட தென்னாப்பிரிக்க வாழ்வின் பதினாறாவது ஆண்டின் ஜனவரி பதினாறாம் தேதி இந்தியன் ஒப்பினியன் நாளிதழில் ‘காவோலில் என் இரண்டாவது அனுபவம்’ என்ற தலைப்பில் “முழுவதும் உடல்நலம் குன்றியிருந்த காஃபிர் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த செல்லில் எனக்கு ஒரு படுக்கை அளித்தனர். இந்த செல்லில் நான் பெருத்த பயத்துடனும், துயரத்திலும் இரவைக் கழித்தேன். என்னுடன் எடுத்துச் சென்றிருந்த பகவத் கீதையை வாசித்தேன். என்னுடைய சூழ்நிலைக்குப் பொருத்தமான ஸ்லோகங்களை அவற்றைப் பற்றி தியானித்துக் கொண்டே படித்தேன். அப்படித்தான் நான் என்னை சமன்படுத்திக் கொண்டேன். எனக்கு அவ்வளவு சங்கடமாக இருந்ததற்குக் காரணம் அங்கிருந்த காஃபிர் மற்றும் அந்த சீனன் மிக மோசமானவனாகத் தெரிந்தான். அவன் கட்டிலுக்கு அருகே வந்து என்னை உற்றுப் பார்த்தான். நான் அசைவில்லாமல் கிடந்தேன். அப்புறம் அவன் இன்னொரு படுக்கையில் இருந்த காஃபிரிடம் சென்றான். இருவரும் தங்கள் பிறப்புறுப்புக்களைத் திறந்து காண்பித்து ஆபாசமான ஜோக்குகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்தியக் கைதிகளை காஃபிர்களோடோ பிறரோடோ சேர்த்து வைக்கக்கூடாது எனப் போராட்டம் நடத்த வேண்டும் என நான் என் மனதில் உறுதி எடுத்துக் கொண்டேன். நமக்கும் அவர்களுக்கும் இடையே எந்தப் பொதுவான தன்மையும் கிடையாது என்பதை நாம் புறந்தள்ள முடியாது. மேலும் அவர்கள் இருக்கும் அதே அறையில் உறங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும், அப்படிச் செய்வதற்கு மோசமான உள்நோக்கங்கள் இருக்கும்.”

இனவெறி, சாதிவெறி, மதவெறி போன்றவை வெவ்வேறாக இருந்தாலும் இதன் அனைத்திற்கும் மூல ஊற்று ஒன்றுதான். அது இயல்பிலேயே தன்னுடைய சக மனிதனின் உரிமைகளை மறுக்கும் ஜனநாயகத் தன்மையற்ற சிந்தனைப் போக்கே ஆகும். அந்த வகையில் இந்திய சனாதன தர்மத்தில் ஊறித் திளைத்த காந்தி தன் அளவிலேயே சகமனிதனின் மீது பாகுபாடு காட்டியதில் வியப்பேதும் கிடையாது. காந்தி உண்மையில் தென் ஆப்பிரிக்காவில் குடியேறி வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒருநாளும் இருக்கவில்லை. மாறாக அவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்த முஸ்லிம்கள், இந்து உயர்சாதியினரின் குரலாகவே ஒலித்தார். அவர்களை ஆப்பிரிக்கர்களுக்கு இணையாக நடத்தப்படுவதைக் கண்டு காந்தியின் சனாதன மனம் கொதித்தது. அவர்களை வெள்ளையர்களுக்கு இணையாக நடத்த வேண்டும் என காந்தி விரும்பினார். இதன் அடிப்படையில்தான் 1894இல் பெரும் வியாபாரிகளாலும் வர்த்தகர்களாலும் நிதி அளிக்கப்பட்டு செயல்பட்டு வந்த நடால் இந்திய காங்கிரஸின் செயலாளர் ஆனார். அதன் உறுப்பினர் சந்தா மூன்று பவுண்டுகள் ஆகும். இந்தத் தொகை என்பது அன்றைய தேதியில் மிகப் பெரிய தொகையாகும்.

1895 ஆம் ஆண்டு டர்பன் தபால் நிலையத்தில் வெள்ளையர்களுக்கும், கறுப்பர்களுக்கும் தனித்தனியாக இருந்த வாயிலை இந்தியர்கள் பயன்படுத்த வேண்டும் என்று இருந்த விதிக்கு எதிராக 1894 டிசம்பர் 19 ஆம் தேதி நடால் சட்டசபைக்கு காந்தி கடிதம் எழுதினார். அதில் இந்தியர்களும் ஆங்கிலேயர்களும் “இந்தோ ஆரியன் என்றழைக்கப்படும் ஒரே அடிப்படையிலிருந்து ஊற்றெடுத்தவர்கள்" என்று குறிப்பிட்டு அதற்கு ஆதரவாக மேக்ஸ்முல்லர், ஆர்தர் ஷோபன்ஹோயர் போன்றோரை மேற்கோள் காட்டியிருந்தார். "ஒரு பண்படாத காஃபிரின் நிலைக்கு இந்தியர்கள் கீழிறக்கப்படுகிறார்கள்” என்று புகார் கூறினார். காந்தியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆங்கிலேய அரசு டர்பன் தபால் நிலையத்தில் மூன்றாவதாக ஒரு வாயிலை இந்தியர்களுக்காகத் திறந்தது.

ghana students

(சிலையை அகற்றிய பின் கொண்டாட்டத்தில் கானா மாணவர்கள்)

காந்தியால் காஃபிர்கள் என்று அழைக்கப்பட்ட ஆப்பிரிக்க சுதேசி மக்களான ஸுலூ மக்கள் அவர்களின் தலைவரான பம்பாத்தா தலைமையில் 1906 ஆம் ஆண்டு ஆங்கில அரசின் புதிய ஒரு பவுண்டு வரிவிதிப்புக்கு எதிராக தீரத்துடன் ஈட்டிகளையும், மாட்டுத்தோல் கேடயங்களையும் மட்டும் நம்பிப் போர்புரிந்தபோது, காந்தி தனது ‘இந்தியன் ஒபினியன்’ செய்தித்தாளில் (இதன் புரவலர்களில் ஒருவர் ரத்தன் ஜி ஜாம்ஷெட்ஜி டாடா ஆவார்) இதற்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்தார். ஆங்கிலேயருக்கு தேவையான உதவிகளை தென் ஆப்பிரிக்க வாழ் இந்தியர்கள் கண்டிப்பாக செய்வார்கள் என உறுதி அளித்தார். இறுதியில் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டு, பம்பாத்தா சிறைபிடிக்கப்பட்டு சிரமறுக்கப்பட்டு கொல்லப்பட்டார். நான்காயிரம் ஸூலூக்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் அகிம்சையின் கடவுள் இந்த மாபெரும் படுகொலைகளைப் பற்றி ஒரு கண்டனத்தைக் கூட தெரிவிக்கவில்லை. மாறாக 1928இல் எரவாடா சிறையில் இருந்து இப்படி எழுதினார்.

“டிரான்ஸ்வாலில் இருந்த இந்தியர்கள் மீது மேலும் அடக்குமுறைகள் விதிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதுதான் ஸூலூ கிளர்ச்சி வெடித்தது…. எனவே நான் அரசிற்கு படையணிகளுடன் பணிபுரிய ஓரு ஆம்புலன்ஸ் தூக்கும் அணியை கட்டுவதற்கான எனது ஆலோசனையை வழங்கினேன். இந்த ஆம்புலன்ஸ் அணியினர் ஒரு மாத காலம் பணிபுரிந்தனர். காயங்களுடன் ஐந்து, ஆறு நாட்களுக்குக் கூட கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஸூலூக்களின் நாற்றமடிக்கும் காயங்களைக் கழுவ வேண்டியிருந்தது. எங்களுக்கு அந்த வேலை பிடித்திருந்தது. ஸூலூக்களால் எங்களிடம் பேச முடியவில்லை. ஆனால் அவர்களின் செய்கைகளிருந்தும் கண்களில் இருந்த பாவத்திலிருந்தும் அவர்கள் நாங்கள் அளித்த பேணுதலை கடவுளே அனுப்பியதுபோல உணர்ந்தனர் என்று தெரிந்தது.”

மனதிற்குள்ளாக கறுப்பின மக்களின் மேல் காந்திக்கு இருந்த இனவெறியே அவரை இப்படி எல்லாம் எழுத வைத்தது. அவரின் சனாதன தர்மம் வெள்ளையர்களுக்கு வால் பிடிப்பதை பெருமையாக நினைத்தது, அதனால் காந்தி எப்போதும் தன்னுடைய அகிம்சையின் ஆயுதத்தை ஒடுக்கப்படும் மக்களிடம் மட்டுமே வரம்பற்று நீட்டினார். ஆனால் ஏகாதிபத்தியத்திடம்? 1895 ஆம் ஆண்டு, டிசம்பர் 16 ஆம் நாள் “தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் பிரிட்டிஷ்காரர் ஒவ்வொருவருக்கும் விடுக்கப்படும் ஒரு வேண்டுகோள்” இல் காந்தி அறிவித்தார் “இந்தியா மீது இங்கிலாந்து தன் செங்கோலை மெல்லப் பரப்புவது உண்மைதான். அந்த உண்மை குறித்து இந்தியர்கள் வெட்கப்படவில்லை. பிரிட்டிஷ் அரசின் கீழ் இருப்பதில் அவர்கள் பெருமைப்படுகிறார்கள். ஏனென்றால் இந்தியாவை விடுவிக்கப் போவது இங்கிலாந்துதான் என அவர்கள் நம்புகிறார்கள்” என்றார்.

இதுதான் காந்தியின் உண்மையான முகம். முதலாளித்துவ பயங்கரவாதத்தையும், பார்ப்பன பயங்கரவாதத்தையும் மனதளவில் ஏற்றுக்கொண்டு அதற்கு சேவை புரியும் மக்கள் விரோதிகளுக்கு மட்டுமே காந்தி என்றென்றும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றார். காந்தியின் உண்மையான முகத்தை அவரின் சிந்தனைகளின் வாயிலாக தரிசித்த குறைந்தபட்ச தன்மானமும், சுயமரியாதையும் உள்ள யாருமே காந்தியின் கருத்துக்களை எதிர்க்கத்தான் செய்வார்கள். அதைத்தான் கானா மாணவர்களும், ஆசிரியர்களும் செய்திருக்கின்றார்கள். இதற்காக நாம் அவர்களைப் பாராட்ட வேண்டும். கானா மட்டுமல்ல கிழக்கு ஆப்ரிக்க நாடான மலாவி நாட்டு நீதிமன்றமும் காந்தி சிலை கட்டுமானப் பணிக்குத் தடைவிதித்து இருக்கின்றது. காந்தியின் கருத்துக்கள், கறுப்பின மக்களான தங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக ‘காந்தி விழ வேண்டும்’ என்ற அமைப்பினர் தொடுத்த வழக்கில் கடந்த நவம்பர் மாதம் அந்நாட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள காந்தி பக்தர்கள் இதுவரை இதற்குப் பொங்கவில்லை, என்ன காரணமாக இருக்க முடியும்?

- செ.கார்கி

(படங்கள் நன்றி: பிபிசி)

Pin It