கமலின் அரசியல் நுழைவு குறித்து ஆரம்ப கட்டத்திலேயே இடதுசாரிகள், பெரியாரியர்கள் அவநம்பிக்கையுடன் இருப்பதாக சில நடுநிலையாளர்கள், அறிஞர்கள் கருதுகிறார்கள். கமலின் அரசியல் பற்றி விவாதிப்பதற்கு முன்பு இவரது அரசியல் குறித்த இடதுசாரிகள், பெரியாரியர்களுடன் எனக்கு இருக்கும் விலகலை சொல்லி விடுகிறேன். ‘கழகங்கள் இல்லா தமிழகம்’ என்ற பாஜகவின் அரசியல் திட்டத்தை நிறைவேற்றவே கமல் உபயோகப்படுத்தப்படுகிறார் என்ற பொதுப்புரிதலில் எனக்கு உடன்பாடு இல்லை. நாம் கமலை எவ்வாறு நம்ப மறுக்கிறோமோ, அதே அளவிற்கு பினராயி விஜயன் சந்திப்பு, அரவிந்த் கெஜ்ரிவால் நட்பு, கருப்பு சட்டை, பெரியார் என்று தொடர்ச்சியாக பேசிவரும் கமலை பாஜகவும் நம்புவதில்லை. பாஜகவிலிருந்து கமலுக்கு எழும் எதிர்ப்புகளையும், ரஜினிக்கு ஆதரவாக எழும் குரல்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கொள்கையளவில் பாஜகவின் அரசியலுக்கு இணக்கமானது ரஜினியின் ‘ஆன்மீக அரசியல்’ தான்.
இரண்டு நடிகர்களையும் ஒரே நேரத்தில் இறக்கி விடுவதால் தமிழகத்தில் பாஜக அடையப் போவது எதுவும் கிடையாது. அதிமுக முழுவதுமாக பலவீனப்பட்ட நிலையில், இது திமுகவிற்கே சாதகமாக அமையும். ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிமுகவின் ஊழல், பாஜக அடிமைத்தனம், வாழ்வாதாரப் பிரச்சினைகளில் தமிழகத்தின் நலன்களை விட்டுக் கொடுத்தது போன்ற செயல்களால் அதிமுக மீது தான் வாக்காளர்களின் அதிருப்தி அதிகம். எத்தனை ரஜினி, கமல் வந்தாலும் திமுகவிற்கான வாக்கு வங்கி என்பது திராவிட அரசியல், கலைஞர் மீதான விசுவாசம், கொள்கைகளின் பாற்பட்டது என்பதால் அசைக்க முடியாதது. எனவே, அதிமுக அதிருப்தி வாக்காளர்களின் வாக்குகளை கமல், ரஜினி பகிர்ந்து, திமுக பலம் பெறுவதை ஒருபோதும் பாஜக விரும்பாது.
கமல் பாஜகவை ஏன் நேரடியாக எதிர்க்க மறுக்கிறார் என்பதற்குக் காரணம், தனது அரசியல் வாழ்வின் ஆரம்ப கட்டத்திலேயே மத்திய அரசின் அடக்குமுறைகளை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்பது தான். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது விஸ்வரூபம் பிரச்சினையில் கமலுக்கு பல்வேறு தரப்பிலும் ஆதரவு திரண்டு வந்த நிலையிலும், ஜெயலலிதாவை எதிர்க்கத் தயாராக இல்லை. பிறகு எப்படி அவர் அதிகாரத்தை அரசியல் எதிரிகளுக்கு எதிராக மூர்க்கமாகப் பயன்படுத்தும் பாஜகவைத் எதிர்க்க துணிவார்? எனவே, கமல் மத்திய அரசை நேரடியாக எதிர்க்கத் துணியாததற்குக் காரணம், பாஜகவின் மீதான சாய்வு என்பதை விட பயம் என்பதே உண்மை. அரசியலில் அதிகாரம் பெற்ற பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பதால் தான் பட்டும்படாலும், பூசி மெழுகியும் கருத்து கூறி வருகிறார். கிட்டத்தட்ட இங்கிருந்து தான் கமல் அரசியலின் தோல்வி துவங்குகிறது.
உண்மையில் கமல், ரஜினி போன்றோரின் அரசியல் நுழைவுக்குக் காரணம் ஜெயலலிதாவின் மறைவு மட்டும் இல்லை. ஜெயலலிதாவின் மறைவை ஒட்டி நிகழ்ந்த கேலிக் கூத்துக்கள், தமிழக நலன்கள் புறக்கணிக்கப்பட்டது போன்றவற்றுடன் தமிழகத்தில் 'வெற்றிடம்' ஏற்பட்டிருப்பதாகத் தொடர்ந்து செய்யப்பட்டுவரும் ஊடகப் பிரச்சாரமும் தான். எப்படி?
தமிழகத்தின் வளர்ச்சிக்கு திமுக ஆற்றிய பெரும் பங்கினை, திமுகவின் சாதனைகளை திராவிட இயக்கங்களின் சாதனைகள் என்றும், ஊழல் என்று வந்துவிட்டால் அதிமுகவின் ஊழலை திராவிட இயக்கங்களின் ஊழல் என்றும் ஊடகங்கள் எப்படி திரிக்கின்றனவோ, அதே போலத்தான் ஜெயலலிதாவின் மரணத்தை ஒட்டி அதிமுக தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்தை திராவிட இயக்கத் தலைமைகளில் ஏற்பட்ட வெற்றிடமாக சித்தரிக்கின்றன. கலைஞர் உடல்நிலைக் குறைபாட்டால் செயல்பட முடியாவிட்டாலும், தனது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும், நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து ஸ்டாலின் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாகவே இயங்கி வருகிறார். விமர்சனங்கள் இருந்தாலும் தமிழகத்தின் நலன்களைப் பாதிக்கக்கூடிய அத்தனை பிரச்சினைகளிலும் போராட்டங்கள் நடத்தியும், மத்திய அரசை எதிர்த்து காத்திரமான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார். அவரது கட்டுப்பாட்டில் தான் முழுக் கட்சியும் இருக்கிறது. எனவே, ஜெயலலிதாவின் இறப்பை ஒட்டிய அதிமுகவின் பிளவுகள் மற்றும் பாஜகவின் ஆணைக்கேற்ப பொம்மையாக இயங்கும் ஒரு கட்சியின் வீழ்ச்சியையும், ஒரு எதிர்க்கட்சியாக கட்டுக்கோப்பாக இயங்கிவரும் திமுகவையும் தலைமையில்லா வெற்றிடம் என்று ஒரே தராசில் நிறுத்துவதே அயோக்கியத்தனம் தான்.
இப்போது ஏன் கமல்ஹாசனின் அரசியல் நுழைவை எதிர்க்க வேண்டும் என்பதைப் பார்ப்போம். தனிப்பட்ட முறையில் கமல் நேர்மையானவர் என்பதையும், அவர் மக்களுக்கு நல்லது செய்ய முயல்வார் என்பதையும் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். இந்த "ஊழல் எதிர்ப்பு”, “நல்லது செய்வோம்" என்பதை மட்டும் வைத்துக் கொண்டு ஓர் அரசியல் கட்சி தொடங்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதை கொள்கைகள், இசங்கள் அற்று அரசியல் செய்த அண்ணா ஹசாரேயிலிருந்து கிரண் பேடி வரை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஓர் அரசியல் கட்சி உருவாகி மக்கள் ஆதரவு பெறுவதற்கு அதன் வரலாற்றுத் தேவை முக்கியம். நீதிக்கட்சியின் தேவை காங்கிரசின் மேல்தட்டு பார்ப்பன சார்பால் உருவானது. திமுக, மத்திய அரசின் இந்தித்திணிப்பால் மக்களின் மகத்தான ஆதரவால் நிலைபெற்றது. அப்படி ஒரு வரலாற்றுத் தேவை தற்போது என்ன நிகழ்ந்து விட்டது? ஊழல் என்றால் சிரிக்கத் தான் முடியும். ஊழல் என்பது ஈபி எஸ்ஸும் ஓ பி எஸும் செய்வது மட்டும் தானா? மெஜாரிட்டியை இழந்த இந்த அரசின் ஒரிஜினல் ஓனர்கள் யார் என்பது கமலுக்குத் தெரியாதா? ஆக ஊழலை எதிர்ப்பது என்றாலுமே கூட இந்த அரசை சட்ட விரோதமாக முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் மோடியையும் அமித்ஷாவையும் தானே எதிர்க்க வேண்டும் ?
ஜிஎஸ்டிக்குப் பிறகு தமிழ்நாட்டிற்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதி எவ்வளவு என்று பாருங்கள். பேரிடர்களின் போது அறிவிக்கப்படும் நிதியளவைப் பாருங்கள். மத்திய அரசு அறிவித்துள்ள புதிய மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று கூட தமிழ்நாட்டிற்கு இல்லை. தமிழகத்தின் பொது சுகாதாரத்தையே சிதைக்கக் கூடிய நீட் பிரச்சினை பற்றி அனிதா இறப்பிற்குப் பிறகு எப்போதாவது பேசியிருக்கிறாரா? பேசமாட்டார் என்பது தான் நிதர்சனம். கமல் தனக்கு அனைவரின் ஆதரவும் முக்கியம் என்று நினைக்கிறார். அதாவது நீட் பிரச்சினையில் நீட் ஆதரவாளர்களும் வேண்டும், நீட் எதிர்ப்பாளர்களும் வேண்டும். இட ஒதுக்கீடு என்றால் ஆதரவாளர்களும் வேண்டும், எதிர்ப்பாளர்களும் வேண்டும். சாதி ஒழிப்பைப் பேசுபவர்களும் வேண்டும், சாதி தனது பண்பாட்டுப் பெருமிதம் என்று சொல்லும் சாதி வெறியர்களும் வேண்டும். பெரியார் பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டே, பெரியாரியர்களை சாக்கடை என்று புகழும் பார்ப்பனப் பேரறிஞர்களுடனும் குலாவுவார். எனவே அனைவருக்கும் பொதுவான “ஊழல் எதிர்ப்பு” என்று சண்டமாருதம் செய்து கொண்டிருக்கிறார். இந்து தீவிரவாதிகள் என்று (சரியாக) சொன்ன ஒரு உப்பு பெறாத விஷயத்திற்காக தமிழ்நாட்டில் செல்லுபடியாகாத தேசிய ஊடகங்கள் அதை பிரச்சினையாக்கியபோது, 'ஆம் நான் சொன்னது சரிதான். இந்துத்துவா வேறு, இந்துக்கள் வேறு' என்று தனது நிலையில் உறுதியாக நிற்காமல், 'தீவிரவாதம் வேறு, பயங்கரவாதம் வேறு' என்று பொழிப்புரை வழங்கிக் கொண்டிருந்தார்.
ஊழல் எதிர்ப்பை விட தமிழ்நாட்டில் பெரியாரியம், அம்பேத்கரியம், கம்யூனிசத்தின் தேவை உள்ள மக்கள் தான் அதிகம், இது மக்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு தலைவனுக்குத் தெரிய வேண்டும். பெரியாரிய, அம்பேத்கரிய, கம்யூனிசம் தேவைப்படும் பெரும்பான்மையான மக்களுக்கும், இவை தேவைப்படாத, இந்த கொள்கைகளை மூர்க்கமாக எதிர்க்கக்கூடிய சிறுபான்மை ஒட்டுண்ணிகளுக்கும் சேர்த்து ஒருவன் தலைவனாக இருக்க முடியாது. ஆனால், கமல் தான் இந்த ஒட்டுண்ணிகளுக்கும் சேர்த்து அனைவருக்கும் பொதுவானவன் என்ற ஒரு நிலைப்பாடு எடுக்கும்போது யாருக்குமே நண்பனாக இருக்க முடியாது என்பதை உணர மறுக்கிறார். காவிரிப் பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தண்ணீர் பெற்றுத் தருவேன், தரமான கல்வி அளிப்பேன் என்று வெற்று வாக்குறுதிகளை அளிக்கிறார். இதுவரை காவிரிப் பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடைபெறவே இல்லையா? அல்லது தமிழ்நாடு அநியாயமான கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் வலியுறுத்தியதாக சொல்ல முடியுமா? இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி காஷ்மீரைப் பெற்றுத் தருவேன் என்று பாகிஸ்தானில் உள்ள ஒரு கட்சியின் தலைவர் தேர்தல் வாக்குறுதி கொடுத்தால் அது எவ்வளவு கேலிக்கூத்தானதோ, அப்படித்தான் கமல் பேசுவதும் இருக்கிறது. என்ன பாகிஸ்தானில் இவ்வாறு பேசினால் சிறுகுழந்தை கூட எள்ளி நகையாடும். இங்கே திராவிட எதிர்ப்பு மனநிலையில் உள்ள அறிஞர்கள் என்ன உளறினாலும் ‘அவர் அரசியலுக்குப் புதுசு’ என்று முட்டுக் கொடுப்பார்கள்
அடுத்து ‘தரமான கல்வி’ எப்படி அளிப்பார்? அப்படி அளிக்கப்படும் கல்வி அனைவருக்கும் பொதுவானதாக இருக்குமா..? ஆட்சி அதிகார அனுபவம் மிக்க திமுக ஆட்சியில் ‘அனைவருக்கும் பொதுவான கல்வி’ என்று சிறந்த கல்வியாளர்களை வைத்து வடிவமைத்த சமச்சீர் கல்வித்திட்டத்தை கல்வி மாஃபியாக்களும், ஊழல் ஒழிப்பை பெரிதும் விரும்பும் நடுத்தர வர்க்க கோமாளிகளும் இணைந்தேதான் முறியடித்தனர். அரசியல் அதிகாரம் என்பது இரண்டாம் பட்சம். மத்திய அரசு தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கு செய்து வரும் துரோகத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி போராட்டங்கள் நடத்தியிருக்கிறாரா..? போராட்டங்களை விடுங்கள்...இந்துத்துவ பயங்கரவாதத்தை எதிர்த்து தொடர்ச்சியாகப் பேசிவரும் பிரகாஸ்ராஜூக்கு இருக்கும் குறைந்த பட்ச நேர்மை கூட இல்லையே..? மத்திய அரசு தென் மாநிலங்களைத் தொடர்ச்சியாகப் புறக்கணித்தால் இந்தியா சிதறும் என்று அறைகூவல் விடுத்த தெலுகு தேசம் எம்.பி. போல காத்திரமாக மக்களுக்கு புரியும்படி பேசியிருக்கிறாரா?
வரலாறு நெடுகிலும் மக்களுக்கான தலைவர்கள் அதிகாரத்தை எதிர்த்து தான் உருவாகியிருக்கிறார்கள், அது லெனினாக இருந்தாலும் சரி அல்லது சமீபத்திய திருமுருகன் காந்தி, ஜிக்னேஷ் மேவானியாக இருந்தாலும் சரி. போராட்டங்கள் மூலம் தான் சிறுசிறு உரிமைகளையும் பெற்றுத் தந்திருக்கிறார்கள். ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருந்து கொண்டு, இந்துத்துவாவின் பெயரால் அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்துக் கொண்டு, தமிழக மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசைப் பற்றி ட்விட்டரில் கூட கண்டிக்கத் திராணி இல்லாமல், கொலு பொம்மைகளைக் கண்டித்து வாய்ச்சவடால் அடிப்பதில் என்ன இருக்கிறது? என்னைக் கேட்டால் நான் கூட தான் சொல்வேன், ‘நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்பேன், வறுமையை ஒழிப்பேன்’ என்று. இதே போன்று, கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் இருந்து மீட்டு, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்று ஒருவர் வாயில் வடை சுட்டபோது நம்பியவர்களின் கதி என்னவானது என்று நாம் அறியாததா?
இறுதியாக உயர்மட்டக் குழு என்று ஒன்று அறிவித்தீர்கள் பாருங்கள்... அது தான் நீங்கள் முழுமையாக தோற்ற இடம். அறிவுசார் பெருந்தகைகளையும், சிந்தனையாளர்களையும் அறிமுகப்படுத்தியிருந்தால் பரவாயில்லை. நீங்கள் அறிவித்தது பட்டிமன்றப் பேச்சாளர்களும், பொதுப்புத்தியை பிரதிபலிக்க கூடிய சராசரி நபர்களும். இவர்களுக்கு உள்ள ஒரே ஒற்றுமை, இவர்கள் அனைவரும் உங்களை மேதை என்று நம்புபவர்கள். சுருக்கமாக ஜால்ரா அடிப்பவர்கள்.
புரிந்து கொள்ளுங்கள் கமல், நீங்கள் தலைவன் மெட்டீரியல் அல்ல. நீங்கள் ஒரு சினிமா ஹீரோ மெட்டீரியல், 1000 பேர் மட்டுமே படிக்கக்கூடிய வெண்பாக்கள் எழுதும் ஒரு புலவர் மெட்டீரியல்...அவ்வளவு தான... அவ்வளவே தான்.
- இராஜகோபால் சுப்பிரமணியம்