நண்பனிடமிருந்த தொலைபேசி வந்தது "டேய்! அவனுக்கு குழந்தை பிறந்துட்டுடா" என்று

நானும் "அப்படியா மகிழ்ச்சியான செய்தி..நான் வாழ்த்தினதா சொல்லுடா.."

"இல்லைடா அந்த குழந்தை இறந்திடுச்சு" என்று அதிர்ச்சியான செய்தியை சொன்னான்

எனக்கு மனசு ஒரு மாதிரியாகி விட்டது. பின்னர் சுதாரித்துக் கொண்டு "சரிடா ஆறுதல் சொல்லுங்கடா வேற என்ன செய்ய "என்று சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே இன்னொரு வேதனையான செய்தியைச் சொன்னான்

"தாயும் இறந்து போயிட்டாங்கடா" என்று சொல்லியபோது பதறிப் போய்விட்டேன்.

அய்யோ பாவம் எனது நண்பன் திருமணமாகி 8 மாதங்கள்தான் இருக்கும். இப்பொழுது அவன் குவைத்தில் இருக்கின்றான்.அவனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் என்று என்னிடம் சொல்லிவிட்டான்.

"வேண்டுமென்றால் குழந்தை இறந்து போன செய்தியை மட்டுமாவது தெரிவிச்சிருடா" என்று கூறி தொலைபேசியை வைத்துவிட்டான்

எனக்கு மன தைரியம் இல்லாததால் நானும் இன்னொரு நண்பன் மூலமாக அவனுக்கு போன் செய்யச் சொல்ல அவனிடம் குழந்தை இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டபொழுது முதலில் அதிர்ச்சியடைந்து பின்னர் சுதாரித்துக்கொண்டு

"சரிடா என்ன செய்ய இறைவனின் நாட்டம் அப்படி இருக்கிறது..இன்ஷா அல்லாஹ் அடுத்த தடவையாவது சரியா அமையட்டும்..அவ ரொம்ப கவலைப்படுவா டா ...நான் உடனே கிளம்பி வருகிறேன்" என்று சொல்லிவிட்டு இப்பொழுது பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றான் இந்தியாவுக்கு தன்னுடைய மனைவி இறந்து போன விசயம் தெரியாமலையே..

என்னால் நிலையாக இருக்க முடியவில்லை. இதயம் சோகத்தில் அப்பிக்கொண்டது. பாவம் அந்தப்பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டான்.

"டேய் பாவண்டா..அவன் லவ் பண்ணி மேரேஜ் பண்ணினான்டா.." நண்பன் சொல்ல

"விசயத்தைக் கேள்விப்பட்டா தாங்க மாட்டான்டா..துடிச்சிப் போயிருவான்.."- நான்

பிரசவ வேதனை என்றாலே எனக்கு நடுக்கமாக இருக்கும். சின்ன வயசில் என்னுடைய அம்மாவின் பிரசவ வேதனையைப்பற்றி பக்கத்து வீட்டு அம்மா சொல்லியபொழுது வாய்பிளந்து ஆச்சர்யமாய் கேட்க முடிந்ததே தவிர எந்த பாதிப்புகளும் மனதில் எழவில்லை.

உன்
பிரசவ கதறலை
பக்கத்து வீட்டு அம்மா
கதையாய் சொன்னபோது..

குடும்பக்கட்டுபாடு செய்தவனின்
தலைப்பிள்ளை
தற்கொலை செய்ததைபோல

எத்துணை வருத்தப்பட்டேன் தெரியுமா?

உனக்கு
வலிக்குமென தெரிந்திருந்தால்
நான்
விழித்திருக்கவேமாட்டேனம்மா...?

ஆனால் விவரம் தெரிந்த நாட்களின் போது என்னுடைய நெருங்கிய நண்பனின் தங்கை பிரசவ நேரத்தில் குழந்தையைப் பெற்று எடுத்துவிட்டு மரணித்த பொழுதுதான் அதன் வலியை தீவிரமாய் உணர ஆரம்பித்தேன்.

நான் ஓடி விளையாடிய வீட்டில் , நடந்த அந்தப் பிரசவ மரணம் என்னை மிகவும் பாதித்து விட்டது. அந்த மரண நேரத்தில் என்னுடைய நண்பன் எங்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்பொழுது அவனது உறவினன் ஒருவன் மூச்சிறைக்க ஓடிவந்து கத்தினான்

"டேய்! டேய்! அவனோட அக்கா குழந்தையைப் பெத்துட்டு இறந்து போய்ட்டாங்கடா"என்று சொல்ல அந்த நண்பனோ உறவினன் தன்னை கிரிக்கெட் விளையாடாமல் தடுக்க வைப்பதற்காக பொய் சொல்லுகிறான் என்று நினைத்து அலட்சிமாய் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்க எங்களுக்கு அந்த உறவினனின் முகவேதனையை வைத்து புரிந்து கொண்டோம் அந்தச் சம்பவம் உண்மையென்று

உடனே கிரிக்கெட்டை நிறுத்திவிட்டு தலைதெறிக்க ஓடினோம். என் நண்பனின் சகோதரியைக் கொண்டு வந்திருந்தார்கள்.

பிரசவத்திற்கு சென்றவள்
பிற சவமாய் வந்திறங்கினாள்

அதனைக் கண்டு துடித்துப்போய்விட்டேன். அந்தப்பச்சிளங்குழந்தையை ஒரு பாட்டி கைகளில் பொத்தி வைத்து ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தாள்..

கிளியை பெத்துவிட்டு
பார்க்காம போயிட்டியே!

என் இராசாத்தி நீ..

என்று ஆரம்பிக்கும் அந்தப்பாட்டியின் ஒப்பாரி அரசல் புரசலாய் ஞாபகம் இருக்கின்றது.

பிரசவம் என்பது ஒரு மறுபிழைப்பு. மரணத்தின் எல்லை வரை தொட்டுவிட்டு திரும்புகின்ற சம்பவம் என்று அன்றுதான் உணர ஆரம்பித்தேன்.

உலகத்தில் மனிதர்களை
வாழவிட்டு ...
அவர்களின்
நன்மை தீமைக்கேற்ப
கூலி கொடுக்கும் இறைவா!

தவறாயிருந்தால் மன்னித்துக்கொள்!
உன்னிடம் ஒரு கேள்வி

எந்த வாழ்க்கையுமே வாழாமல்
குழந்தைகள் இறப்பதன் காரணம் என்ன?


என்னால அந்தச் சம்பவத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஏனென்றால் நாங்கள் அந்த நண்பனின் சகோதரியைச் சுற்றி கிண்டலடித்து விளையாடியிருக்கின்றோம். அந்த ஞாபகங்கள் வேறு எங்களை மிகவும் பாதித்துவிட்டது.


"அக்கா! உங்களுக்கு ஆம்பிளப்புள்ளதான்க்கா பிறக்கும் "

"போங்கடா.. பொய் சொல்லியிளா..எனக்கு பொம்பள புள்ளதான் "

"இல்லைக்கா நாங்க எல்லாரும் சொல்றோம் ஆம்புள புள்ளதான்..அவனை எங்க செட்டுல சேர்த்துக்க மாட்டோம்..பாருங்க.. "

"அவன் ராஜா மாதிரி வருவான்டா..உங்கள மாதிரியா. ம்மா இவனங்கள பாருங்கம்மா " என்று அம்மாவை அவர்கள் அழைக்க

"எல போங்கல..பிள்ளதாச்சிய கிண்டல் பண்ணாதீங்கள.." என்று கடுமையாய் கூற

அந்தச் சகோதரியோ, "போம்மா உன் ஜோலியை பாத்துட்டு..அய்யோ பாவம் சும்மா தானே அவனுங்க கிண்டல் பண்ணுறாங்க.." என்று எங்களுக்கு வக்காலத்து வாங்க..

ஆசையோடும் எதிர்பார்ப்போடும் இருந்த அந்தச் சகோதரியின் இறந்து போன முகத்தை பார்க்கவே எனக்கு தெம்பு இல்லை

எல்லாரும் இறந்து போனவளைப்பற்றி கவலைப்பற்றிக் கொண்டிருக்க எனக்கு அதனைவிடவும் அழுதுகொண்டிருக்கும் அந்தக் குழந்தையின் அழுகைதான் பரிதாபமாக இருந்தது.

அந்தச்சம்பவம்தான் எனக்கு பிரசவத்தைப் பற்றி மிகுந்த பயத்தைக் கொடுத்தது. நெருங்கிய யார் பிரசவச் சம்பவம் என்றாலும் பிராத்திக்க ஆரம்பித்து விடுவேன்.

உயிர் இருக்கும்
உணர்வு இருக்கும்
அப்பப்போ வயிறு
இறுகி இறுகி
உடல் பின்பக்கமாக வளையும்.
கண் சொருகும்.
அப்பப்போ விழித்துப்
பார்க்க தோன்றும்.
ஆனாலும் முடிவதில்லை.
கத்த முடிவதில்லை
அசைய முடிவதில்லை.
உடலோ சோர்ந்து துவண்டு
அதை எடுத்துரைக்க வார்த்தைகள்
என்னிடம் இல்லை.
குழந்தை வருவதை கருவிகள் காட்ட
அவசரம் அவசரம்
எல்லோரிலும் அவசரம்
இறுதியாக
சேர்த்து வைத்திருந்த
மிச்ச தைரியத்தையும்
பிய்ந்த உயிரையும்
ஒன்றாய்த்திரட்டி
வில்லாய் வளைய
குழந்தை மெதுமெதுவாக
தாதி கை தாவும்.
குழந்தை அழும் சத்தம் மட்டும்
எம் செவி வழி பாயும்.

- நளாயினி தாமரைச்செல்வன்.


இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது வீட்டில் நடந்த எனது அண்ணியின் பிரசவம் மற்றும் எனது தங்கையின் பிரசவத்திற்கெல்லாம் நான் மிகவும் பதறிப்போய்விட்டேன்.
என் அண்ணியின் பிரசவ சமயத்தில் நான் ஊரில்தான் இருந்தேன்..

நேரம் நெருங்க நெருங்க எனக்கு பயம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாட்கள் தள்ளிப்போயிற்று - சுகப்பிரசவம் கிடையாது - சிசேரியன்தான் என்று யார்யாரோ என்ன என்னவோ சொன்னார்கள். பெண்களுக்குள்ளேயே விசயங்களை பகிர்ந்து கொண்டார்கள். எனக்கு அதுவேறு மிகுந்த பயம் காட்டிற்று.. கடைசியில் ஆண்குழந்தை பிறந்தது ஆனால் சிசேரியன்தான்.

அதன் பிறகு எனது தங்கையின் பிரசவம் நான் அப்பொழுது துபாயில்தான் இருந்தேன். எனக்கு இங்கு வேலையே ஓடவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒவ்வொரு நாட்களும் செல்போனில் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கின்றேன்.

ஒவ்வொரு முறை பேசும்போதும் கண்ணீர் விடாமல் பேசுவது எப்படி என்ற கலையை கற்றுக்கொள்ள வேண்டியதாகப் போய்விட்டது. எனக்கு என்ன பயம் என்னவென்றால் எனது தங்கையின் ஆரோக்கியம் குழந்தை பெறுகின்ற அளவிற்கு வலியை தாங்குமா என்ற பயத்தில்தான் துடித்துக் கொண்டிருந்தேன்

"ஹலோ! என்னம்மா எப்படியிருக்க "

"நல்லாயிருக்கண்ணா..நீ எப்படி இருக்கே.. "

"டாக்டர் என்ன சொன்னாங்க..வலி எப்படி இருக்கு..என்னிக்கு தேதி கொடுத்திருக்காங்க..
கவலைப்படாதே என்ன..எல்லாம் நல்ல படியா நடக்கும்.. "
என்று அதிகம் பேசமுடியாமல் ஒரே மூச்சில் பேசி வைத்துவிட்டேன்

"இறைவா எனது சகோரிக்கு சுகப்பிரசவம் தந்துவிடு நான் 6 நாட்கள் பசித்து இருந்து நோன்பு இருக்கின்றேன்" என்று இறைவனிடம் நோன்பை பணயம் வைத்து எனது தங்கையின் பிரசவத்தை சுகப்பிரசவமாக்க வேண்டினேன்..

"குழந்தை பிறந்துடுச்சு..சுகப்பிரசவம்தாண்டா.."என்று அம்மா சொன்னபொழுது எனக்கு உலகமெ இருண்டுப்போய் மீண்டும் வெளிச்சம் வந்தது போன்ற உணர்வு. இறைவனுக்கு நன்றியினை தெரிவித்துக்கொண்டேன்..

சுகப் பிரசவம்!

"வலி வரலைன்னா
சொல்லும்மா சிசேரியன்
பண்ணிடலாம்
-கேட்ட மருத்துவரிடம்
வேண்டாமென மறுத்துவிட்டேன்!

பெத்தவருக்கு தான்
பெருஞ்செலவு ஆகுமென்று!

வலியை வரவழைக்க
வலிய முயன்றேன்!

எனிமா ஏற்று
குடலை சுத்தமாக்கி

புடவை அவிழ்த்து
இரவுடை தரித்து

முக்கத் தொடங்கினேன்
கட்டிலில் படுத்து!

பற்றிக்கொள்ளத் துணையைத் தேடி
கட்டில் கம்பியைப் பற்றிக்கொண்டு
விழிகளைப் பிதுக்கி
பல்லைக் கடித்து
அடிவயிறு உப்பி
கால்களை உதறி
முக்கி முக்கி
உந்தி உந்தி
தள்ளுகிறேன் ஓர் உயிரை
உலகைக் காண!

முகமெல்லாம் வியர்த்து
உடல் தளர்ந்து
உள்ளமும் சோர்ந்து

உள்ளே செத்துப்
பிழைத்தேன் நான்!

வெளியே சொன்னார்கள்:
"சுக"ப் பிரசவம் என்று

- அருட்பெருங்கோ - ஐதராபாத்


சமீபத்தில் கூட எனது நெருங்கி தோழியின் சகோதரிக்கு குழந்தை பிறக்கும் சமயத்தில் கூட அவர்களிடம் சொல்லியிருந்தேன் "உங்களுக்கு நல்லபடியா குழந்தை பிறக்க நான் 2 நாட்கள் நோன்பு இருக்கின்றேன்" என்று.

எனக்குள் ஓர் கர்வம் அல்லது ஆத்ம திருப்தி என்னவென்றால் நான் இறைவனுக்காக நோன்பு இருப்பதை பசித்து இருப்பதை பொறுக்கமுடியாமல் இறைவன் சுகப்பிரசவத்தை தந்து விடுகின்றான் என்று.

இப்படிப் பிரசவத்தைப்பற்றி நான் அதிகமாய் பயப்படுவதற்கு காரணம். இந்தியாவில் பிறக்கின்ற 10 குழந்தைகளில் 3 குழந்தைகள் இறந்து பிறக்கின்ற என்ற அதிர்ச்சியான செய்தியை வேறு என்னிடம் சிலர் சொல்லியிருந்ததால் எனக்கு நெருங்கியவர்களின் பிரசவம் என்றாலே அந்த மூன்றில் இவர்கள் இருந்துவிடக்கூடாதே என்று ஒரு பயம் என்னை அறியாமல் வந்து விடுகின்றது.

இன்று காலையில் (10.04.06 - காலை 9.45 மணி) தனது மனைவியைக் காண குவைத்திலிருந்து இந்தியா திரும்பிய அந்த நண்பனைப்பற்றி அதிர்ச்சியான தகவல்களை சுமந்தபடி ஒரு தொலைபேசி வந்தது

"குவைத்திலிருந்து அவன் வந்து சேர்ந்துட்டாண்டா..வீட்டுக்கு வந்தவுடன் விசயத்தை கேள்விப்பட்டவுடனே மயங்கிப்போய்ட்டான்..அவசர சிகிச்சைப்பிரிவில் வச்சிருக்குடா..துவா பண்ணிக்கோடா.. "

வீட்டிற்கு வந்து குழந்தை இறந்து போன சோகத்தில் இருக்கும் தனது காதல் மனைவிக்கு "பரவாயில்லைம்மா..இறைவனுக்கு இந்த குழந்தை நம்ம கூட இருக்குறதுல விருப்பம் இல்லைம்மா..அடுத்த குழந்தை தருவான்.." என்று ஆறுதல் படுத்த வந்தவன் தனது மனைவியை வெள்ளைத்துணி கொண்டு மூடி வைத்திருப்பதைக் கண்டு துடித்து மயங்கி விழுந்துவிட்டான்

தன்னைக் காதலித்து தன்னை நம்பி வந்த பெண்ணை பிரசவ நேரத்தில் தனியாக விட்டுவிட்டு நாம் சென்றுவிட்டோமா - அவளை நானே கொன்று விட்டேனோ என்று மனசாட்சியின் உறுத்துதலை தாங்க முடியாமல் மயங்கிவிட்டானோ..?

"எட்டு மாசம்தான்டா ஆகுது..தனியா விட்டுட்டு வந்துட்டேன்டா..நான் குவைத் வரும்போது கூட போகாதிங்கன்னு அவ ரொம்ப கெஞ்சினாடா.."என்று அவன் புலம்பிக்கொண்டே இருந்தான் என்று குவைத்தில் இருக்கும் அந்த நண்பன் கூறினான்.

பிரசவநேரத்தினில் கண்களுக்கு முன்னால் தனது மனைவியின் வலியினை வேதனையினை காணுகின்ற கணவன்கள் அதற்குப்பிறகு அவளைப்புரிந்து கொண்டு மனைவியின் மீது கூடுதல் நேசம் கொள்வதற்கும் அவளை முழுமையாக புரிந்து கொள்வதற்கும் வழிவகுக்கும். இந்த வேதனைக்கெல்லாம் தான்தான் காரணம் என்ற ஒருவிதமான குற்ற உணர்ச்சியில் அவள் மீது தன் நேசத்தை அவன் மென்மேலும் அதிகப்படுத்திக் கொள்வான்.

இல்லறத்திற்கு பாலியல் சாயம் மட்டுமே பூசிக்கொள்ளாமல் உணர்வுகளோடும் அவளின் வேதனைகளோடும் பங்கு போட்டுக்கொள்ளுவதே கணவன்களுக்கு அழகு.

பிரசவ நேரத்தில் மனைவியுடன் இருப்பது கூட அவளுக்கு மனரீதியாக ஒரு தைரியத்தைக் கொடுக்கும். அவளுடைய கைகளை இறுகப்பற்றிக்கொண்டு "நான் இருக்கிறேன், கவலைப்படாதேம்மா " என்று அவன் ஒற்றை வார்த்தை கூறியிருந்தால் அந்த நம்பிக்கையில் அவள் உயிர் துளிர்த்து பிழைத்திருக்ககூடுமோ..?

இதுபோன்ற விசயங்களுக்குத்தான் புலம் பெயர் வாழ்க்கையையே வெறுக்க வேண்டிதாக இருக்கிறது. எனது நண்பனுக்காக தயவுசெய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.. மனதில் பயமா அல்லது வலியா எனத்தெரியவில்லை ஆனா ரொம்ப கஷ்டமா இருக்குதுப்பா..

நம்பிக்கை இருக்கிறது இறந்து போன குழந்தைக்கு அந்தத் தாய் சொர்க்கத்தில் பாலூட்டிக் கொண்டிருப்பாள் என்று.

- ரசிகவ் ஞானியார்

Pin It