என் பெற்றோருக்கு இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்...

நச்சுப் புகைகளுக்கு மத்தியில் சுத்தமான காற்றை சுவாசித்தது போல, புட்டிப்பாலுக்குப் பதில் தாய்ப்பால் குடித்தது போன்ற திருப்தியை தந்தது சேரனின் ''தவமாய் தவமிருந்து''. நேற்று முன் தினம் இரவுதான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பெற்றோர்களை விட்டுப் பிரிந்து வேறொரு நாட்டின் தனிமைச் சுழலில் பார்த்தது இன்னும் அதிகமான தாக்கத்தை என்னுள் எழுப்பி இருக்கிறது. மூன்று மணி நேரம் என் வீட்டிற்குள் இருப்பது போலவே இருந்தது. முத்தையாவிற்குள் பலமுறை என் அப்பா முத்து வந்து விட்டுப் போனார். கடந்த வந்த வாழ்வின் நிகழ்வுகளை திரையில் கண்ட போது கண்களில் நீர் முட்டி நின்றதை தவிர்க்க முடியவில்லை. திரைப்படங்களில் எதார்த்த வாழ்வில் நிகழவியலா எத்தனையோ புனைவுகளை பார்த்து சலித்திருந்த கண்களுக்கு, உண்மையை காணும் வாய்ப்பு கிடைக்கச் செய்த சேரனுக்கு நன்றி.

Cheran and Padmapriyaசேரன் படம் வெளிவருவதற்கு முன்பே சொல்லியிருந்தார். இந்த படத்தின் முத்தையா பார்க்கும் ஒவ்வொருவரின் தந்தையாகவே காட்சியளிப்பார் என்று. படம் அவரது வார்த்தைகளை மெய்ப்பித்திருக்கிறது. படத்தை பற்றிய விமர்சனங்கள் ஏற்கனவே வந்து விட்டன. அதனால் அதைப்பற்றி நீட்டி முழக்கப் போவதில்லை. இதுவும் குறைபாடுகளுடன் வெளிவந்திருக்கும் படம்தான். ஆனால் அவைகள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிலே இருக்கின்றன.

சேரன் தேர்ந்தெடுத்த கதைக்களம் அற்புதமான ஒன்று. மனித உறவுகளை படிப்பதுதான் வாழ்வின் உயர்ந்த படிப்பாக இருக்கும். அந்த வகையான தேடல்களோடு இந்த படத்தின் ஊடாக பயணித்திருக்கிறார். படத்தை பற்றியான விமர்சனங்களுல் ஒன்று நீளமாக இருக்கிறது. காட்சிகளை இழுத்திருக்கிறார். கதைநாயகன் இறந்த பின்பும் படத்தை முடிக்க மனமில்லாமல் இழுத்திருக்கிறார். உறவுகளை நாம் எப்போதும் அறிவுப்பூர்வமாக அணுகுவதில்லை. உணர்வுப்பூர்வமாக அணுகுகிறோம். நம் வாழ்க்கை எப்போதும் விறுவிறுப்பாக செல்லக்கூடிய ஒன்றல்ல. எல்லாவித ஏற்ற இறங்களோடுதான் செல்லக்கூடியவை. நம் வாழ்விலே நாடகத்தனமாய் பல நிகழ்வுகளை நடத்திக்கொண்டே திரையில் வருவதை நாடகத்தனம் என்று சொல்லிக் கொள்கிறோம். மார்புப் பிளவுகளையும் இடுப்பின் வளைவுகளையும் நீண்ட நேரம் இடம் பெறுவதை எதிர்பார்க்கும் மனம் பெற்றோர்களுடனான உரையாடல்கள் நீண்டுவிட்டதற்காக விமர்சனம் என்னும் பெயரில் ஒப்பாரி வைக்கிறது. இந்தப் படத்தில் சேரன் சரியாக கையாளாத பகுதி என்பது சென்னை வாழ்க்கைதான். அங்குதான் அவர் தடுமாற்ற நிலைக்கு வந்துவிடுகிறார். கதையின் நாயகர்களின் மீது கழிவிரக்கம் உண்டு பண்ணுவதற்காக அவர் அமைத்திருந்த காட்சிகள் சரியானதாக இல்லை. வெளிப்பட்ட விதத்தில்தான் அங்கு குறை இருக்கிறதே தவிர அவரின் சிந்தனை சரியான தளத்திலே சென்றிருக்கிறது. இதை பின்பு தொடர்கிறேன்.

ஒரு நடுத்தர வர்க்கத்தின் தந்தையர்களின் உணர்வை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தி இருந்தார் ராஜ்கிரண். நந்தா திரைப்படத்தின் மூலம் அவரின் நடிப்பின் ஆளுமை தெரியவந்தது. இந்த படத்தில் தேர்ந்த நடிப்பின் உச்சத்தை தொட்டிருக்கிறார். ஒவ்வொரு சூழலிலும் மாறும் முகபாவங்கள், அதற்கேற்றார் போல் அவரது உடலசைவுகள் என அவரது உடம்பின் ஒவ்வொரு பாகங்களுமே நடித்துள்ளன. சொல்லிக் கொண்டு போனால் படம் முழுவதும் சொல்லிக் கொண்டு போகலாம்.

என்னை கரைத்த காட்சிகள் சில..

தீபாவளிக்கு பிள்ளைகளுக்கு ஒன்றும் செய்ய முடியாமல் போய் விடுமோ ஒன்று உடைந்து போய் உட்கார்ந்திருக்கும் பொழுது வரும் தொலைபேசி அழைப்பு, அதைத் தொடர்ந்து இளவரசுவை அழைக்க ஓடும் காட்சி...

சுற்றுலா செல்லமுடியாத ஏக்கத்திலிருக்கும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றிக் காட்டும் காட்சி, குறிப்பாக முயல் பிடிக்கும் காட்சி...

படிக்க வைப்பதற்காக கடன் கேட்டு நிற்கும் காட்சி ...

கல்லூரியில் சேர்த்துவிட்டு நெஞ்சை நிமிர்த்துவிட்டு வரும் அந்த காட்சி

இந்த காட்சியை கண்ட போது என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. 1997 வருடம் என்னை பொறியியல் கல்லூரியில் சேர்ப்பதற்காக என் தந்தை அலைந்து கொண்டிருந்த நேரம், கையில் எந்த வித சேமிப்பும் கிடையாது. அரசுப்பணி, ஒற்றை வருமானம்தான், வட்டிக்கு வாங்கித்தான் எல்லாமே செய்யக்கூடும் என்ற நிலை, சொந்தக்காரர்கள் எல்லோரும் அறிவுரை சொன்னார்கள் அகலக்கால் வைக்காதே, படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டு கடங்காரனா ஆகி நிக்காதே என்று அறிவுரைகள், எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு என்னை படிக்க வைத்தார். அவருக்கு முதலில் நம்பிக்கை கொடுத்தது அம்மா. என்ன செல்லம் (அம்மாவை அப்பா இப்படிதான் அழைப்பார்) செய்யலாம் என்று கேட்டபோது தாலிக்கொடியையும், காதில் போட்டிருந்து தோடு, மூக்குத்தியை தவிர்த்து அத்தனை நகைகளும் எடுத்து அப்பாவிடம் கொடுத்து இதை அடகு வைத்து முதலில் பணம் புரட்டிட்டு வாங்க என்று சொன்னார். நான் துபாய் வந்த பின்புதான் அது மறுபடியும் என் அம்மாவிடம் திரும்ப வந்தது. வாங்கும் கடனுக்கு வட்டி, வைத்த நகைக்கு வட்டி, கெடு முடிந்தவுடன் பணம் புரட்டி திருப்புவது பின்பு மறு அடகு வைப்பது என ஓடிய எட்டாண்டு வாழ்க்கை அது. முத்துவோ, முத்தையாவோ, அவர்களுக்கு முதுகெலும்பாய் இருப்பது முத்தம்மாளும், சாரதாக்களும் தான்.

ஆனால் நாம் இன்று முத்தையாவை பற்றியாவது பேச ஆரம்ப்பித்து இருக்கிறோம். ஆனால் அதில் சமபங்கு உழைத்த சாரதாக்களின் தியாகங்களை சரியான அளவில் உணர்ந்திருக்கிரோமா என்பது கேள்விக்குறிதான். எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை என் அம்மாவிற்கு பிடித்தது எது என்பதை தெரிந்து கொண்டது கிடையாது. அம்மாவின் தேவைகள் என்ன என்று ஒருமுறை கூட சிந்தித்தது கிடையாது. படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது இந்த கேள்விகள் என்னை துளைத்து எடுத்துவிட்டன. நம் சமூக அமைப்பு நம்மை அந்த அளவில்தான் வைத்திருகிறது. இது போன்ற சூழல்களில் நம் தாய்மார்களின் குடும்ப நிர்வாகம் எத்துனை திறமையானது. பொருளாதார நெருக்கடிகளை அவர்கள் கையாளும் விதம், தன் சக்திக்குட்பட்டு வருவாயை பெருக்க அவர்கள் செய்யும் போராட்டங்கள், அவை எதுவுமே கவனம் பெறாமலே போய்விடுகிறது.

படத்தில் ஒரு காட்சி காதலிக்கு பரிசளிப்பதற்காக பணம் வாங்கிச் செல்லும் காட்சி, பையனின் படிப்புச் செலவிற்கு வேண்டுமென்று தோடும் அடகு கடைக்கு போய்விடும். தன் கணவன் சைக்கிள் இல்லாவிட்டால் எவ்வளவு சிரமப்படுவான் என்பதை உணர்ந்து கணவனையும் குழந்தையாக்கி பார்க்கும் அந்த இடம் தாய்மையின் உன்னதத்தை சொன்ன இடம். எந்த வித எதிர்பார்ப்புமற்று எப்போதும் தியாகத்திற்கு தயாரக இருக்கும் அந்த தாய்மைக்கு எப்படிச் செய்வது கைமாறு. குற்ற உணர்வால் குறுகுறுத்து போய்விட்டேன். நானும் சில வேளைகளில் என் மகிழ்விற்கென பணம் கேட்ட போதெல்லாம் இப்படி ஏதாவது ஒன்றைத்தானே அடமானம் வைத்து அனுப்பி இருப்பார்கள்??

அதே மாதிரி வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களை திசைமாற வைக்கக்கூடியது காதலும் காமமும். அதை மிகச் சரியாக எடுத்தாண்டிருந்தார் சேரன். ஏனென்றால் வளரத் துடிப்பவர்களின் வாழ்க்கைப் போக்கை மாற்றக்கூடியவை இந்த உணர்வுகள். இது இரண்டைப் பற்றிய தெளிவோ, விழிப்புணர்வோ அவர்களுக்கு இருப்பதில்லை. அதனால் அந்த உணர்வுகளை சரியான வகையில் கையாளத் தெரியாமல் தடுமாறுவது உண்டு.

இதை சரியான முறையில் சொல்லியிருந்தார் சேரன். பாவம் குஷ்பு போன்ற அம்மாக்கள் வசந்திகளுக்கு இல்லாததால்தான் இத்தனை பிரச்சனை. காமம் என்பது வெறும் உடல் இச்சை தீர்ப்பதோடு முடிவதில்லை. அது பல்வேறு சூழல்களோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. அந்த சிக்கலை சொல்வதில்தான் சற்று மிகைப்படுத்தி விட்டார். சென்னையில் அவர்களின் வாழ்க்கை நிலையை சித்தரிப்பதில் கொஞ்சம் தடுமாறி விட்டார். ஒரு சில நிமிடத் தவறுகள் வாழ்வின் திசையை எவ்வளவு தூரம் மாற்றக்கூடியது என்று சொல்ல முயற்சித்தது ஒரு குடும்பத்தில் பெரியவர்கள் செய்யும் பொறுப்பான செயல். அந்த வகையில் சேரனை இளைஞர்கள் மீது அக்கறை கொண்டிருக்கும் ஒரு மூத்த சகோதரனாகவே பார்க்கிறேன்.

சரண்யாவின் சிறந்த நடிப்பிற்கு சேரன் தன் குழந்தையை அவர் கால்மாட்டில் வைக்கும் காட்சி. பச்சப்ப்பிள்ளையின் அழுகை அவருக்குள் இருக்கும் தாய்மை உணர்வை கிள்ள தன் வைராக்கியத்தை காப்பாற்ற முனைந்து முடியாமல் உடைந்து பிள்ளையை தூக்குவாரே. கண்ணீர் பொத்துக்கொண்டு வந்து விட்டது. இந்த இடத்தில் மனம் அப்படியே லேசாகிப்போனது. சீக்கிரம் குழந்தையை தூக்கவேண்டும் என்று மனம் துடிக்க வைத்திருந்தது அற்புதமான காட்சி.

சேரன் மதுரையில் வீடு பார்த்திருப்பதை தெரிவிக்கும் காட்சி, அந்த இடத்தில் ராஜ்கிரனின் சிரிப்பு எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வந்துவிட்டது. மே 31 2004 அப்பா பணி ஓய்வு பெறுகிறார். எனக்கு துபாயில் வேலை மே 18ம் தேதி கிடைத்தது. அவரது பணிக்காலத்தின் கடைசி பன்னிரண்டு நாட்களை மிக மகிழ்வோடு கழித்தார். அப்பாவுடன் வேலை பார்த்தவர்கள் எல்லாம் சொன்னது 8 வருசத்தக்கப்புறம் இப்பதான் நீங்க சிரிச்சு பாக்குறோம் சார்ன்னு. பணி ஓய்வு விழாவில் இதைக் குறிப்பிட்டு சொன்ன அப்பா கடைசி பத்து நாளாத்தான் நான் நிம்மதியா தூங்கிறேன். அதுக்கு ஆண்டவனுக்கு நன்றி. எனக்கு கை கொடுக்க பையன் வந்துட்டான் பெருமையோடு சொன்னப்ப எனக்கு பேசுறதுக்கு வார்த்தையே இல்லை. அப்போது அவர் கண்ணீரோடு சிரித்த சிரிப்பு இருக்கிறதே என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாதது. அதே மாதிரியான உணர்ச்சியை ராஜ்கிரண் வெளிப்படுத்தி இருந்தார்.

அதே மாதிரி என் அம்மா கல்லூரியில் என்னை சேர்க்க வந்திருந்தது. அதுவரை வீட்டை விட்டு பிரிந்ததே இல்லை. திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் கழித்து பிறந்தவன் என்பதால் இருவருக்கும் என் மேல் ரெம்ப பிரியம். அப்பாவுக்கு கொஞ்சம் அதிக பிரியம். நான் மதுரையில் பிறந்தேன். அப்பா அப்போது திருவரங்கத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார்கள். தினமும் என்னை பார்க்க திருச்சியிலிருந்து மதுரைக்கு வருவாராம். நான் குறை மாதப்பிள்ளை (7 மாதம்) என்பதால் முதல் இரண்டு ஆண்டுகள் வரை பல்வேறு விதமான உடல் உபாதைகள் வேறு. அந்த வகையில் அவர்களுக்கு என் பிரிவு மிகவும் கனமானது. கல்லூரியில் விட்டு ஊருக்கு கிளம்பும் போது அம்மா கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது. தவமாய் தவமிருந்த்தில் இதே காட்சி வந்த போது எனக்கு தெரிந்தது சரண்யா அல்ல என் அம்மாதான்.

படம் நெடுக ராஜ்கிரனை பிடித்தாலும் நான் மிகவும் ரசித்தது சேரனின் சென்னை வீட்டில் வந்து அவர் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருக்கும் காட்சி. வருத்தம், ஏமாற்றம், இயலாமை என அத்தனைக்கும் மவுன சாட்சியாய் அமைந்திருக்கும் காட்சி அது.

படத்தில் இசை மிகப் பெரிய குறை. பல நேரங்களில் மனசு மொட்டை இருந்தா எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தது.

Muthu and his wifeபடத்தின் சின்ன சின்ன குறைகள், கிளறிவிடப்படிருந்த உணர்ச்சிக் குவியல்களின் முன்னால் ஒன்றுமில்லாதது போலவே இருந்தது. காட்சிகள் நகங்கள் என்றால் சேரன் நறுக்கி எறிந்திருப்பார். ஆனால் எல்லாம் ரத்தமும் சதையாக இருப்பதால்தான் கத்திரிக்க முடியாமல் தவித்து விட்டார். இது போன்ற முயற்சிகள் தமிழில் தொடர்ந்து நடக்க வேண்டும். உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பிழந்து இயந்திர சூழலில் வாழத் தள்ளப்பட்டிருக்கும் வேளையில் நாம் நம் வேர்களை மறக்காமல் இருப்பது முக்கியம். அந்நியன் போன்ற கழிவுகளுக்கு மத்தியில் இது மிகவும் அவசியத் தேவையாய் இருக்கிறது. கழிவுகளை பிரம்மாண்டங்கள் மூலம் சந்தனமாக பரப்ப நினைப்பவர்களுக்கு மத்தியில் சேரன் போன்ற படைப்பாளிகள் வெற்றி பெறுவது நம்பிக்கை தருகிறது.

**************

ஆசிரியர் அவர்களுக்கு

இது தவமாய் தவமிருந்து படம் பார்த்தபின்பு எனக்குள் எழுந்த அனுபவ நிகழ்வு. இது திரைப்பட விமர்சன விதிகளுக்குள் வராது என்று நினைக்கிறேன். இத்துடன் எனது பெற்றோர் புகைப்படத்தை இணைக்கிறேன். இந்த படைப்பும் அவர்களுக்கே சமர்ப்பணம். ஆகையால் இதை பிரசுரித்தால் என் பெற்றோரின் புகைப்படத்தோடு பிரசுரிக்க வேண்டுகிறேன் 

- முத்துக்குமரன், துபாய்