வெறுமனே ஒரு மூன்றாம் நகர்வின் முப்புள்ளியின் மறுபக்கம் என பார்க்கிறேன்.

இம்மக்கள் எங்கு செல்கிறார்கள். என்ன சொல்கிறார்கள். சாலை எங்கும் சாரை சாரையாய் நடக்கிறார்கள். அங்கும் இங்கும் இனம் புரியாத ஒரு வித தடுமாற்றத்தின் பிடிக்குள் தங்களை வைத்துக் கொண்டு அலைகிறார்கள். விழாக்கள் என்று வந்து விட்டாலே என்ன செய்வதென்று தெரியாமல் எது கொண்டாட்டம் என புரியாமல்.. ஒரு வித மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தேவைக்கென்று இல்லாமல் ஒரு வித தோரணைக்கு துணி எடுப்பது, வெளிப்படுத்திக் கொள்வது, இருத்திக் கொள்வது, பாசாங்கு செய்வது, பலகாரம் செய்வது அதிகமாகி விட்டதை நான் கூர்ந்து கவனிக்கிறேன்.

ஒரு வித பகட்டுக்கும் படபடப்புக்கும் தேவையே இல்லாத சாமான்கள்.....அழகு பொருட்கள் என்று வாங்கி வீட்டுக்குள் குவிப்பதை ஒவ்வொரு பண்டிகையிலும் காண முடிகிறது. பக்கத்துக்கு வீட்டில், எடுத்த புடவையை காட்டி காட்டி தங்களை இருத்திக் கொள்கிறார்கள். நாள் முழுக்க பட்டி மன்றம் பார்த்து கை தட்டி சிரிக்கிறார்கள். சினிமா நடிகர்கள் டிவி நடிகர்கள் எதையோ செய்கிறார்கள். இவர்கள் டிவி முன் அமர்ந்து...படுத்து... சரிந்து.. அயர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். உண்மையான கொண்டாட்டம் எதுவென கண்டெடுத்த காலத்தை இவர்கள் தவற விட்டு விட்டார்கள் என்றே நம்புகிறேன். ஒரே ஒரு நாளுக்கு 6 மாத கடன் நெஞ்சு நிமிர்த்தி நிற்கிறது. தங்களின் வருமானத்துக்கு தகுந்த எதுவும் இவர்களை நிறைவடைய செய்வதில்லை. பெரிய பெரிய கட்டடங்கள் கொண்ட கடைகளே இவர்களின் குறியாக இருக்கிறது. அது எந்தக் கடையாக இருந்தாலும் சரி. வை பை என்று சும்மா எழுதி இருந்தாலே போதும். அல்லது யாராவது எங்காவது பேசியிருந்தால் போதும். கண்ணாடி பளிச்சிட்ட குளிரூட்டப்பட்ட அறையாக இருந்தால் அது பிண அறையாக இருந்தாலும் விலை பேசி விட்டு முகம் விரிய வெளியேறுவார்கள். பெரும் முதலாளிகள் விரிக்கும் பெரும் வலையில் இந்த மாதிரி விழாக்களே விழும் நன்னாளாக இருப்பதை உள்ளம் படபடக்க யோசிக்கிறேன்.

சிறு தானியங்கள் ஒரு காலத்தில் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தது. இன்று எவனை விரட்டி அடித்து விடுதலை பெற்று விட்டோம் என்று மார்தட்டி பேசுகிறீர்களோ அவன் தான் பாக்கெட் போட்டு விற்கிறான். அதையும் சிறுதானியங்கள் உடலுக்கு நல்லதாம்....என்று ஏதோ இப்போதுதான் 6ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வந்ததை போல நீங்களாகவே பேசி பகிர்ந்து அந்த தானியங்கள் விளைவிக்கும் சிறு விவசாயிகள் பற்றிய எந்த அக்கறையும் இன்றி... பிக் பாஸ் பார்த்துக் கொண்டு மார்ட் காரன் என்ன விலை சொல்கிறானோ அந்த விலைக்கு வாங்கி வந்து காலையும் மாலையும் தின்று செரிக்கிறீர்கள். பெரிய பெரிய கடைகள்தான் உங்களின் கெத்து என்று நம்ப வைக்கப்பட்டு விட்டது. இதுவும் அந்நிய சக்தியின் ஆதிக்க விளைச்சல்தான். எப்பக்கம் திரும்பினும்... எந்த தொழில் என்று பார்த்தாலும் ஒரு வெளிநாட்டுக்காரனின் முதலீடும் தோற்ற மயக்கமும் பீறிட்டு கிளம்பி இருக்கிறது. சிறு சிறு தொழில்கள் இந்த சூறாவளியில் காணாமல் போகும். பின் அந்த முதலை நிறுவனங்கள் மொத்தமாக இடத்தை பிடித்துக் கொண்டு அவன் வைத்ததுதான் விலை என்று நிர்ணயிப்பான். நீங்கள் அப்போதும் வாய்மூடி ....தொப்பை விரித்து வாங்கி வருவீர்கள். இப்போதே அது அரங்கேறிக் கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தை அவன் கையில் வைக்கும் போது உங்கள் குடுமி தானாக அவன் சொன்னதை கேட்கும். அதற்கு அரசியலும்.....முதலாளிகளும் பக்க பலமாக இருப்பதை ஓட்டுக்கு காசு வாங்கும் உங்கள் கண்கள் மறைக்கத்தான் செய்யும்.

எது தேவை.....எது வீண்.....எது தரம்...எது மாயை என்று தரம் பிரிக்க விடாமல் வீட்டு முகப்பு அறையிலேயே உங்கள் சுதந்திரம் விளம்பரங்களால் பறிபோவதை உணர்கிறீர்களா தோழர்களே....?

சாம்பாரா... அந்த பாக்கெட்டை வாங்கு. கறிக்குழம்பா இந்த பாக்கட்டை வாங்கு.... உப்பு இருக்கா.... கசப்பு இருக்கா கேள்வி வேற....! ஆலும் வேலும் பல்லுக்குறுதினு சும்மாவா சொன்னா எங்க பாட்டன். சர்க்கரை வந்து சாத்து சாத்துன்னு சாத்தின பின்னால.......கொலஸ்ட்ரால் வந்து கும்முனு ஏறி மிதிச்ச பின்னால....சைக்கிள் ஓட்டறதும்... மண்சட்டில குழம்பு வைக்கறதும்.....காய்கறிய பச்சையா திங்கறதும்... அட மானுடர்களே...... எப்போது அந்நிய உரங்களை உங்கள் விளைச்சலில் கலந்தீர்களோ.. அப்போதே நஞ்சு உள்ளே புக ஆரம்பித்து விட்டது. பெரிய பெரிய கடைக்குள் சென்று வாயை மூடிக் கொண்டு அவன் போடும் 4522 ரூபாயை பல்லைக் காட்டி கொடுத்து விட்டு வரும் நீங்கள் தான்... பாதசாரிக்கடைகளில்.. 20 ரூபாய்க்கு பேரம் பேசுகிறீர்கள். சிறு தொழில்களே உங்களை இன்னும் சுதந்திர நாட்டில் வைத்திருக்கிறது என்ற உண்மை சசந்தாலும் நம்புங்கள். நிலவேம்பு இப்போதுதான் இனிக்கிறதா....?! டெங்கு டங்கு டங்குன்னு வந்து சேர்த்த பின்னால்தான் புத்திக்கு உரைக்கிறது. மஞ்சளும்.. கடுகும்... மருத்துவம் என்று அமெரிக்கக்காரன் சொன்னால்தான் நம்பும் மூளையை நீங்கள் முள்ளாக வளர்த்தெடுத்திருக்கிறீர்கள். ஆங்கிலம் தெரிந்தவன் அறிவாளி என்பது போல தான் இந்த முட்டாள்தனம். பிச்சை எடுக்கும் கிழவி தாண்டி ஜம்மென்று கல்லாகி அமர்ந்திருக்கும் கடவுளுக்கு காசு போடும் அதிபயங்கரமான முற்போக்கை போன்றது இந்த கூத்துக்கள். இதில் வல்லரசு ஒரு கேடு.

கையேந்தும் வயிறெல்லாம் சோறிட்டு நிரப்பு. சோறுக்கு வயல்வெளியை நெல்லிட்டு பரப்பு. நெல்லிட வேண்டும் நீரிட்ட வரப்பு. வரப்பிடவேண்டும் நீருக்கு நெருப்பிடாத பொறுப்பு. சாம்பலும் சாயமும் கலக்காத காற்று படை. மனிதா உன் ஓட்டை மனதை அடை.

தனக்கு போக... கொடுத்து விட்டு தனக்கு வேண்டியதை வாங்கிய போது எல்லாமே நன்றாக இருந்தது. இடையில் பணம் வந்தது. எல்லாமே பிணமானது. ஆசை பேராசை ஆனது. பேராசை பாதுகாக்க அதிகாரம் வேண்டியது. மாற்றி மாற்றி யோசித்த புத்தி குழம்பியது. குழம்பிய குட்டையில்.. எல்லா மீன்களும் பணத்தையே முட்டை இட்டன. ஒரு பக்கம் நிரம்பும் பணமும் மறுபக்கம் நிரம்பும் வறுமையும் எப்போதும் சரிநிகர் கோட்டுக்கு வராதோ என்ற ஐயம் மெல்ல மேலெழத் துவங்குகிறது. நவீனத்துவம்.. நாகரிகம் இன்றைய மனிதர்களை கைப்பாவையாக்கி விளையாடுகிறது. இனிப்பும் காரமும்.. வீட்டில் நல்ல எண்ணையில் சுத்தமாக பாட்டிகள் செய்த போது வயிறும் இனித்தது. வாயும் சுவைத்தது. இன்று போகிற போக்கில் கடையில் கல்லா கட்டும் ஒரு சாரரின் கொள்ளைகளில் விழாக்கள் விழுந்து கொண்டிருக்கிறன. இங்குதான் கூட்டு குடும்பம் தேவைப் படுகிறது. ஆதி மறைக்கும் எதுவும் அத்துவான காட்டில் தொடுவானம் சாய்க்கும். ஒருபோதும் தொட முடியாத தூரத்தில் இந்த நாகரிகம் தன் அதீத வளர்ச்சியில் புற்றுகளாகவும் பூதங்களாகவும் வளர்ந்து நிற்கும். எப்போதும் இதயம் படபடப்புடனே இருக்கிறது. மூளை பரிதவிப்புடனே இருக்கிறது. போட்டியிலேயே கழிவிரக்கம் கொண்டு நிற்கிறது. முதல் இடம் நோக்கியே முந்திக் கொண்டிருக்கிறது.

மேட்டிமை நோக்கிய காரும் வீடுமே வாழ்வில் செட்டில் என்ற ஒரு எண்ணத்தை இந்த கார்பெரேட் கலாச்சாரம் விதைத்து விட்டு கொக்கை போல காத்திருக்கிறது. வட்டியிலேயே செத்து வீழும் நடுத்தரம்தான் இதன் குறி. இங்கு எளிமையும்... உரிமையும் கோமாளித்தனங்களாகி விட்டன. காரமார்க்ஸும் புரிபடாமல்..காந்தியமும் புரிபடாமல்... எதிர் நிலையே எதிர்ப்பு நிலை என்று சாதித்தலும் கத்தி கூப்பாடு போடுதலும் புரட்சி என்று நம்பிய கூட்டத்திலிருந்து நான் விலகியே நிற்கிறேன். வறுமையை முற்றிலும் ஒழிக்காமல் வாய்க்கரிசி தின்றாலும் விழாக்களுக்கு சாதிய அடையாளங்களும்... மத சாயங்களும் பூசிக் கொள்ளும் கூட்டத்திலிருந்து நான் விலகியே நிற்கிறேன். எது தேவையோ அது கிடைத்து விடும் என்று நம்பும் டார்வின்காரனாய் இருப்பதில் தனித்தே இருந்தாலும் அப்படியே இருந்து கொள்கிறேன்....

வயிறு பெருத்த மார்ட்கள்.. தூண்டிலிட்டு காத்திருக்கிறார்கள். ஆசை பெருத்தவர்கள் கிடைப்பார்களாக. போதனைகள் இல்லாத தத்துவங்களில் நிற்கவும் முடியாமல்.. விற்கவும் முடியாமல்... சிறு கடைகள்... யாருக்கோ கடை விரித்திருக்கின்றன....சிறு மனங்கள் ஆகாயம் விரித்திருப்பது போல.

survival of the fittest என்பது மிருகத்துக்கானது. சார்ந்து வாழ்தலும்.......பகிர்ந்து வாழ்தலுமே மனிதனுக்கானது.

- கவிஜி

Pin It