வேதம் என்ற சொல்லைக் கேட்டவுடனே நம் மனத்திலே ஓர் உயர்ந்த எண்ணம் தோன்றுகிறது. வேதம் இறைவனால் அருளப்பெற்றது. வேதம் என்பது எழுதாக் கிளவி. வேதம் புனிதமானது. வேதத்தில் மாந்தர் வாழ வேண்டிய நெறிமுறைகள் கூறப் பெற்றுள்ளன. வேதத்திற்கு மேலான நூல் இல்லை. வேதம் கற்றவர்கள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். வேதத்தை அறிந்தவர்கள் இறைவனோடு ஒத்தவர்கள். அவர்கள் வேத வித்தகர்கள் என்று அழைக்கப்பெறுகிறார்கள். வேத நெறி பற்றிப் பேசுபவர்கள் வேதாந்திகள் என்று அழைக்கப் பெறுகிறார்கள். வேதாந்தம் என்ற சொல் வேதக் கொள்கை என்ற பொருளில் கையாளப் பெறுகிறது.

இந்த உலகம் நிலையற்றது. எல்லாம் அழிந்து விடும்.
ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல
உற்றுப் பெற்ற
பேரும் சதமல்ல
பெண்டாட்டி பிள்ளையும்
சதம் அல்ல

என்றெல்லாம் பேசுபவர்களை - பாடுபவர்களை - பட்டினத்தார் போன்ற நிலையாமைக் கொள்கைகளைப் பாடியவர்களையெல்லாம் நாம் வேதாந்திகள் என்று அழைத்துப் பெருமைப்படுத்துகிறோம். பிற்காலத்தில் எழுந்த சமய நூல்கள், சாத்திர நூல்கள் எல்லாம் வேத சாரம் என்றும், வேதத்திற்கு நிகரானவை என்றும் போற்றப் பெற்றன. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் தமிழ் வேதம் என்று போற்றப்படுகிறது. திருஞானசம்பந்தர் தேவாரம் திராவிட வேதம் என்று பாராட்டப்படுகிறது.

திருக்குறளை வேதத்தோடு ஒப்பிட்டுப் புகழுகிற பல பாடல்கள் திருவள்ளுவ மாலையில் உள்ளன. உக்கிரப் பெருவழுதியார் என்ற புலவர் நான்கு மறைகளின் மெய்ப் பொருளைத் தான் வள்ளுவர் மூன்று பாலாகத் தந்திருக்கிறார் என்று கூறுகிறார். மாங்குடி மருதனார் என்ற புலவர் திருக்குறள் வேதத்தின் உட்பொருளாய் விளங்குகிறது என்று பாராட்டுகிறார். செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார் எனும் புலவர் வேதக் கருத்தைத் திருக்குறள் விரித்துரைக்கிறது என்று கூறுகிறார். சிறந்த நூல்களையெல்லாம் வேதத்தோடு ஒப்பிட்டுக் கூறுகின்றமையால், வேதம் மிகச் சிறந்த நூல் என்பது சொல்லாமலே நிறுவப்பட்ட உண்மையாகி விட்டது.

இப்படிப்பட்ட மிகச் சிறந்த வேதத்தைப் படித்துப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டு குருவிக்கரம்பை வேலு முயற்சியெடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆர்வம் பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன் இப்படி அவர் முயன்றிருப்பாரேயானால், நடுத் தெருவில் நிறுத்தி வைத்துக் கல்லால் அடித்துப் போடப்பட்டிருப்பார்! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பாரேயானால், அவர் நாவில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியிருப்பார்கள். அதைக் கேட்டவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி யிருப்பார்கள். ஏனென்றால் அப்போதெல்லாம் பார்ப்பனர்கள் மட்டும் தான் வேதத்தைப் படிக்க வேண்டும் என்றும், மற்றவர்கள் படிக்க அருகதையற்றவர்கள் என்றும், அவர்கள் படிப்பது குற்றம் என்றும் கட்டுப்பாடு இருந்தது. மனுதர்மம் இதற்கு விதிமுறைகளை வகுத்திருந்தது.

இப்பொழுது காலம் மாறிக் கட்டுப்பாடெல்லாம் தளர்ந்து விட்டபடியால், வேலு எடுத்த முயற்சி வெற்றி பெற்று விட்டது. தமிழிலேயே ஏற்கெனவே மொழி பெயர்ப்பு நூல்கள் வந்து விட்டபடியால் வேலு அவர்களால் எளிதாக வேதத்தைப் படிக்க முடிந்தது. தமிழில் மொழி பெயர்ப்பைச் செய்திருந்தவர்கள் கம்பத்தனம் செய்திருப்பதாகத் தோன்றவே, ஆங்கில மொழி பெயர்ப்பின் உதவியை நாடியிருக்கிறார் வேலு. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வேதத்தைக் கொண்டு வந்திருக்கிறார் வேலு. இதுதான் வேதம் என்று நமக்கு எடுத்துக் காட்டி விட்டார்.

வேதங்கள் நான்கு. ரிக், யசுர், சாமம், அதர்வணம் என்பனவே அந்த நான்மறைகள். ரிக்தான் தலைமை வேதம். ரிக் என்றால் துதித்தல் என்று பொருள் (அபிதான சிந்தாமணி). துதிப் பாடல்கள் அடங்கியது ரிக்வேதம். ரிக் வேதத்தின் விரிவாகவும், விளக்கமாகவும், வளர் நிலையாகவும் எழுந்தனவே மற்ற மூன்று வேதங்களும். யசுர்வேதம், ரிக் வேதத்தையொட்டி, நைவேத்தியங்கள் வேள்விகள் செய்யும் முறைகளைக் கூறுகிறது. ஒவ்வொரு பாடலும் ஒரு தோத்திரமாக அமைந்துள்ளது. சாமவேதம் பாப நிவாரணமான தோத்திரங்கள் கொண்டது. அதர்வண வேதம் சபிக்கும் மந்திரங்கள் அடங்கியது. இந்த நான்கு வேதங்களில் முதன்மையானதாகத் திகழும் ரிக் வேதப் பாடல்கள் சிலவற்றின் மொழி பெயர்ப்பையே இந்நூலில் காண்கிறோம்.

இனி வேதத்தின் உட்பொருளை நாம் ஆராய்ந்து பார்க்கலாம். இந்திரன், அக்கினி, சூரியன், சோமன், வாயு, உஷை, விஷ்ணு, ருத்திரன் ஆகிய தேவர்களைப் போற்றிப் பாடும் பாடல்களாக இவை அமைந்துள்ளன. தாசர்கள் அல்லது திராவிட மக்களை அழித்து ஒழித்து ஆரியர்களுக்குப் பல நன்மைகளையும் செய்து கொடுக்கும்படி ஒவ்வொரு தேவனையும் வேண்டும் பாடல்களாகவே இவை உள்ளன. ஆரியர்களின் கோட்பாடுகளுக்கு எதிரான திராவிடர்களை மட்டுமின்றி, நியாய உணர்வின் அடிப்படையில் ஆரியத் தலைவர்களை எதிர்த்து நின்ற ஆரியர்களையும் அழித்து ஒழிக்கும்படி தேவர்கள் வேண்டப்படுகிறார்கள்.

எடுத்துக்காட்டு:

இந்திரா! நீ சரயுவின் கரைக்கப்பால் வாழ்ந்து வந்த அர்ணன், சித்திராதன் ஆகிய ஆரியர்கள் இருவரையும் கொன்றாய். (ரிக். 3385)

எதிரிகளை அழிப்பதும், அவர்களுடைய சொத்துக்களைக் கொள்ளையடிப்பதுமே இங்கு தெய்வச் செயலாகக் காட்டப்படுகிறது.

எடுத்துக்காட்டு:

இந்திரா! நீ சுசுணனின் கோட்டையை உடைத்தபோது அவனால் சேர்த்து வைக்கப்பட்டிருந்த செல்வக் களஞ்சியத்தையே எடுத்துச் சென்றாய். (ரிக். 3380)

வேத காலத்துத் திராவிடர்களுக்கு தெய்வமோ, மதமோ, சடங்குகளோ இல்லை என்ற உண்மை இந்த வேதத்திலிருந்து தெரிய வருகிறது.

எடுத்துக்காட்டு:

தெய்வ நம்பிக்கையற்ற - தேவனற்ற - சடங்குகள் செய்யாத - தாச இனத்தைப் பூண்டோடு அழித்துச் சாம்பலாக்க வானத்தையும் பூமியையும் அனலாக்கு. (ரிக். 4617)

இந்திரனே! தெய்வமற்ற - வேள்வி செய்யாத தாசர்கள் செல்வத்தை இழப்பார்களாக. அந்தத் தாசர்களைக் கண் காணாத இடத்திற்கு அனுப்பவும். (ரிக். 7594)

அக்கினியே! நீ தானங் கொடுக்காத அனைவரையும் சாம்பலாக்கவும். எல்லாப் பகைவர்களையும் சாம்பலாக்கவும். அரக்கர்களை எப்போதும் பற்பப்படுத்தவும். (ரிக். 441)

வேதப் பாடல்கள் முழுவதையும் படித்த பிறகு, “எல்லாப் பொருளும் இதன் பாலுள” என்ற மதுரைத் தமிழ் நாகனார் கருத்தை ஒப்புக் கொள்ள முடியவில்லை. வெறுப்புணர்வையும், பகையுணர்வையும் வேற்றுமையுணர்வையும் வலியுறுத்துகின்ற இந்த வேதக் கருத்துக்களை நல்லெண்ணமுடைய யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒவ்வொரு ரிக் பாடலும், வகுப்புத் துவேஷம், இன வெறி, மது வெறி, மத வெறி ஆகியவற்றின் பிறப்பிடமாக இருப்பதையே பார்க்கிறோம். திருக்குறளைப் போல் உலகுக்கெல்லாம் ஒரு பொது நெறியாக அமையாமல், ஒரு கூட்டத்தாரின் நன்மையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, தன் இனமல்லாத யாரையும் அழித்து ஒழிக்க வேண்டும் என்ற நச்சு மனப்பான்மை கொண்டு அமைந்துள்ளன இந்த வேதங்கள். இந்த உண்மையைத் தான் மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரனாரும்,

வள்ளுவர் செய் திருக்குறளை
மறுவற நன்குணர்ந்தவர்கள்
உள்ளுவரோ மனுவாதி
ஒரு குலத்துக் கொருநீதி?

என்று நியாயம் கேட்கிறார். இந்த வேதக் கருத்துக்களை நல்லெண்ணமுடைய யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஓர் இனத்தாருக்குரிய மத நூலேயன்றி எல்லோருக்கும் உரிய அற நூல் ஆகாது. இதைப் பற்றி நாம் கொண்டிருந்த நல்லெண்ணங்கள் யாவும் சிதறிப் போய்விட்டன. தலை வேதமான ரிக்கே இப்படியென்றால், இதன் அடிப்படையில் தோன்றிய மற்ற யசுர், சாமம், அதர்வணம் எல்லாம் எப்படியிருக்கும்! நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது.

வேதத்தைப் போற்றிப் புகழ்ந்தவர்கள் அனைவரும் அதைப் புரட்டிப் பார்க்காமலே கற்பனைக் கருத்துக்களை அள்ளி விட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது. முற்றும் கற்றவர்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கின்ற பல சான்றோர்களும் பேதை மக்காளாகி விட்டார்களே என்று வருந்த வேண்டியிருக்கிறது. வேத பாராயணம் செய்பவர்கள் அறிந்தோ அறியாமலோ வெறியுணர்வையும் வேற்றுமையுணர்வையும் கால காலமாக இடைவிடாமல் வளர்த்துக் கொண்டிருக்கிறார்களே என்று கலங்க வேண்டியுள்ளது.

இந்நிலை தொடரவிடலாமா என்ற கேள்வியும் எழுகிறது. வேதப் பாடல்களை உள்ளது உள்ளபடியே மொழி பெயர்த்துக் கொடுத்து, இதுதான் வேதம்! என்கிறார் வேலு. இதுதானா வேதம்? என்று திகைக்கிறோம் நாம்.

(குருவிக்கரம்பை வேலுவின் ‘இதுதான் வேதம்’ நூலுக்கு அணிந்துரை)

Pin It