மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. சாமானிய மக்கள் கையில் பணத்தை வைத்துக்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்துக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாமல் வாழ்வதா, சாவதா என்று போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். பெரும்பாலான வங்கிகளின் ஏடிஎம்கள் பணமில்லாமல் மூடப்பட்டு உள்ளன. வங்கிகளில் பணத்தை மாற்றிக் கொள்ள கால்கடுக்க பல நூறு மீட்டர் தூரம் மக்கள் வரிசையில் காத்துக் கிடக்கின்றார்கள். மருத்துவமனைகளுக்குக் கூட செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றார்கள். இது போன்று நாட்டு மக்களின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே முடக்கி அவர்களை பிச்சைக்காரர்கள் போல அலைய விட்டிருக்கின்றார் மோடி. மக்கள் கையில் பணம் இருந்தும் ஒருவேளை சோற்றுக்குக் கையேந்தும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றார்.

Tha Pandianபாசிச பாஜகவைத் தவிர இந்தியாவில் உள்ள பெரும்பாலான கட்சிகள் மோடியின் இந்தக் கீழ்த்தரமான செயலுக்குக் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. அதிலும் குறிப்பாக இடதுசாரிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றார்கள். இந்தியாவில் 120 கோடி மக்களுக்கு மேல் உள்ளார்கள். இவர்களில் சில லட்சம் பேர்களைத் தவிர மற்ற அனைவருமே தினம், தினம் உழைத்தால் தான் சாப்பாடு என்ற நிலையில் வாழும் எளிய மனிதர்கள். இந்த சில லட்சம் பேர்களை பிரதிநிதித்துவப்படுத்த இந்தியாவில் 99 சதவீத கட்சிகள் இருக்கின்றன. ஆனால் அந்த நூற்றுக்கணக்கான கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்த இரு கட்சிகள் மட்டுமே உள்ளன என்றால், அவை கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே.

CPM மற்றும் CPI மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், இந்தியாவில் பெரும்பாலான எளிய மக்கள் இன்னமும் அந்தக் கட்சிகளை நம்பிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இரண்டு மாநிலங்களில் ஆளும் கட்சியாகவும் இருக்கின்றார்கள். இன்று இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தலாக மதவாதம் உள்ளது. CPM மற்றும் CPI இல் உள்ள பல தலைவர்கள் நமக்குத் தெரிந்து மோடியின் மதவாத திட்டங்களுக்கு எதிராகவும், தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதலுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை வைக்கின்றார்கள். அந்த அடிப்படையில் இருந்தே பெரும்பாலான சாமானிய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆதரிக்கின்றார்கள்.

ஆனால் இந்த அடிப்படை, கட்சியில் உள்ள சாமானிய தொண்டனால் ஆட்டம் காணுவதை விட, கட்சியில் சில முன்னணி தலைவர்களின் பிழைப்புவாதத்தால் தற்போது பெரிய அளவில் ஆட்டம் காண ஆரம்பித்து இருக்கின்றது. தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூடிய விரைவில் இக்கதிக்கு ஆளாகப் போகின்றது என்று நமக்குத் தோன்றுகின்றது. அப்படி ஓர் அவல நிலை நேர்ந்தால், அதற்கு அக்கட்சியில் உள்ள தா.பாண்டியன் தான் காரணமாக இருப்பார். தொடர்ச்சியாக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சியின் பொதுக்கருத்துக்கு எதிராகவும், அவர் பேசியும், செயலாற்றியும் வருகின்றார். அவர் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்ததில் இருந்து தற்போது மோடிக்கு ஆதரவு தெரிவித்தது வரை தன்னுடைய மிக மோசமான நடத்தையை காட்டியுள்ளார். CPM மற்றும் CPI இன் தலைமைகள் கருப்புப் பண ஒழிப்பில் மோடியின் நாடகத்தை அம்பலப்படுத்தி பேசியும், எழுதியும் வரும் வேளையில், தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் தா.பாண்டியன் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பார்ப்பன தினமணியில் ‘காலத்தின் கட்டாய தேவை’ என்று மோடியை ஆதரித்து, கட்டுரை தீட்டுகின்றார். கட்சியோ அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய்மூடி மெளனம் காத்துக் கிடக்கின்றது.

தா.பாண்டியன் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருச்சியில் செளத் மெட்ராஸ் எலக்ட்ரிசிட்டி ஒர்க்கர்ஸ் யூனியனுக்குச் சொந்தமான ரூ. 3 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ 20 லட்சத்திற்குப் போலி ஆவணங்களை தயாரித்து விற்றதாக வழக்கு, கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் ஆ.வெங்கடாசலம் என்பவர் எழுதிய திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் என்ற புத்தகத்தை சிறு சிறு மாற்றங்கள் செய்து திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம் என்று பெயர்மாற்றி தன்னுடைய பெயரில் வெளியிட்டு விட்டதாக வழக்கு, உசிலம்பட்டியில் அவரது தம்பியுடனான குடும்பச் சொத்து தகராறு தொடர்பான வழக்கு போன்றவை நிலுவையில் உள்ளன. எனவே தா.பா அவர்கள் வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவே இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கையை மேற்கொள்கின்றார். அதற்காகத் தான் மோடியின் இந்தப் பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்துகின்றார்.

தினமணியில் வெளிவந்த அவரது கட்டுரையில் தா.பாண்டியன் என்ற பெயரை எடுத்துவிட்டால் நிச்சயம் அந்தக் கட்டுரையை படிப்பவர்கள் அதை வைத்தி மாமாதான் எழுதி இருப்பார் என்ற நினைப்பார்கள். அப்படி ஒரு கட்டுரை அது. அதில் அப்படியே ஒரு ஆர்.எஸ்.எஸ் காரனின் மனநிலையில் நின்று எழுதி இருக்கின்றார் தா.பா அவர்கள். அதில் “பயங்கரவாத்தை எவ்வாறு எல்லா அரசியல் கட்சியினரும், மதத்தவரும் ஒன்றுபட்டு எதிர்க்கின்றோமோ, அதே முறையில் கருப்புப் பணம் எனும் நிதி பயங்கரவாதத்தையும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். பிரதமரின் இந்த திடீர் அறிவிப்பு கருப்புப் பணத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஒரு வகையில் நாட்டைப் பாழ்ப்படுத்தி வரும் ஊழலுக்கு ஊற்றாக இருக்கும் பண சக்திக்கு எதிரான போர்ப்பிரகடனம்தான்” என்கின்றார். மேலும் அப்படியே “….. கடந்த சில ஆண்டுகளாகவே அண்டை நாடான பாகிஸ்தானில் உயர்மதிப்புள்ள இந்திய நாணய நோட்டுகள் அச்சிடப்பட்டு, எல்லைக்குள் ஊடுருவி இந்தியச் சந்தையில் புழங்க விடப்பட்டு வருகின்றது. இதில் நல்ல நோட்டு, கள்ள நோட்டு எனக் கண்டறிவது சாதாரண மக்களுக்கு முடியாத காரியமாக இருக்கின்றது" என சங்பரிவாரத்தின் கருத்துக்களுக்குக் காவடி தூக்குகின்றார் அடுத்து பைனல் டச்சாக "...ஆக மொத்தத்தில் பிரதமரின் இந்த நடவடிக்கை நாட்டின் நலனுக்கு அவசியம் என்பதால் இடைக்கால சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு வெற்றிபெற விழைவது நல்லது” என முடிக்கின்றார்.

கருப்புப் பணத்தை பற்றி தா.பாவிற்கு ஒன்றும் பெரியதாகத் தெரியாது. அதனால்தான் இப்படி எழுதுகின்றார் என்று நினைத்து விடாதீர்கள். அவருக்கு எல்லாமே தெரியும். தெரிந்தே திட்டமிட்டு மோடியைப் புகழ வேண்டும்; அதன் மூலம் தன்னை எப்படியாவது வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற தீய நோக்கத்தோடுதான் தா.பா இந்த வேலையைச் செய்கின்றார். தா.பா உண்மையில் CPI-இல் இருக்கின்றாரா, இல்லை அதிமுகவில் இருக்கின்றாரா என கட்சித் தொண்டர்களிடம் பலத்த சந்தேகம் இருந்து வந்தது. ஆனால் தா.பா தான் CPI-யிலும் இல்லை, அதிமுகவிலும் இல்லை; தான் பா.ஜ.வில்தான் இருப்பதாக தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருக்கும் 99 சதவீத சாமானிய மக்களை 1 சதவீத பணக்கார கும்பலுக்காக சிரமங்களைப் பொறுத்துக் கொள்ளச் சொல்கின்றார். மோடிக்காக ஒரு சில நாட்கள் சாப்பிடாமல் இருந்தால், செத்தா போய்விடுவீர்கள்? என்று சூசகமாக சொல்கின்றார். எனவே மேற்படி தா.பா தான் தோழர் அல்ல, எப்போதுமே 'ஜி' தான் என்பதைக் காட்டிவிட்டார். ஆனால் கட்சியின் தலைமை அவர்மீது நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

கோடிக்கணக்கான சாமானிய மக்களின் நலன்களுக்கு எதிராக ஒரு பாட்டாளிவர்க்கக் கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு கட்சியின் நபர் இப்படி வெளிப்படையாகவே செயல்படுகின்றார். ஏற்கெனவே தளி இராமச்சந்திரன் போன்றவர்கள் கட்சியில் இருப்பதால் இவரும் அதுபோன்று இருந்துவிட்டு போகட்டும் என கட்சியில் விட்டிருப்பார்கள் போலும்.

- செ.கார்கி

Pin It