oldMadras

வரலாற்றின் பக்கங்களைத் திருப்பினால் சென்னை என்று ஒரு நகரமே 400 வருடங்களுக்கு முன்பு வரை இருந்ததாக பதிவுகள் ஏதும் இல்லை. எப்படி இருக்கும்? சென்னை என்பது வெள்ளைக்காரன் உருவாக்கியதுதானே. அடடே வெள்ளைக்காரன் உருவாக்கியதுன்னா அப்ப சும்மா உலகத்தரத்திலான நகர திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டிருக்குமே என்று வாரி சுருட்டிக் கொண்டு நீங்கள் நிமிர்ந்து உட்கார்ந்தால், உங்களுடைய வாரி சுருட்டலை கொஞ்சம் அப்படி ஓர் ஓரமாக வைத்துவிட்டு மேற்கொண்டு படியுங்கள்.

சென்னையும், சென்னையைச் சுற்றியிருக்கும் பகுதிகளும் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு நிலப்பகுதிகளின் கழிமுகம் என்று சொல்லலாம். அதாகப்பட்டது இன்றைக்கு சென்னையாக இருக்கும் நிலப்பகுதி ஒரு நகர உருவாக்கலுக்கான நிலப்பரப்பே அல்ல. இன்றைக்கு சென்னை மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் சென்னையின் புற நகரங்களாக அறியப்படும் அனைத்துப் பகுதிகளும் நீர் வழிப்பாதைகள்தான். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் இருக்கும் ஆறுகள், அதன் கிளை ஓடைகளின் (இயற்கையாக அமைந்தவைகள்) நீர் போக்குப் பகுதிதான் இன்றைய சென்னையும், அதன் சுற்றுப்புறங்களும். சதுப்பு நிலங்களும், குன்றுகளும் அதிகம் நிறைந்த இடங்கள் இவைகள்.

சென்னைக்கு முதன் முதலில் கடல் வழியாக வந்த ஆங்கிலேய வணிகர்கள் சென்னை கடலில் (இன்றைய துறைமுகம் மற்றும் மைலாப்பூருக்கு இடைப்பட்ட கடல் பகுதி) இருந்து பார்த்தால், இன்றைய செயின்ட் தாமஸ் மெளண்ட் என்று அறியப்படும் குன்று தெரியும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல நானூறு வருடத்திற்கு முற்பட்ட சென்னை கடற்கரை ஓவியங்களைப் பார்த்தால் பின்னணியில் தவறாமல் ஒரு குன்று வரையப்பட்டிருப்பதைக் காண முடியும். அது இன்றைய செயின்ட் தாமஸ் மெளண்ட். மெரினாக் கடற்கரையிலிருந்து செயின்ட் தாமஸ் மெளண்டின் தொலைவு ஏறக்குறைய 15 கிலோ மீட்டர்கள் இருக்கும். ஆக நானூறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் கடற்கரையிலிருந்து அதன் உட்பகுதிகளில் ஒன்றான செயின்ட் தாமஸ் மெளண்ட் வரை எத்தகைய மனித புழக்கமும், ஆக்கிரமிப்பு கட்டிடங்களும் இருந்திருக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

சென்னையின் ஒரு பகுதியாக இருக்கும் பல்லவாரம், பல இலட்சம் வருடங்களாக மனிதப் பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருந்திருக்கும்போது, சென்னையின் மற்ற பகுதிகளும் அப்படித்தானே இருந்திருக்க வேண்டும். ஆனால் ஆங்கிலேயர்கள் வந்தபோது இன்றைய சென்னையின் மற்ற பகுதிகள் ஏன் மனித புழக்கத்தில் இருந்திருக்கவில்லை. அன்றைய தமிழன் இயற்கையோடு ஒன்றி, அதன் போக்கில் வாழ்ந்த காரணத்தால் நீர்ப் போக்கு கழிமுகப் பகுதியான சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் எத்தகைய குடியேற்றங்களையும் செய்யவில்லை. இந்தப் பகுதிகளில் பல ஓடைகள் காட்டுத்தனமாக ஓடியிருக்கிறது. அடந்த காடுகளும் இருந்திருக்கின்றன.

நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, சென்னை கடற்கரையிலிருந்து இன்றைய சைதாப்பேட்டை நிலப்பகுதி வரை மட்டுமே நிலவழிப் பாதை உண்டு. அதற்கு மேல் நிலவழிப் பாதை கிடையாது. குறுக்கே பல கிலோ மீட்டர் அகலம் கொண்ட அடையாறு ஓடியிருக்கிறது. வருடம் முழுவதும் காட்டுத்தனமான வேகத்துடன் அந்த ஆறு ஓடிக்கொண்டிருந்ததாக ஆங்கிலேயக் குறிப்புகள் சொல்கின்றன. அந்த ஆற்றை வருடத்தின் எந்த மாதத்திலும் கடக்க வாய்ப்பே இல்லையென்றும் குறிப்புகள் சொல்கின்றன. அதாவது 365 நாட்களும் காட்டாற்று வெள்ளமாக அடையாறு ஓடியிருக்கிறது. சென்னைக் கடற்கரையிலிருந்து சென்னையின் உட்பகுதிகளுக்கு வர இருந்த ஒரே நிலவழி இன்றைய அடையாறு பகுதி மட்டுமே. குறிப்பாக இன்றைய மலர் மருத்துவமனை மற்றும் ஆந்திரமகிளா மருத்துவமனைகளுக்கு இடைப்பட்ட வழியாகவே அடையாறு ஆற்றைக் கடந்து (காரணம் இந்தப் பகுதியில் இயற்கையாகவே ஆற்றின் அகலம் குறுகியிருப்பதால் மேலும் கொஞ்சம் மணற் திட்டுக்களும் இருந்ததால்) சென்னையின் உட்பகுதிகளான கிண்டி, பல்லாவரம்,குரோம்பேட்டை, தாம்பரம் போன்ற பகுதிகளுக்கு செல்ல முடிந்திருக்கிறது.

ஆங்கிலேயர்கள் காலத்திலேயே கிண்டிப் பகுதியைத் தாண்டிச் செல்ல முடிந்திருக்கவில்லை. அடர்ந்த காடுகளும் ஓடைகளுமே காரணம். ஒற்றையடிப் பாதை ஒன்று மட்டும் (இன்றைய GST Road) அடந்த மரங்கள் மற்றும் ஓடுகளுக்கு நடுவே பல கிலோ மீட்டர்கள் உட்பகுதியில் நீண்டு சென்றதாக ஆங்கிலேயர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆக அன்றைய தமிழர்கள் மிகத் தெளிவாக ஒன்றை உணர்ந்திருக்கிறார்கள். அது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் கழிமுகப் பகுதிகள் என்பதால் அங்கே நகர குடியேற்றத்தை உருவாக்குவது கொள்ளிக்கட்டையை வைத்து தலையை சொறிந்து கொள்வதற்கு நிகர் என்று.

பிற்காலத்தில் வந்த சோழ மற்றும் பல்லவப் பேரரசுகள் கூட பல்லாவரம் மற்றும் குன்றத்தூர் பகுதிகளோடு நின்று கொண்டுவிட்டன. அதைக் கடந்து சென்னையின் உட்பகுதிகளில் நகரத்தை உருவாக்கவில்லை. காரணம் நீர். Homoerectus, Neanderthal, Homosapiens, சோழ, பல்லவப் பேரரசுகள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதால் அவர்களுக்கு இந்த மண்ணின் நிலவியல் தன்மை அத்துப்படி. அதனால் அவர்கள் நீர் வழிப்போக்குகளை தடை செய்யாமல் அதன் குறுக்கே குடியிருப்புக்களை உருவாக்கவில்லை. ஆனால் ஆங்கிலேயர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள். அதிலும் வியாபாரம் செய்து வயிற்றைக் கழுவிக்கொள்ள வந்தவர்கள். அவர்களுக்கு இந்த மண்ணும், அதன் தன்மையும், அதன் நிலவியலும் அந்நியமான, அதே சமயத்தில் தேவையுமில்லாத ஒன்று. தன்னுடைய வியாபாரத்திற்காவே அவன் முழுக்க முழுக்க இந்த மண்ணின் நிலவியலுக்கு எதிரான ஒரு குடியிருப்பாக சென்னைப்பட்டிணத்தை உருவாக்கினான்.

பிழைப்பு என்கிற வகையில் அவன் உருவாக்கிய ஒரு குடியிருப்பைச் சுற்றி, நீர் நிலைகள் அழிக்கப்பட்டு, தான் தோன்றித்தனமாக பல சிறிய சிறிய குடியிருப்புகள் உருவாகின. தான் தோன்றித்தனமான குடியிருப்புகள் ஆங்கிலேயர்களின் வணிகத்திற்கும், பாதுகாப்பிற்கும் வசதியாக இருந்ததால் அவர்களும் குடியிருப்புக்களின் திட்டமிடல் குறித்து அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. விளைவு அடுத்த ஒரு சில நூறு ஆண்டுகளிலேயே வருடம் முழுவதும் காட்டாற்று வெள்ளமாக ஓடிக்கொண்டிருந்த அடையாறு இருபக்கமும் சுருங்கத் தொடங்கிவிட்டது. அடையாறு ஓர் உதாரணம் மட்டுமே. காடுகளும், எண்ணிலடங்கா ஓடைகளும் காணாமல் போனது வேறு கதை. இந்த மண்ணின் நிலவியலுக்கு எதிராக உருவான ஒரு நகரத்தை வெள்ளையன் நம்மிடம் கொடுத்துவிட்டுப் போக, நாமும் அப்படியே வளர்ச்சி என்கிற பெயரில் அதை வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறோம். சுதந்திரம் பெற்றதின் பயன் அதுவன்றோ…!!

- நவீனா அலெக்சாண்டர்

Pin It