திருநெல்வேலிச் சீமையில் ‘குறுநில மன்னர்’ என்று அழைக்கப்பெறும் ‘பாளையக்காரர்’ பலர் ஆட்சி செய்து வந்தனர்.  அவர்களுள் வீரத்தில் சிறந்து விளங்கியவர் மாவீரன் பூலித்தேவன் என்பவராவார்.  காத்தப்ப பூலித்தேவன் என்பது அவரது இயற்பெயர்.

puli thevarசேரநாட்டின் ஒரு பகுதியான ‘பூழி’ நாட்டை பாண்டிய மன்னனின் ஆணையின்படி மாவீரன் பூலித்தேவனின் முன்னோர் ஆண்டு வந்ததால் ‘பூழியர்’ என்று அழைக்கப் பெற்றனர்,  ‘பூழியர்’ என்ற சொல் ‘பூலியர்’ என்று திரிந்து ‘பூலித்தேவர்’ என்று அழைக்கப்பெற்றார்.  பின்னர் புலியை அடக்கிய காரணத்தால் ‘புலித்தேவர்’ என்ற காரணப்பெயரும் ஏற்பட்டது.

மாவீரன் பூலித்தேவனின் முன்னோர், கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டில், இராமநாதபுரம் பகுதியிலிருந்து வந்து, சங்கரன் கோயில் பகுதியில் ‘ஆவுடையாபுரம்’ என்னும் இடத்தில் ஒரு கோட்டையைக் கட்டிக் கோலோக்கினார்.  பாண்டிய மன்னர் காலத்திலேயே ‘குறுநில மன்னர்’ என்ற பாரம்பாரிய மதிப்புக் கிடைத்தது ! பத்தாவது பாளையக்காரரான மாவீரன் பூலித்தேவன், வீரத்தின் விளைநிலமான நெற்கட்டு செவ்வலில் ஒரு கோட்டையைக் கட்டி, ஆவுடையாபுரத்திலிருந்த தலைமையிடத்தை இங்கு மாற்றினார்.

மாவீரன் பூலித்தேவன், சித்தாபுத்திரத் தேவருக்கும், சிவஞான நாச்சியாருக்கும் மகனாக 1715-ஆம் ஆண்டு பிறந்தார்.  கயல்கண்ணி நாச்சியாரைத் திருமணம் செய்து கொண்டார்.  கோமதி முத்துத்தலச்சி, சித்திரபுத்திரத்தேவன், சிவஞான பாண்டியன் ஆகியோர் அவரது மக்கட் செல்வங்களாவர்.  பூலித்தேவன் 1726-ஆம் ஆண்டு பட்டம் சூட்டப்பட்டார். சிவகிரி பாளையக்காரன் வரகுணபாண்டியனுடன் சண்டையிட்டு, தனது ஆநிரைகளை மீட்டு வந்தார்.  இதனால் மாவீரன் பூலித்தேவனின் வீரம் தென்தமிழ்நாடு முழுவதும் விளங்கியது.

நாள்தோறும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்து, புத்தாடைகள் வழங்கிய பின்னரே காலை உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  திருமணமாகாத இளைஞர்களுக்கு, தானே முன்னின்று திருமணங்களை நடத்தி வைத்தார்.  மக்களுக்கு சாலை வசதிகளைச் செய்து கொடுத்தார்.  ஏழை எளிய மக்கள் தங்குவதற்கு மண்டபங்கள் கட்டிக்கொடுக்கத்து,  உணவு வழங்க ஏற்பாடு செய்தார். கிணறுகள், குளங்கள், நந்தவனங்களையும் அமைத்துப் பசுமைப் புரட்சியை உண்டாக்கி, நாடு செழிப்படைய ஆக்கமும், ஊக்கமும் கொடுத்தார். பல கோயில்களுக்குத் திருப்பணி செய்தார்.  கோயில்களுக்கு நிலக்கொடை அளித்தார்.  கோயில்களுக்கு மண்டபம் கட்டிக்கொடுத்தார். நல்லூர்க்கோயிலில் உள்ள மண்டபத்தில் பூலித்தேவனின் முற்றுப்பெறாத சிலை உள்ளது.  தெய்வீகத்தையும், தேசியத்தையும் தமது இரு கண்களைப் போல் போற்றி வந்தார்.

இராபர்ட் கிளைவ் 1750-ஆம் ஆண்டு திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு, தென்னாட்டுப் பாளையக்காரர்கள் அனைவரும் தன்னைப் பேட்டி காண வரவேண்டுமென்று உத்தரவிட்டான்.  யாருக்கு யார் பேட்டி கொடுப்பது என்று வெகுண்டு எழுந்து மாவீரன் பூலித்தேவன் தமது படையுடன் திருச்சிக்குச் சென்றார்.  போரில் பூலித்தேவன் வெற்றி பெற்றார் என்று ‘பூலித்தேவன் சிந்து’ கதைப்பாடல் கூறுகிறது.

ஆற்காடு நவாபுக்காக,  ஆங்கிலேய முதல் தளபதியான அலெக்சாண்டர் கெரான் என்பவர் 1755-ஆம் ஆண்டு வரிவசூலிக்க வந்தான்.  நவாப்புக்கே வரிகட்டாத மாவீரன் பூலித்தேவன் இந்த கும்பினியருக்கா பயந்து வரி கட்டுவார்? வீரபாண்டிய கட்டபொம்மனின் தாத்தா, பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக் காரராக இருந்தார், அவரும் எட்டயபுரத்துப் பாளையக்காரரும் கெரானுக்குப் பயந்து, அடிபணிந்து கப்பம் கட்டினர்.  (அப்போது வீரபாண்டிய கட்டபொம்மன் பிறக்கவில்லை) ஆனால், சிறிதும் அஞ்சாமல் ‘‘நாங்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள், இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள், எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயருக்கு எதற்காகக் கட்ட வேண்டும் கப்பம்? கப்பம் என்ற பேரால் ஒரு சல்லிக்காசு கூடக் கட்டமுடியாது உன்னால் ஆனதைப்பார்’’ என்று மாவீரன் பூலித்தேவன் கூறினார்.

கொஞ்சம் நெல்லாவது கொடுங்க என்று துபாஷ் கேட்டபோது, வரி என்னும் பெயரால் ஒரு மணி நெல்லைக் கூடக் கட்டமாட்டேன் என்று மறுத்துக் கூறினார்.  இதன் காரணமாக அவரின் ஊரின் பெயர் ‘நெற்கட்டான் செவ்வல்’ என வழங்கலாயிற்று. மாவீரன் பூலித்தேவன் கப்பம் கட்ட மறுத்ததால், கெரான் பூலித்தேவனின் கோட்டையை மீண்டும் தாக்கினான், இருவருக்கும் போர் நடைபெற்றது.  மாவீரன் பூலித்தேவனின் வீரத்திற்கு முன்னால் ஆங்கிலத் தளபதி கெரானால் நிற்க முடியவில்லை.  கெரானை ஓடஓட விரட்டியடித்தார்.  ஆங்கிலேயப் படைகள் தலை தப்பினால் போதும் என்று ஓடின.

கப்பம் வசூல் செய்திட 1755-ஆம்  ஆண்டு வந்த முதல் ஆங்கிலத் தளபதி அலெக்சாண்டர் கெரானோடு போரிட்டு வெற்றிபெற்ற முதல் தமிழ்மறவன் மாவீரன் பூலித்தேவன்.  இதுவே, இந்திய விடுதலைப் போரில் ஒரு இந்தியனான மாவீரன் பூலித்தேவன் ஆங்கிலேயரை எதிர்த்து முழங்கிய முதல் முழக்கமாகும்.  ஆகையால், இதுவே இந்திய விடுதலைப் போரில் முதல் விடுதலைப் போர் மட்டுமல்ல, ஆங்கிலேயருக்கு இந்தியாவில் ஏற்பட்ட முதல் தோல்வியும் ஆகும்.

ஆங்கிலேயர் மீண்டும் போருக்கு வரக்கூடும் என்று உணர்ந்த மாவீரன் பூலித்தேவன், கொல்லங்கொண்டான், சேத்தூர், வடகரை, ஊத்துமலை, தலைவன் கோட்டை ஆகிய பாளையங்களையும் மற்றும் திருவனந்தபுரம் மன்னனையும் சேர்த்துக்கொண்டு ஒரு வலுவான கூட்டணியை அமைத்தான்.  இந்திய நாட்டில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட அமைக்கப்பட்ட முதல் கூட்டணி இதுவேயாகும்.

மாவீரன் பூலித்தேவன் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுமார் 17 ஆண்டுகள் தொடர்ந்து பலபோர்களை நடத்தி வந்தார். மாவீரன் பூலித்தேவனை வெற்றி கொள்ள முடியாத ஆங்கிலேயர், சூழ்ச்சியால் வெல்ல முடிவு செய்தனர்.

ஆற்காடு நவாபின் சகோதரன் மாபூஸ்கான் மாவீரன் பூலித்தேவனின் நற்குணங்களைப் பாராட்டி, அவரிடம் சரணடைந்தான்.  சரணடைந்த மாபூஸ்கானை அந்நியன் என்று கருதாமல் சகோதரனைப் போல் பாவித்து வரவேற்றுத் தன்னுடைய கோட்டைக்குள்ளேயே தங்கும் வசதி கொடுத்து, இறைவழிபாட்டுக்காக மசூதியையும் கட்டிக் கொடுத்தார்.  இதனால் ஆத்திரமடைந்த ஆற்காடு நவாபும், ஆங்கிலேயரும், ஆங்கிலேயர் அல்லாத தமிழர் சுதேசிப்படை ஒன்றை உருவாக்கி, கான் சாகிபு என்ற முகமது யூசுப்கானிடம் (மருதநாயகம்) ஒப்படைத்தனர்.  தமிழர்களை எதிர்க்க முகமது யூசுப்கான் என்னும் தமிழனையே தேர்வு செய்து அனுப்பினர் ஆங்கிலேயர் மூன்று ஆண்டுகள் போராடியும் தோற்றுப் போனான் முகமது யூசுப்கான்.

நேருக்கு நேர் போரிட்டு வெல்ல முடியாத முகமது யூசுப்கான் நயவஞ்சகமாக வெல்லத் திட்டமிட்டான்.  மாவீரன் பூலித்தேவனின் நண்பனான திருவிதாங்கூர் மன்னனுக்கு ஆசைவார்த்தை காட்டி, பூலித்தேவனுக்கு எதிராகப் போரிட வைத்தான்.  மற்றும் மறவர் பாளையமான நடுவக்குறிச்சிப் பாளையக்காரனுக்கு கையூட்டுக் கொடுத்தும், அவன் மூலம் பூலித்தேவனின் படைவீரர்கள் பலருக்குக் கையூட்டுக் கொடுத்தும் தன்வசமாக்கிக் கொண்டான்.  மேலும், சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை போன்ற இடங்களிலிருந்து பெரும் படையைத் திரட்டிக் கொண்டு வந்து பூலித்தேவனின் கூட்டணியிலுள்ள பாளையக்காரர்களை எல்லாம் வெற்றி கொண்டபின், தன்னந்தனியாக நின்றுகொண்டு இருந்த மாவீரன் பூலித்தேவனை எதிர்த்தான் முகமது யூசுப்கான்.  1760-ஆம் ஆண்டு டிசம்பரிலிருந்து 1761-ஆம் ஆண்டு ஏப்ரல்வரை தொடர்ந்து போரிட்டு வெல்லமுடியாத யூசுப்கான், நவீன ஆயுதங்களை வரவழைத்துப் போராடினான்.  1761-ஆம் ஆண்டு மே மாதம் 16-ஆம் நாள் பூலித்தேவன் தோல்வியடைந்தார்.  முகமது யூசுப்கான் கையில் சிக்காமல்கடலாடிக்குத் தப்பிச் சென்றார்.  ஆத்திரம் அடைந்த முகமது யூசுப்கான் நெற்கட்டு செவ்வல், பனையூர், வாசுதேவநல்லூர் உட்பட 29 கோட்டைகளை இடித்துத் தரைமட்டமாக்கினான்.

முகமது யூசுப்கான் 1764-ஆம் ஆண்டு இறந்தபிறகு, 1765-ஆம் ஆண்டு மாவீரன் பூலித்தேவன் மீண்டும் நெற்கட்டும் செவ்வல் கோட்டைக்கு வந்தார்.  1767-ஆம் ஆண்டு ஆங்கிலேயத் தளபதி டொனால்டு காம்பெல் வாசுதேவநல்லூர்க் கோட்டையைத் தாக்கினான்.  இருவருக்கும் நடைபெற்ற போரில் வெற்றி தோல்வி கிடைக்கவில்லையென்றாலும், இயற்கையினால் ஏற்பட்ட தொடர்மழையினால் இருவரும் ஒன்றும் செய்யமுடியாத நிலையில், மாவீரன் பூலித்தேவனுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டதால் கோட்டையைவிட்டு வெளியேறி  மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சென்றுவிட்டார்.  மாவீரன் பூலித்தேவனின் மனைவி, மக்கள் இருந்த குடிசை தீயிடப்பட்டு மனைவி இறந்துவிட்டாள்.  மக்கள் மட்டும் காப்பாற்றப்பட்டனர்.  இந்நிலையில் தலைமறைவாக இருந்த மாவீரன் பூலித்தேவன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டைக்கு கொண்டுவரப்பட்டார். அஙகிருந்து சங்கரன் கோயிலுக்கு இறைவழிபாட்டிற்கு அனுப்பப்பட்டபோது மறைந்துவிட்டார்.  மாவீரன் பூலித்தேவன் மரணம் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று என வரலாற்று ஆய்வாளர்கள் கோருகின்றனர்.

மாவீரன் பூலித்தேவன் நடத்திய விடுதலைப்போர் பதினெட்டாம் நூற்றாண்டு முழுவதும் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.  அவரால் எடுக்கப்பட்ட போர்வாள் பல போர்க்களங்களை சந்திக்கக் காரணமாயிருந்தது. இந்திய விடுதலைப்போரில் முதல் முழக்கமிட்டவர் மாவீரன் பூலித்தேவன் என்பது தான் உண்மையான வரலாறு ஆகும்.

- பி.தயாளன்

Pin It